உஸ்மான் ரளியல்லாஹு அன்ஹு அவர்களுடைய வரலாறானது பல்வேறுபட்ட முன்மாதிரிகளையும், படிப்பினைகளையும் பின்னால் வருபவர்களுக்கு சொல்லித்தருகின்றது. தம் ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்வதற்காக ஆயிரக்கணக்கில் அப்பாவி மக்களைப் பகடைக்காய்களாக்கி, வன்முறைகளையும், கலவரங்களையும் தூண்டிவிட்டு அரியணையைக் கைப்பற்றும் ஆட்சியாளர்களை வரலாற்றில் கண்டுள்ளோம்.
ஆனால் வீரம், படைப்பலம், மக்கள் ஆதரவு போன்ற அனைத்தும் இருந்தும் தன்னால் அப்பாவி மக்களின் உயிர்கள் போகக் கூடாது என்பதற்காக உஸ்மான் ரளியல்லாஹு அன்ஹு தன் உயிரையே துறந்து, வரலாற்றில் புதிய அத்தியாயத்தைத் தோற்றுவித்தார்கள் என்பதைப் படிக்கும் போது இமைகள பனிக்கின்றன.
சுமார் 12 வருடகாலமாக ஆட்சிபுரிந்த உஸ்மான் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் புதல்விகளான உம்மு குல்தூம், ருகையா ஆகிய இருவரையும் மணந்ததன் மூலம் இரு ஒளிகளையுடையவர் என்ற சிறப்புப் பெயர் கொண்டு அழைக்கப்பட்டுள்ளார்கள்.
உயிரா? மறுமையா? என்ற போராட்டத்தில் மறுமையைத் தெரிவு செய்து அதற்காக தனது உயிரையே விட்டுக் கொடுத்தமைதான் உஸ்மான் ரளியல்லாஹு அன்ஹு அவர்களை சிறப்பித்துக் காட்டுகின்றது.
அபூபக்கர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் இஸ்லாத்தைத் தழுவிய காலத்திலேயே உஸ்மான் ரளியல்லாஹு அன்ஹு அவர்களும் இஸ்லாத்தைத் தழுவினார்கள். அபூபக்கர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு அந்த சமூகத்தில் எத்தகைய மதிப்பும், மாரியாதையும் காணப்பட்டதோ அதே மாதிரியான கௌரவமும், மரியாதையும்தான் உஸ்மான் ரளியல்லாஹு அன்ஹு அவர்களுக்கும் காணப்பட்டது.
ஒரு முறை அபூபக்கர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் பாதையில் செல்லும் போது உஸ்மான் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் நின்று கொண்டிருப்தைக் காண்கிறார்கள். அப்போது அவரைப் பார்த்து ‘உஸ்மானே சத்தியம் எது அசத்தியம் எது என்று உங்களுக்குத் தெரியும். சிலை வணக்கம் பிழையென்பதும் இந்த முஹம்மத் எதன்பக்கம் அழக்கின்றார் என்பதும் உங்களுக்குத் தெரியும்’ என்று கூறுகிறார்கள். அப்போது அவ்வழியே வந்த நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ‘உஸ்மானே இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளுங்கள்’ என்று கூறியதும் உஸ்மான் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்கள் என்ற செய்தியை வரலாற்றில் காணமுடிகின்றது.
அவரிடம் இஸ்லாத்தைச் சொல்ல எதுவிதமான போராட்டத்தையும் நபியவர்கள் முன்னெடுக்கவில்லை. எனவே சத்தியத்தை மிக இலகுவாகப் புரிந்து கொள்ளும் தன்மையை இயல்பாகவே உஸ்மான் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கொண்டிருந்தார்கள் எனலாம். பொறுமையும், நிதானமும், நலினமும், அமைதியும், இறக்கமும், அடுத்தவர் பற்றிய கவலையும் உஸ்மான் ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம் நிறைந்திருந்தன.
உஸ்மான் ரளியல்லாஹு அன்ஹு அவர்களைப் பற்றி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னவை
صحيح مسلم 6362عَنْ عَطَاءٍ وَسُلَيْمَانَ ابْنَىْ يَسَارٍ وَأَبِى سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ أَنَّ عَائِشَةَ قَالَتْ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم- مُضْطَجِعًا فِى بَيْتِى كَاشِفًا عَنْ فَخِذَيْهِ أَوْ سَاقَيْهِ فَاسْتَأْذَنَ أَبُو بَكْرٍ فَأَذِنَ لَهُ وَهُوَ عَلَى تِلْكَ الْحَالِ فَتَحَدَّثَ ثُمَّ اسْتَأْذَنَ عُمَرُ فَأَذِنَ لَهُ وَهُوَ كَذَلِكَ فَتَحَدَّثَ ثُمَّ اسْتَأْذَنَ عُثْمَانُ فَجَلَسَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم– وَسَوَّى ثِيَابَهُ فَدَخَلَ فَتَحَدَّثَ فَلَمَّا خَرَجَ قَالَتْ عَائِشَةُ دَخَلَ أَبُو بَكْرٍ فَلَمْ تَهْتَشَّ لَهُ وَلَمْ تُبَالِهِ ثُمَّ دَخَلَ عُمَرُ فَلَمْ تَهْتَشَّ لَهُ وَلَمْ تُبَالِهِ ثُمَّ دَخَلَ عُثْمَانُ فَجَلَسْتَ وَسَوَّيْتَ ثِيَابَكَ فَقَالَ அ أَلاَ أَسْتَحِى مِنْ رَجُلٍ تَسْتَحِى مِنْهُ الْمَلاَئِكَةُ .
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தனது தொடடைப் பகுதி அல்லது கெண்டைக் கால் பகுதி தெரியக் கூடிய வகையில் என் வீட்டில் சாய்ந்து கொண்டிருந்தார்கள். அப்போது அபூபக்கர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் வீட்டுள் நுழைய அனுமதி கேட்டார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அதே நிலையில் இருந்தவர்களாக அவருக்கு அனுமதி கொடுத்தார்கள். அவரோடு பேசினார்கள்.
பின்னர் உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அனுமதி கேட்டார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அதே நிலையில் இருந்தவர்களாக அவருக்கு அனுமதி கொடுத்தார்கள். அவரோடு பேசினார்கள். பின்னர் உஸ்மான் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அனுமதி கேட்டார்கள். தனது ஆடையைச் சரிசெய்து கொண்டு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அமர்ந்தார்கள். அவரோடு பேசினார்கள்.
மூவரும் சென்ற பின் ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் நபியவர்களிடம் ‘அபூபக்கர் ரளியல்லாஹு அன்ஹு நுழைந்த போது நீங்கள் திடுக்கிடவில்லை. பொருட்படுத்தவில்லை. பின்னர் உமர் ரளியல்லாஹு அன்ஹு நுழைந்த போதும் நீங்கள் திடுக்கிடவில்லை. பொருட்படுத்தவில்லை. அதன் பின்னர் உத்மான் ரளியல்லாஹு அன்ஹு நுழைந்த போது ஆடையைச் சரிசெய்து கொண்டு அமர்ந்தீர்களே’? எனக் கேட்டார்கள்.
அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ‘மலக்குகள் வெட்கப்படும் ஒரு மனிதரைப் பார்த்து நானும் வெட்கப்படக் கூடாதா?’ எனக் கூறினார்கள். (அறிவிப்பவர் ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா, ஆதாரம்: முஸ்லிம் 6362)
வெட்க குணம் உஸ்மான் ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம் அதிகமாகவுள்ளது அது ஈமானின் அடையாளமாகவுள்ளது என்பதை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இந்த செய்தியில் கூறியுள்ளார்கள்.
உஸ்மான் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் இறையச்சம்
مسند أحمد بن حنبل – 454 عن هانئ مولى عثمان رضي الله عنه قال : كان عثمان رضي الله عنه إذا وقف على قبر بكى حتى يبل لحيته فقيل له تذكر الجنة والنار فلا تبكي وتبكي من هذا فقال ان رسول الله صلى الله عليه و سلم قال القبر أول منازل الآخرة فإن ينج منه فما بعده أيسر منه وإن لم ينج منه فما بعده أشد منه قال وقال رسول الله صلى الله عليه و سلم والله ما رأيت منظرا قط إلا والقبر أفظع منه
உஸ்மான் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கப்ருக்குப் பக்கத்தில் நின்றால் தன் தாடி நனையும் அளவுக்கு அழக் கூடியவர்களாக இருந்தார்கள். சுவர்க்கம், நரகத்தை நினைத்தா அழுகின்றீர் என அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கவர் இல்லை என்றார். இன்னதுக்காகவா அழுகின்றீர் எனக் கேட்கப்பட்டது. அதற்கவர் ‘கப்ர் மறுமையின் முதற்படியாகும் அதில் வென்றால் அதற்குப் பின்னாலுள்ளது மிக இலகுவானது. அதில் வெல்லவில்லை என்றால் அதற்குப்பின்னாலுள்ளது மிகவும் கடினமானது. நான் எந்த மோசமான காட்சியைக் கண்டாலும் கப்ர் எனக்கு அதை விடக் கடினமாகவே தெரிகிறது’ என நபியவர்கள் கூறினார்கள் அதை நினைத்துத்தான் அழுகிறேன் என பதிலளித்தார்கள். (அறிவிப்பவர்: ஹானி, ஆதாரம்: அஹ்மத் 454)
மண்ணறை வாழ்க்கையென்பது வாழ்க்கைப் பயணத்தில் அனைவரும் சந்தித்தாகவேண்டியதொன்றாகும். மிகப்பெரும் செல்வந்தர் ஒருவர் மரணித்தாலும் வெறும் வெள்ளைப் புடவையில் சுற்றப்பட்டுத்தான் அடக்கம் செய்யப்படுவார். கோடிக்கணக்கில் அவருக்கு சொத்துக்கள் இருந்தாலும் ஒரு ரூபாயைக் கூட அவர் கொண்டு செல்வதில்லை. அவர் கைவிரலிலிருக்கும் மோதிரத்தைக் கூட கழற்றி எடுத்து விடுவார்கள்.
இவற்றையெல்லாம் அவதானிக்கும் போது மனித வாழ்வின் அர்த்தம்தான் என்ன? எதற்காக இந்த வாழ்க்கை? போன்ற வினாக்கள் தோன்றுகின்றன. சந்தோசத்தில் திளைத்துப் போன ஒருவனுக்கு, உறவுகளில் யாருக்காவது மரணம் அடைந்துவிட்டால் மறுகனமே வாழ்க்கை இருண்டு விடுகின்றது. கவலையும், சோகமும் அவனை வாட்டுகின்றது. ஆகவே மரணம் ஒருவரின் வாழ்வில் அபரிமிதமான தாக்கங்களையும், மாற்றங்களையும் சில நொடிகளிலேயே ஏற்படுத்திவிடுகின்றது. எனவேதான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கீழ்வருமாறு கூறியுள்ளார்கள்.
سنن الترمذي 2307 – عن أبي هريرة قال : قال رسول الله صلى الله عليه و سلم أكثروا ذكر هاذم اللذات يعني الموت
‘இன்பங்களைத் தகர்க்கக் கூடியதை அதிகமாக நினைவுகூறுங்கள்’ என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, ஆதாரம்: திர்மிதி 2307)
கரடு முரடான உள்ளங்களையும் இலக வைக்கும் தன்மை மரணத்திற்குண்டு. வாழ்வின் யதார்த்தம் புரியாமல் ஆங்காங்கே வந்து செல்லும் சந்தோசங்களை நிரந்தரம் என நம்பி விடக் கூடாது. மரண சிந்தனையை அவ்வப்போது வரவழைத்துக் கொள்வது மறுமையை நினைவுபடுத்தும். அது நம்மை சரியான திசையின் பால் வழிநடாத்திச் செல்லும் எனவேதான் கப்ர்களை தரிசிக்கும்படி இஸ்லாம் பணித்துள்ளது.
سنن أبى داود- 3237 – عَنِ ابْنِ بُرَيْدَةَ عَنْ أَبِيهِ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم نَهَيْتُكُمْ عَنْ زِيَارَةِ الْقُبُورِ فَزُورُوهَا فَإِنَّ فِى زِيَارَتِهَا تَذْكِرَةً .
கப்ர்களைத் தரிசிப்பதை உங்களுக்குத் தடை செய்திருந்தேன். (இப்போது) தரிசியுங்கள். அவற்றைத் தரிசிப்பதில் படிப்பினையிருக்கிறது. (அறிவிப்பவர்: இப்னு அபீ புர்தா, ஆதாரம்: அபூதாவுத் 3237)
மக்களெல்லாம் அயர்ந்து உறங்கிக் கொண்டிருக்கும் இரவு வேளையில் படுக்கையிலிருந்து எழும்பி நபியவர்கள் கப்ர்களைத் தரிசிக்கச் செல்வார்கள் என்ற ஹதீஸ்களைப் பார்க்கின்றோம்.
ஒருவரை அடக்கம் செய்து விட்டு அவருக்குப் பிராத்தனை புரியுமாறு நபியவர்கள் வேண்டுவார்கள் அதைக் கீழ்வரும் ஹதீஸ் கூறுகின்றது.
سنن أبى داود3223 – عَنْ عُثْمَانَ بْنِ عَفَّانَ قَالَ كَانَ النَّبِىُّ -صلى الله عليه وسلم- إِذَا فَرَغَ مِنْ دَفْنِ الْمَيِّتِ وَقَفَ عَلَيْهِ فَقَالَ اسْتَغْفِرُوا لأَخِيكُمْ وَسَلُوا لَهُ التَّثْبِيتَ فَإِنَّهُ الآنَ يُسْأَلُ
ஒரு ஜனாஸாவை அடக்கிய பின்பு நபியவர்கள் அங்கே நிற்பார்கள் பின்னர் ‘உங்களுடைய சகோதரருக்குப் பாவமன்னிப்பைக் கேளுங்கள், அவருக்கு உறுதியைக் வேண்டுங்கள் இப்போது அவர் விசாரிக்கப்படுகின்றார்’ என்று கூறினார்கள். (அறிவிப்பவர் : உஸ்மான் ரளியல்லாஹு அன்ஹு, ஆதாரம்: அபூதாவுத் 3223)
இவ்வாறான செய்திகளே உஸ்மான் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் அழுகைக்குப் பின்புலமாகவிருந்தன என்பதை நாம் கவனிக்க வேண்டும்.
இன்ஷா அல்லாஹ், கட்டுரை தொடரும்….