அருளாளன் அன்பாளன் இறைவனின் பெயரால்…
இன்று உலகம் அழிவின் விளிம்பில் நிற்கிறது. எங்கு பார்த்தாலும் குடி, கூத்து, இசை. சீரழிய சினிமா, ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம், ஆபாசம், சூது, விபச்சாரம், கற்பழிப்பு, ஒழுக்கக் கேடுகள், கொலை, கொள்ளை, திருட்டு, வழிப்பறி, ஏமாற்று, வஞ்சனை, மோசடி, லஞ்சம், கற்பழித்துக் கொலை, வரதட்சணை கொடுமை, பெண்கள் எரித்துக் கொல்லப்படுதல், வன்செயல்கள், தீவிரவாதம் இப்படி பஞ்சமா பாவங்களில் எது ஒன்றும் விடுபடாமல் கொடிகட்டிப் பறக்கின்றன.
மனிதனின் அமைதி வாழ்க்கைக்குக் குந்தகம் விளைவிக்கும் அனைத்துச் செயல்களும் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து வருகின்றன. விளைவு சுனாமி, புயல், அழிவை உண்டாக்கும் பெருமழை, வெள்ளம் என இயற்கைச் சீற்றத்தால் மக்கள் அழிகின்றனர், நாடு அல்லோல கல்லோலப் படுகிறது.
நாளுக்கு நாள் உலகம் அமைதி இழந்து தவிக்கிறது. இவை அனைத்திற்கும் முழுமுதல் காரணகர்த்தாக்களாக கடவுளை நெருங்கச் செய்கிறோம்; சுவர்க்கம் அடைய வழி சொல்கிறோம் என்று பொய்யாகக் கூறி, கடவுளின் பெயரால் மக்களை ஏமாற்றி வயிறு வளர்க்கும் வஞ்சகர்களான புரோகிதர்கள் நம் கண் முன்னால் வருகிறார்கள்.
இவர்களே கடவுளின் பெயரால் மூடநம்பிக்கைகளையும், மூடச் சடங்கு சம்பிரதாயங்களையும், அநாச்சாரங்களையும் நெய் வார்த்து வளர்த்து வருகிறார்கள். மதப்புரோகிதர்கள் என்று சொல்லும்போது எந்த மதப்புரோகிதர்களும் இதற்கு விதிவிலக்கல்ல. நாங்கள்தான் இறைவனை நெருங்கச் செய்யும், சுவர்க்கத்திற்கு வழிகாட்டும் மேன்மக்கள், இறைவனுக்கு நெருக்கமானவர்கள் என்று கூறுகிறவர்கள் அனைவரும் வடிகட்டிய மூடர்களே! அயோக்கியர்களே! மக்களை ஏமாற்றி வயிறு வளர்க்கும் அற்பர்களே!
இறைவனுக்கும் அடியானுக்கும் இடையில் எந்த இடைத்தரகனும்-புரோகிதனும் புக முடியாது என்பதே மனிதன் படைக்கப்பட்டதிலிருந்து மனிதனை மட்டுமல்ல, அகிலங்களையும், அவற்றிலுள்ளவற்றையும் படைத்து நிர்வகித்து வரும் ஏகன் இறைவனின் தெளிவான கட்டளை. முஸ்லிம்கள் முதன் முதலில் எடுக்கும் உறுதிமொழி அதுவே!
அந்த இறைக் கட்டளையை மீறித்தான் இந்த மதப்புரோகிதர்கள் சட்ட விரோதமாக, திருட்டுத்தனமாக ஒவ்வொரு சமுதாயத்தினுள்ளும் புகுந்து கொண்டு ஏமாற்றி வயிறு வளர்த்து வருகிறார்கள். மக்களை வஞ்சிக்கிறார்கள். இந்து சமுதாயத்தினுள் திருட்டுத்தனமாகப் புகுந்துள்ள மடாதிபதிகள், சங்கராச்சாரியார்கள், சாதுக்கள், ஆரியர்கள் போன்ற மதகுருமார்கள், கல்லையும், மண்ணையும், கண்ட கண்ட படைப்புகளையும் பல கோடி கடவுள்களாகக் கற்பித்து இந்து மக்களை ஏமாற்றி வஞ்சிக்கிறார்கள். நரகில் தள்ளுகிறார்கள்.
யூத சமுதாயத்தினுள் திருட்டுத்தனமாகப் புகுந்துள்ள ரிப்பிகள் எனும் யூத மதகுருமார்கள் உஜைர் என்ற இறைத் தூதரை இறைவனின் குமாரன் என்று கற்பித்து இரு கடவுள் கொள்கையை கற்பித்து யூதர்களை வஞ்சித்து வருகிறார்கள். கிறித்தவ சமுதாயத்தினுள் திருட்டுத்தனமாகப் புகுந்துள்ள பாதிரிகள் எனும் கிறித்தவ மதகுருமார்கள் ஈஸா இறைத்தூதரையும், பரிசுத்த ஆவியையும் கடவுள்களாக்கி முக்கடவுள் கொள்கையை கற்பித்து கிறிஸ்தவர்களை வஞ்சித்து வருகிறார்கள். முஸ்லிம் சமுதாயத்தினுள் கொள்ளைப்புறமாக நுழைந்துள்ள ஹஜ்ரத்துகள், ஷேக்குகள் எனும் முஸ்லிம் மதகுருமார்கள் இறைவனுக்கும் அடியானுக்குமிடையில் இறந்தவர்களையும், உயிரோடிருப்பவர்களையும் இடைத்தரகர்களாகப் புகுத்தி முஸ்லிம்களை வஞ்சித்து வருகிறார்கள், நரகில் தள்ளுகிறார்கள்.
இப்படி எந்த மதமாக இருந்தாலும் நாங்கள்தான் இறைவனை நெருங்கச் செய்வோம்; சுவர்க்கத்திற்கு வழிகாட்டுவோம் என்று கூறிக்கொண்டு மத குருமார்களாக எவர்கள் செயல்படுகிறார்களோ அவர்கள் மனித சமுதாயத்திலேயே கடைந்தெடுத்த பொய்யர்கள், திருடர்கள், அயோக்கியர்கள் என்பதை ஒவ்வொரு ஆணும் பெண்ணும் உணர்ந்து அவர்களைப் புறக்கணிக்கும் நன்நாளே மனித சமுதாயம் மேம்படும் பொன்னாளாகும். உலகைப் பிடித்துள்ள பீடைகள் அகலும்!
இடைத்தரகர்களான புரோகிதர்கள் அனைவரும் அவர்கள் எம்மதத்தைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் அவர்கள் கடவுள் பெயரைச் சொல்லியே மூட நம்பிக்கைகளையும், மூடச் சடங்கு சம்பிரதாயங்களையும், அனாச்சாரங்களையும், பகுத்தறிவு ஏற்றுக் கொள்ளாத குருட்டுச் செயல்களையும் நடைமுறைப்படுத்தி மக்களை ஏமாற்றி வருவதால், ஓரளவு சுய சிந்தனையாளர்கள் இவர்களின் இந்த அட்டூழியங்களை பொறுக்க முடியாமல் ஆத்திரமுற்று, கடவுள் பெயரைச் சொல்லித்தானே இந்த மத குருமார்கள் ஜாதி வேற்றுமைகளையும், பகுத்தறிவு ஏற்காத மூட நம்பிக்கைகளையும் கற்பனை செய்து மக்களை ஏமாற்றி வஞ்சித்து வயிறு வளர்க்கிறார்கள்,
அந்தக் கடவுளே இல்லை என்று நிலைநாட்டிவிட்டால் இந்த மூடநம்பிக்கைகள், மூடச் சடங்கு சம்பிரதாயங்கள், அநாச்சாரங்கள், ஜாதி வேற்றுமைகள், கடவுளின் பெயரால் நடைபெறும் ஏமாற்று, பித்தலாட்டங்கள் அனைத்தும் ஒழிந்து விடும் என்ற தவறான நம்பிக்கையில் கடவுள் மறுப்புக் கொள்கையை, நாத்திகத்தைப் போதிக்க ஆரம்பித்தார்கள். அவர்களில் ஈ.வே.ரா.பெரியார் தமிழகத்தில் முன்னிலை வகித்தார். கடவுள் மறுப்புக் கொள்கையால் அவர்கள் எதிர்பார்த்த சீர்திருத்தம் ஏற்படவில்லை. அதற்கு மாறாக பாதி மனிதன் பாதி மிருகம் என்றிருந்த நிலைமாறி, மனிதர்கள் முழு மிருகமாக மாறும் நிலையே ஏற்பட்டு விட்டது. அதனால் ஆரம்பத்தில் நாம் குறிப்பிட்டுள்ள அனைத்து மிருகச் செயல்களும் அரங்கேறி வருகின்றன. ஆம்! மிருகத்திலும் கேடுகெட்ட நிலை.
இவ்வுலகோடு மனித வாழ்வு முற்றுப் பெற்று விடுகிறது. மனிதர்கள் செய்யும் அட்டூழியங்கள், அராஜகங்களுக்கு கேள்வி கணக்கோ, தண்டனையோ இல்லை என்ற அசட்டுத் துணிச்சலில், மனித நேயத்திற்கு முரணான அனைத்துத் தீய செயல்பாடுகளையும் துணிந்து செயல்படுத்தி, மனிதர்கள் வாழும் நாட்டை மிருகங்கள் வாழும் காடாக்கி வருகிறார்கள்.
ஆம்! மனிதன் மனிதனாக வாழும் ஒழுக்க வாழ்வை, மூட நம்பிக்கைளால் எந்த அளவு மத குருமார்கள் என்ற புரோகிதர்கள் சிதைத்துச் சின்னாபின்னமாக்குகிறார்களோ, அதற்கு எவ்விதத்திலும் குறைவு இல்லாமல், ஓரிறைவனையும், மறுமையையும் மறுக்கும் நாத்திகர்களும், கடவுள் இல்லை என்ற மூட நம்பிக்கையால் மனிதன் மனிதனாக வாழும் ஒழுக்க வாழ்வை சிதைத்துச் சின்னாபின்னமாக்கி வருகிறார்கள். மனிதனை மிருகமாக்கி வருகிறார்கள்.
மனிதன் விஞ்ஞானத்தில் முன்னேறி விட்டானாம். மனிதனையே குளோனிங் முறையில் படைத்து விடுவானாம்.மனிதனும் படைப்பாளனாம். அதனால் ஓரிறைவன் இல்லையாம். இது நாத்திகர்களின் புதிய முழக்கம். இது அவர்களின் பகுத்தறிவற்ற ஐயறிவு நிலையையே வெளிப்படுத்துகிறது. மனித செல்லிலிருந்து குளோனிங் மனிதனைப் படைக்கப் போகிறார்களா? அல்லது ஒன்றுமே இல்லாத நிலையில் மனிதனைப் படைக்கப் போகிறார்களா? ஒன்றுமே இல்லாத நிலையில் மனிதனின் தலையில் இருக்கும் ஒரு மயிரைக் கூட மனிதனால் படைக்க முடியாது.
அது மட்டுமல்ல; மனிதனை மட்டும் குளோனிங் முறையில் படைத்தால் போதுமா? மனிதன் இறைவன் ஆகி விடுவானா? அல்லது இறைவன்தான் இல்லாமல் போய் விடுவானா? அண்டசராசரங்கள் அனைத்தையும் படைக்கும் ஆற்றலை மனிதன் பெற்று விடுவானா? கிழக்கே உதித்து மேற்கே மறையும் சூரியனை மேற்கே உதித்து கிழக்கில் மறையச் செய்யும் ஆற்றலை மனிதன் பெற்று விடுவானா?
அண்ட சராசரங்களில் எண்ணற்ற கோள்கள் இருக்கின்றன. சில கோள்களிலிருந்து வெளியாகும் வினாடிக்கு 3 லட்சம் கி.மீ. வேகத்தில் பிரயாணம் செய்யும் ஒளி இன்னும் பூமியை வந்து அடையவில்லை என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். மனிதன் அண்ட சராசரங்கள் அனைத்தையும் படைக்க வேண்டாம். தான் வாழும் மிகமிகச் சிறிய பூமியைப் போன்று ஒரு பூமியைத்தானும் படைக்க முடியுமா? முடியாதே! இந்த நிலையில் ஏன் இந்த ஆணவம்? ஆம்! நாத்திகர்கள் ஐம்புலன்களைக் கொண்டு கிடைக்கும் ஐயறிவைக்கொண்டு மட்டும் சிந்திக்கிறார்களே அல்லாமல், மனிதனுக்குத் தனியாகக் கொடுக்கப்பட்ட ஐம்புலன்களுக்கு எட்டாத மெய்யறிவு (METAPHYSICS) என்ற ஆறாவது அறிவான பகுத்தறிவை அறியவில்லை. குறைகுடம் தழும்பும் என்பது போல் பகுத்தறிவை பயன்படுத்தத் தெரியாதவர்கள் தான் தங்களைப் பகுத்தறிவாளர் என பீற்றுகிறார்கள்.
உலகின் பாதியைக் கெடுக்கிறவர்கள் கடவுளின் பெயரால் மக்களை ஏமாற்றி வயிறு வளர்க்கும் இடைத்தரகர்களான புரோகிதர்கள் என்றால், மறுபாதியைக் கெடுக்கிறவர்கள் அனைத்தையும் படைத்த தன்னந்தனியான எவ்விதத் தேவையும் இல்லாத ஓரிறைவனையும் மறுக்கும் நாத்திகர்களாகும். பல கடவுள்களைக் கற்பிக்கும், மக்களை ஏமாற்றி வயிறு வளர்க்கும் மதகுருமார்களான புரோகிதர்களை ஒழிப்பதற்குப் பகரமாக ஓரிறைவனையே ஒழிக்க முற்பட்டிருக்கிறார்கள் நாத்திகர்கள்.
என்று மக்கள் மதப் புரோகிதர்களிடமும் சிக்கமாமல், நாத்திகர்களிடமும் சிக்காமல், இரு சாராரையும் நம்பாமல், அகிலங்களைப் படைத்த ஓரிறைவனை மட்டும் நம்பி, அவனது வழிகாட்டலை எடுத்து நடக்க முன் வருகிறார்களோ அன்றுதான் உலகைப் பீடித்திருக்கும் பீடைகளான அனைத்துத் தொல்லைகளும் நீங்கும். மக்களுக்கு வளமான, சுபீட்சமான அமைதியான நல்வாழ்வு கிடைக்கும்.
இறைவன் மனிதனைப் படைத்ததிலிருந்து அவனுக்குரிய வாழ்க்கை நெறிமுறைகளைத் தந்து கொண்டிருக்கிறான். இந்துக்களிடமுள்ள வேதங்கள், யூதர்களிடமுள்ள தோரா என்ற வேதம், கிறித்தவர்களிடமுள்ள பைபிள் என்று அழைக்கப்படும் வேதம், இதுபோல் அனைத்து மதங்களிலுள்ள வேதங்கள் அந்தந்தக் காலத்தில் இறைவனால் இறக்கியருளப்பட்ட வாழ்க்கை நெறிநூல்கள்தான். ஆனால் அவை தற்காலிகமாக இருந்ததால் இறைவன் அவற்றைப் பதிந்து பாதுகாக்க ஏவவில்லை. மேலும் அவற்றில் புரோகிதர்களின் கற்பனை கதைகள் நிறைந்து, மனிதக் கரங்கள் பட்டு அவை அனைத்தும் அவற்றின் தூய நிலையை இழந்து கலப்படமாகிவிட்டன. அவற்றில் பல அசிங்கங்கள் நிறைந்து காணப்படுகின்றன.
மேலும் அவை அனைத்தையும் “அரசுகள் பழைய நோட்டுகளை புழக்கத்திலிருந்து செல்லாதவை ஆக்குவது போல், இறைவன் செல்லாதவை ஆக்கிவிட்டான். இறுதியில் நிறைவு படுத்தப்பட்டு இறைவனால் அளிக்கப்பட்ட வாழ்க்கை நெறிநூல் அல்குர்ஆன் மட்டுமே, அது உடனுக்குடன் பதிந்து பாதுகாக்கப்பட்டுள்ளதால், அதில் புரோகிதர்கள் தங்களின் கைவரிசையைக் காட்ட முடியவில்லை. மூட நம்பிக்கைகள் நிறைந்த கற்பனைக் கதைகளைப் புகுத்த முடியவில்லை.
முன்னைய வேதங்களில் காணப்படும் பகுத்தறிவுக்கு முரணானவை இறுதி வாழ்க்கை நெறிநூல் அல்குர்ஆனில் எதுவும் இல்லை. ஆனால் பகுத்தறிவுக்குள் அடைபடாத மறைவானவை அல்குர்ஆனில் உண்டு. பகுத்தறிவுக்குள் அடைபடாத பெற்ற தாயை ஊரை நம்பியும், பெற்ற தகப்பனை அந்தத் தாயை நம்பியும் ஏற்பதுபோல், இறைவனால் இறுதி இறைத் தூதராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர் இறை அறிவிப்புகள் மூலம் பெற்றுச் சொன்ன அந்த மறைவானவற்றை நம்பி ஏற்பவர்களே முழுமையான ஆறாவது மெய்யறிவை (METAPHYSICS) கொண்ட பகுத்தறிவாளர்கள்.
மதப்புரோகிதர்களையும், நாத்திகர்களையும், நம்பி அவர்கள் பின்னால் செல்லாமல், நேரடியாக இறுதியாக அருளப்பட்ட வாழ்க்கை நெறிநூல் அல்குர்ஆனை நேரடியாகப் படித்துச் சிந்தித்து விளங்கி அதன்படி நடப்பவர்களே இவ்வுலகிலும், மறு உலகிலும் வெற்றி பெற முடியும். ஓ! மனித சமுதாயமே அந்த வெற்றிக்குரிய பாதையில் வெற்றி நடைபோட உங்கள் அனைவரையும் அன்புடன்அழைக்கிறோம். யாம் பெற்ற இன்பம் இவ்வையகமும் பெறட்டுமாக!
source: http://www.readislam.net/portal/archives/2734#comment-836