மரணம் வரை உங்களை விரும்பும் ஒரே உறவு (2)
தன் தாய், தந்தையர் உயிருடனிருந்தும் அவர்களுக்கு நன்மைகள் செய்வதன் மூலம் ஒருவன் சுவனம் செல்லவில்லையாயின் அவனுக்கு நாசம் உண்டாகட்டும் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். மற்றொரு செய்தி
صحيح البخاري 2466 – عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ بَيْنَا رَجُلٌ بِطَرِيقٍ اشْتَدَّ عَلَيْهِ الْعَطَشُ فَوَجَدَ بِئْرًا فَنَزَلَ فِيهَا فَشَرِبَ ثُمَّ خَرَجَ فَإِذَا كَلْبٌ يَلْهَثُ يَأْكُلُ الثَّرَى مِنْ الْعَطَشِ فَقَالَ الرَّجُلُ لَقَدْ بَلَغَ هَذَا الْكَلْبَ مِنْ الْعَطَشِ مِثْلُ الَّذِي كَانَ بَلَغَ مِنِّي فَنَزَلَ الْبِئْرَ فَمَلَا خُفَّهُ مَاءً فَسَقَى الْكَلْبَ فَشَكَرَ اللَّهُ لَهُ فَغَفَرَ لَهُ قَالُوا يَا رَسُولَ اللَّه وَإِنَّ لَنَا فِي الْبَهَائِمِ لَأَجْرًا فَقَالَ فِي كُلِّ ذَاتِ كَبِدٍ رَطْبَةٍ أَجْرٌ
‘ஒருவர் ஒரு பாதையில் சென்று கொண்டிருந்தபோது அவருக்குக் கடும் தாகம் ஏற்பட்டது. (வழியில்) அவர் ஒரு கிணற்றைக் கண்டு அதில் இறங்கினார். (அதிலிருந்து) தண்ணீர் குடித்தார். பிறகு வெளியே வந்தார். அப்போது, தன் எதிரே நாய் ஒன்று தாகத்தால் (தவித்து) ஈரமண்ணை (நக்கி) உண்டு கொண்டிருப்பதைப் பார்த்தார். ‘எனக்கு ஏற்பட்டது போன்ற (கடும்) தாகம் இந்த நாய்க்கும் ஏற்பட்டுள்ளது போலும்’ என்று (தன் மனத்திற்குள்) கூறினார். பிறகு கிணற்றில் இறங்கி, தன் காலுறையைத் தண்ணீரால் நிரப்பி (மேலே கொண்டு வந்து) அந்த நாய்க்குப் புகட்டினார். அல்லாஹ், அவரின் இந்த நற்செயலை அங்கீகரித்து அவருக்கு மன்னிப்பளித்தான்’ என்று இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.
இதைச் செவியுற்ற மக்கள், ‘இறைத்தூதர் அவர்களே! கால்நடைகள் (மற்றுமுள்ள பிராணிகள்) விஷயத்திலுமா எங்களுக்குப் பிரதிபலன் உண்டு?’ என்று கேட்டார்கள். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ‘உயிருள்ள பிராணி ஒவ்வொன்றின் விஷயத்திலும் (அதற்குக் கருணை காட்டினால்) உங்களுக்குப் பிரதிபலன் உண்டு’ என்று பதிலளித்தார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரர் ரளியல்லாஹு அன்ஹு, ஆதாரம்: புகாரி 2466)
தனக்கு நலவேதும் செய்யாத ஒரு நாய்க்குத் தண்ணீர் புகட்டியதற்கு அல்லாஹ் இவரின் பாவங்களை மன்னித்தான் என்றால் நம்மைப் பெற்று, வளர்த்து, ஆளாக்கிய நம் தாய்க்கு ஒரு டம்ளர் தண்ணீரை நாம் புகட்டினால், அவருக்கு சாப்பாடு கொடுத்தால், அவர் உறங்கும் இடத்தை சுத்தம் செய்தால், அவரோடு பேசி மகிழ்ந்தால் இவற்றிலிருக்கும் கூலிதான் எம்மாத்திரம்? என்பதை நாம் சிந்திக்க வேண்டும்.
ஒரு பூனையைக் கட்டிப் போட்டதற்காக ஒரு பெண் நரகம் நுழைந்தாள் என்றால் நம்மை ஈன்றெடுத்த தாய் தந்தைக்கு நாம் நோவினை செய்தால் அதற்கு எத்தகைய தண்டனைகள் நமக்குக் கிடைக்கப் போகின்றன என்பதை நாம் சிந்திக்க வேண்டும். ஆகவே பெற்றோரை கண்ணியப்படுத்துவது மகிழ்விப்பது போன்றனவற்றில் அளவிலா பிரதிபலன்களுள்ளன என்பதை நாம் விளங்க வேண்டும். நம் தாய், தந்தையர் எதையாவது நம்மிடம் வேண்டினால் அவர்களை மகிழ்விக்க என்ன செய்யலாம் என்ற ஆதங்கம் நம்மிடம் காணப்படுமாயின் அதனால் நாம் அல்லாஹ்வின் நேசத்துக்குரியவர்களாகின்றோம். இதை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பின்வருமாறு கூறினார்கள்.
1899 – حَدَّثَنَا أَبُو حَفْصٍ عَمْرُو بْنُ عَلِيٍّ قَالَ: حَدَّثَنَا خَالِدُ بْنُ الحَارِثِ قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ يَعْلَى بْنِ عَطَاءٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، عَنِ النَّبِيِّ [ص:311] صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:
[سنن الترمذي ت شاكر 4/ 310 ]
”தாய், தந்தையரின் பொருத்தமே அல்லாஹ்வின் பொருத்தமாகும். அல்லாஹ்வின் கோபம் அவர்களிருவரின் கோபத்திலுள்ளது”. (திர்மிதி)
எனவே நம் பெற்றோருக்கு நாம் செய்கின்ற ஓர் அற்ப காரியத்திலும் இமாலயக் கூலி நமக்கிருக்கின்றது என்பதை நாம் இதயத்தில் பதிந்து கொள்ள வேண்டும்.
இரண்டாவது அம்சம்
தாய், தந்தையரைப் பேணுவதில் அடுத்த படியாக நாம் கவனிக்க வேண்டிய மற்றோர் அத்தியாயம் எதுவெனில், அவர்களிருவரையும் நாம் மதிக்க வேண்டிய விதமும், முறையுமாகும்.ஒரு நபருடன் நாம் பழகுவதால் துர்நடைத்துக்கு நாம் ஆட்பட்டுவிவோம், மார்க்கத்தை விட்டு வழிதவறி விடுவோம், நடத்தை பிறழ்வில் விழுந்து விடுவோம் போன்ற நிலைகள் ஏற்பட வாய்ப்பிருக்குமாயின் அந்நபரை மார்க்கத்துக்காக வெறுக்கலாம். அவரிடம் நல்ல மாற்றங்கள் ஏற்படும் வரையில் நமக்கும், அவருக்குமிடையிலுள்ள இடைவெளி தொடரலாம். ஆனால் உலக விடயங்களில் ஒருவரோடு நாம் கோபித்துக் கொண்டால் மூன்று நாட்களுக்கு மேலாக பகை தொடரக் கூடாது. இவை ஏனையவர்களோடு நாம் பழகுவதில் கைக்கொள்ள வேண்டிய பொதுவான சில விதிகளாகும்.
ஆனால் நம் பெற்றோர்களைப் பொறுத்த மட்டில் உலக விடயங்களுக்காக மட்டுமன்றி மார்க்க விடயங்களுக்காகக் கூட அவர்களை நாம் பகைக்க முடியாது.
அவர்கள் கொண்டுள்ள கொள்கை தவறானது என்றால் ‘நீங்கள் கொண்டுள்ள கொள்கை தவறானது; என்னால் இதை ஏற்க முடியாது. எனது கொள்கைதான் சரியானது’ என்று முறையாக உண்மையை எடுத்துச் சொல்ல வேண்டும். ஆனால் அவர்களைப் பகைக்க முடியாது. அல்லாஹ் இதை நேரடியாகவே கூறிக்காட்டுகின்றான்.
وَإِنْ جَاهَدَاكَ عَلَى أَنْ تُشْرِكَ بِي مَا لَيْسَ لَكَ بِهِ عِلْمٌ فَلَا تُطِعْهُمَا وَصَاحِبْهُمَا فِي الدُّنْيَا مَعْرُوفًا لقمان : 15
உனக்கு அறிவில்லாத ஒன்றை எனக்கு இணை கற்பிக்கும் படி அவ்விருவரும் உன்னைக் கட்டாயப்படுத்தினால் அவர்களுக்குக் கட்டுப்படாதே இவ்வுலகில் அவர்களிடம் அழகிய முறையில் தோழமை கொள் (அல்குர்ஆன் – ஸூரத்துல்
பாவங்களில் மிகப் பெரியது அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பதாகும். அதையே ஒருவர் கட்டாயப்படுத்தினால் அது அதைவிடக் கொடியதாகும். இத்தகையதை நம் பெற்றோர் செய்தாலும் அவர்களை வெறுக்காது, அவர்களிடம் அழகிய முறையில் தோழமை கொள்ளுமாறு அல்லாஹ் பணித்துள்ளான்.
பெற்றோருக்கு தாம் செய்யும் செலவைக் குறைப்பதற்காக கொள்கையைக் காரணம் காட்டிப் பெற்றோரைப் பகைத்தவர்கள் நம்மில் பலருண்டு. இதற்குக் ‘கொள்கை உறுதி’ என்று இவர்கள் நினைக்கின்றனர். ஆனால் இதே வெறுப்பை தவறான கொள்கையிலிருக்கும் தம் நண்பர்களிடம் காட்டமாட்டார்கள்.
இன்னும் சிலர், தாம் பெற்றோரை மதிக்கின்றோம் என்று கூறி, பெற்றோர் செய்யும் தவறுகளையெல்லாம் ஆமோதித்துக் கொண்டு வாழ்கின்றனர். தாயைப் புண்படுத்தக் கூடாது எனக் கூறி தாய் சொன்னதற்காக சீதனம் வாங்குகின்றனர். இவர்களிடம் கேட்டால் ‘என்னதான் செய்யலாம்? என் பெற்றோருக்கு நான் மட்டுமே பிள்ளை. அவர்களின் மனங்களை நான் புண்படுத்தலாமா?’ என்று விளக்கம் சொல்கின்றனர்.
தமக்கு விருப்பமில்லாத ஒரு பெண்ணைத் தம் பெற்றோர் திருமணம் செய்யச் சொன்னால் இவர்கள் அவ்வாறு செய்வார்களா? என்பதை ஒரு கனம் நாம் சிந்திக்க வேண்டும். தாயும், தந்தையும் வழிகேட்டிலிருந்தால் அவர்களைத் திருத்த வேண்டும். அவர்களுக்கு நேர்வழியைக் காட்ட வேண்டும் என்ற கவலையே உண்மையில் இச்சந்தர்ப்பத்தில் ஒரு முஃமினுக்கு ஏற்பட வேண்டும்.
பெற்றோர் தவறான வழியிலிருந்தாலும் அவர்களை நாம் மதிக்க வேண்டும் என்பதற்கான சில செய்திகளைத் கீழே அவதானியுங்கள்.
صحيح البخاري 2620 – عَنْ أَسْمَاءَ بِنْتِ أَبِي بَكْرٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَتْ قَدِمَتْ عَلَيَّ أُمِّي وَهِيَ مُشْرِكَةٌ فِي عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَاسْتَفْتَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قُلْتُ وَهِيَ رَاغِبَةٌ أَفَأَصِلُ أُمِّي قَالَ نَعَمْ صِلِي أُمَّكِ
இஸ்லாத்தை ஏற்காது, இணை வைப்பவராகவிருந்த எனது தாய் நபியவர்கள் காலத்தில் என்னிடம் வந்தாள். (என்னோடு உறவாட) என் தாய் விரும்புகிறாள், அவளோடு நான் சேர்ந்து வாழவா என நபியவர்களிடம் நான் மார்க்கத் தீர்ப்புக் கேட்டேன். ‘ஆம் நீ அவளோடு நேர்ந்து நட’ என்று நபியவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர் : அஸமா பின்த் அபீபக்ர் ரளியல்ல,ஹு அன்ஹு, ஆதாரம்: புகாரி 2620)
ஒரு நபித் தோழர் இஸ்லாத்தை ஏற்றதும் அதை விரும்பாத அவருடைய தாய் ‘நீ இஸ்லாத்தை விடும் வரை நான் உண்ணவும் மாட்டேன். குடிக்கவும் மாட்டேன்’ என்று அவரிடம் சபதமிடுகிறார். தாயைப் பார்ப்பதற்காக அவர் வரும் போதெல்லாம் தன் தாயின் உடல் மென்மேலும் பலவீனமாவதைக் காண்கிறார். அப்போது அந்நபித் தோழர் தன் தாயிடம் ‘இவ்வாறு ஆயிரம் முறைதான் உங்களுக்கு நடந்தாலும் ஒரு போதும் நான் இஸ்லாத்தை விடமாட்டேன்’. என்று கூறினார்.தன் கொள்கையைத் தெளிவாகச் சொன்ன இந்நபித்தோழர் தன் தாயின் மீதான பாசத்தை விடவில்லை என்பதை இச்சம்பவத்தில் தெளிவாகக் காணலாம்.
நபியவர்களின் தாயார் இஸ்லாத்தை இணைவைப்பில் மரணித்தார்கள். நபியவர்களை இது பெரிதும் வருத்தியது. அந்த செய்தி கீழுள்ளவாறு இடம் பெறுகிறது.
صحيح مسلم 2303 – عَنْ أَبِى هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- اسْتَأْذَنْتُ رَبِّى أَنْ أَسْتَغْفِرَ لأُمِّى فَلَمْ يَأْذَنْ لِى وَاسْتَأْذَنْتُهُ أَنْ أَزُورَ قَبْرَهَا فَأَذِنَ لِى
என் தாய்க்குக் பாவமன்னிப்புத் தேடுவதற்கு என் இறைவனிடம் அனுமதி கேட்டேன். எனக்கு அவன் அனுமதிக்கவில்லை. அவரின் கப்ரைத் தரிசிக்க அனுமதி கேட்டேன். எனக்கு அவன் அனுமதித்தான். (அறிவிப்பவர் : அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, ஆதாரம்: முஸ்லிம் 2303)
ஆகவே மார்க்கத்துக்காகவேனும் பெற்றோரைப் பகைக்கக்கூடாது என்பதை நாம் சாரம்சமாக விளங்கவேண்டும்.
ஆனால் நம்மில் பலர் மார்க்கத்துக்காகப் பெற்றோரைப் பகைக்கமாட்டர். மார்க்க ரீதியாக தாயிடம் தவறு காணப்பட்டால் ‘நான் கூறி இதை அவர் கேட்கமாட்டார்’ என்று சாட்டுச் சொல்லி, கண்டும் காணாதது போல் இருப்பர். அதே நேரம் சொத்துப் பங்கீட்டில் தனக்கு ஏதாவது குறையேற்பட்டால் ‘இவரெல்லாம் ஒரு தந்தையா? நீதியாகவல்லவா பிரிக்க வேண்டும்?’ என்று போர்க் கொடி ஏந்தி விடுவர். ஆகவே எங்கெல்லாம் நாம் பெற்றோருடன் கொஞ்சம் கடுமையாக நடக்க வேண்டுமோ அங்கு மிதமாக, கவனயீனமாக இருக்கிறோம். எங்கெல்லாம் பெற்றோருடன் சாந்தமாக நடக்க வேண்டுமோ அங்கு சீரிப்பாய்கிறோம். சில போது அவர்களுடனான உறவையே முறித்துக் கொள்கிறோம். இரண்டு நிலையும் தவறானது. தவறில் இருந்தால் இதமாகச் சுட்டிக்காட்ட வேண்டும் பகைக்கக் கூடாது.
இன்ஷா அல்லாஹ், கட்டுரை தொடரும்….
source: http://www.mujahidsrilanki.com/