மரணம் வரை உங்களை விரும்பும் ஒரே உறவு (1)
பெற்றோரைப் பேணவேண்டும் என்பது தொடர்பில் பல்வேறு உரைகள் ஆற்றப்பட்டிருந்தாலும் பெற்றோரைப் பேணுதல் என்ற அத்தியாயம் என்றைக்குமே பேசப்பட வேண்டியதொன்றாகவே இருந்து வருகின்றது.
பெற்றோரைக் கவனிக்க வேண்டும் என்று சொல்லப்பட்டதுமே நம்மில் பலருக்கு நினைவில் வருவதெல்லாம் ‘நான் என் தாய் தந்தையருக்கு மாதாந்தம் 5000 ரூபாய் பணம் கொடுத்து வருகிறேன்ளூ எனது மனைவிக்குக் கொடுக்காவிட்டாலும் அவர்களுக்குக் கொடுக்க நான் தவறுவதில்லை. அவர்களின் மருந்துச் செலவீனங்களை நானே பொறுப்பேற்றுள்ளேன்’ என்பதுதான்.
‘பெருநாள் தினமானால் தாய்க்குச் சேலை எடுத்துக் கொடுப்பதும், தந்தைக்கு சாரம், சட்டை வாங்கிக் கொடுப்பதும் பெற்றோரைக் கவனித்தலுக்கு அடையாளமாகப் பலராலும் பார்க்கப்படுகின்றது. பெற்றோரைக் கவனித்தல் பற்றிய அல்குர்ஆன் வசனங்களையும், ஹதீஸ்களையும் முன்வைக்கும் போதெல்லாம் மேற்செல்லப்பட்ட சில விடயங்களை வைத்து தம் பெற்றோரைத் தாம் கவனித்து விட்டதாக பலரும் திருப்தி கண்டு விட்டதால் பெற்றோரைக் கவனித்தல் என்றால் என்ன என்பது பற்றி இஸ்லாம் கூறும் பெரும் பகுதியொன்று மறைந்து போயுள்ளது. அதைத் தெளிவுபடுத்த வேண்டிய தேவையும் ஏற்பட்டு விட்டது.
அல்குர்ஆனையும், ஹதீஸையும் ஆராய்ந்து பார்க்கும் போது ‘பெற்றோருக்கு உணவு, உடை போன்றவற்றைக் கொடுக்க வேண்டும் என்று எங்கும் கூறப்படவில்லை. மனைவிக்கு உணவு கொடுக்க வேண்டும், உடை கொடுக்க வேண்டும், இருப்பிடம் கொடுக்க வேண்டும், என்றுதான் அல்குர்ஆன் கூறுகின்றது. எனவே உணவு, உடை, வீடு கொடுப்பதுதான் ‘கவனித்தல்’ என்பதற்கு அடையாளம் என்றால் மனைவியைத்தான் அல்லாஹ் கூடுதலாகக் கவனிக்கச் சொல்லியுள்ளான் என்று நாம் கூறவேண்டியாகிவிடும்.
எந்தளவுக்கென்றால் ஒருவர் தன் மனைவியை விவாகரத்துச் செய்து விட்டால் இத்தாக்காலம் முடியும் வரை உணவு, உடை ஆகியவற்றுக்கு அவரே பொறுப்பென்று இஸ்லாம் சட்டம் வகுத்துள்ளது. விவாகரத்து என்பது கணவன் மனைவிக்கிடையிலான அன்புப் பாலம் உடைவதால் ஏற்படுவதாகும். கணவன், மனைவிக்கிடையிலான அன்பு தகர்ந்த பின்னாலும் மனைவிக்கு உணவு, உடை கொடுக்கச் சொல்லி இஸ்லாம் பணிக்கின்றது என்றால் அன்பிற்கும் உணவு, உடை, இருப்பிடம் போன்றவற்றை வழங்குவதற்கும் அடிப்படையில் சம்பந்தம் கிடையாதென்பது தெளிவாகின்றது.
ஆனால் அதிகமானோர் பெற்றோரைக் கவனித்தல் என்றால் இதைத்தான் விளங்கி வைத்துள்ளனர். கவனித்தல் என்பதற்கு அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுதல் என்பதே அர்த்தமென்றால், தன் மனைவிக்கே செலவு செய்ய சக்தியற்ற ஓர் ஏழை, தன் பெற்றோரைக் கவனிப்பது எவ்வாறு? என்ற கேள்வியெழுகிறது. எனவே கவனித்தல் என்ற விடயத்தை நாம் தவறாக விளங்கி வைத்துள்ளோம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
‘வாழ்வில் சந்தோசம் ஏற்பட வேண்டுமென்றால் பொருளாதாரத்தைத் திரட்டவேண்டும்’ என நம்மில் பலர் நினைக்கின்றனர். பொருளாதாரமில்லாது வாழ்பவன் தன்னிடம் எதுவுமில்லை என்றுதான் நினைக்கின்றான். பொருளாதாரம் வாழ்க்கையில் அவசியம் என்பதற்காக பொருளாதாரம்தான் வாழ்க்கை என்றாகிவிட முடியாது. அவ்வாறானதொரு விதியை அல்லாஹ் ஏற்படுத்தவில்லை. இவைகளைத் தாண்டி, ‘இவ்வுலகில் பெறுமதி மிக்கதும், விலைமதிப்பற்றதுமான ஒன்றிருக்குமாயின் ஒருவருக்கு இன்னொருவரிடமிருந்து கிடைக்கும் அன்புதான் எனக் கூறலாம்.
வசதி படைத்தவர் மீதும், தனக்கு உதவி செய்தவர் மீதும், கௌரவமாக இருக்கும் ஒருவர் மீதும் ஒருவருக்கு அன்பு ஏற்படலாம். இத்தகைய அன்பு இயல்பானதன்று, உள்நோக்கமுடையது, நோக்கம் நிறைவேறியதும் கானல் நீர் போன்று மறையக்கூடியது. வசதிபடைத்தவரைச் சுற்றி வட்டமிடும் சந்தர்ப்பவாத ரெயில் சினேகிதர்களைப் பார்க்கின்றோம். பணமும், பதவியும் அவரிடமிருந்து கரைந்து போகவே இவர்களும் மெல்ல மறைந்து விடுகின்றனர். ஆகவே இத்தகைய அன்பு எவ்வகையிலும் பெருமானமில்லாதது. ஆனால் ஒருவருக்கு இன்னொருவரிடமிருந்து கிடைக்கும் அன்பு என்பது மிகப்பெறுமதிவாய்ந்ததாகும். அதை அல்லாஹ் பின்வருமாறு குறிப்பிடுகின்றான்.
وَأَلَّفَ بَيْنَ قُلُوبِهِمْ لَوْ أَنْفَقْتَ مَا فِي الْأَرْضِ جَمِيعًا مَا أَلَّفْتَ بَيْنَ قُلُوبِهِمْ وَلَكِنَّ اللَّهَ أَلَّفَ بَيْنَهُمْ إِنَّهُ عَزِيزٌ حَكِيمٌ الأنفال : 63
அவர்களின் உள்ளங்களிடையே அவன் பிணைப்பை ஏற்படுத்தினான். பூமியில் உள்ளஅனைத்தையும் நீர் செலவிட்டாலும் அவர்களின் உள்ளங்களிடையே உம்மால் பிணைப்பை ஏற்படுத்தியிருக்க முடியாது. மாறாக அல்லாஹ்வே அவர்களிடையே பிணைப்பை ஏற்படுத்தினான். அவன் மிகைத்தவன் ஞானமிக்கவன். (அல்அன்பால்: 63)
எனவே அன்பென்பது அல்லாஹ்வால் ஏற்படுத்தப்படுவதாகும். ஒருவர் இன்னொருவருக்கு மிகப்பெரும் அறியாயம் செய்து விட்டார் அதனால் அநியாயமிழைக்கப்பட்ட அம்மனிதரின் வாழ்வே இருண்டுவிடுகிறது. பின்னர் தான் செய்த தவறை வருந்தி அநியாயம் செய்த அம்மனிதர் அநியாயமிழைக்கப்பட்டவருக்கு பெரும் தொகைப் பணம் கொடுக்கின்றார். தனக்கேற்பட்டுள்ள வறுமைக்காக அவ்வுதவித்தொகையை அவர் பெற்றுக் கொண்டாலும் அவரின்
தன்னை யாரவாவது விமர்சிக்கும் போது ‘எதை வேண்டுமானாலும் சொல்லட்டும் அது பற்றி எனக்குக் கணக்கில்லை’ என்று சிலர் கூறுவர். இவ்வாறு இவர்கள் கூறுவதற்கு காரணம் விமர்சிப்பவரிடம் இவர்களுக்கு எவ்விதத் தேவையுமில்லை என்பதுவே. அதேவேளை தனக்கு உதவி செய்யும் ஒருவர் தன்னைப் பற்றி விமர்சித்துள்ளதைக் கேட்டால் ‘ஏன் விமர்சித்தார்? எதற்காக விமர்சித்தார்? என்று இவர்கள் ஆதங்கத்தில் கேட்பார்கள். விமர்சித்தவரிடம் தாம் தேவையுடையோராக இருப்பதனாலேயே இவ்வாறு இவர்கள் நிலைமாறுகின்றனர். போலியான அன்பின் மாதிரிவடிவங்களுக்கு இது
போன்றவற்றை உதாரணமாகக் கொள்ளலாம். ஆனால் இன்னொருவரிடமிருந்து நமக்குக் கிடைக்கும் அன்பானது அல்லாஹ் நமக்கேற்படுத்தியிருக்கும் அருட்கொடையெனலாம். நாம் கேட்காமல், எவ்வகையிலும் நாடாமல் இவ்வாறான அன்பு நமக்குக் கிடைக்குமென்றால் அது வார்த்தைகளால் அளவிடமுடியாததும், பெறுமானம் கணிக்க முடியாததுமாகும். அவ்வாறு தம் உயிரிலும் மேலாக நம்மை நேசிக்கும் ஓருறவு இவ்வுலகில் இருக்குமானால் அது நம் தாயும், தந்தையும்தான். வேறுயாருமில்லை.
நம் வர்த்தகப் பங்காளிகள் மீது நமக்கிருக்கும் சந்தர்ப்பவாத அன்பைப் பாதுகாப்பதில் நாம் கொள்ளும் கவனத்திற்கும், சுயலாபம் எதையும் எதிர்பார்க்காமல் உண்மையாகவே நம்மை நேசிக்கும் தாய், தந்தையினரின் அன்பைப் பாதுகாப்பதில் நாம் கொள்ளும் கவனத்திற்கும் பாரிய பாகுபாடுகள் காணப்படுகின்றன. பெற்றோரின் அந்தஸ்தை முறையாகப் புரியாமைதான் இப்புறக்கணிப்புக்களுக்குக் காணரமாகின்றது.
ஆகவே பெற்றோரின் பெறுமதியை முறையாகப் புரிந்து கொள்ள வேண்டுமாயின் முக்கியமான நான்கு அடிப்படைகளை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். இந்த நான்கு அம்சங்களுக்குள்ளும் பெற்றோரைக் கவனித்தல் என்பது முழுமையாக உள்ளடங்கியிருக்கின்றது. இவற்றை சரியாக விளங்கிக் கொள்ளும் பட்சத்தில் பெற்றோரைப் பேணல் என்ற அத்தியாயத்தை முறையாக விளங்கிக் கொள்ளலாம்.
முதல் அம்சம்
நாமனைவரும் மறுமையை நம்பியவர்கள். அந்த மறுமையில் நம் நன்மைத் தட்டுப் பாரமானதாகவும், தீமைத் தட்டுப் பாரம் குறைந்ததுமாகவும் இருக்க வேண்டும் என விரும்புபவர்கள். எவ்வளவுதான் பணத்தை வாரி இரைத்தாலும் நன்மை, தீமை தாராசுகளில் எவ்வித மாற்றத்தையும் செய்ய முடியாது என நம்புகிறோம். ஆகவே இவ்வுலகில் ‘அல்லாஹ்வை மட்டுமே வணங்க வேண்டுமென்ற ஏகத்துவத்துக்கு அடுத்ததாக மிகச் சிறந்த நட்காரியமொன்று இருக்குமானால் அது தாய், தந்தையரைப் பேணுதலே. பின்வரும் ஹதீஸை அவதானியுங்கள்.
صحيح البخاري 527 – قَالَ الْوَلِيدُ بْنُ الْعَيْزَارِ أَخْبَرَنِي قَالَ سَمِعْتُ أَبَا عَمْرٍو الشَّيْبَانِيَّ يَقُولُ حَدَّثَنَا صَاحِبُ هَذِهِ الدَّارِ وَأَشَارَ إِلَى دَارِ عَبْدِ اللَّهِ قَالَ سَأَلْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَيُّ الْعَمَلِ أَحَبُّ إِلَى اللَّهِ قَالَ الصَّلَاةُ عَلَى وَقْتِهَا قَالَ ثُمَّ أَيٌّ قَالَ ثُمَّ بِرُّ الْوَالِدَيْنِ قَالَ ثُمَّ أَيٌّ قَالَ الْجِهَادُ فِي سَبِيلِ اللَّهِ قَالَ حَدَّثَنِي بِهِنَّ وَلَوْ اسْتَزَدْتُهُ لَزَادَنِي
அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமான செயல் எது? என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் நான் கேட்டபோது, ‘தொழுகையை அதற்குரிய நேரத்தில் தொழுவதாகும்’ என்று பதில் கூறினார்கள். அதற்கு அடுத்து எது? என்றேன். ‘பெற்றோருக்கு நன்மை செய்தல்’ என்றார்கள். அதற்கு அடுத்து எது? என்றேன். ‘இறைவழியில் அறப்போர் புரிதல்’ என்றனர். எனக்கு இவற்றை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அறிவித்தார்கள். (கேள்வியை) மேலும் நான் அதிகப்படுத்தியிருந்தால் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் மேலும் சொல்லியிருப்பார்கள். (அறிவிப்பவர்: அப்துல்லாஹிப்னு மஸ்ஊத் ரளியல்லாஹு அன்ஹு, ஆதாரம்: புகாரி 527)
அல்லாஹ்வின் பாதையில் போராடல், தர்மம் செய்தல் போன்ற நற்காரியங்களை விடவும் பெற்றோருக்கு உபகாரம் செய்தல் எனும் நற்காரியம், நன்மைத் தட்டில் பாரமானதாகும். மற்றைய நற்கருமங்களைச் செய்து தேடும் நன்மைகளைக் காட்டிலும் அதனால் ஏற்படும் நன்மைகள் பன்மடங்காகும்.ஈஸா நபியவர்களைப் பற்றி அல்லாஹ்
وَجَعَلَنِي مُبَارَكًا أَيْنَ مَا كُنْتُ وَأَوْصَانِي بِالصَّلَاةِ وَالزَّكَاةِ مَا دُمْتُ حَيًّا (31) وَبَرًّا بِوَالِدَتِي وَلَمْ يَجْعَلْنِي جَبَّارًا شَقِيًّا (مريم : 31 ، 32)
நான் எங்கே இருந்த போதும் பாக்கியம் பொருந்தியவனாகவும் ஆக்கினான். நான் உயிருடன் இருந்து, என் தாயாருக்கு நன்மை செய்பவனாகவும், இருக்கும் காலமெல்லாம் தொழுமாறும், ஸகாத் கொடுக்குமாறும் எனக்குக் கட்டளையிட்டான். என்னை துர்பாக்கியசாலியாகவும், அடக்குமறை செய்பவனாகவும் அவன் ஆக்கவில்லை. (மர்யம் : 31- 32)
தாய்க்கு உபகாரம் செய்வதன் சிறப்பை சூசகமாக இவ்வசனம் சுட்டிக்காட்டுகின்றது. நமது நன்மைத்தட்டில் பாரம் அதிகரிக்க இதைப் போன்று வேறெதுவும் இல்லையெனலாம்.
ஒருவர் ஒரு முஃமினைக் கொலை செய்து, ஆட்சியாளர்களை விட்டும் மறைந்த நிலையில் அல்லாஹ்விடம் பாவ மன்னிப்புத் தேடினால் அவருக்கு மன்னிப்புண்டு ஆனால் நபித்தோழர் இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் இதில் முரண்பட்டிருந்தார்கள். இவ்வாறு கொலை செய்தவருக்கு இம்மையிலும், மறுமையிலும் மன்னிப்பில்லை என்ற நிலைப்பாட்டிலிருந்தார்கள். ஆனாலும் பிற்காலத்தில் இக்கருத்தை பிழை கண்டார்.
ஒரு முறை ஒரு நபர் இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம் வந்து ‘நான் ஒருவரைக் கொலை செய்து விட்டேன். எனக்குப் பாவமன்னிப்புண்டா? எனக் கேட்டார். இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் ‘உமக்குப் பாவமன்னிப்பில்லை’ என்று அவரிடம் கூறினார். அதைக் கேட்டதும் அந்நபர் சென்று விடுகிறார். என்றாலும் இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் மீண்டும் அந்நபரையழைத்து ‘உம் பெற்றோர் உயிருடனுள்ளனரா?’ என விசாரித்தார்கள். அதற்கவர் ‘ஆம்’ எனக் கூறினார். அதற்கு இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் ‘உம் பெற்றோருக்கு நீர் நன்மை செய்யும் சில வேளை அதனால் உன் பாவம் மன்னிக்கப்படலாம்’ என்று அவரிடம் கூறினார்கள்.
ஒரு முஃமினைக் கொலை செய்தவனுக்கு பாவ மன்னிப்பில்லை என்ற தனது நிலைப்பாட்டிலிருந்து இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் மாறுவதற்குக் காரணமே பெற்றோருக்கு உபகாரம் செய்வதில் காணப்படும் அளவிட முடியாத நன்மைகள்தான்.
குகைவாசிகளின் செய்தியிலும் பெற்றோருக்கு உபகாரம் செய்தல் என்பதுவே முதலாவதாக இடம் பெறுகின்றது. அதை வைத்தே அம்மூவரில் முதலாமவர் தன் பிராத்தனையைத் துவங்குகிறார். அந்த செய்தி கீழ் வருமாறு இடம் பெற்றுள்ளது.
صحيح البخاري 2215 – عَنْ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ خَرَجَ ثَلَاثَةُ نَفَرٍ يَمْشُونَ فَأَصَابَهُمْ الْمَطَرُ فَدَخَلُوا فِي غَارٍ فِي جَبَلٍ فَانْحَطَّتْ عَلَيْهِمْ صَخْرَةٌ قَالَ فَقَالَ بَعْضُهُمْ لِبَعْضٍ ادْعُوا اللَّهَ بِأَفْضَلِ عَمَلٍ عَمِلْتُمُوهُ فَقَالَ أَحَدُهُمْ اللَّهُمَّ إِنِّي كَانَ لِي أَبَوَانِ شَيْخَانِ كَبِيرَانِ فَكُنْتُ أَخْرُجُ فَأَرْعَى ثُمَّ أَجِيءُ فَأَحْلُبُ فَأَجِيءُ بِالْحِلَابِ فَآتِي بِهِ أَبَوَيَّ فَيَشْرَبَانِ ثُمَّ أَسْقِي الصِّبْيَةَ وَأَهْلِي وَامْرَأَتِي فَاحْتَبَسْتُ لَيْلَةً فَجِئْتُ فَإِذَا هُمَا نَائِمَانِ قَالَ فَكَرِهْتُ أَنْ أُوقِظَهُمَا وَالصِّبْيَةُ يَتَضَاغَوْنَ عِنْدَ رِجْلَيَّ فَلَمْ يَزَلْ ذَلِكَ دَأْبِي وَدَأْبَهُمَا حَتَّى طَلَعَ الْفَجْرُ اللَّهُمَّ إِنْ كُنْتَ تَعْلَمُ أَنِّي فَعَلْتُ ذَلِكَ ابْتِغَاءَ وَجْهِكَ فَافْرُجْ عَنَّا فُرْجَةً نَرَى مِنْهَا السَّمَاءَ قَالَ فَفُرِجَ عَنْهُمْ وَقَالَ الْآخَرُ اللَّهُمَّ إِنْ كُنْتَ تَعْلَمُ أَنِّي كُنْتُ أُحِبُّ امْرَأَةً مِنْ بَنَاتِ عَمِّي كَأَشَدِّ مَا يُحِبُّ الرَّجُلُ النِّسَاءَ فَقَالَتْ لَا تَنَالُ ذَلِكَ مِنْهَا حَتَّى تُعْطِيَهَا مِائَةَ دِينَارٍ فَسَعَيْتُ فِيهَا حَتَّى جَمَعْتُهَا فَلَمَّا قَعَدْتُ بَيْنَ رِجْلَيْهَا قَالَتْ اتَّقِ اللَّهَ وَلَا تَفُضَّ الْخَاتَمَ إِلَّا بِحَقِّهِ فَقُمْتُ وَتَرَكْتُهَا فَإِنْ كُنْتَ تَعْلَمُ أَنِّي فَعَلْتُ ذَلِكَ ابْتِغَاءَ وَجْهِكَ فَافْرُجْ عَنَّا فُرْجَةً قَالَ فَفَرَجَ عَنْهُمْ الثُّلُثَيْنِ وَقَالَ الْآخَرُ اللَّهُمَّ إِنْ كُنْتَتَعْلَمُ أَنِّي اسْتَأْجَرْتُ أَجِيرًا بِفَرَقٍ مِنْ ذُرَةٍ فَأَعْطَيْتُهُ وَأَبَى ذَاكَ أَنْ يَأْخُذَ فَعَمَدْتُ إِلَى ذَلِكَ الْفَرَقِ فَزَرَعْتُهُ حَتَّى اشْتَرَيْتُ مِنْهُ بَقَرًا وَرَاعِيهَا ثُمَّ جَاءَ فَقَالَ يَا عَبْدَ اللَّهِ أَعْطِنِي حَقِّي فَقُلْتُ انْطَلِقْ إِلَى تِلْكَ الْبَقَرِ وَرَاعِيهَا فَإِنَّهَا لَكَ فَقَالَ أَتَسْتَهْزِئُ بِي قَالَ فَقُلْتُ مَا أَسْتَهْزِئُ بِكَ وَلَكِنَّهَا لَكَ اللَّهُمَّ إِنْ كُنْتَ تَعْلَمُ أَنِّي فَعَلْتُ ذَلِكَ ابْتِغَاءَ وَجْهِكَ
‘(முன்காலத்தில்) மூன்று மனிதர்கள் நடந்து சென்றனர். அப்போது மழை பொழிந்தது. அவர்கள் மலையில் உள்ள குகையில் நுழைந்தனர். ஒரு பெரிய பாறை உருண்டு வந்து குகை வாசலை அடைத்தது. அப்போது அவர்கள் தமக்குள், ‘நீங்கள் செய்த நல்லறங்களில் மிகச் சிறந்ததைக் கூறி அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்’ என்றனர்.
அவர்களில் ஒருவர், ‘இறைவா எனக்கு வயது முதிர்ந்த பெற்றோர் இருந்தனர்; நான் ஆடு மேய்க்க வெளியே சென்றுவிட்டுப் பிறகு வந்து, பால் கறந்து, பால் பாத்திரத்தைப் பெற்றோர்களிடம் கொண்டு வருவேன். அவர்கள் அருந்துவார்கள். பிறகு குழந்தைகளுக்கும் குடும்பத்தாருக்கும் என் மனைவிக்கும் கொடுப்பேன். ஓர் இரவு தாமதமாக வந்தேன். பெற்றோர் உறங்கிவிட்டனர். அவர்களை எழுப்புவதை நான் விரும்பவில்லை. குழந்தை பசியால் என் காலடியில் அழுதனர். விடியும்வரை இதே நிலை நீடித்தது. இறைவா! நான் இதை உன்னுடைய திருப்தியை நாடிச் செய்திருப்பதாக நீ அறிந்தால் நாங்கள் வானதைப் பார்க்கும் வகையில் ஓரிடை வெளியை ஏற்படுத்து’ எனக் கூறினார். அவ்வாறு (பாறை விலகும்) இடைவெளி உண்டானது.
மற்றொருவர், ‘இறைவா! என்னுடைய தந்தையின் உடன் பிறந்தாரின் மகளை எந்த ஆணும் எந்தப் பெண்ணையும் விரும்புவதைவிட அதிகமாக விரும்பினேன் என்பதை நீ அறிவாய். அவள் தனக்கு நூறு தீனார் தரும்வரை தன்னை அடையமுடியாது என்றாள். நான் உழைத்து நூறு தீனாரைத் திரட்டினேன். அவளுடைய இரண்டு கால்களுக்கிடையே நான் அமர்ந்தபோது அல்லாஹ்வை அஞ்சிக்கொள்! உரிய முறையின்றி முத்திரையை உடைக்காதே! என்று அவள் கூறினாள். உடனே அவளைவிட்டு நான் எழுந்து விட்டேன். இதை உன்னுடைய திருப்தியை நாடி நான் செய்திருப்பதாக நீ அறிந்தால் இந்தச் சிரமத்தைவிட்டு நீக்கு’ எனக் கூறினார். அல்லாஹ் அவர்களைவிட்டும் மூன்றில்
மற்றொருவர், ‘இறைவா நான் மூன்று ஸாவு கேழ்வரகு கூலிக்கு ஒரு வேலையாளை அமர்த்தினேன். கூலியை நான் கொடுத்தபோது அதை அவர் மறுத்துவிட்டார். அந்தக் கேழ்வரகைப் பயிர் செய்தேன். அதன் வருமானத்தில் மாடுகளையும் அதை மேய்ப்பவரையும் விலைக்கு வாங்கினேன். பிறகு அவர் வந்து, அல்லாஹ்வின் அடிமையே! என்னுடைய கூலியைக் கொடு! என்றார். இந்த மாடுகள், அதை மேய்ப்பவர்கள் எல்லாம் உமக்குரியவை; எடுத்துச் செல்லும் என்று கூறினேன். அதற்கவர் என்னைக் கேலி செய்கிறீரா? என்று கேட்டார். நான் உம்மைக் கேலி செய்யவில்லை; இவை உமக்குரியவைதான் எனக் கூறினேன். இறைவா! இதை நான் உன்னுடைய திருப்தியை நாடிச் செய்திருப்பதாக நீ அறிந்தால் எங்களைவிட்டு இந்தச் சிரமத்தை நீக்கு’ எனக் கூறினார். முழுமையாகச் சிரமம் விலகியது.’ (அறிவிப்பவர்: இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு, ஆதாரம்: புகாரி 2215)
எனவே தாய், தந்தைக்குத் தான் செய்த நலவை வைத்து அல்லாஹ்விடம் பிராத்தித்த போது கற்பாறை விலகியது என்பதிலிருந்து பெற்றோரைப் பேணுவதின் சிறப்பும், அவசியமும் தெளிவாய் தெரிகின்றது.
நமது வாழ்வில் இவ்வாறான ஒரு கஷ்டமான நிலை ஏற்பட்டாலும் இக்குகை வாசியைப் போன்று நாமும் நம் பெற்றோருக்கு நன்மைகள் பல செய்திருப்போமாயின் அவற்றை வைத்து நமக்கேற்பட்டுள்ள கஷ்டத்தை நீக்கக் கோரி அல்லாஹ்விடம் துஆச் செய்வோமாயின் நமது கஷ்டங்கள் நீங்குவதற்கான வாய்ப்புக்களுள்ளன.
இன்ஷா அல்லாஹ், கட்டுரை தொடரும்….
source: http://www.mujahidsrilanki.com/