இல்லாளே இனியவளே!
மனதினில் பூத்த மல்லிகை நீ
மாலையில் மனக்கும் மலர்மாலை நீ
இரவில் மயங்கும் அல்லி நீ
இதயத்தில் ஒளிரும் இன்ப வாழ்வு நீ
வாழும் காலம் முதல் வாழ்க்கை துணை நீ
வாழ்க்கை எல்லாம் உன்னோடுதான்
உயிரோடு கலந்த உறவு நீ
மவுனத்தின் விழி துணை நீ
மாலை தென்றலின் வழித்துணை நீ
ஏழைகளுக்கு உதவிடும் வைகரைக் காற்று நீ
வசந்தகளின் வாசல் நீ
வாழும் காலம் முதல் வாழ்கை துணை நீ
வாழ்க்கை எல்லாம் உன்னோடுதான்
உன்னோடுதான் உயிர் வாழ்கின்றேன்
உயிராய் நின்று! உறவாடுகின்றேன்.
இந்த கவிதை போதாதவர்களுக்கு……
இல்லாளே இனியவளே!
நீ கொடுக்கும் தேநீரில்
எனக்காக சர்க்கரை சேர்ப்பியா
அல்லது இரண்டு
முத்தத்தை இடுவாயா?
சர்க்கரை கடந்த ஒரு இனிப்பு
தேனிரிலும் –
எனக்குள்ளும்!!
வாழ்வின் நகர்வுகளை
எனக்காக சுமப்பவள் நீ
என்று
உன் மீதான அன்பே
வாழ்வின் அற்புதம் என்றெண்ணினேன்!!
காலத்திற்குமான
ஒரு சக்கரத்தில் –
நிறைய முகங்கள் வந்து போகின்றன;
நீ மட்டுமே –
உலகமானாய்; உயிர்வரை நிரைந்தாய்!!
உன்னை விட எத்தனையோ பேர்
எனக்கு அழகாக –
தெரிந்திருக்கிறார்கள்;
ஆனால் –
உன் அழகில்; நீ மட்டுமே இருந்தாய்,
இதயத்தையும் –
நீ மட்டுமே எடுத்துக் கொண்டாய்!
உனக்கான கனவுகள்
ஒவ்வொன்றாய் விரிகின்றன;
ஒவ்வொன்றிலும் – நீ
புதிது புதிதாகவே பூக்கிறாய் என்பதில்
நானும்; உனக்காக என்னை சரிசெய்துக் கொண்டதில்
எனையும் அழகென்றது உலகம்!!
உனக்கொரு பூஜாடி போல்
சிரிப்புக்களை வாங்கித் தரத் தான்
என் வியர்வை –
வித்துக்களாய் விழுகின்றன;
அலுவலக அறை முழுதும்!
எனக்காக –
இதயம் சுமந்தாய் என்றே
எண்ணம் எனக்கு;
இதோ, உனக்காக என்னையும் நான்
என் கண்ணாடியில் –
எனக்கு நான் தெரிவதேயில்லை!!
குழந்தை பிறந்தால்
பாசம் குறையும்
மூன்று குழந்தை பெற்ற பின்பும்;
பாசம் அவர்கள் மேல் கூடியதை விட
அன்பும் நன்றியிலுமே –
நீயும் நிறைந்தாய்!!
என்னை எல்லோரும்
பாராட்டும் போதெல்லாம் – உன்
நினைவும் வரும் எனக்கு;
உனக்காகவும் –
ஒரு பாராட்டு விழா வைக்க ஆசை,
வா; வந்து என்
இதய மேடையில்; ஏறி நில்
உனக்கான மாலைகள்
எனக்கான வரங்களாய் விழட்டும்!!
சட்டி வழித்து சோறு போட்ட
நாட்களும் உண்டு –
சட்டி வழித்த சப்தம் கேட்டு
பாதியில் போதுமென்று எழுந்துக் கொள்வேன்;
நீயும் எனக்கு –
போதுமென்று நினைத்துக் கொள்வாய்
போதாத என் பசியை –
நீ எனக்கு மட்டும் வழித்துவைத்த அக்கறையை யெண்ணி
மனதார நிறைத்துக் கொள்வேன்!!
– வித்யாசாகர்