பெண்கள் பெண்களுக்கு இமாமத் செய்யலாமா?
பெண்கள் பெண்களுக்கு இமாமத் செய்தல் என்ற சட்டப் பிரச்சனை அறிஞர்களுக்கு மத்தியில் அன்று முதல் இன்று வரை கருத்து முரண்பாடுள்ள விடயமாக இருந்து வருகிறது. 3ம் நூற்றாண்டைச் சேர்ந்த அறிஞரான இமாம் அபு பக்ர் இப்னுல் முன்திர் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் இக்கருத்து முரண்பாட்டை பின்வருமாறு சுருக்கமாகக் கூறுகிறார்:
الأوسط في السنن والإجماع والاختلاف 4 – 226
இமாம் அதா ஸுஃப்யான் அஸ்ஸவ்ரி அவ்ஸாஈ ரஹ்மதுல்லாஹி அலைஹி, ஷாஃபிஈ ரஹ்மதுல்லாஹி அலைஹி, அஹ்மத் இஸ்ஹாக் இப்னு ராஹுவிஹ் அபு ஸவ்ர் ரஹ்மதுல்லாஹி அலைஹி போன்ற அறிஞர்களும் இந்த நிலைப்பாட்டிலேயே உள்ளனர். அறிஞர்களில் இன்னொரு குழுவினர் பர்ளான தொழுகையிலோ நஃபிலான தொழுகையிலோ பெண்கள் இமாமத் செய்வது கூடாது என்ற நிலைப்பாட்டில் உள்ளனர்.
இமாம் ஸுலைமான் இப்னு யஸார் ரஹ்மதுல்லாஹி அலைஹி, ஹஸனுல் பஸரி ரஹ்மதுல்லாஹி அலைஹி போன்றோர் இந்நிலைப்பாட்டிலேயே உள்ளனர். உமர் இப்னு அப்தில் அஸீஸ் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களது நிலைப்பாடும் இதுவே என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்னு உமரின் மவ்லாவான நாபிஃ ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் ‘பெண் பெண்களுக்கு இமாமத் செய்ய நான் அறிந்ததில்லை” என்று கூறுகிறார். இன்னும் இமாம் மாலிக் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் ‘பெண் யாருக்கும் இமாமத் செய்யக் கூடாது” என்று கூறுகிறார்கள்.
ஹனஃபி மத்ஹப் அறிஞர்களும் இதை வெறுக்கின்ற அதே நேரம் இமாமத் செய்து விட்டால் அந்தத் தொழுகை சேரும் என்று கருதுகின்றனர். .இதில் 3வது நிலைப்பாடொன்றும் உள்ளது: ஃபர்ளான தொழுகையில் கூடாது நஃபில்களில் அனுமதி என்பதே அந்நிலைப்பாடு…..
இந்நிலைப்பாடே இமாம் ஷஃபிஈ, நஸஈ, கதாதா போன்ற அறிஞர்களின் நிலையாக எமக்கு அறிவிப்பு கிடைத்துள்ளது. ‘ரமழான் காலங்களில் இரவுத் தொழுகையில் பெண்களுக்கு மத்தியில் நின்று பெண்கள் தொழுவிக்க சலுகையுண்டு ” என்பது அவர்களது நிலைப்பாடு. (அவ்ஸத்:4-226 )
மேற் சொல்லப்பட்ட நிலைப்பாடுகளில் பெண்கள் யாருக்கும் இமாமத் செய்வது கூடாது என்ற நிலைப்பாடே பின்வரும் பல காரணங்களால் சரியான முடிவாகத் தெரிகிறது.
1. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காலத்தில் பெண்கள் இமாமத் செய்ததாக எந்த ஆதாரமும் இல்லை.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காலத்தில் பெண்கள் தங்கள் கடமையான தொழுகைகளை ஆண்களுடன் சேர்ந்து பள்ளியிலேயே நிறைவேற்றியுள்ளனர். அவர்கள் வீடுகளில் தொழுவதே சிறந்ததாக இருந்தும் ஜமாஅத்துடைய சிறப்பை அடைய பள்ளிக்கு வரவேண்டியிருந்தது. பெண்கள் ஜமாஅத்திற்கு அனுமதி இருந்தால் பள்ளியல்லாமல் வீடுகளில் ஜமாஅத் நடத்துவதை சிறந்த மாற்றீடக பெண்கள் கண்டிருப்பார்கள்.
பெண்கள் ஜமாஅத்தாகத் தொழுவதென்றால் ஒரு அல்லது பல ஆண்களின் பின்தான் அவர்கள் இருந்துதான் தொழ வேண்டும் என்பதற்கு ‘ஆண்களின் ஸஃப்புகளில் முன் ஸஃப் சிறந்தது கடைசி மோசமானது. பெண்களின் ஸப்புகளில் கடைசி சிறந்தது. ஆரம்பம் மோசமானது” என்ற பொதுப்படையான ஹதீஸ் ஆதாரமாக உள்ளது. இல்லையெனில் ஆண்களுடனான ஜமாஅத்தில் பெண்களின் முன் சஃப் மோசமானது எனக் குறிப்பிட்டுக் கூறியிருப்பார்கள். அவ்வாறு கூறாமல் ‘பெண்களின் ஸஃப்புகளில் கடைசி சிறந்தது. ஆரம்பம் மோசமானது” என்று கூறியிருப்பது பெண்களுக்கு ஜமாஅத் ஆண்களுடன்தான் என்பதை மறைமுகமாகச் சுட்டுகிறது.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காலத்தில் மார்க்க விளக்கம் உள்ள எத்தனையோ பெண்கள் இருந்தும் அவ்வாறு ஜமாஅத் ஒன்று நடந்ததாகவோ அல்லது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கட்டளையிட்டதாகவோ எந்த ஒரு செய்தியும் இல்லாதிருப்பது பெண்களுக்கு இமாமத் அனுமதியில்லை என்ற நிலைப்பாட்டை உறுதிப்படுத்துகிறது.
2. உம்மு வரகா ரலியல்லாஹ் அன்ஹாவின் செய்தி பலஹீனமானது.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காலத்தில் பெண்கள் இமாமத் செய்துள்ளார்கள் என்பதற்கு சிலர் உம்மு வரகா அவர்களின் பின்வரும் செய்தியை ஆதாரமாக முன்வைத்துள்ளனர்:
سنن أبي داود للسجستاني 592
حَدَّثَنَا الْحَسَنُ بْنُ حَمَّادٍ الْحَضْرَمِىُّ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ فُضَيْلٍ عَنِ الْوَلِيدِ بْنِ جُمَيْعٍ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ خَلاَّدٍ عَنْ أُمِّ وَرَقَةَ بِنْتِ عَبْدِ اللَّهِ بْنِ الْحَارِثِ بِهَذَا الْحَدِيثِ وَالأَوَّلُ أَتَمُّ قَالَ وَكَانَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- يَزُورُهَا فِى بَيْتِهَا وَجَعَلَ لَهَا مُؤَذِّنًا يُؤَذِّنُ لَهَا وَأَمَرَهَا أَنْ تَؤُمَّ أَهْلَ دَارِهَا. قَالَ عَبْدُ الرَّحْمَنِ فَأَنَا رَأَيْتُ مُؤَذِّنَهَا شَيْخًا كَبِيرًا
‘…….உம்மு வரகாவை அவரின் வீட்டாருக்குத் தொழுகை நடத்துமாறு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
இதன் அறிவிப்பாளர் வரிசையில் வலீத் எனும் அறிவிப்பாளரின் ஆசிரியர்களாக இடம் பெறும் அவரது பெயர் குறிப்பிடப்படாத பாட்டியாரும் அப்துர் ரஹ்மான் இப்னு கல்லாத் என்பவரும் யாரென்று அறியப்படாதவர்கள்.இந்த ஹதீஸை பல அறிஞர்கள் இதன் காரணமாக பலஹீனப்படுத்தியுள்ளனர். ஆகையால் இதை ஆதாரமாகக் காட்ட முடியாது.
அதே நேரம் இந்த ஹதீஸை ஒரு வாதத்திற்காக பலமானது என வைத்துக் கொண்டாலும் இதில் முஅத்தினாக ஒரு ஆண் இருந்துள்ளார். அப்படியாயின் அவருக்கும் சேர்த்தே இமாமத் செய்திருக்க வேண்டும். பெண்கள் ஆண்களுக்கு இமாமத் செய்வதை எந்த அறிஞரும் ஏற்கவில்லை. எனவே இது பலமானதாக செய்தியாக இருந்தால் கூட இக்கட்டான சூழ் நிலைக்குறியது என்றே புரிய வேண்டும். எனவே நபியவர்கள் காலத்தில் பெண்கள் இமாமத் நடக்கவில்லை என்பது உறுதியாகிறது.
3. ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா மற்றும் உம்மு ஸலமா ரளியல்லாஹு அன்ஹா அவர்களின் இமாமத் பற்றிய அறிவிப்பு பலஹீனமானது.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காலத்திற்கு பின் ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா இமாமத் செய்ததாக இரு செய்திகள் பின்வருமாறு இடம்பெறுகின்றன:
முதல் செய்தி:
المستدرك على الصحيحين للحاكم مع تعليقات الذهبي في التلخيص – (1 – 280)
731 – حدثنا أبو العباس محمد بن يعقوب الأصم ثنا أحمد بن عبد الجبار العطاردي ثنا عبد الله بن إدريس عن ليث عن عطاء عن عائشة : أنها كانت تؤذن و تقيم و تؤم النساء و تقوم وسطهن
‘ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் அதான் சொல்பவர்களாகவும் இகாமத் சொல்பவர்களாகவும் பெண்களுக்கு இமாமத் செய்பவர்களாகவும் இருந்தார்கள். அவ்வாறு இமாமத் செய்யும் போது அவர்களுக்கு நடுவில் நிற்பார்கள்” (ஹாகிம்:731)
இச்செய்தி பலஹீனமானது. இதன் அறிவிப்பாளர் வரிசையில் இடம்பெறும் லைஸ் பலஹீனமானவர். இதே செய்தி வேறொரு அறிவிப்பாளர் வரிசை மூலம் முஸன்னப் இப்னு அபீஷைபாவில்-4884 இடம்பெறுகிறது. அவ்வறிவிப்பாளர் வரிசையில் இடம்பெறும் இப்னு அபிலைலா என்பவர் மனனத்தில் மிக பலஹீனமானவர். எனவே இச்செய்தியை ஆதாரமாக வைக்க முடியாது.
இரண்டாவது செய்தி:
السنن الكبرى للبيهقي وفي ذيله الجوهر النقي –
5561-
‘ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் ஒரு பர்ளுத் தொழுகையில் பெண்களுக்கு மத்தியில் நின்று தொழுவித்தார்கள்”(பைஹகீ-5561) இந்தச் செய்தியை அறிவிக்கும் ராஇதா என்ற பெண்மணி யாரென்றே அறியப்படாதவர்.
அதே போன்று உம்மு ஸலமா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் இமாமத் செய்ததாகவும் ஒரு செய்தி பின்வருமாறு இடம்பெறுகிறது:
المصنف لإبن أبي شيبه – (1 – 497)
حدثنا أبو بكر قال حدثنا سفيان بن عيينة عن عمار الذهني عن امرأة من قومه اسمها حجيرة قالت أمتنا أم سلمة قائمة وسط النساء .
‘பெண்களாகிய எங்களுக்கு நடுவில் நின்று உம்மு ஸலமா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் எங்களுக்கு தொழுவித்தார்கள்” (இப்னு அபீஷைபா-1:497)
இதை அறிவிக்கும் ஹுஜைரா என்ற பெண்மணி யாரென்றே அறியப்படாதவர். இதே செய்தி இன்னொரு அறிவிப்பாளர் வரிசை மூலம் மேற் குறிப்பிட்ட கிரந்தத்தில் இதற்கடுத்ததாக இடம்பெறுகிறது. அதில் உம்முல் ஹஸன் கைரா இடம் பெறுகிறார். இவரது நம்பகத்தன்மையும் உறுதி செய்யப்படவில்லை. எனவே இச்செய்தியும் பலஹீனமடைகிறது.
இவைகள் பலமானவைகள் என வைத்தாலும் இது ஆயிசா ரலியல்லாஹ் அன்ஹா மற்றும் உம்மு ஸலமா ரளியல்லாஹு அன்ஹா அவர்களின் இஜ்திகாதாக இருக்கலாம். நபியவர்களின் அங்கீகாரம் இதற்கு இருப்பதாக அவர்கள் இந்த அறிவிப்புகளில் எங்கும் சொல்லவில்லை. எனவே இவைகளை ஆதாரமாகக் கொள்ள முடியாது.
4. இமாமத் மற்றும் ஜமாஅத் சம்பந்தமாக வரும் பொதுவான ஹதீஸ்கள் பெண்கள் இமாமத்திற்கு ஆதாரமாகாது.
ஜமாஅத்தின் சிறப்புகள் சம்பந்தமான ஹதீஸ்கள்இ உங்களில் ஓதத் தெரிந்தவர் தொழுவிக்கட்டும் என்று வரக் கூடிய பொதுவான ஹதீஸ்களை சிலர் ஆதாரமாக வைத்து பெண்கள் இமாமத்தை சரி காண்கின்றனர். இந்த வாதம் 2 வகையில் தவறானவை.
இந்த வாதத்தின் பிரகாரம் பெண்கள் ஆண்களுக்கும் தொழுவிக்கலாம். பெண்கள் பள்ளியில் கூட ஆண்களுக்கும் ஜமாஅத் நடத்தலாம் என்றாகிவிடும். ஏனெனில் ‘உங்களில் ஓதத் தெரிந்தவர் தொழுவிக்கட்டும் ” என்ற வசனம் எப்படி ஆணா பெண்ணா என்பதைக் குறிக்கவில்லையோ அதே போல் யாருக்கு எங்கே என்பதையும் குறிக்கவில்லை. எனவே இந்த எடுகோள் தவறானது. இது முதலாவது.
அடுத்து இவ்வாறு சொல்பவர்கள் பெண்கள் ஜும்ஆ செய்வதை அனுமதிப்பதில்லை. அண்மையில் அமெரிக்காவில் பெண்கள் குத்பா பிரசங்கம் நடத்தி ஜும்ஆத் தொழுவித்து பிரச்சனையாக்கிவிட்டனர். அவர்களுக்கு சார்பாக சில பித்அத் அறிஞர்கள் இது போன்று குத்பா விடயத்தில் வரும் பொதுவான ஹதீஸ்களை ஆதாரம் காட்டி பத்வா வேறு கொடுத்துள்ளனர். எனவே இந்த அணுகுமுறை தவறானது. இந்த ஹதீஸ்கள் நபியவர்கள் காலத்தில் என்ன வடிவில் செயல் முறையில் இருந்ததோ அதே முறையில் நடை முறைப்படுத்துவதே ஏற்றமானது.
மேற்குறிப்பிடப்பட்ட வாதங்கள் மற்றும் ஆதாரங்கள் அடிப்படையில் பெண்களுக்கு இமாமத் இல்லை என்ற அறிஞர்களின் நிலைப்பாடே சரியானதாகத் தென்படுகிறது. அல்லாஹ் மிக அறிந்தவன்
source: http://www.mujahidsrilanki.com/