ரசிக்கத் தெரியலைன்னா வாழ்க்கையே வேஸ்ட்…
(என் வீட்டுக்காரருக்கும் பிள்ளைக்கும் நடுவில் மாட்டிக்கிட்டு முழிக்கிறேன் பாருங்க……ப்பாஆ.: (சொல்லி மாளாது. வாங்க வாங்க அடுத்த வீட்டு கதைன்னா நாம் எல்லாம் கேட்காம இருப்பமா.. அப்படி இருந்துட்டா நாடு என்னத்துக்கு ஆகறது..? வந்து அப்படி உக்காந்து கேட்டுட்டு போங்க..)
சென்ற வாரத்தில் ஒரு நாள் :
“டேய் நீ இதையெல்லாம் செய்யறியான்னு அப்பா என்னை கவனிக்க சொன்னாரு, நீ அதையெல்லாம் செய்தியா?” ன்னு 6 வயசு கிட்ட கேட்டேன்…!
அடுத்த நாள் அவன் என்ன செய்தான் செய்யலன்னு வீட்டுக்காருக்கு அப்டேட் செய்யறேன்.. அதுக்கு அவரு கேக்கறாரு “ஏண்டி நான் என்ன சொன்னாலும் அவன் கிட்ட சொல்லிடற, இதையெல்லாம் உன் மனசோட வச்சிக்கிட்டு அவனை கவனிக்கனும், அவன் கிட்ட சொல்லிட்டு அவனை கவனிக்க கூடாது….”
“ஓ அப்படியா சரி.. அப்படியே செய்யறேன்… னு சொல்லிட்டு.. “டேய் அப்பா உன்கிட்ட இதையெல்லாம் சொல்ல வேணாம்னு சொன்னாரு… ன்னு சொல்லிட்டு கவனிக்க ஆரம்பிச்சேன்.
இங்க தான் மேட்டர் ஆரம்பிச்சிது…
நேத்திக்கு அவரோட ஃபோன்……….. கால் மணி நேரம்…. (முட்டு சந்து நினைவு வரனும் உங்களுக்கு எல்லாம்) பேசி முடிச்சிட்டாரு. எனக்கு குரலே வரல, (ஏன் வரல ன்னு சின்னபிள்ளத்தனமா நீங்க எல்லாம் கேட்கப்பிடாது.. அதான் கோட் வேர்ட் “முட்டு சந்து”ன்னு சொல்லி இருக்கேன் இல்ல அதை வச்சி புரிஞ்சிக்கனும் ஆமாம்), கம்மிய குரலோட மகனைக் கூப்பிட்டு… “அப்பா ..டா.. உன் கூட பேசணுமாம்….. “
“என்னவாம் அவருக்குன்னு??!!” சவுண்டு விட்டுக்கிட்டு வந்தான்.. ரிசீவரை அவனிடம் கொடுத்துட்டு ஓரமா கன்னத்துல கைய வச்சி உட்காந்து அவனோட ரியாக்ஷனை பாத்துக்கிட்டே இருந்தேன். கொஞ்சம் கொஞ்சமா முகம் மாறுது…..அப்படியே ஒரு அரை மணி நேரம்….! ஸ்ஸ்ஸ்….அப்பாடா ஜாலி… நம்மைவிட ஜாஸ்தி, … இப்பத்தான் மனசுக்கு குளிர்ச்சியாக இருக்குன்னு நினைச்சி… அவனயே கண் சிமிட்டாம பாத்துக்கிட்டு இருந்தேன். என்ன இருந்தாலும் பெத்த புள்ளையாச்சே பாசம் விடுமா சொல்லுங்க.. ?? (ஃபீலிங்ஸ்..)
அவனும் ஃபோனை வச்சிட்டு ஸ்லோ மோஷன்ல ஒரு வெறியோட என்னை திரும்பி பார்த்தான்.
“என்னடா செல்லம்…? ரொம்ப…ஓவரோ…..வய் ப்ளட்… ?! “
“எல்லாம் உன்னாலத்தான் வரது,.. ஏன்ம்மா இப்படி கத்தராரு? அவருக்கு என்ன 30 வயசு இளைஞன் ன்னு நினைப்பா.. இப்படி கத்தினா உடம்பு என்னதுக்கு ஆகும்? நீ என்ன அரிச்சந்தரனுக்கு தங்கச்சியா (அம்புட்டு கிழவியாவா போயிட்டேன்..சே.. வேற உதாரணமே இவனக்கு கிடைக்கலையா.. ஏன் இப்படி ஓல்ட் ராஜா வை எல்லாம் எனக்கு அண்ணனா ஆக்கறான்…. (திருப்பி ஒரே ஃபீலிங்ஸ்ஸூ….) ஏன் எல்லாத்தையும் அவர் கிட்ட சொல்லி வைக்கிற..???
“ஓ நான் தான் சொன்னேன்னு தெரிஞ்சி போச்சாஆஆ? “
“ஆமா இந்த வீட்டுல ஒரு 10-15 பேர் இருக்கோம்.. உன்னை விட்டா என்னை அவர் கிட்ட வேற யாரு போட்டுக்கொடுப்பா?”
ஆஹா நம்ம புள்ளையும் அறிவாளியா இருக்கே ன்னு மனசுக்குள்ள ஒரே பெருமை..” சரி நான் இப்ப என்ன செய்யனும் சொல்லு…”
“ஏன்ன்ன்ன்ன்ன்??? ஒரு வார்த்தை விடாம அப்படியே போயி அவரு கிட்ட வத்தி வச்சி… அவரு அதுக்கு இன்னொரு அரைமணி நேரம் என் காது கிழிய பேசவா? வேணாம் என்னை பெத்த தாயே… உன் வாயி இருக்கு ப்பாரு வாயி.. அதை எப்பவும் தொறக்காத இந்த வீடு நிஜம்மா நல்லா இருக்கும்…”
…அப்பாவை அப்படியே உறிச்சி வெச்சிருக்கான் பிள்ளை என்பதில் ஒருபக்கம் சந்தோஷமாகத்தான் இருந்தது…. இதையெல்லாம் ரசிக்கத் தெரியலைன்னா வாழ்க்கையே வேஸ்ட்… என்னங்க… நான் சொல்றது சரிதானே!