மாப்பிள்ளை வேட்டை!
[ பெண் வீட்டார், பெண்ணுக்கு மாப்பிள்ளை தேடும்போது தாங்களாகவே எந்த முடிவையும் எடுக்க வருவதில்லை. அடுத்தவர்களைப் பார்த்துத்தான் தீர்மானிக்கிறார்கள்.
அவர்களுக்குத் தெரிந்த யாரோ ஒருவரின் மகள், வெளிநாட்டுப் பையனை திருமணம் செய்துகொண்டு சந்தோஷமாக வாழ்கிறாள் என்றும், அவர் சம்பளம் இவ்வளவு வாங்குகிறார் என்றும் அறிந்தால், உடனடியாக தங்கள் மகளுக்கும் வெளிநாட்டு மாப்பிளையைத் தேடுவார்கள்.
அதுவே பக்கத்து வீட்டுக்காரரின் மகளுக்கு ஒரு சாஃப்ட்வேர் இஞ்சிநியருடன் திருமணம் நடந்து, அவரும் கை நிறைய சம்பளம் வாங்கி மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள் என்றால், அப்படிப்பட்ட. மாப்பிள்ளையைத் தேடத் தொடங்குவார்கள். இது தான் இன்றைய யதாத்த நிலை.
மணமகனை அளவிட, பெண்ணின் பெற்றோர் உபயோகிக்கும் அளவுகோல் சரியானதா? உத்தியோகத்தையும், வருமானத்தையும், குடும்பப் பின்னணியையும் மட்டும் வைத்து சரியான மாப்பிள்ளையைத் தேர்ந்தெடுத்துவிட முடியுமா?
வேறு என்ன வேண்டுமென கேட்கிறீர்களா? கட்டுரைக்குள் நுழையுங்கள்!]
முன்னணி நாளிதழ் ஒன்றின், இலவச இணைப்பு புத்தகத்தில் வெளிவந்த, வாசகர் கடிதமொன்று, என் கவனத்தை ஈர்த்தது. நெருங்கிய நண்பரின் மகளுக்கு வரன் தேடுவதாகவும், அவர்கள் சுய தொழில் செய்யும் மணமகன்களை நிராகரிப்பதாகவும் எழுதியிருந்தார்.
இது பற்றி சிந்தித்தபோது, மேலும் பல விஷயங்களை உணர முடிந்தது. அவர் கூறியிருந்தது போல் திருமணங்களில் இப்படியொரு நிலை இருப்பதே யதார்த்தமான உண்மை. ஆனால், இந்த நிலையும், யதார்த்தமும் காலத்திற்கு ஏற்ப மாறுபடுவதாக எனக்குத் தோன்றுகிறது.
சொந்தத் தொழில் செய்வோரை பெண் வீட்டார் தவிர்க்கும் காரணம் என்ன? நிச்சயமில்லாதது, வருமானமும் நிலையில்லாதது, என்பவையே முக்கிய காரணங்கள்.
சரி இவர்கள் வரன் தேடும்போது அப்படி எதைத்தான் பார்க்கிறார்கள்?
சில வருடங்களுக்கு முன்பு, பெண்ணுக்கு வரன் தேடுவோர், அரசு உத்தயோகத்தில் இருக்கும் மணமகனாக இருக்க வேண்டுமென்று விரும்பினர்.இன்றும் கிராமப் புறங்களில் இந்த நிலை தொடர்கிறது.
பின்னர், டாக்டருக்கும் இன்ஜினியருக்கும் மதிப்பு கொடுத்தார்கள். இன்றும் இந்த நிலையில் இருப்பவர்களுக்கு, எவ்வளவு செலவு செய்தும் திருமணம் செய்துவைக்க, பெண் வீட்டார் தயாராக இருக்கிறார்கள்.
பின் தொண்ணூறுகளின் இடைப்பகுதியில், வெளிநாட்டு, குறிப்பாக அமெரிக்கா மாப்பிள்ளைகளுக்கு முன்னுரிமை அளித்தனர்.
இறுதியாக, கணினி மென்பொருள் துறை வல்லுனர்களைத் தேடினர்.
இப்படி ஒவ்வொரு காலகட்டத்திலும், பெண் வீட்டாரின் தேடல் மாறியிருக்கிறது. இந்த மாற்றங்களுக்கான காரணங்களைப் பார்க்கும்போதுதான், வேடிக்கையாக இருக்கிறது.
முதலில், அரசு உத்தியோகம்தான் நிரந்தரமானது, பாதுகாப்பானது என்ற எண்ணம் மக்களிடம் இருந்தது. “காலணா காசா இருந்தாலும், கவர்மென்ட் காசாக இருக்கணும்” என்று விரும்பினர். இதனால் பெண்களைப் பெற்றவர்கள், தங்கள் மகளின் வாழ்க்கை சிறப்பாக இருக்க அரசுப் பணியாளர்களுக்கே மணமுடித்தனர்.
பிறகு, டாக்டருக்கும், என்ஜினியருக்கும் சமுதாயத்தில் இருக்கும் மதிப்பையும் வருமானத்தையும் பார்த்து, அவர்களை விரும்பினர். இந்த வரன்களுக்காக எவ்வளவு கடன் வாங்கியும் திருமணம் செய்து வைக்கவும் தயாராக இருக்கிறார்கள்.
வெளிநாட்டு வேலையால் கிடைக்கும் பெருமையும், கௌரவமும், அதற்கேற்ற சம்பளமும், பெண்ணைப் பெற்றவர்களை, இவர்கள் பின்னால் அலையவைத்தது.
அடுத்ததாக, இன்றைய நிலையில் மென்பொருள் வல்லுனர்களுக்கு அதிக மவுசு இருக்கிறது. இவர்கள் வாங்கும் சம்பளம், பெண் வீட்டாரை கவர்ந்து இழுக்கிறது.
இது தான், மாப்பிளையைத் தீர்மானிக்கும் அம்சங்கள். இவற்றை வைத்துத்தான், பெண் வீட்டார் மணமகனைத் தேர்வு செய்கின்றனர்.
மேற்ச்சொன்ன காரணங்களை நீங்களே நன்றாக யோசித்துப் பாருங்கள். இவை அனைத்தும் சரியானதா? ஆசையாக வளர்த்த மகளுக்கு சிறப்பான வாழ்க்கை அமைத்துக் கொடுக்க, பெற்றோர் எடுத்துக்கொள்ளும் முயற்சிகள் உங்களுக்குத் திருப்தியளிக்கிறதா?
தங்கள் ஆசை மகளுக்கு, பெற்றோர் மிகுந்த சிரமப்பட்டு செய்து வைக்கும் திருமணங்களின் (அதாவது மணமகன்களின்), மறுபக்கத்தையும் பார்த்த பிறகு ஒரு முடிவுக்கு வருவது நல்லது.
அரசு உத்த்யோகம். நிலையனதுதான்.பாதுகாப்பும், சலுகைளும் நிறைந்தது தான். வருமானமும் அதிகம்தான். ஆனால், சில அரசாங்க ஊழியர்கள், கடமை உணர்சசியற்றவர்களாகவும், லஞ்சம் வாங்குவதால், பலரின் வருத்தத்திற்கு ஆளாகிறார் என்றும், இவர்களைத் தவிர்க்கும் பெற்றோரும் இருக்கிறார்கள். அனைத்து அரசு அலுவலர்களும் இப்படி இல்லையென்றாலும், சிலர் செய்யும் தவறுகளால், பொதுவான அவப்பெயர் ஏற்பட்டுவிட்டது.
டாக்டரும் என்ஜினியர்களும் நல்ல வரண்கள்தான் என்றாலும், மாப்பிள்ளை வீட்டாரின் அதிகப்படியான எதிர்பார்ப்புகளாலும், ஒருவித கர்வத்தோடு திகழ்வதாலும், பெண் வீட்டார் இவர்களை விரும்புவதில்லை.
வெளிநாட்டு மாப்பிள்ளைகளில் நடக்கும் ஏமாற்று வேலைகளால், இவர்களையும் ஒதுக்கி விடுகின்றனர்.
இறுதியாக இன்றைய நிலையில், சாப்ட்வேர் எஞ்சினியர். தொடக்கத்திலேயே கொடுக்கப்படும் அதிகப்படியான சம்பளம்,பெண் வீட்டாரைக் கவரும் அம்சம்.இதனால், தங்கள் மகளின் வாழ்வு செழிப்பாக இருக்குமென்று இந்த வரன்களை அதிகம் விரும்புகின்றனர்.
இப்படி முதல் நிலைத் தேர்வுகளை முடித்துவிட்டு, அடுத்த நிலையாக, மணமகனின் குடும்பத்தைப் பற்றியும், அவரது குணாதிசயங்கள், பண்புகள் பற்றியும் விசாரிக்கின்றனர். அதன் பிறகே திருமண ஏற்பாடுகள் நடக்கிறது.
இதிலும் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம் என்னவென்றால், இந்தப் பெண் வீட்டார், இந்த முடிவுகளுக்கு தாங்களாக வருவதில்லை. அடுத்தவர்களைப் பார்த்துத்தான் தீர்மானிக்கிறார்கள். அவர்களுக்குத் தெரிந்த யாரோ ஒருவரின் மகள், வெளிநாட்டுப் பையனை திருமணம் செய்துகொண்டு சந்தோஷமாக வாழ்கிறாள் என்றும், அவர் சம்பளம் இவ்வளவு வாங்குகிறார் என்றும் அறிந்தால், உடனடியாக தங்கள் மகளுக்கும் வெளிநாட்டு மாப்பிளையைத் தேடுவார்கள். அதுவே பக்கத்து வீட்டுக்காரரின் மகளுக்கு ஒரு சாப்ட்வேர் இஞ்சிநியருடன் திருமணம் நடந்து, அவரும் கை நிறைய சம்பளம் வாங்கி மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள் என்றால், அப்படிப்பட்ட. மாப்பிள்ளையைத் தேடத் தொடங்குவார்கள். இது தான் இன்றைய யதாத்த நிலை.
இவற்றைப் படித்த பிறகு உங்களுக்கு என்ன தோன்றுகிறது? மணமகனை அளவிட, பெண்ணின் பெற்றோர் உபயோகிக்கும் அளவுகோல் சரியானதா? உத்தியோகத்தையும், வருமானத்தையும், குடும்பப் பின்னணியையும் மட்டும் வைத்து சரியான மாப்பிள்ளையைத் தேர்ந்தெடுத்துவிட முடியுமா?
வேறு என்ன வேண்டுமென கேட்கிறீர்களா?
இப்படி பெண் வீட்டார் பார்த்து செய்து வைத்த அத்தனைத் திருமணங்களும் வெற்றிகரமாக தொடர்கின்றனவா?
வெளிநாட்டு மாப்பிள்ளைக்கு ஆசைப்பட்டு திருமணம் செய்து வைத்துவிட்டு, பின் அவரது நடவடிக்கைகளில் திருப்தியில்லாமல் பிரிந்த பெண்கள் எத்தனை பேர்? இந்த மாப்பிளைகள் மோசடிப் பேர்வழிகள் என்று உணர்ந்து தங்கள் மகளின் வாழ்க்கை பலியானதை கண்டு வருந்தும் பெற்றோர் எத்தனைப் பேர்?
அத்தனைத் திருமணங்களும் தோற்றுவிடுவதில்லை என்றாலும், பல இடங்களிலும், பிரச்னைகளும், மனக் கசப்புகளும் இருப்பதை மறுக்க முடியாது. தங்கள் மகள் சந்தோஷமாக வாழ்கிறாள் என்று ஊருக்கு சொன்னாலும், ஒவ்வொரு தாய் தந்தையின் மனசாட்சிக்குத் தெரியும், தங்கள் வாரிசுகள் எப்படிப் பட்ட வாழ்க்கை வாழ்கிறார்கள் என்று.
ஒரு மனிதனை அறிந்துகொள்ள அவனது உத்தியோகமும், வருமானமும், பண்புகளும் மட்டும் போதாது. எந்த உத்தியோகமும் நிலையில்லாததுதான். பண்புகளும், குணங்களும் எப்போது வேண்டுமானாலும் மாறலாம்.
அவனிடம் எப்பொழுதும் மாறாத ஒன்று இருக்கிறது. அவனது திறமை. ஒவொரு மனிதனுக்கும் தனிப்பட்ட திறமை உண்டு. அதுவே அவனை வாழ்க்கையில் முன்னேற வைக்கும்.
திறமையிருந்தால் வருமானம் எந்த வகையிலும் வரும். திறமையிருந்தல்தான், அவன் செய்யும் வேலையே நிலைக்கும். வாழ்வின் எந்தச் சூழ்நிலையிலும் கை கொடுப்பது இந்தத் திறமைதான்.
எந்தக் கஷ்டம் வந்தாலும் தங்கள் மகளைக் காப்பாற்றும் திறமை உள்ளவனா, வாழ்க்கையின் சவால்களை நம்பிக்கையோடு எதிர்கொல்பவனா என்பதையே பெற்றவர்கள் பார்க்க வேண்டும். அடுத்த நிமிடம் என்ன நடக்குமென்று நிச்சயமில்லாத வாழ்க்கையிது. அப்படி எந்தச் சந்தர்ப்பத்தையும் எதிர்கொள்ள உதவுவது இந்தத் திறமையும் நம்பிக்கையும்தான்.
குணாதிசயங்களும், பண்புகளும் மனிதனோடு பிறந்தவை என்றாலும், அவை மாறக் கூடியவை. ஒரு பெண் நினைத்தால், கோழையை வீரனாக்க முடியும், குடிகாரனைத் திருத்த முடியும், சோர்ந்திருப்பவனுக்கு நம்பிக்கை ஊட்டி சாதிக்கவைக்க முடியும். இவை எல்லாத்துக்கும் திறமையே அடிப்படை.கணவனின் திறமையை உணர்ந்து அவனை வழிநடத்துவதே மனைவியின் திறமை.
மணமகன் என்ன உத்தியோகம் பார்க்கிறான், எவ்வளவு சம்பாதிக்கிறான் என்று பார்க்காமல், பெண்ணின் பெற்றோர்கள், எந்த கஷ்டத்தையும் சமாளிக்கக் கூடிய திறமை உள்ளவனா என்று அறிந்து தேர்வு செய்ய வேண்டும்.
அதுவே அவர்கள் ஆசையாக வளர்த்த மகளுக்கு ஏற்படுத்திக் கொடுக்கும் சிறப்பான வாழ்க்கையாக அமையும்.