“தாயின் பாதத்தின் கீழ் சுவர்க்கம் உள்ளது”
ஃபாத்திமா நளீரா, வெல்லம்பிட்டிய
”தாயின் பாதத்தின் கீழ் சுவர்க்கம் உள்ளது.” பொன்னெழுத்துகளால் பதிக்கப்பட வேண்டிய மகத்துமிக்க முத்தான வார்த்தைகள்.
ஓர் அன்னையானவள், தனக்குள் உள்ளடக்கப்படும் பல உன்னதமான உறவுப் பாத்திரங்களை ஏற்று சமுதாயத்தில் ஓர் ஆலமரமாக விஸ்தரிக்கப்படுகிறாள். தியாகத்தின் மறு வடிவமான, உறவுகளிலேயே மேன்மைமிக்க இந்த அன்னையை வருடத்தில் ஒரு நாளாவது (நினைக்க) மேம்மைப்படுத்தி அனுஷ்டிக்க வேண்டும் என்ற ரீதியில் சர்வதேச அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது.
தாயார் விட்டுச் சென்ற சமூக சேவையை மகள் ஜார்விஸ் தனிப் பெரும் கடமையாகக் கருதித் தொடர்ந்தார். இன்னல்களும் சோதனைகளும் ஒரு சேர தாக்கி மனம் வெந்து, நொந்து சமூகத்தில் ஓரங்கட்டப்பட்டவர்களுக்கான அமைப்பில் தன்னை இணைத்துக் கொண்டார். தன் அன்னையின் நினைவாகவும் தத்தம் வீடுகளில் அவரவர் அன்னையர்களும் கௌரவிக்கப்பட வேண்டும். எல்லோர் இல்லங்களிலும் மகிழ்ச்சி ததும்ப வேண்டு என்று எண்ணினார். தன் எண்ணத்தை பென்சில்வேனியா மாநில அரசுக்குத் தெரிவித்தார். அரசும் அவர் கருத்தை ஏற்று 1913 ஆம் ஆண்டு முதல் இத்தினத்தை அன்னையர் தினமாக அறிவித்தது.
ஆனால், ஜார்விஸ் திருப்தியடையவில்லை. ஆயிரக்கணக்கில் அரசியல்வாதிகளுக்கும் தன்னார்வ அமைப்புகளுக்கும் வர்ததக அமைப்புகளுக்கும் கடிதங்கள் எழுதி அமெரிக்கா முழுவதும் அன்னையர் தினம் கொண்டாடவும் அந்நாளை அரசின் விடுமுறை நாளாகவும் அங்கீகரித்து அறிவிக்க வேண்டுமென அமெரிக்க ஜனாதிபதிக்கு வேண்டுகோள் விடுத்தார்.
1914 ஆம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதி; வுட்ரோ வில்சன் வருடம் தோறும் மே மாதம் 2 ஆம் ஞாயிறுக்கிழமையை அதிகாரபூர்வமாக அன்னையர் தினமாகவும் விடுமுறை தினமாகவும் அறிவித்தார். இதனைக் கனடா அரசாங்கமும் ஏற்று அங்கீகரித்தது. அதுமட்டுமல்ல.. ஆப்கானிஸதானிலிருந்து கோஸ்டாரிகா வரை 46 நாடுகள் இதே தினத்தை அன்னையர் தினம் என அறிவித்து நடைமுறைப்படுத்தியது.
உலகம் முழுக்க அன்னையர் தினம் அனுசரிக்கப்பட வேண்டும். ஒவ்வொரு வீட்டிலும் அன்னையைப் போற்றுகின்றன,வாழ்த்துகின்ற,மகிழ்விக்கின்ற நாளாக அன்றைய தினம் மலர்ந்து மணம்பரப்ப வேண்டும் என்பதுதான் ஆசை என அவர் தனது 84 ஆவது வயதில் தனியார் மருத்துவ மனையில் இறப்பதற்கு முன்னர் தன்னைச் சந்தித் ஊடகவியலாளர்களிடம் வெளிப்படுத்தியிருந்தார். அவரது அன்றைய அவா இன்று அநேகமாகப் பூர்தியாகிவிட்டது என்றே கூற முடியும்.
அன்னை என்பவள் ஓர் உன்னதமான விலைமதிப்பற்ற உறவுகளிலேயே உயரிய உறவு. இதன் காரணமாக இத்தினத்தில் வெறுமனே முத்தமிட்டு பூங்கொத்துக் கொடுத்து புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கிக் கொடுத்து ஒரே நாளில் பெற்றவரின் அன்புக்கு விலை பேசுவதனை என்னவென்று சொல்வது? ஈரைந்து மாதங்கள் போராடியவளை ஓர் ஈனப்பிறவியாகவே இன்றைய இன்டர்நெட் யுகப் பிள்ளைகள் கருதி முதியோர் இல்லங்களுக்குச் சொந்தமாக்கி விடுகின்றனர். வயது சென்றவுடன் இவர்கள் ஒரு செல்லாக் காசாக மிதிக்கப்படுகின்றனர். குடும்பத்தில் கருத்து முரண்பாடு வந்தாலும் தீராத பகையை பெற்றவள் மீது காட்டுவது காட்டுமிராண்டித்தனத்துக்குச் சமன். ஒரு பிள்ளையைப் பெற்றெடுத்து ஓடாகத் தேய்ந்து சமுதாயத்தில் ஓர் உயர்ந்த அந்தஸ்தில் வைக்க என்ன பாடுபடுகின்றாள்? ஒரு தாயின் பிரசவ வேதனையை ஆண் அறிந்திருந்தால் விஞ்ஞானிகள் விண்ணுக்கு விடும் தகவல், தொழில்நுட்ப சாதனங்கள் கூட வியப்பான அதிசயஙங்களாக இருக்க முடியா.
தனது கனவு, நனவு எல்லாவற்றையும் கருவறைக்குள் செலுத்தி உயிரைக் கொடுத்து ஒரு பிள்ளையைப் பெற்றெடுக்கும் இவர் மறுபிறப்புத்தான் எடுக்கிறாள். தாயின் கருவறை என்பது இன்றைய தொழில்நுட்பங்களை மிஞ்சியது.
தனது கருவறையில் பிள்ளையை அழகாக உருவாக்கி அது சிதறாமல முழு மனித வடிவமாக இந்த உலகிற்குப் பிரசவித்துத் தந்த தாயை இன்றைய பிள்ளைகளால் எப்படிப் புறக்கணிக்க முடிகிறது? இன்றைய இன்டர்நெட் பிள்ளைகளின் வார்த்தைகளிலும் எண்ணங்களிலும் எரிச்சலையும் நெருப்பையும் அள்ளிக் கொட்டுவதுடன் பெற்றவள் ஏன் இன்னும் உயிருடன இருக்கிறாள் என்று எண்ணும் பிள்ளைகளே அதிகம்.
எம்மைப் பெற்றெடுத்துக் கண்ணும் கருத்துமாக ஆளாக்குவதற்கு போராடும் போராட்டம் எண்ணிலடங்காது என்றாலும் இந்தச் சமூகம் பிள்ளை வளர்ப்பில் ஒரு பக்கத்தை மட்டுமே பார்க்கிறது, சாடுகிறது. தொன்றுதொட்டு தாயின் வளர்ப்பையே குறை சொல்லப் பழகிவிட்டது. எந்தத் தாயாவது தான் பெற்றெடுத்த பிள்ளையை மோசமாக வளர்க்கத் தலைப்படுவாளா? அன்னையவளின் எண்ணம், ஏக்கம், கருத்து சேவை, தியாகம் மற்றும் நற்பிரஜையாக உருவாக்குவதற்கு எடுக்கும் போராட்டம்தான் எத்தனை? பிள்ளைப் பெற்றது முதல் தனது இறுதி மூச்சு அடங்கும் வரை நிம்மதியாகக் கண்ணயர்ந்திருப்பாளா? பலரின் இறுதி ஆன்மா கூட பிள்ளைகளின் ஏக்கத்துடனேயே செல்கிறது.
இந்த அன்னையின் ஆத்மார்த்தமான உணர்வுகளைப் பெரும்பாலான பிள்ளைகள் உணர்ந்து கொள்ளத் தவறிவிடுகிறார்கள். காலூன்றிக் கை உயர்ந்து சமுதாயத்தில் தலை தெரியும் வரை தாயின் பாதுகாப்பு, பராமரிப்பு எல்லாம் தேவைப்படுகிறது. அதன் பின்பு இந்தப் பிள்ளைகள் தன்னைப் பெற்றவளிடம் காட்டும் அன்பு கானல் நீராகிவிடுகிறது. பெற்றவளின் அன்புக்கு முன்னால் அகிலமும் அடிமைதான் என்பதனை மறந்துவிடுகிறார்கள்
தாயை ஒவ்வொரு கணமும் மதியுங்கள். இவ்வுகில் தாயைப் போல் ஒரு ஜீவன் இல்லை. தாயை நாம் சுவாசிக்கும் மூச்சாக வைத்திருக்க வேண்டும். கோபுரத்தை நாடி ஓடாதீர்கள். மனதை கோபுரமாக்கி அன்னையை ஆராதியுங்கள். இவ்வுலகில் அவளை விட நட்பானவர்கள் வேறு யாரும் இருக்க முடியாது. அவளைச் சிரிக்க வைக்க முடியாவிட்டாலும் அழவிடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். எத்தனை வருடங்கள் சென்றாலும் அன்பிலும் அழகிலும் அவளே நிகரற்ற அழகி.
இன்றைய ஒவ்வொரு பெண்ணும் நாளைய அன்னை. பெற்றவளுக்குக் கடமைக்காக எதனையும் செய்யாதீர்கள்.அன்பும் ஈரமும் இதயத்திலிருந்து ஊற்றெடுக்கப்பட வேண்டும். ஒவ்வொரு கணமும் அன்னையை ஆராதியுங்கள். அவள் சாபம் இடமாட்டாள். மனம் நொந்தால் உங்கள் பரம்பரை மூலமே நீங்கள் தண்டிக்கப்படுவீர்கள். அவளை மதிக்காவிட்டாலும் மிதிபடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். தாய் சாபம் பொல்லாதது. இறைவனின் கோபமும் பயங்கரமானது. இத் எனவே த்pனத்தில் எம்மை நாமே திருத்திக் கொள்வோமாக.
நன்றி வீரகேசரி வாரவெளியீடு 08-05-2011