சவூதி ரியாத் தலை நகரிலிருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் பெண்களுக்கான பல்கலைக் கழகம் 15-05-2011 அன்று திறந்து வைக்கப்பட்டது. மன்னர் அப்துல்லாஹ் 20 மில்லியன் ரியால் செலவில் கட்டப்பட்ட இப்புதிய வளாகத்தை எளிமையாக திறந்து வைத்தார். இப்பல்கலைக் கழகத்தின் பெயர் நூரா பின்த் அப்துல் ரஹ்மான் பல்கலைக் கழகமாகும். பெண்களுக்கான இந்த பல்கலைக் கழகம் உலகிலேயே பெரிதாகும். 50,000 மாணவிகள் ஒரே நேரத்தில் கல்வி கற்கும் விதமாக இந்த வளாகம் அமைக்கப்பட்டுள்ளது.
ஆராய்ச்சிக்காகவும், நூலகத்துக்காகவும் இங்கு கிட்டத்தட்ட ஐந்து மில்லியன் புத்தகங்களுடன் மிகப் பெரும் நூலகமும் காட்சியளிக்கிறது. 12,000 மாணவிகள் தங்கி கல்வி கற்க ஹாஸ்டல் வசதியும் செய்யப்பட்டுள்ளது. இதை ஒட்டியே மாணவிகளுக்கான உடற்பயிற்சி கூடமும், விளையாட்டு மைதானமும் சிறந்த முறையில் கட்டப்பட்டுள்ளது.
பல்கலைக் கழகம் மிகவும் பெரிது என்பதால் அனைத்து துறைகளையும் இணைக்கும் விதமாக மெட்ரோ ரெயில் சேவையை இங்கு பயன்படுத்துகிறார்கள். மன்னர் அப்துல்லாஹ்வும் ரெயிலில் அமர்ந்து அனைத்து இடங்களையும் பார்வையிட்டார்.
உலகின் மிகப் பெரும் பெண்கள் பல்கலைக் கழகம்!
40000 ஸ்கொயர் மீட்டரில் சூரிய ஒளியின் மூலம் மின்சார தேவையை பூர்த்தி செய்யும் விதமாக கட்டிடம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மின்சார செலவுகளையும் ஓரளவு மிச்சப்படுத்தலாம். அதிக குளிர் இல்லாமல், அதிக வெப்பமும் இல்லாமல் பல்கலைக் கழகத்தின் வெப்பநிலையை சீராக வைக்க சூரிய ஒளி பயன்படுத்தப்படுகிறது.
700 படுக்கை அறை கொண்ட ஹாஸ்பிடல்: கான்ஃபரன்ஸ் ஹால்: பரிசோதனைக் கூடம்: நோனோ டெக்னாலஜி சம்பந்தமான ஆராய்ச்சிப் பிரிவு: தகவல் தொழில் நுட்பம்: உயிரியியல் போன்றவற்றிற்க்கான தனித்தனி துறைகள் இயங்குகின்றன.
சவூதிக்கான பிரிட்டிஷ் தூதர் டாம் பிலிப்ஸ் பேசும்போது, ‘இன்று ஒரு முக்கியமான நாள். சவூதி அரசு தனது மக்களை முழு கல்வி பெற்ற சமூகமாக மாற்றும் முயற்ச்சிக்கு எனது வழ்த்துக்கள். இனி வரும் காலங்களில் சவூதியும், இங்கிலாந்தும் கல்வி மேம்பாட்டில் இணைந்து செயல்படும். உலகின் மிகப் பெரும் பல்கலைக்கழகமான இதன் வளர்ச்சி மேலும் சிறப்புற வாழ்த்துகிறேன்.’ என்றார்.
மன்னர் அப்துல்லாஹ் பேசும் போது ‘நமது நாட்டின் முன்னேற்றத்தில் பெண்களின் பங்கும் அதிகமாக இருக்க வேண்டும் என்ற நோக்கில் இந்த பல்கலைக் கழகம் திறக்கப்பட்டுள்ளது. இதனை சரிவர பயன்படுத்தி அனைவரும் கல்வியாளர்களாக மாற வேண்டும்’ என்று கேட்டுக் கொண்டார்.
பெண் கல்வியை இஸ்லாம் வரவேற்கிறது. அதே சமயம் பெண்மைக்கு பங்கம் வராமல் பெண்மையின் பாதுகாப்போடு அவர்களின் கல்வித் தேவையை நாம் பூர்த்தி செய்ய வேண்டும். அதன் பல முயற்ச்சிகளில் ஒன்றாகத்தான் இந்த பெண்கள் பல்கலைக் கழகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. ஆட்சியாளர்களின் இந்த உன்னத நோக்கத்தை இறைவன் மேலும் சிறப்புற செய்ய வேண்டும்.
‘அறிந்தோரும், அறியாதோரும் சமமாவார்களா?’ என்று முஹம்மதே கேட்பீராக! அறிவுடையோர்தாம் நல்லறிவு பெறுவார்கள். (குர்ஆன் 39:10)
‘என் இறைவா! எனக்குக் கல்வியை அதிகப்படுத்துவாயாக!’ என்று பிரார்த்திப்பீராக!’ (குர்ஆன் 20:114)
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:
”ஒரு மனிதரிடம் அடிமைப் பெண் ஒருத்தி இருந்து, அவளுக்கு அவர் ஒழுக்கம் கற்பித்து, கல்வியையும் அழகிய முறையில் கற்றுக் கொடுத்து, அவளை விடுதலையும் செய்து, திருமணமும் முடித்து வைத்தால் அவருக்கு இரண்டு நன்மைகள் கிடைக்கும். மேலும், ஓர் அடிமை அல்லாஹ்வின் உரிமையையும் தன் எஜமானர்களின் உரிமையையும் (ஒழுங்காக) நிறைவேற்றுவானாயின் அவனுக்கும் இரண்டு நன்மைகள் கிடைக்கும்” என அபூ மூஸா அஷ்அரீ ரளியல்லாஹு அன்ஹு அறிவித்தார். (நூல்: புகாரி 2547)
நன்றி: சகோ.சுவனப்பிரியன்
source: http://suvanappiriyan.blogspot.com/2011/05/blog-post_16.html