[ தென்னிந்தியாவின் மக்கள் அடர்த்திமிகு நகரம் ஹைதராபாத். 1591ல் முஹம்மது குலிகுதுப் மூசி ஆற்றின் கரையில் உருவாக்கிய நகரம் பாக்ய நகரம் எனவும் வரலாற்றில் புகழப்படுகிறது. 650 கி.மீ-. பரப்பில் 63 லட்சம் மக்களை வாழவைக்கிறது. 55 சதவீதம் இந்துக்கள், 41 சதவீதம் முஸ்லிம்கள், கிருத்துவர்கள், சீக்கியர்கள், ஜைனர்களும் மன நிறைவுடன் காலங்கழிக்கின்றனர்.
ஹைதராபாத் பகுதியில் தீவிரவாதி தலைமறைவு, வெடிகுண்டு புதையல் கண்டுபிடிப்பு பொய்ச்செய்திகள், அவதூறு தகவல்கள் தொடர்ந்து ஊடகங்களில் பரப்பப்பட்டு வருவது வாடிக்கை. ஆனால் பாக்கிஸ்தான் ஆன்மநேய கலைக்குழுவின் ஹைதராபாத் நிகழ்ச்சியை ஆங்கில நாளிதழ்கள் மனமார பாராட்டின. நேர்காணல் வெளியிடப்பட்டது. தகவல் தொழில் நுட்பம், மருந்து தொழிற்சாலை, நுண்கருவிகள், அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் பூரண அமைதி நகரமாக வளாகங்கள் உருவாகின்றன.
இந்துமுஸ்லிம் ஒற்றுமைக்கு ஹைதராபாத் சிறந்த முன்னுதாரணம். பாக்கிஸ்தான் என்றாலே அருவெறுப்பு, அராஜகம், தீவிரவாதம், பயங்கரவாதம், ராணுவ வெறி, ஆயுதக் கலாச்சாரம், முரட்டு மதவாதம் பொய் புனைவு கற்பனைக்கு ஹைதராபாத் மக்கள் முற்றுப்புள்ளி வைத்துள்ளனர்.
இலக்கியம், மொழி, மேற்கத்திய மறுப்பு, மண்ணுக்கேற்ற இசை, ஆன்மீகப் பண்புகளை ஹைதராபாத் வாசிகள் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்கின்றனர். ஆந்திர தலைநகர் ஹைதராபாத்தில் வாழும் 30 லட்ச முஸ்லிம்கள் மத நல்லிணக்கக் காவலர்கள். மறுப்பதற்கில்லை. நவீன இந்தியாவின் முன்னுதாரணக் குடிகள். -ஆ.மு.ரசூல் முஹ்யித்தீன் ]
ஹைதராபாத்: வரலாற்று சிறப்புமிக்க நகரம் – ஒரு கள ஆய்வு
புதுதில்லியில் அமைந்துள்ள பிரம்மாண்ட கட்டிடங்கள், சிறப்பு அம்சங்கள் அத்தனையும் அமையப்பெற்ற நகரம் ஹைதராபாத். அதனால் இந்தியாவில் துணை நகரமாக அறிவிக்கவேண்டும் என்று குரல் கொடுத்தார் அம்பேத்கர். அவர் தம் கூற்று உண்மை. ஹைதராபாத் கலாச்சார, பொருளாதார உயர்வுக்கு இன்றைய வளர்ச்சிக்குக் காரணமாக உந்து சக்தியாக முன்னோடியாக விளங்கியவர்கள் முஹம்மது அலி குதூப் மற்றும் நிஜாம் வம்சத்தினர்.
தொலைநோக்குப் பார்வையோடு இவர்களால் உருவாக்கப்பட்ட அசெம்ப்ளி, ஹைகோர்ட் ஹைதராபாத்தின் பெருமைக்குரியவை. மக்கள் கண்டுகளிக்க நீண்ட மேடை அமைக்கப்பட்ட முஷி ஆறு கூவமாக மாறியிருக்கிறது. ஹைதராபாத் மற்றும் செகந்தராபாத் ஆகிய இவ்விரு நகரங்களும் 650 கிலோ மீட்டர் சதுரப் பரப்புடைய பூமி. கடல் மட்டத்திலிருந்து 536 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள மலைப்பிரதேசம். முதன்மை மொழி தெலுங்கு. 2ஆம் மொழி உருது. ஹிந்தியும் உருதும் மட்டுமே ஆதிக்கம் செலுத்துகின்றன.
செகந்தராபாத்திலிருந்து ஹைடெக் சிட்டிக்குச் செல்லும் வழியில் சிலபகுதிகள் பின்தங்கியிருக்கின்றன. பலபகுதிகள் அசுரவளர்ச்சி கண்டுள்ளன. ஒரு சிலரது சிந்தனை ஹைதராபாத்தை புரட்டிப் போட்டிருக்கிறது. விவசாயத்துக்கு உதவாத கடும் பாறைப் பகுதி நிலம் வெட்டிப் பிளக்கப்பட்டு விதவிதமான வடிவங்களில் கணினி சென்டர்கள் வானூயர்ந்து நிற்கின்றன. ஹைதராபாத்தின் காஸ்ட்லியான பகுதி என வர்ணிக்கப்படும் ‘‘பஞ்சாரா ஹில்ஸ்’, ‘‘ஹ§ப்ளி ஹில்ஸ்’’ இரண்டும் ஹைடெக் சிட்டி போகும் வழியில் அமைந்திருக்கின்றன.
ஹைதராபாத்தின் பல பகுதிகள் பேகம்பேட், அமீர்பேட், யூசூஃப்குடா, அப்சல்கஞ்ச், உஸ்மான்கஞ்ச், சித்தியாம்பூர், முஷாமிஷா சந்தை, ஹ§மாயூன் நகர் என்று முஸ்லிம் பெயர்களில் அமைந்திருந்தாலும் பழம்பெருமை மட்டுமே மீதமிருக்கிறது. இன்று அவ்விடங்களில் அதிகாரம், பணி, நிறுவனங்களில் முஸ்லிம்கள் கோலோச்சவில்லை.
இருபுறமும் வானூயர்ந்த கட்டிடங்களை மற்றவர்கள் அமைத்திருக்க, முஸ்லிம்கள் ரோட்டுக்கு நடுவே ஜெண்டா கொடி மரம் அமைத்து திருப்தியடைந்திருக்கின்றனர். முஸ்லிம்கள் நிலை படுமோசமாக உள்ளது.
19,000ம் பேருந்துகள் ஓடும் நகரில் இதைவிட அதிகமான எண்ணிக்கையில் ஓடும் ஆட்டோக்களின் ஓட்டுநர்கள் 90 சதம் பேர் முஸ்லிம்கள். சென்னையில் பெறக்கூடிய கட்டணத்தில் இரண்டில் ஒரு பங்கு மட்டுமே கட்டணமாகப் பெறுகின்றனர். கிராக்கி பிடிப்பதில் போட்டி நடக்கிறது. விட்டுக் கொடுத்தலிருக்கிறது.
உருது மொழியில் சித்தப்பா, சின்னம்மா என்றழைக்கின்றனர் புறநகர் ஆட்டோ டிரைவர்கள். குருத்துவாரா கோயில்கள் பளபளப்புடன் ஆங்காங்கு காட்சியளித்தன. பள்ளிவாசல்கள் பொலிவிழந்து காணப்பட்டன. பல இடங்களில் கபர்ஸ்தான்கள், சுவர்கள் அற்று இருந்தன. முஸ்லிம்கள் பரவலாக கறிக்கடை, உணவு விடுதி, எம்ராய்டரிங், ரோட்டோரக் கடைகள், கொப்பரைத் தேங்காய் சைக்கிளில் விற்றல், சட்டிபானை ஈயம் பூசுதல், வாடகைக்கு விடுதல், கில்ட் கடை, பான் ஷாப், அத்தர்கடை, காய்கறிகடை, தகரக்கடை போன்ற தொழில்களில் ஈடுபட்டுள்ளனர்.
இராஜேந்திரா நகரில் சிங்குகள் நடத்தும் அடமானக் கடைகளில் முஸ்லிம் பெண்கள் புர்கா அணிந்த நிலையில் அமர்ந்திருக்கின்றனர். கிஷன்பாக் வரை முஸ்லிம்கள் வாழக்கூடிய பகுதி மிகவும் பின்தங்கியதாகவும், ரோடுகள் பழுதுடனும் இருந்தன. நிஜாம் மன்னர் அரண்மனையருகே உள்ள லாடு பஜார் முழுவதும் முஸ்லிம்கள் அணியக்கூடிய ஜிகினா சுடிதார், சல்வார்கமீஸ், ஆண்கள் ஷெர்வானி விற்பனை, வாடகை, கல்பதித்த விதவிதமான கவரிங் நகைகள், வளையல் கடைகள் 200க்கும் மேற்பட்டு உள்ளன. முஸ்லிம்கள் நடத்துகின்றனர். வசதியுள்ளவர்களாகக் காட்சியளிக்கின்றனர். அருகிலுள்ள சார்மினார் அருகே முஸ்லிம்கள் ரோட்டோர வியாபாரிகளாக உள்ளனர்.
திடிரென கோடைமழை ஆலங்கட்டிகளைக் கொட்டியது. ரோடு வியாபாரிகள் ஓடியது பரிதாபமாக காட்சி தந்தது. சார்மினார் எதிரில் நாட்டு மருந்துக் கடைக்குவியல் போல் முஸ்லிம்கள் பல் மருத்துவம் செய்யும் கிளினிக்குகள் வைத்துள்ளனர். கடைவியாபாரி போல் வாசலில் அமர்ந்திருந்தனர். டெண்டல் கிளினிக்குகளில் தரப்படும் சிகிச்சைகளான, பல்பிடுங்குதல், மொத்தமாகக் கட்டுதல், கிளிப் போடுதல் என எல்லாமும் செய்வதாக காட்சி விளம்பரம் செய்திருந்தனர். நவீன நகரத்தின் முன்னேற்ற சாயல் முஸ்லிம்கள் மீது படியவில்லை.
ஹைதராபாத், செகந்தராபாத் நகர்ப்பகுதி, புறநகரம் எப்பகுதி நோக்கினும் முகத்தை மூடிய புர்காவுடன் முஸ்லிம் பெண்கள் புழுவைப்போல் இரவு, பகல் எந்நேரமும் வீதியில் இழைகின்றனர். ஆண்களை வீட்டுக்குள் வைத்து இவர்களே எல்லா பணிகளையும் செய்கின்றனரா? இந்நிலை தொடர்ந்தால் கலாச்சாரச் சீரழிவு ஏற்படும். இந்து, முஸ்லிம் இணைந்த கலாச்சாரமே ஹைதராபாத்தில் காட்சியளித்தது. முஸ்லிம் பெண்கள் பாத விரல்களில் மெட்டியணிந்துள்ளனர். எல்லா பண்டிகைகளும் பொதுப் பண்டிகையாக கொண்டாடப் படுவதாகக் கூறப்பட்டது.
அரசியல், அதிகாரம், கைவிட்டுப் போனது ஒரு புறம். கல்வி நிறுவனங்கள் மருத்துவ நிறுவனங்கள், பெரிய வணிக நிறுவனங்கள் எதுவும் முஸ்லிம்களிடம் பரவலாக இல்லை. ஆங்காங்கு அத்திப்பூத்தாற்போல் தென்படுகிறது. குறிப்பிடத்தக்க முஸ்லிம் கல்வி நிறுவனங்கள் உஸ்மானியா பல்கலைக்கழகம், மருத்துவக் கல்லூரி. மதினா கல்வி சென்டர் நிறுவனங்கள் இன்ஜீனியரிங், எம்.பி.ஏ., பார்மசி, ஹிமாயத் நகர் பெண்கள் கல்லூரி. இவை மட்டுமே! மற்ற சமூகம் நடத்தக்கூடிய கல்வி நிறுவனங்கள் நிரம்ப உள்ளன.
அரசு ஜுனியர் கல்லூரி, எஸ்.வி.கல்லூரி, காஞ்சி காமகோடி கணினி சென்டர், சி.எஸ்.ஐ.வெஸ்லி முது நிலைக் கல்லூரி, ஜெயின் ஹெரிடேஜ், மகிளா தயான் வித்யா, தேவி பெண்கள் கல்லூரி, செயின்ட் தாமஸ் பள்ளி, கிராண்டு கிறிஸ்டல், வித்யா பாரதி பள்ளி, அல்சித்தீக் அரசு பள்ளி இன்னும் எழுதிக் கொண்டே போகலாம். இந்திய நகரங்களனைத்திலுமிருந்து வந்து ஐ.டி. சென்டர்களில் பணி செய்கின்றனர் ஆணும், பெண்ணும். தமது நாட்டில் ஏற்பட்டுள்ள இந்த வளர்ச்சியை முஸ்லிம்கள் கணக்கில் கொண்டதாக, கண்டு கொண்டதாகத் தெரியவில்லை அதற்கான ஆதாரமில்லை-. உருது நாளிதழ்கள், தி ஷியா சாத், முன்ஷிப், எத்திமாத், ரோஷனாமா போன்ற நாளிதழ்கள் வருகின்றன, பணிசெய்கின்றன. ஹைதராபாத்தில் வெளிவரக்கூடிய தினசரிகளைப் பார்த்தால் முஸ்லிம்கள் நடத்தக் கூடிய கலாச்சார நிகழ்ச்சி ஒன்று கூடஇல்லை.
மொழி வளர்ச்சிக்காகப் பாடுபடுதல் பண்பாடு, கலாச்சாரம் காத்தல் போன்றவைகளில் ஆர்வமில்லை. மாநிலத் தாய்மொழி கற்றுக்கொள்ள மாட்டேன் எனது மொழியை மற்றவர் மீது திணிப்பேன் என்பது அம்மொழிமேல் வெறுப்பை எற்படுத்தும். நகரம், புறநகர், பேருந்து, ஆட்டோ, உணவு விடுதி, வணிக வளாகம், வீதி எங்கும் தெலுங்கு மொழி பேசப்படவில்லை. இட்லி கடைப் பெண், கண்டக்டர் பெண் இந்திக்கு பதிலளிக்கின்றனர். நகரத்தை வளர்த்து மொழியைச் சாகடித்துள்ளனர்.
வெள்ளையர் தாம் ஆக்கிரமிக்கும் ஒவ்வொரு பகுதி மொழியையும் கற்று அங்கு ஆளுமை செலுத்தினர். முஸ்லிம்கள் தங்களது நகரத் தாய்மொழியான தெலுங்கை கற்கணும், பேசணும். அதன்மூலம் ஆதிக்கம் கிடைக்கும். பெரிய கட்டிடங்கள், பங்களா இருந்து பயனில்லை. கலாச்சாரப் பயிற்சிக் கூடங்கள் உருவாக்கணும். ஹைதராபாத்தின் 100 சத வளர்ச்சியை மனத்திலிறுத்தி புதிய நகரங்கள், முஹல்லாக்களை உருவாக்க முற்படணும்.
எவர் கரங்களில் பொருளாதாரமும், நாவில் மொழியும் இருக்கிறதோ அவர்களே ஆதிக்கவாதிகள். மற்றவர் மத்தியில் ஊடுருவி பணி செய்யணும். தாக்கம் உண்டாக்கணும். பொருளாதார ஏற்ற இறக்கம் இருக்கும். ஒரு இடத்தில் ஒருங்கிணையலாம். தனித்து வாழ்வதற்குப் பெயர் ஷரிஅத் அல்ல. கூடி வாழ்வதற்குப் பெயர் ஷரிஅத்.
அவ்வளவு பெரிய நகரில் மூன்று நாட்களாகச் சுற்றியும் குர்ஆன் விரிவுரை, பயான் மஸ்ஜித்களில், மண்டபங்களில், பள்ளிக்கூடங்களில் நடைபெறப் பார்க்கவில்லை. மேல்மட்ட முஸ்லிம்கள் வசிக்கும் ஒதுக்குப்புறமான ஒரு பகுதியில் ஒரு மஸ்ஜித்தில் பயான் நடைபெற்றது. இஸ்லாத்தை இயல்பாக வெளிப்படுத்தணும். பிரச்சாரம் பொறுத்தும், மற்றவர்களுக்கு எடுத்துரைப்பது பொறுத்தும் மதம் வெளிப்படும்.
சுவர் திரை இருந்தால் எடுபடாது. குலி குதூப் மன்னர்கள் குர்ஆன் தப்ஸீர் எழுதியுள்ளனர், இலக்கியம் படைத்துள்ளனர் அருங்காட்சியகத்தில் காணமுடிகிறது. அவர்களது சாதனை 500 வருடம் கடந்தும் முறியடிக்க முடியவில்லை. அம்மன்னர்களின் குடிவாரிசுகள் தாங்கள் என்பதை ஹைதராபாத் முஸ்லிம்கள் நிருபிக்கவேண்டும்.
நான்கு மினராக்கள் (சார்மினார்):
என்றதும் எவருக்கும் சார்மினார் நினைவுக்கு வராமல் இருக்காது. 1591-ல் ஆரம்பிக்கப்பட்டு 1592-ல் கட்டி முடிக்கப்பட்டது சார்மினார். இது நினைவுச் சின்னமல்ல. மஸ்ஜித், பள்ளிக்கூடம் இயங்குவதற்காக பிரம்மாண்டமாகக் கட்டப்பட்ட கட்டிடம். கீழே வட்ட வடிவில் ஒளுச் செய்யும் நீர்த்தடாகம், கட்டிடத்தின் மேல் புறத்தில் மதரஸா, மஸ்ஜித் இயங்கிவந்துள்ளது.
ஷிர்கு மேல் முஸ்லிம்கள் பார்வை திரும்பிவிடாதிருக்க இதுபோன்ற பிரம்மாண்டங்களைக் கையிலெடுத்துள்ளார் மன்னர். பிரமிக்க வைக்கும் மெக்கா மஸ்ஜித் கட்டப்படுவதற்கும் கால் நூற்றாண்டு முன்னதாகக் கட்டப்பட்டது சார்மினார். நான்கு திசைகளிலுமுள்ள சாலைகளிலிருந்து நோக்கினால் தெரியும்படி, சார்மினார் மினராவில் நின்று பார்த்தால் ஹைதராபாத்தின் மொத்த நகரும் காணும் வகையில் கட்டப்பட்டுள்ளது.
சார்மினார் முகப்பு ஒவ்வொன்றும் 4அடிக்கு 24 அடி அளவிலும், கட்டிட உயரம் 80 அடி. அகலம் 42 அடி. மினரா உள் மாடங்கள் 16. வெளிமாடங்கள் 24. 180 ஜன்னல்கள். பெரிய சரவிளக்குகள் 15 அமைக்கப்பட்டுள்ளன. சார்மினார் நான்கு மினராக்களும் முழு கிரானைட் கற்களால் உருவாக்கப்பட்டுள்ளன. 425 வருடங்கள் கடந்தும் அதன் தோற்றம், பொலிவு இழக்காமல் காட்சியளிக்கிறது.
இஸ்லாமிய கட்டிடக் கலையும், நுணுக்கமும், காண்போரை அன்பாக மிரட்டும் தோற்றமும் குலி குதூப் மன்னர்களால் நிறுவப்பட்டவைகளில் காட்சி தருகின்றன. அவர்கள் விட்டுச் சென்ற பாரம்பர்யத்தை பாதுகாத்து மக்கள் கண்களுக்கு விருந்தளித்து வரும் அரசுகள். கலையம்சத்துடன் கண்டு செல்லும் இந்திய மக்கள் போற்றுதலுக்குரியவர்கள். எந்த ஒரு பிணக்குக்கும் மக்கள் மனம் ஒத்துழையாமை செய்யும் விதத்திலான பண்பாடுகளை தெலுங்கின மக்களிடம் காணமுடிந்தது.
சார்மினார் கிழக்கு வாசல் பக்கம் அவுலியா ஒருவர் சில்லா இருந்த இடம் என முஸ்லிம்கள் உட்புறமாக தர்கா அமைத்து கொண்டாடுகின்றனர். அவர்களுக்கருகில் வடக்கு வாசல் பக்கம் வெளிப்புறமாக இந்துக்கள் கோயில் அமைத்து வழிபடுகின்றனர். இவர்கள் இருவருக்குள் சண்டை வந்துவிடக்கூடாது என்பதற்காக இராணுவ வண்டிகள், போலிஸ் வேன்கள், தண்ணீர் பீய்ச்சியடிக்கும் வஜ்ரா பாதுகாப்புக்கு வாகனம் நிலையாக நிற்கின்றன. சென்சிட்டிவ் பகுதியாகக் காட்சி தருகிறது. நல்ல நோக்கத்துக்காகக் கட்டப்பட்ட சார்மினார் இருபக்கமுள்ள சிலரால் சிறுமைக்குள்ளாகியிருந்தாலும் மக்கள் மனத்தில் என்றென்றும் இஸ்லாமிய, இந்திய கட்டிடக் கலையம்சத்தை பெருமையோடு எடுத்துரைப்பேன் எனது மண்ணின் மக்களிடம் என்று மிடுக்குடன் காட்சியளிக்கிறது.
– சதாம், 2011 முஸ்லிம் முரசு
source: http://jahangeer.in/