ஸய்யத் மன்ஸூர் அஹ்மத்
மிஸ்வாக்:
“இறை நம்பிக்கையாளர்களுக்கு அல்லது என் சமுதாயத்தாருக்கு சிரமம் ஏற்பட்டுவிடும் என்று நான் அஞ்சாமலிருந்தால் ஒவ்வொரு தொழுகையின் போதும் மிஸ்வாக் செய்யுமாறு அவர்களுக்கு நான் கட்டளையிட்டிருப்பேன்” என்று நபி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள், நூல்: முஸ்லிம்)
தினமும் ஐவேளை உளுவுக்கு முன்னால் மிஸ்வாக் செய்வது பற்றி கட்டளையிடப்படவில்லை. ஆனால், தினமும் ஐவேளைத் தொழுகைக்காக ஐந்து முறை பல் துலக்கி சுத்தம் செய்வது வலியுறுத்தப்பட்ட நபிவழியாகும். “எந்த தொழுகை (யின் உளூ) யில் மிஸ்வாக்குச் செய்யப்பட்டதோ அத்தொழுகை (உளூவில்) மிஸ்வாக்குச் செய்யப்படாத தொழுகையை விட எழுபது மடங்கு சிறப்பு (தவாபைப்) பெறும்” என்று நபி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அன்னை ஆயிஷா ரலியல்லாஹு தஆலா அன்ஹா அவர்கள், நூல்: ஷூஃபுல் ஈமான் பைஹக்கீ).
“எனது உம்மத்தினருக்கு சிரமம் கொடுப்பதை நான் அஞ்சவில்லை என்றால் ஒவ்வொரு தொழுகை (அல்லது அதன் உளூ) நேரத்திலும் மிஸ்வாக்குச் செய்யுமாறு (கடமையாக்கி) ஏவி இருப்பேன்” என்று நபி பெருமானார் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஸலமா ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள், நூல்: திர்மிதீ, அபூதாவூது).
மேலும், ஐந்து நேரங்களில் மிஸ்வாக்கினால் பல் துலக்குவது மிகவும் விரும்பத்தக்க செயலாகும் என மார்க்க அறிஞர்கள் கூறுகிறார்கள். (1) உளு செய்யும் போது. (2) தொழுகைக்காக நிற்கும் போது. (3) திருக்குர்ஆன் ஓதும் போது. (4) தூங்கி எழும் போது. (5) நீண்ட நேரம் சாப்பிடாததால், அல்லது துர்வாடை உள்ள பொருட்களை சாப்பிட்டால், அல்லது நீண்ட நேரம் வாய் மூடி இருந்தால், அல்லது அதிகமாகப் பேசியதால் வாயில் வாடை வரும்போது. (அல்மின்ஹாஜ்)
“நபி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இரவில் (நித்திரையிலிருந்து) எழுந்தால் மிஸ்வாக்கினால் வாயைச் சுத்தஞ் செய்பவர்களாக இருந்தார்கள்”. (அறிவிப்பவர்: ஹுதைஃபா ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள், நூல்: புகாரீ, முஸ்லிம்). “மிஸ்வாக்குச் செய்வது வாயை சுத்தமாக்குவதாகவும், அல்லாஹ்வின் பொருத்தத்தை ஏற்படுத்துவதாகவும் உள்ளது” என்று நபி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அன்னை ஆயிஷா ரலியல்லாஹு தஆலா அன்ஹா அவர்கள், நூல்: ஷாபீ, அஹ்மது, தாரிமீ, நஸயீ).)
“இரவு பகல் (எந்நேரத்திலும்) தூக்கத்திலிருந்து விழிக்கும் போது நபி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உளூ செய்யும் முன்பாக மிஸ்வாக் செய்தே அன்றி இருக்க மாட்டார்கள்”. (அறிவிப்பவர்: அன்னை ஆயிஷா ரலியல்லாஹூதஆலா அன்ஹா அவர்கள், நூல்: அஹ்மது, அபூதாவூது). இப்படியாக ஒவ்வொரு தொழுகைக்கும் உளூ செய்யும் முன்பாக மிஸ்வாக் குச்சியினால் பல் துலக்கி சுத்தம் செய்வது நபிவழியாக உள்ளது!
மிஸ்வாக் குச்சியினால் பற்களைச் சுத்தம் செய்வதில் எழுபது நற்பலன்கள் உண்டு என்றும், அவைகளில் சிறு பலன் உயிர் பிரியும் போது ஷஹாதத் கலிமாவை நினைவூட்டும் என்றும் கூறப்பட்டிருக்கிறது. ஆயுர்வேதம், யூனானி மருத்துவ முறையிலும் மிஸ்வாக் குச்சியின் பயன்பாடு பற்றி கூறப்பட்டுள்ளது! இவை தவிர வேறு சில பயன்களும் உள்ளன. பற்களை மேல் கீழாகத் தேய்த்து சுத்தம் செய்ய வேண்டும். பக்கவாட்டில் மட்டும் தேய்த்தால் பற்களுக்கு இடையேயுள்ள இடுக்குகள் சுத்தமாகாது என்று பல் மருத்துவர்கள் கூறுவார்கள்.
மிஸ்வாக் குச்சியினால் எளிதாக பற்களை மேலும் கீழுமாக தேய்க்க முடியும்! பற்களுக்கு வெளிப்புறம் மட்டுமின்றி, உட்பக்கங்களையும் துலக்க வேண்டும் என்பார்கள். மிஸ்வாக் குச்சியினால் எளிதாக உட்பக்கங்களையும் சுத்தம் செய்ய முடியும். மேலும், கீழ் கடைவாய்ப் பற்களின் மேல்பரப்பையும், மேல் கடைவாய்ப் பற்களின் கீழ் பரப்பையும் துலக்க வேண்டும். இந்த வசதியும் மிஸ்வாக் குச்சியில் இருக்கிறது! இப்படியாக, வாய் மற்றும் பற்களை சுத்தமாக வைத்துக்கொள்ள மிஸ்வாக் உதவுகிறது!
உளூ:
“உளூ செய்யாமல் எந்தத் தொழுகையும் ஏற்கப்படாது” என்று நபி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: முஸ்அப் பின் ஸஅத் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள், நூல்: முஸ்லிம்).
ஒருவர் தொழுவதற்கு முன்னால் தன் கைகள், கால்கள், முகம் உள்ளிட்ட உறுப்புகளை, அதற்கான ஒழுங்கு முறைப்படிக் கழுவிச் சுத்தம் செய்வதற்கே ‘உளூ’ என்பார்கள். இவ்வாறு தூய்மை செய்யாமல் ஒருவர் தொழுதால், அவரது தொழுகை செல்லாது. இது கட்டாயத் தொழுகை, விருப்பத் தொழுகை, இறுதித் தொழுகை (ஜனாஸா), ஸஜ்தா திலாவத் ஆகிய அனைத்துக்கும் பொருந்தும். (அல்மின்ஹாஜ்).
உளூ செய்யும் முறை பின் வரும் ஹதீஸில் கூறப்படுகிறது: ‘உஸ்மான் பின் அஃப்பான் ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள் உளூ செய்வதற்காகத் தண்ணீர் கொண்டு வரச் சொல்லி உளூ செய்தார்கள். (முதலில்) தம்முடைய இரு முன் கைகளை மூன்று முறை கழுவினார்கள். பிறகு வாய் கொப்பளித்து (மூக்கிற்கு நீர் செலுத்தி) மூக்குச் சிந்தினார்கள். பின்னர் தமது முகத்தை மூன்று முறை கழுவினார்கள். பிறகு தமது வலக்கரத்தை முழங்கை மூட்டுவரை மூன்று முறை கழுவினார்கள். அடுத்துத் தமது இடக்கரத்தையும் அதைப் போன்றே (முழங்கை மூட்டுவரை மூன்று முறை) கழுவினார்கள். பின்னர் தலையை (ஈரக் கையால் தடவி) மஸஹு செய்தார்கள். பிறகு தமது வலக் காலை கணுக்கால்வரை மூன்று முறை கழுவினார்கள். பிறகு இடக் காலையும் அதைப் போன்றே (கணுக்கால் வரை மூன்று முறை) கழுவினார்கள். பின்னர், “நான் செய்த இந்த உளூவைப் போன்றே அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களும் உளூ செய்ததை நான் பார்த்தேன். மேலும், அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ‘யார் நான் செய்த இந்த உளூவைப் போன்று உளூ செய்து, பின்னர் வேறு எந்த (கெட்ட) எண்ணங்களுக்கும் இடம் தராமல் இரண்டு ரக்அத்கள் நின்று தொழுகிறாரோ அவர் முன்பு செய்த (சிறிய) பாவங்கள் அவருக்கு மன்னிக்கப்படும்” என்று கூறனார்கள். முஸ்லிமில் இடம் பெற்றுள்ள இந்த ஹதீஸை உஸ்மான் பின் அஃப்பான் ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்களுடைய முன்னாள் அடிமையான ஹும்ரான் பின் அபான் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் அறிவித்திருக்கிறார்கள்.
இவ்விதம் செய்யப்படும் உளூவின் மூலம் புற உறுப்புகளான கண், காது, மூக்கு, வாய், கைகள், கால்கள் போன்ற உறுப்புகள் சுத்தம் செய்யப்பட்டு பாதுகாக்கப்படுகின்றன! உளூவில் முதலாவதாக மணிக்கட்டுவரை கைகள் மூன்று முறை கழுவி சுத்தம் செய்யப்படுகின்றன. கைகள் மூலமாக பல்வேறு தொற்று நோய்கள் பரவுகின்றன! மனித உயிர்களுக்கு கேடு விளைவிக்கின்றன! இதன் காரணமாகவே ஒவ்வொரு வருடமும் அக்டோபர் மாதம் 15 ந் தேதியை ‘உலக கை கழுவுதல் தினம்’ (GLOBAL HAND WASHING DAY) என உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப்படுகிறது! கைகளை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டியதன் அவசியத்தை உலக மக்களுக்கு உணர்த்தப்படுகிறது. ஆனால் இந்த சுத்தம் தொழுகைக்கான உளூவின் மூலமாக தினமும் ஐந்து முறை உலக முஸ்லிம்களால் பேணப்படுகிறது!
மேலும், தூங்கி விழித்து எழுந்ததும் முதலில் கைகளை மூன்று முறை கழுவ வேண்டும், குளிக்கும் முன் கைகளை கழுவ வேண்டும், சாப்பிடும் முன்பாக கைகளை கழுவ வேண்டும், சாப்பிட்ட பிறகும் கைகளை கழுவ வேண்டும் என்பன போன்ற ஒழுக்க முறைகளையும் நபி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கற்றுக் கொடுத்திருக்கிறார்கள்!
உளூவில் அடுத்ததாக மூன்று முறை வாய் கொப்பளித்து, மூக்கிற்குள் நீர் செலுத்தி, மூக்குச் சிந்தி சுத்தம் செய்யப்படுகிறது. உளூவிற்கு முன்பாக மிஸ்வாக் குச்சியினால் பற்கள் சுத்தம் செய்யப்பட்டு விடுகிறது. இப்பொழுது வாய் கொப்பளித்து வாயும் சுத்தம் செய்யப்படுகிறது! அடுத்து மூக்கை சுத்தம் செய்வது! மூக்கின் மூலமாகவே சுவாசமும் நடைபெறுகிறது. மூக்கின் மூலமாகவே வாசனைகளை அறிய முடிகிறது! மேலும், மூக்கு காற்றிலே கலந்திருக்கும் தூசி போன்ற அசுத்தங்களை சுத்தம் செய்து, பின்னரே காற்றை உள்ளே செலுத்துகிறது. இதற்காக மூக்கின் முனைப்பாகத்தில் மயிரிழைகளை உள்ளன.
மேலும், வெளிக் காற்றின் அதிகப்படியான வெப்ப நிலையை ‘ஏர்கண்டிஷன்’ போல குளிர்வித்து, உடலுக்கு உகந்த வெப்ப நிலைக்கு மாற்றி அனுப்புகிறது. இதற்கு வசதியாக மூக்கினுள்ளே ஒரு திரவம் (சளி) சுரக்கிறது! இப்படி மூக்கினுள்ளே பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகள் நடக்கின்றன. இதனால்தான் மூக்கையும் சுத்தம் செய்து கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் கூறுகிறார்கள்!
நபி பெருமானார் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள், “எவர் உளூச் செய்ய நாடுகிறாரோ அவர் மூக்குக்குத் தண்ணீர் செலுத்தி மூக்கைச் சிந்தி சுத்தம் செய்யவும்” என்று கூறியிருக்கிறார்கள். (அறிவிப்பவர்: அபூஹூரைரா ரலியல்லாஹூதஆலா அன்ஹூ அவர்கள், நூல்: புகாரீ, முஸ்லிம், முஅத்தா, அபூதாவூத், நஸாயீ).
உளூவில் அடுத்தபடியாக முகம், மூன்று முறை கழுவப்படுகிறது. முன் தலையிலிருந்து தாடை வரையிலும், ஒரு காதின் முனையிலிருந்து மறு காதின் முனை வரையிலும் முகம் கழுவிட வேண்டும். இவ்விதம் கழுவிடும் போது முகத்துடன் கண்களும் சுத்தம் செய்யப்படுகின்றன! கண் ஒரு மென்மையான அவயம். இதனை வெகு கவனமாக பாதுகாக்க வேண்டும்! தூசி, புகை போன்றவற்றால் கெடுதல் ஏற்படாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும் என்கிறார்கள் மருத்துவர்கள். உளூ செய்வதன் மூலம் கண்களும் பாதுகாக்கப் படுகின்றன! மேலும், மீண்டும் மீண்டும் முகத்தை கழுவி சுத்தமாக வைத்துக் கொள்வதால் முகப்பரு, வேர்க்குரு போன்ற சரும நோய்களும் ஏற்படுவதில்லை!
அடுத்து, இரண்டு கைகளும் முழங்கை மூட்டு வரை கழுவப்படுகின்றன. முதலில் வலது கையை முழங்கை மூட்டுவரை கழுவ வேண்டும். பிறகு இடது கையை முழங்கை மூட்டு வரை கழுவ வேண்டும். இவ்விதமாக இரண்டு கைகளும் முழங்கை மூட்டு வரை கழுவி சுத்தம் செய்யப்படுகின்றன! அடுத்து தலைக்கு மஸஹு செய்ய வேண்டும். தலைக்கு மஸஹு செய்யும் போது காதுகளின் துளைகளிலும் விரல்களை நுழைத்து சுத்தம் பேணப்படுகிறது.
காதும் ஒரு முக்கியமான உறுப்பாகும். இதையும் கவனமாக பாதுகாக்க வேண்டும். காதில் எதையாவது போட்டு குடைந்துக் கொண்டிருக்கக் கூடாது! மேலும், காதின் உட்பக்கத்துத் துவாரத்தில் குறும்பி எனப்படும் ஒருவித மெழுகு சுரக்கும். அளவுக்கும் அதிகமாக குறும்பி சேர்ந்தால் அதை சுத்தம் செய்ய வேண்டும்! புறச் செவியில் அழுக்கும் சேறும்! இதையும் சுத்தம் செய்ய வேண்டும்! இல்லாவிட்டால் ஒரு விதமான அரிப்பு ஏற்படும்! புண்ணும் ஏற்படலாம். எனவே காதையும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். உளூவின் மூலம் காதின் சுத்தமும் பேணப்படுகிறது.
நபி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உளூச் செய்யும் போழுது தங்களின் இரு விரல்களைத் தங்களின் இரண்டு காதுகளின் துளையிலும் நுழைத்தார்கள்” என ரபீஉ பின்து முஅவித் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவித்திருக்கிறார்கள். (ஆதாரம்: அபூதாவூத்)
மேலும், “இப்னு உமர் (ரலியல்லாஹு தஆலா அன்ஹு) அவர்கள் தம் இரு காதுகளுக்காகத் தம் இரு விரல்களில் தண்ணீர் எடுத்தனர்” என நாபிஃ அவர்கள் அறிவித்திருக்கிறார்கள். நூல்: முஅத்தா. இவ்விதமாக காதுகளும் சுத்தம் செய்யப்படுகின்றன.
அடுத்து, இரு கால்களும் கணுக்கால்கள் வரை கழுவி சுத்தம் செய்யப்படுகின்றன! சாதாரணமாக எல்லோருமே கால்களை கழுவி சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். ஆயினும் சர்க்கரை வியாதி (நீரிழிவு) உள்ளவர்கள் தமது பாதங்களை சுத்தமாகவும், பாதுகாப்பாகவும் வைத்துக் கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் கண்டிப்புடன் கூறுவார்கள். உளூவின் மூலம் பாதங்களை பாதுகாப்புடன் வைத்துக் கொள்ள முடியும்! உளூவில் இரண்டு கால்களும் கணுக்கால் வரை மூன்று முறை கழுவி சுத்தம் செய்யப்படுகின்றன. கால்களை முழுமையாக கழுவி சுத்தம் செய்ய வேண்டும் என நபி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள்.
‘ஒரு மனிதர் உளூ செய்தார். அப்போது அவர் தமது பாதத்தில் நகம் அளவு இடத்தை (கழுவாமல்) விட்டுவிட்டார். இதைக் கண்ட நபி பெருமானார் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள், “திரும்பிச் சென்று, சரியாக உளூச் செய்யுங்கள்” என்று கூறினார்கள். அவ்வாறே அவர் திரும்பிச் சென்று (மீண்டும் உளூச் செய்து) பின்னர் தொழுதார். (அறிவிப்பவர்: உமர் பின் அல்கத்தாப் ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள், நூல: முஸ்லிம்).
‘தம் குதிகால்களைக் கழுவா(மல் உளூச் செய்து கொண்டிருந்)த ஒரு மனிதரை நபி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கண்டார்கள். அப்போது, “(உளூவில் சரியாக கழுவப்படாத இத்தகைய) குதிகால்களுக்கு நரக வேதனைதான்” என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைர ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள், நூல்: முஸ்லிம்).
உளூவில், கால்களை கழுவுவதில் அலட்சியம் காட்டுபவர்களுக்கு நரக வேதனைதான் என நபி பெருமானார் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளதால் உளூ செய்பவர்கள் கால்களை கவனமாக, முழுமையாகக் கழுவி சுத்தம் செய்கிறார்கள்.
இவ்விதம் கண், காது, மூக்கு, கைகள், கால்கள் போன்ற புற உறுப்புகளை சுத்தமாக வைத்துக் கொள்ள உதவும் உளூவை, தினமும் ஐவேளை தொழுகைகளுக்காக ஐந்து முறை செய்திட வேண்டும். ஆயினும், உளூ சிறு துடக்கு (ஹதஸ்) ஏற்பட்டு முறிந்துவிடும் போது மறுபடியும் உளூ செய்திட வேண்டும். இவ்விதம் மறுபடியும் உளூ செய்யாத வரை தொழுகை ஏற்கப்படாது! உடலிலிருந்து சிறுநீர், மலம், பின் துவாரத்திலிருந்து வாயு ஆகியவை வெளியேறுவதற்கே சிறு துடக்கு (ஹதஸ்) என்பார்கள். இவ்விதம் சிறு துடக்கு ஏற்படும் போது ஏற்கெனவே செய்த உளூ முறிந்துவிடும்! எனவே மறுபடியும் உளூ செய்தால்தான் தொழுகை கூடும். “உங்களில் ஒருவருக்கு சிறு துடக்கு ஏற்பட்டு விட்டால், அவர் உளூ செய்து கொள்ளாதவரை அவரது தொழுகை ஏற்கப்படாது” என நபி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள், நூல்: புகாரீ, முஸ்லிம்).
இதன் காரணமாக புற உறுப்புகளை சுத்தமாக வைத்துக் கொள்ளும் வாய்ப்பு கூடுகிறது!
உடல் ஆரோக்கியத்திற்கு உடல் சுத்தம் தேவை! உடல் சுத்தமே தொழுகைக்கு தேவை! குளிப்பு, உளூவின் மூலம் உடல் சுத்தம் கிடைக்கிறது! எனவேதான் தொழுகை உடல் ஆரோக்கியத்தை பேணக் கூடியதாக இருக்கிறது எனக் கூறப்பட்டது!
இன்ஷா அல்லாஹ், கட்டுரை தொடரும்…
source: http://tnrzahir.blogspot.com