ஹைதராபாத் மக்கா மஸ்ஜித், இந்தியா
ஹைதராபாத் மக்கா மஸ்ஜித் நிச்சயமாக அல்லாஹ்வின் நிஃமத். தொழக்கூடிய மக்களிடத்தில் வேற்றுமை, பித்னா காணவியலவில்லை. உள்ளே நுழைந்ததும் தக்வா ஏற்பட்டது. நஃப்சு கட்டுக்குள் வந்தது. இவ்வுலக மக்களின் ஹித்ததுன் பாவச் சுமைகள் நீங்கட்டும் என மனம் பிரார்த்தித்தது. குப்ரிலிருந்து மக்களைத் தடுக்கும் பணியை நாளும் அல்லாஹ் செய்து கொண்டிருப்பது புரிந்தது.
1614இல் ஆறாம் மன்னர் முஹம்மது குலி குதூப் ஷா ஆரம்பித்து பேரரசர் ஒளரங்சீப்பால் நிறைவு செய்யப்பட்டது மெக்கா மஸ்ஜித். இதன் உள்கட்டமைப்பு நீளம் 225 அடி. அகலம் 180 அடி. உயரம் 75 அடி. 300 சதுர மீட்டர் வெளிவராண்டாவுடையது. ஒரே இடத்தில் 10,000 பேர் தொழக்கூடிய விதத்தில் அமைந்திருக்கும் இம்மஸ்ஜித் உருவாக்க அக்காலத்தில் 8 இலட்சம் ரூபாய் செலவிட்டுள்ளனர்.
மஸ்ஜித் இடதுபுறம் தர்கா. நீண்டு விரிந்த வளாகத்துடன் உள்ளது. அதில் பல கபர்கள் உள்ளன. அருகில் பெண்கள் தனியாகத் தொழக்கூடிய இடம். ஆண், பெண் கழிவறை அருகருகே வாயில்களுடன் இருந்தது.
ஒன்றரை மணிக்கு பர்ளு, சுன்னத் தொழுகை எல்லாம் முடிந்தது. தொழுதோர் கலைந்தனர். ஹைதராபாத் எம்.பி. அசாதுதீன் உவைஸி எதிர்ப்படுவோருக்கு கை கொடுத்தப்படி விரைவாக வெளியேறினார். மிஹ்ராப் முன்பாக நீண்ட வரிசையில் நின்று இமாமிடம் கைகொடுக்கக் காத்திருந்தனர் தொழுகையாளிகள்.
அமைதி தவழும் முகம், கனிவான பார்வை ரோஜாப்பூ நிறத்தில் இமாம். ஒவ்வொருவரிடமும் வந்து சிறுவர், பெரியவர், தனவந்தர், ஏழை பேதம் பாராட்டாது முகபாவனையை வெளிப்படுத்தாது, வீட்டுக்கு விரைந்தோடும் வேகமில்லாமல், எரிச்சல் படாமல் 30 நிமிடத்திற்கும் மேலாக முஸாபா செய்தார். பிறந்த பச்சிளங் குழந்தையைத் தாய் பக்குவமாகத் தோளில் சாய்ப்பது போன்று முஸாபா செய்தவர்களைத் தோளில் சாய்த்து சூரா ஓதி துஆச் செய்து அனுப்பினார். அன்று முழுவதும் மனத்தை இமாம் ஆக்ரமித்தார். எழுதும் இன்னேரம் வரை மனக்காட்சி விட்டு இமாம் முகம் அகலவில்லை. அவரைப் போன்ற சீதேவிகள் தமிழகத்திலும் இருக்கின்றனர்.
மக்கா மஸ்ஜித் விட்டு வெளியேறும்போது மனித மனத்தின் அழுக்குகளை அது அகற்றுவது தெரிந்தது. மஆதல்லாஹ் கைர் உள்ளூர்னா எந்நாளும் மேன்மையான எங்களை நோக்குவீராக எனக் கூறுவது புரிந்தது.
குறிப்பு : பர்ளு, சுன்னத் தொழுகை இமாம், மோதினார் முடித்த அடுத்த நொடி தமிழகத்திலுள்ள மஸ்ஜித்துகளில் தொழக்கூடிய, ஓதக்கூடிய மற்றவர்களைப் பற்றி கவலையுறாமல் மின் விசிறி இயக்கம் நிறுத்தப்படும். மின்சாரம் சேமிப்பு எனக் கூறவியாலாது. கூறினால் இன்னும் பலமடங்கு மின்சாரம் செலவாக்கும் ஏ/சி பொருத்தப்படுகிறது. ஹைதராபாத் மெக்கா மஸ்ஜித்தில் மின்விசிறி இயக்கம் நிறுத்தப்படவில்லை. தொழுகை முடிந்து 3/4 மணி நேரத்துக்குப் பிறகு குர்ஆன் படிப்போருக்கு வசதியாக சரிபாதி மின் விசிறிகள் இயங்கின.
அனைத்து மத மக்களும் மக்கா மஸ்ஜித் உள்ளே வந்து தொழுமிடம் தவிர்த்து மீதமுள்ள இடத்தை சுற்றிப்பார்த்துச் செல்கின்றனர். சென்னை திருவல்லிக்கேணி நவாப் மஸ்ஜித் போல் 10 மடங்கு விஸ்தீரணமுள்ளது மக்கா மஸ்ஜித். வெளிவராண்டாவில் ஆயிரக்கணக்கான புறாக்கள் ஆடுகளுக்கு பார்வையாளர்கள் வெளியில் வாங்கி வரும் உணவை வீசுகின்றனர்.
வெள்ளிக்கிழமை ஜும்ஆவுக்கு வரும் அனைவரும் போலிஸாரால் படம் பிடிக்கப்படுகின்றனர். மற்றநாட்களில் தானியங்கி வாயில் பரிசோதனை, சந்தேகமுற்றால் கைப்பைகள் சோதிக்கப்படுகின்றன. எந்த பேதமும் இல்லாமல் எல்லா மத மக்களுக்கு இணக்கமாக வாழும் நிலையில் மன அழுக்கேறிய யாரோ சிலர் செய்த தவறு சிறு சல சலப்பை உண்டாக்கியதன் விளைவு இறையில்லத்துக்கு வருவோரிடம் சோதனை. என்றும் போல் இயல்பாக 396 வருடங்களைக் கடந்தும் இறையாட்சியை மக்கள் மனத்தில் நாட்டிக் கொண்டிருக்கிறது மக்கா மஸ்ஜித்.
– ஜெ.ஜெ., மே 2011 முஸ்லிம் முரசு
source: http://jahangeer.in/