தித்திக்கும் தேன் மொழிகள் (1)
ஏழு கடல் நீரை ”மைய்”யாகப் பயன்படுத்தி, உலகிலுள்ள அத்தனை மரம் செடி கொடிகளையும் எழுதுகோலாக்கி, இந்த பூமியை விரிப்பாகி, ஏக இறைவனின் வார்த்தைகளாம் திருக்குர்ஆனுக்கு விளக்கம் எழுதப் புகுந்தாலும் அதற்கான முழுமையான விளக்கத்தை எவராலும் எழுதி முடிக்க முடியாது. அது போன்று இன்னொறு மடங்கு கடல் நீரைப் பயன்படுத்தினாலும் சரியே. அந்த அளவுக்கு அல்லாஹ்வின் வார்த்தைகள் பொருள் நிறைந்தது.
”(நபியே!) நீர் கூறுவீராக் ”என் இறைவனுடைய வார்த்தை(களை எழுதுவதற்)காக கடல் (முழுவதும்) மையாக ஆகுமானாலும், என் இறைவனுடைய வார்த்தைகள் (எழுதி) முடிப்பதற்குள் கடல் (நீர்) தீர்ந்து விடும்; அதைப் போல் (இன்னொரு கடலையே) நாம் உதவிக்குக் கொண்டு வந்தாலும் சரி!” (அல்குர்ஆன் ஸூரத்துல் கஹ்ஃபு(குகை): 18:109) என திருமறையே எடுத்தியம்புகின்றது.
ஆகவே (கீழே உள்ள) இறை வசனங்களை; கட்டுரைகள், செய்திகள், இன்னபிற ஆக்கங்களைப் படிப்பதுபோலல்லாமல் ஒவ்வொரு வசனத்தையும் படித்துவிட்டு சற்று நேரமாவது சிந்தியுங்கள்.
”… அவன் என்னை நோக்கி ஒரு சான் அளவு நெருங்கி வந்தால், நான் அவனை நோக்கி ஒரு முழம் அளவு நெருங்குவேன். அவன் என்னை நோக்கி ஒரு முழம் அளவிற்கு நெருங்கி வந்தால், நான் அவனை நோக்கி ஒரு பாகம் நெருங்கிச் செல்வேன். என்னை நோக்கி அவன் நடந்து வந்தால், அவனை நோக்கி நான் ஓடிச் செல்வேன். (நூல்: புகாரி, முஸ்லிம்) என்று அந்த ஏக இறைவன் நம் மீது அன்பு மழைப்பொழிந்து அழைப்பு விடுப்பதை எண்ணிப்பாருங்கள். நிதானமாக ஒவ்வொரு வசனத்தையும் சிந்தியுங்கள். அல்லாஹ் நல்லருள் புரிவானாக.
அல்லாஹ்வின் அருள்மொழிகள்
o அலிஃப், லாம், மீம். இது, (அல்லாஹ்வின்) திரு வேதமாகும்; இதில் எத்தகைய சந்தேகமும் இல்லை, பயபக்தியுடையோருக்கு (இது) நேர்வழிகாட்டியாகும். (பயபக்தியுடைய) அவர்கள், (புலன்களுக்கு எட்டா) மறைவானவற்றின் மீது நம்பிக்கை கொள்வார்கள்; தொழுகையையும் (உறுதியாக முறைப்படிக்) கடைப்பிடித்து ஒழுகுவார்கள்; இன்னும் நாம் அவர்களுக்கு அளித்தவற்றிலிருந்து (நல்வழியில்) செலவும் செய்வார்கள். (நபியே!) இன்னும் அவர்கள் உமக்கு அருளப்பெற்ற (வேதத்)தின் மீதும்; உமக்கு முன்னர் அருளப்பட்டவை மீதும் நம்பிக்கை கொள்வார்கள்; இன்னும் ஆகிரத்தை(மறுமையை) உறுதியாக நம்புவார்கள். இவர்கள் தாம் தங்கள் இறைவனின் நேர்வழியில் இருப்பவர்கள்; மேலும் இவர்களே வெற்றியாளர்கள். (அல்குர்ஆன் 2: 1-5)
o (ஆனால்) நம்பிக்கை கொண்டு நற்கருமங்கள் செய்வோருக்கு நன்மாராயங்கள் கூறுவீராக! சதா ஓடிக்கொண்டிருக்கும் ஆறுகளைக் கொண்ட சுவனச் சோலைகள் அவர்களுக்காக உண்டு, அவர்களுக்கு உண்ண அங்கிருந்து ஏதாவது கனி கொடுக்கப்படும்போதெல்லாம் ”இதுவே முன்னரும் நமக்கு (உலகில்) கொடுக்கப்பட்டிருக்கிறது”” என்று கூறுவார்கள்; ஆனால் (தோற்றத்தில்) இது போன்றதுதான் (அவர்களுக்கு உலகத்திற்) கொடுக்கப்பட்டிருந்தன, இன்னும் அவர்களுக்கு அங்கு தூய துணைவியரும் உண்டு, மேலும் அவர்கள் அங்கே நிரந்தரமாக வாழ்வார்கள். (அல்குர்ஆன் 2: 25)
o நிச்சயமாக அல்லாஹ் கொசுவையோ, அதிலும் (அற்பத்தில்) மேற்பட்டதையோ உதாரணம் கூறுவதில் வெட்கப்படமாட்டான். (இறை) நம்பிக்கைக் கொண்டவர்கள் நிச்சயமாக அ(வ்வுதாரணமான)து தங்கள் இறைவனிடமிருந்து வந்துள்ள உண்மையென்பதை அறிவார்கள்; ஆனால் (இறை நம்பிக்கையற்ற) காஃபிர்களோ, ”இவ்வித உதாரணத்தின் மூலம் இறைவன் என்ன நாடுகிறான்?”” என்று (ஏளனமாகக்) கூறுகிறார்கள். அவன் இதைக்கொண்டு பலரை வழிகேட்டில் விடுகிறான்; இன்னும் பலரை இதன் மூலம் நல்வழிப் படுத்துகிறான்; ஆனால் தீயவர்களைத் தவிர (வேறு யாரையும்) அவன் அதனால் வழிகேட்டில் ஆக்குவதில்லை. (அல்குர்ஆன் 2: 26)
o நீங்கள் அறிந்து கொண்டே உண்மையைப் பொய்யுடன் கலக்காதீர்கள்; உண்மையை மறைக்கவும் செய்யாதீர்கள். தொழுகையைக் கடைப் பிடியுங்கள்; ஜகாத்தையும் (ஒழுங்காகக்) கொடுத்து வாருங்கள்; ருகூஃ செய்வோரோடு சேர்ந்து நீங்களும் ருகூஃ செய்யுங்கள். நீங்கள் வேதத்தையும் ஓதிக் கொண்டே, (மற்ற) மனிதர்களை நன்மை செய்யுமாறு ஏவி, தங்களையே மறந்து விடுகிறீர்களா? நீங்கள் சிந்தித்துப் புரிந்து கொள்ள வேண்டாமா? (அல்குர்ஆன் 2: 42-44)
o எவன் அல்லாஹ்வுக்கும், அவனுடைய மலக்குகளுக்கும், அவனுடைய தூதர்களுக்கும், ஜிப்ரீலுக்கும், மீக்காயிலுக்கும் பகைவனாக இருக்கிறானோ, நிச்சயமாக (அவ்வாறு நிராகரிக்கும்) காஃபிர்களுக்கு அல்லாஹ் பகைவனாகவே இருக்கிறான். (நபியே!) நிச்சயமாக நாம் மிகத்தெளிவான வசனங்களை உம்மீது இறக்கிவைத்திருக்கிறோம்; பாவிகளைத் தவிர (வேறு எவரும்) அவற்றை நிராகரிக்க மாட்டார்கள். (அல்குர்ஆன் 2: 98-99)
o வேதத்தை உடையவர்களில் பெரும்பாலோர், உண்மை அவர்களுக்கு தெளிவாகத்தெரிந்த பின்னரும், தங்கள் மனதில் உள்ள பொறாமையினால் நீங்கள் நம்பிக்கை கொண்டபின் காஃபிர்களாக மாற வேண்டுமென விரும்புகிறார்கள். ஆனால் அல்லாஹ்வின் கட்டளை வரும்வரை அவர்களை மன்னித்து, அவர்கள் போக்கிலே விட்டுவிடுங்கள்;. நிச்சயமாக அல்லாஹ் அனைத்துப் பொருட்கள் மீதும் சக்தி உடையவனாக இருக்கிறான். (அல்குர்ஆன் 2: 109)
o ஒவ்வொரு (கூட்டத்த)வருக்கும், (தொழுகைக்கான) ஒரு திசையுண்டு. அவர்கள் அதன் பக்கம் திரும்புபவர்களாக உள்ளனர், நற்செயல்களின் பால் நீங்கள் முந்திக் கொள்ளுங்கள்; நீங்கள் எங்கு இருப்பினும் அல்லாஹ் உங்கள் யாவரையும் ஒன்று சேர்ப்பான்- நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருட்களின் மீதும் பேராற்றல் மிக்கோனாக இருக்கிறான். (அல்குர்ஆன் 2:148)
இன்ஷா அல்லாஹ், தொடரும்.