தொழுகையும் உடல் ஆரோக்கியமும் (1)
ஸய்யத் மன்ஸூர் அஹ்மத்
[ ஒவ்வொரு முஸ்லிமான ஆணும் பெண்ணும் மிக அவசியமாக தெரிந்து கொள்ள வேண்டிய தொடர் கட்டுரை இது! ”கல்வி கற்பது ஒவ்வொரு ஆணின் மீதும், பெண்ணின் மீதும் கட்டாயக்கடமை” யாக இருக்கும்போது இக்கட்டுரையைப் படித்து தெரிந்து கொள்வது கட்டாயம் என்பதில் வேறு கருத்துக்கு இடமில்லை என்றே சொல்லலாம். – adm.]
இஸ்லாத்தின் ஐம்பெருங் கடமைகளில் தொழுகையும் ஒன்று. தினமும் ஐந்துவேளை தொழ வேண்டியது ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கடமையாகும். இக்கடமையை பேணி, அல்லாஹு ஸுப்ஹானஹு வதஆலாவின் கட்டளைக்கு கீழ்பணிந்து தினம் ஐவேளை தொழுபவருக்கு, மறுமையில் ஏராளமான நற்பாக்கியங்கள் உண்டு. இம்மையிலும் ஏராளமான நற்பாக்கியங்கள் கிடைக்கும்.
இவ்விதம் கிடைக்கும் நற்பாக்கியங்கள் பற்றி திருக்குர்ஆனிலும், திருநபிமொழிகளிலும் கூறப்பட்டுள்ளன. எனவே, தொழுகை இம்மை மறுமை நற்பேறுகளை கொடுக்கக்கூடியதாகவே இருக்கிறது.
மேலும், தொழுகையை பேணுபவர்களுக்கு பல்வேறு நன்மைகளை ‘போனஸாகவும்’ வழங்குகிறது. அவற்றில் ஒன்றுதான், தொழுகை, தொழுகையை பேணுபவர்களுக்கு உடல் ஆரோக்கியத்தை கொடுக்கக்கூடியதாக இருப்பது!
மருத்துவரீதியாக தொழுகை மனிதர்களுக்கு எவ்விதம் உடல் ஆரோக்கியத்தை கொடுக்கிறது என்பதைத்தான் இக்கட்டுரையில் நாம் பார்க்கப்போகிறோம்!
நமது உடலில் மூளை, இதயம், சிறுநீரகம் போன்ற முக்கிய உறுப்புகள் யாவும் உள் உறுப்புகளாக அமைந்துள்ளன. கண், காது, மூக்கு, வாய், கைகள், கால்கள் போன்றவை புற உறுப்புகளாக உள்ளன. மேலும், உடல் முழுவதும் ஒரு போர்வை போல தோலால் மூடப்பட்டிருக்கிறது. மூளை, இதயம், சிறுநீரகம் போன்ற முக்கிய உறுப்புகள் உடலுக்குள் பாதுகாப்பாக அமைந்திருந்தாலும், உடலின் புற உறுப்புகளால் இவைகள் பாதிக்கப்படும் அபாயமும் இருக்கத்தான் செய்கிறது! உதாரணமாக காற்றில் கலந்துள்ள கிருமிகள் மூக்கின் வழியாக உடலுக்குள் புகுந்து பல்வேறு உள் உறுப்புகளை பாதிக்கின்றன. பல்வேறு நோய்களை ஏற்படுத்துகின்றன.
ஆகாரம் உண்ணும் போது பல்வேறு கிருமிகள் வாய் வழியே உடலுக்குள் புகுந்து உள் உறுப்புகளை பாதிப்படையச் செய்கின்றன. தோலில் ஏற்படும் காயங்கள் வழியாக பல்வேறு கிருமிகள் உடலுக்குள் புகுந்து பல்வேறு வியாதிகளை ஏற்படுத்துகின்றன. எனவே, முக்கிய உறுப்புகள் யாவும் உடலுக்குள் பாதுகாப்பாக இருக்கிறதே என்று யாரும் அலட்சியமாக இருந்திட முடியாது! இருக்கவும் கூடாது! மாறாக புற உறுப்புகளையும் நாம் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் நாம் ஆரோக்கியமாக வாழ முடியும்! உடலின் புற உறுப்புகளை நாம் பாதுகாக்க அவசியமானது உடல் சுத்தமாகும். உடல் சுத்தத்துடன் உடுத்தும் உடைகளும் சுத்தமாக இருக்க வேண்டும். வசிக்கும் இடமும் சுத்தமாக இருக்க வேண்டும். இப்படிப்பட்ட சுத்தம் தொழுகை மூலமாக நமக்குக் கிடைக்கிறது!
‘சுத்தம் சோறு போடும்’ என்று ஒரு பழமொழி இருக்கிறது. ஆனால் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களோ “பரிசுத்தம் இறைநம்பிக்கையில் பாதியாகும்” என்று சுத்தத்தை பிரதானப்படுத்திக் கூறியுள்ளார்கள்! காரணம், தொழுகைக்கு பரிசுத்தம் ஒரு நிபந்தனையாகும்! உடல் சுத்தமாக இருக்க வேண்டும். உடுத்திய உடைகள் சுத்தமாக இருக்க வேண்டும். தொழக்கூடிய இடமும் சுத்தமாக இருக்க வேண்டும். அப்பொழுதுதான் தொழுகை நிறைவேறும். சுத்தம் இல்லாமல் எந்த ஒரு தொழுகையும் நிறைவேறாது!
மனிதர்களுக்கு நிறத்தையும் அழகையும் கொடுப்பது சருமமே ஆகும். மேலும், இந்த சருமம் முக்கியமான மூன்று வேலைகளையும் செய்கிறது.
(1) மனித உடலை ஒரு கவசம் போல போர்த்தியபடி பாதுகாக்கிறது.
(2) உடலின் உஷ்ணத்தை சீராக வைத்துக் கொள்வதில் உதவுகிறது.
(3) வெளிச்சத்தை ஏற்றுக் கொண்டு அதை உடல் ஆரோக்கியத்திற்கு ஏற்ற வகையில் ஆக்குகிறது.
இத்துடன் உடல் ஸ்பரிசம், வலி, உஷ்ணம், குளிர்ச்சி போன்றவற்றையும் மனிதன் சருமம் மூலமாகவே அறிகிறான். இவற்றை மத்திய நரம்பு மண்டலத்திற்கு தெரிவிக்கும் உயிரணுக்கள் சருமம் முழுவதிலும் நிறைந்து இருக்கின்றன. இந்த சருமத்திலிருந்தே வியர்வை வெளியேறுகிறது. உடல் வறண்டு போகாமல் இருக்கவும், வெடிப்புக் காணாமல் இருக்கவும், சருமத்தை மிருதுவாகவும் பளபளப்பாக இருக்கச் செய்யவும் ஒருவிதமான எண்ணெய்க் கசிவும் வெளியேறுகிறது. இப்படிப்பட்ட சருமத்தில் அழுக்கு படியும் போது சருமத் துவாரங்கள் எல்லாம் அடைபட்டுப் போகின்றன. இதன்காரணமாக பலவிதமான தோல் வியாதிகள் ஏற்பட்டு உடல் நலத்தைக் கெடுக்கின்றன. மேலும், சில தோல் வியாதிகள் தொற்று வியாதிகளாகவும் இருக்கின்றன. இதனால் பொது சுகாதாரமும் பாதிப்படைகிறது! குளித்து சருமத்தை சுத்தமாக வைத்துக்கொண்டால் இத்தகைய தோல் வியாதிகளை தடுத்துவிடலாம். ஆரோக்கியமாகவும் வாழலாம்! பொதுச் சுகாதாரத்தையும் பேணலாம்!
கட்டாயக் குளிப்பு :
இஸ்லாம் மார்க்கம், குளித்து உடலை சுத்தமாக வைத்துக் கொள்வதை ஒரு கடமையாகவே ஆக்கியிருக்கிறது! தொழுகைக்காக குளித்து உடலை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என நிபந்தனை விதித்திருக்கிறது! எந்தெந்த காரியங்களினால் ஒருவருக்கு குளிப்பு கடமையாகிறது என்ற விவரத்தையும் கூறியிருக்கிறது! எவ்விதம் குளிப்பது என்பதையும் கற்றுக் கொடுத்திருக்கிறது! இனி, இதுகுறித்த விவரங்களை ஹதீஸ்கள் மூலமாக பார்க்கலாம்:
“ஒவ்வொரு ஏழு நாட்களில் ஒரு நாள் தன்னுடைய தலையையும், உடலையும் கழுவி குளிக்க வேண்டியது ஒவ்வொரு முஸ்லிமுக்கும் கடமை” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள், நூல்: புகாரீ)
“ஸ்கலிதமாகிற ஒவ்வொருவரின் மீதும் ஜும்ஆவின் நாளில் குளிப்பதும், இயலுமாயின் மிஸ்வாக்கு செய்தலும், வாசனையைப் பூசுவதும் அவசியம்” என அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் என்று சாட்சி கூறுகிறேன். (அறிவிப்பவர்: அபூஸயீதினில் குத்ரீ ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள், நூல்: புகாரீ)
இந்த ஹதீஸ்களில் குறைந்தபட்சம் வாரத்தில் ஒரு முறையாவது குளிக்க வேண்டியது முஸ்லிம்கள் பேரில் கடமை எனக் கூறப்பட்டுள்ளது. ஜும்ஆ தொழுகைக்காக ஜும்ஆ நாளில் குளிக்க வேண்டியது அவசியம் எனவும் கூறப்பட்டுள்ளது. ஜூம்ஆ நாளில் குளிப்பது சுன்னத்தான குளிப்பு என மார்க்க அறிஞர்கள் கூறியுள்ளனர். இதைப்போலவே இரு பெருநாள் தொழுகைக்காக குளிப்பதும் சுன்னத்தான நடைமுறையே ஆகும்.
தாம்பத்திய உறவு கொண்டு அசுத்தமாக இருக்கும் நிலைக்கு பெருந்துடக்கு (ஜனாபத்) என்பர். பெருந்துடக்கு ஏற்பட்ட நிலையில் தொழுவது விலக்கப்பட்டுள்ளது. மஸ்ஜிதில் பிரவேசிப்பதும் விலக்கப்பட்டுள்ளது. பெருந்துடக்கு ஏற்பட்டவர்கள் குளித்து சுத்தமான பிறகே தொழ முடியும்! மஸ்ஜிதிலும் பிரவேசிக்க முடியும்! எனவே, பெருந்துடக்கு ஏற்பட்டவர்கள் குளித்து சுத்தமாகவேண்டும்! இஸ்லாம் மார்க்கத்தில் பெருந்துடக்கு ஏற்பட்டவர்கள் மீது குளிப்பு கடமையாக்கப்பட்டுள்ளது. அல்லாஹூ ஸூப்ஹானஹூ வதஆலா திருக்குர்ஆனில், ஸூரத்துல் மாயிதா வசனம் – 6 ல், ‘நீங்கள் பெருந்துடக்குடையோராக இருந்தால் குளித்து(த் தேகம் முழுவதையும் சுத்தம் செய்து)க் கொள்ளுங்கள்’ என்று அருளியுள்ளான்.
மேலும், நபி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: ‘ஒருவர் தம் மனைவியின் (இரு கைகள், இரு கால்கள் ஆகிய) நான்கு கிளைகளுக்கிடையே அமர்ந்து, பின்னர் அவள்மீது தனது வலிமையைக் காட்டினாலே அவர் மீது குளியல் கடமையாகிவிடும்’. (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள். நூல்: புகாரீ, முஸ்லிம்). இப்படியாக பெருந்துடக்கு ஏற்பட்டவர்கள் கடமையை பேணியவர்களாக குளித்து சுத்தமாகிக் கொள்கிறார்கள்.
தூக்கஸ்கலிதம் ஏற்பட்டாலும் குளிப்பது கடமையாகும். ஏனெனில் இதுவும் பெருந்துடக்கே! குளிக்காமல் தொழக்கூடாது. மஸ்ஜிதில் பிரவேசிக்கவும் கூடாது! திருக்குர்ஆனை தொடக்கூடாது, ஓதவும்கூடாது! “ஒருவர் (தூக்கத்திலிருந்து விழித்து) ஈரத்தைக் கண்டு அவருக்கு ஸ்கலிதமானது நினைவுக்கு வரவில்லையானால் என்ன செய்வதென்று நபி பெருமானார் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களிடம் வினவப்பட்டதற்கு அவர்கள், “அவர் குளிக்கவும்” என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: அன்னை ஆயிஷா ரலியல்லாஹு தஆலா அன்ஹா அவர்கள், நூல்: அபூதாவூத், திர்மிதீ).
ஆண்களைப் போலவே பெண்களுக்கும் தூக்கஸ்கலிதம் ஏற்பட்டால் அவர்கள் பேரிலும் குளிப்பு கடமையாகும். ஒரு பெண்மணி நபி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம், “ஆண் தூக்கத்தில் காண்பதைப் பெண் கண்டால் (அவள் என்ன செய்ய வேண்டும்)?” என்று கேட்டார். அதற்கு அவர்கள், “ஆணுக்கு ஏற்படுவதைப் போன்றே பெண்ணுக்கும் (ஸ்கலிதம்) ஏற்பட்டால் அவர் குளிக்க வேண்டும்” என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள், நூல்: முஸ்லிம்). இதன்காரணமாக தூக்கஸ்கலிதம் ஏற்பட்டவர்களும் கடமையைப் பேணி குளித்து சுத்தமாகிறார்கள்.
பெண்களுக்கு ஹைளூ என்னும் மாதவிடாய் ஏற்பட்டு அது நின்ற பிறகு குளிப்பது கடமையாகும். நிஃபாஸ் என்னும் பிரசவத் தீட்டு ஏற்பட்டு அது நின்றுபோனதும் குளிப்பதும் கடமையாகும். ஹைளூ, நிஃபாஸூடைய காலத்தில் பெண்களுக்கு தொழுகை மன்னிக்கப்பட்டுப் போகிறது! ஆனால், ஹைளூ, நிஃபாஸ் நின்றுபோனதும் குளித்து சுத்தமாகி தொழவேண்டியது கடமையாகும்!
“மதீனாவின் ஆதரவாளர்களைச் சேர்ந்த ஒரு பெண் நபி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் மாதவிடாய் குளிப்பைப் பற்றி வினவினார். அதற்கு நபி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், எவ்விதம் குளிக்க வேண்டுமென்று (அவருக்குக்) கட்டளையிட்டு, ‘நீர் கஸ்தூரி கலந்த சிறிது பஞ்சைக் கொண்டோ அல்லது கந்தையைக் கொண்டோ அதனைத் துப்புரவு செய்து கொள்ளும்’ என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: அன்னை ஆயிஷா ரலியல்லாஹு தஆலா அன்ஹா அவர்கள், நூல்: புகாரீ, முஸ்லிம், அபூதாவூத், நஸாயீ).
இப்படியாக பெருந்துடக்குடையவர்கள் கடமையை பேணியவர்களாக குளித்து சுத்தமாக இருக்கிறார்கள்!
முஸ்தஹப்பான குளிப்பு :
மேலும், காஃபிர் இஸ்லாத்தை தழுவியவுடன் குளிப்பது முஸ்தஹப்பு ஆகும்.
மய்யித்தை குளிப்பாட்டிய பிறகு குளிப்பது முஸ்தஹப்பு ஆகும்.
பராஅத் இரவில் குளிப்பது முஸ்தஹப்பு ஆகும்.
லைலத்துல் கத்ரு தொழுகைக்காக குளிப்பது முஸ்தஹப்பு ஆகும்.
சூரிய கிரகண தொழுகைக்காக குளிப்பது முஸ்தஹப்பு ஆகும்.
பகலில் கடும் இருள் சூழ்ந்துவிட்டால் அதை நீக்கத் தேடும் தொழுகைக்காக குளிப்பது முஸ்தஹப்பு ஆகும்.
மழை பொழியத் தேடும் தொழுகைக்காக குளிப்பது முஸ்தஹப்பு ஆகும்.
திடுக்கம் நீங்கத் தொழும் தொழுகைக்காக குளிப்பது முஸ்தஹப்பு ஆகும்.
புயல் காற்று விலகிட தொழும் தொழுகைக்காக குளிப்பது முஸ்தஹப்பு ஆகும்.
இப்படியாக பல்வேறு காரணங்களுக்காக குளிப்பும், அதன் மூலமாக உடல் சுத்தமும் பேணப்படுகிறது!
குளிக்கும் முறை :
நபி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் குளிக்கும் முறையையும் நமக்குக் கற்றுக் கொடுத்திருக்கிறார்கள். நிர்வாணமாக குளிக்கக்கூடாது. ஒவ்வொரு முடியின் அடிவரை கழுவிக் குளிக்கவேண்டும். தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். இப்படி குளிப்பு பற்றிய பல்வேறு விஷயங்களை நமக்குக் கற்றுக் கொடுத்திருக்கிறார்கள். இவை குறித்த சில ஹதீஸ்கள்:
“ஒருவர் நிர்வாணமாகக் குளிப்பதைக் கண்ட நபி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், மிம்பர் (மேடை) மீது ஏறி (நின்று) அல்லாஹ்வைப் புகழ்ந்து அவனைத் துதி செய்து பின்னர், “நிச்சயமாக அல்லாஹ் நாணமுறுபவனும் திரை மறைவிலிருப்பவனுமாவான். (அன்றி) அவன் நாணமுறுவதையும் திரை மறைவையும் நேசிப்பவனாக இருக்கிறான். எனவே உங்களில் எவரேனும் குளிக்க நாடினால் திரை மறைவில் (கீழாடை அணிந்தவண்ணம்) குளிக்கவும்” என்று கூறினார்கள்.(அறிவிப்பவர்: யஃலா ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள், நூல்: அபூதாவூத், நஸாயீ).
“ஒவ்வொரு முடியின் அடியிலும் குளிப்பு விதியாகி விடுகிறது. எனவே முடியின் அடிவரைக் கழுவுங்கள்” என்று நபி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள், நூல்: அபூதாவூத், திர்மிதீ).
“‘முழுக்குக்கான குளிப்பில் ஒரு முடி அளவுள்ள இடத்தைக் கழுவாமல் எவர் விட்டு விடுகிறாரோ அவருக்கு நரகத்தில் இன்ன இன்ன விதமாக வேதனை செய்யப்படும்’ என்று நபி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அலீ கர்ரமல்லாஹூ வஜ்ஹஹூ அவர்கள் தெரிவித்து, இதற்காகத்தான் தாம் தம் தலைமுடியை எடுத்து விட்டதாக மூன்று முறை கூறினார்கள்”. (அறிவிப்பவர்களும் அலீ கர்ரமல்லாஹு வஜ்ஹஹூ அவர்களே, நூல்: அபூதாவூத்).
நபி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பெருந்துடக்குக்காக குளித்தால் தங்களது இரு கரங்களையும் (மணிக்கட்டுவரை முதலில்) கழுவுவார்கள். பின்னர் தொழுகைக்கு உளூ செய்வது போல உளூ செய்வார்கள். பின்னர் குளிப்பார்கள். பின்னர் தங்கள் இரு கைகளால் தங்கள் ரோமங்களைக் கோதிவிடுவார்கள். அதன் ரோமக்கால்கள் நனைந்துவிட்டன என்பதை உணர்ந்தால், அதன் மீது மூன்று முறை தண்ணீர் வார்த்துக் கொள்வார்கள். பின்னர் தங்கள் உடல் முழுவதிலும் (நனைத்துக்) குளிப்பார்கள். (அறிவிப்பவர்: அன்னை ஆயிஷா ரலியல்லாஹு தஆலா அன்ஹா அவர்கள், நூல்: புகாரீ).
“தொழுகைக்கு உளூ செய்வது போல நபி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கால் நீங்கலாக உளூ செய்தார்கள். தங்கள் வெட்கஸ்தலத்தையும், அசுத்தம் பட்ட இடத்தையும் கழுவினார்கள். பின்னர் தங்கள் மீது தண்ணீர் வார்த்துக் கொண்டார்கள். பின்னர் தங்கள் கால்களை (கொஞ்சம்) நகர்த்தி அவைகளைக் கழுவினார்கள்”. (அறிவிப்பவர்: மைமூனா ரலியல்லாஹு தஆலா அன்ஹா அவர்கள், நூல்: புகாரீ).
இப்படியாக நபி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் குளிப்பு பற்றிய விஷயங்களைக் கற்றுக் கொடுத்திருக்கிறார்கள். அன்னாரின் நடைமுறைகளை பேணியவர்களாக முஸ்லிம்கள் அனைவரும் குளித்து சுத்தத்தைப் பேணுகிறார்கள்!
மலம், சிறுநீர் சுத்தம் செய்தல்: மலம், சிறுநீர் ஆகிய இரண்டும் அசுத்தங்களாகும்! உடலில் அல்லது உடையில் இந்த அசுத்தங்கள் இருக்கும் நிலையில் தொழமுடியாது. எனவே, இவ்விரண்டையும் துப்புரவு செய்வது கட்டாயமாகும்! நபி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மலம், சிறுநீர் கழிக்கச் சென்றால், தண்ணீரைக் கொண்டு சுத்தம் செய்வார்கள்.
“நபி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மல உபாதை கழிக்கச் சென்றால், நானும் என்னுடன் ஒரு பையனும் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் கொண்டு செல்வோம். தண்ணீரால் அவர்கள் சுத்தம் செய்வார்கள்”. (அறிவிப்பவர்: அனஸ் ரலியல்லாஹு தஆலா அன்ஹு, அவர்கள், நூல்: புகாரீ).
சிறுநீர் கழித்து சுத்தம் செய்யாதவர்களுக்கு கப்ருக்குள் (சவக்குழிக்குள்) வேதனை செய்யப்படுவார்கள். ‘அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இரு அடக்கத் தலங்களைத் கடந்து சென்றார்கள். அப்போது, “அறிந்துகொள்ளுங்கள்! (இதோ) இவர்கள் இருவரும் (கப்ருக்குள்) வேதனை செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஒரு பெரிய (பாவச்) செயலுக்காக இவர்கள் வேதனை செய்யப்படவில்லை. இவர்களில் ஒருவரோ (மக்களிடையே) கோள் சொல்லித் திரிந்துக் கொண்டிருந்தார். மற்றொருவரோ சிறுநீர கழித்துவிட்டு சுத்தம் செய்யமாட்டார்” என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் ரலியல்லாஹுதஆலா அன்ஹு, அவர்கள், நூல்: முஸ்லிம்).
மலம், சிறுநீர கழித்த பிறகு வலக் கரத்தால் சுத்தம் செய்யக் கூடாது! “உங்களில் ஒருவர் சிறுநீர் கழிக்கும் போது அவர் தமது பிறவி உறுப்பை வலது கையினால் பிடிக்க வேண்டாம். மலம் சிறுநீர் கழித்த பிறகு வலது கையினால் சுத்தம் செய்ய வேண்டாம்” என்று நபி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூகத்தாதா ரலியல்லாஹு தஆலா அன்ஹு, அவர்கள், நூல்: புகாரீ, முஸ்லிம்).
மலம் கழுவி சுத்தம் செய்த பிறகு இடது கையையும் தேய்த்து கழுவவேண்டும். “(ஒரு சமயம்) நான் நபி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் இருந்தேன். அப்பொழுது அவர்கள் மல உபாதை கழிக்கச் சென்றார்கள். மலம் கழித்த பிறகு, “ஜரீரே! தண்ணீர் கொண்டு வாரும்” என்று கூறினார்கள். நான் தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தேன். அதைக் கொண்டு அவர்கள் சுத்தம் செய்துகொண்டனர். பின்னர் தங்களின் இடது கையைத் தரையில் தேய்த்துக் கழுவினார்கள்”. (அறிவிப்பவர்: ஜரீர் ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள், நூல்: நஸாயீ). இப்படியாக மலம், சிறுநீர் கழிப்பதிலும் சுத்தம் பேணப்படுகிறது!
இன்ஷா அல்லாஹ், கட்டுரை தொடரும்…
source: http://tnrzahir.blogspot.com