தங்கம்: அழகா, ஆபாசமா, மகிழ்ச்சியா, வதையா?
கோவை டவுண்ஹால் வழியாக நடந்து கொண்டிருந்தேன். பள்ளி நாட்களின் போது இங்கே ஜோலித்துக் கொண்டிருந்த தங்க நகைப் பட்டறைகளையோ, அதனால் சற்றே வளமாக வாழ்ந்து வந்த தங்கநகை ஆசாரி இளைஞர்களையோ இப்போது காணவில்லை. முழு இடமும் தன் உருவத்தை தலைகீழாக மாற்றியிருந்தது. தங்கத்தை நம்பி வாழ்ந்த அந்த மக்கள் எங்கே போனார்கள்? என்ன ஆனார்கள்?
பாரம்பரிய தங்கநகைத் தொழிலின் அழிவு!
கோவையிலும் சரி, பொதுவாக நமது நாட்டிலும் சரி, தங்க நகை உருவாக்கம் என்பது முழுவதுமாக ஒரு நிலபிரபுத்துவ பாணியிலான உற்பத்தியாகவே இருந்துள்ளது. தங்க ஆசாரிகள், தமது வீடுகளிலேயே பட்டறைகளை அமைத்திருப்பர்; அவர்களது மொத்த குடும்பமும் சேர்ந்து நகை உருவாக்கத்தில் ஈடுபடும். நகை தேவைப்படுவோர் தங்கத்தை (நகையாகவோ, நாணயமாகவோ) ஆசாரியிடம் கொடுத்தால் அவர் நகையாக வார்த்துத் தருவார்.
ஒரு நகையின் டிசைன்/ மாடல் போன்றவற்றைத் தீர்மானிப்பதிலிருந்து அதில் கல்பதிப்பது, அந்த நகையில் இருக்கும் பால்ஸ், கம்பி போன்றவைகளை டிசைனுக்குத் தகுந்தவாறு நுணுக்கமாக பொருத்துவது, மெருகூட்டுவது என்று அதன் உருவாக்கத்தின் சகல அம்சத்திலும் அந்த ஆசாரியே பங்குபெற்றிருப்பார்.
இவ்வகையான உற்பத்தி முறையில் ஒரு நகையை உருவாக்க அதன் வேலைப்பாடுகளின் நுணுக்கத்தைப் பொருத்து ஒருவாரமோ பத்துநாளோ ஆகலாம்.
இந்தப் பழையகால உற்பத்திமுறையில் தங்க நகை வடிவமைப்புத் தொழில் பல நூற்றாண்டுகளாக அப்படியே தேங்கி நின்றது. ஏனென்றால் நுகர்வு குறைவு. தேவைக்கதிகமாக வாங்கிப் பூட்டி வைப்பது என்பது போன்ற வழக்கங்கள் மிக மிக சில மேட்டுக்குடி குடும்பங்களிலேயே இருந்தது. மேலும் உற்பத்தி அதிகமாகி அதை சந்தையில் தள்ளியாக வேண்டும் எனும் கட்டாயமும் எழவில்லை.
புதிய தாராளவாதக் கொள்கையின் அறிமுகம் இந்த நிலையில் பெரும் மாற்றத்தை கொண்டுவந்தது. நடுத்தர வர்க்கத்தினருக்கும் புதிதாக உருவாகி வந்த சேவைத்துறை ஊழியர்களுக்கும் ஐந்திலக்க சம்பளம் என்பது சாதாரணமாகிவிட்டபடியால்ல், அத்துறைகளின் மாப்பிள்ளைமார்களுக்கும் பெற்றோர்களுக்கும் மணப்பெண் வீட்டை ரத்தம் வர கறப்பதற்கான வாய்ப்பும் கூடியது. தங்கம் ஒரு சேமிப்பு என்ற நடுத்தர வர்க்க மனோபாவத்தைக் கடந்து, அது இப்போது அந்தஸ்தின் அடையாளமாகி விட்டது.
நகை நுகர்வின் அதிகரிப்பு, அதன் உருவாக்க முறையில் மாற்றத்தை தோற்றுவித்தது. இதன் விளைவாக அத்தொழிலில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களிடையேயும் தொண்ணூறுகளின் இறுதியிலிருந்து பெரும் மாற்றங்கள் உருவாகத் துவங்கின.
நகைத் தொழில் அதிகமாக நடந்து வந்த கோவையில் தொண்ணூறுகளின் இறுதியில் நகைப் பட்டரைத் தொழிலாளிகள் பலர் தற்கொலை செய்து கொண்டார்கள். முன்னொரு காலத்தில் ‘ஜே ஜே’ என்று நகைப் பட்டறைகள் நடந்து வந்த சலீவன் வீதி, குரும்பர் வீதி போன்ற பகுதிகள் எழவு விழுந்த வீடுகள் போன்று ஆனது. 98ல் இருந்து இரண்டாயிரத்திரண்டாம் ஆண்டுக்குள், நான்கே ஆண்டுகளில் சுமார் 300 நகைத் தொழிலாளிகளுக்கும் மேற்பட்டோர், நகையைக் கழுவப் பயன்படும் சயனைடைத் தின்று தற்கொலை செய்துகொண்டார்கள்.
முப்பதாயிரம் பேர்களுக்கு மேல் ஈடுபட்டிருந்த நகைத் தொழிலில் இருந்து இருபதாயிரம் பேர் காணாமல் போயினர். 2002 வாக்கில் வெறும் பத்தாயிரம் பேர் தான் ஈடுபட்டிருந்தனர். இந்த வீழ்ச்சி 98க்குப் பின்னர்தான் உணரப்பட்டது என்ற போதிலும், வீழ்ச்சிக்கான விதை அதற்கும் சில ஆண்டுகளுக்கு முன்பாகவே தூவப்பட்டுவிட்டது.
தாராளமயமும், நுகர்வுக் கலாச்சாரமும் ஊட்டிய தங்க போதை!
1991இல் என்.ஆர்.ஐ இந்தியர்கள் இந்தியாவுக்குள் தங்கம் கொண்டு வருவதில் இருந்த கட்டுப்பாடு தளர்த்தப்பட்டது. மேலும் தங்கம் இறக்குமதி செய்வதில் இருந்த மற்ற கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்ன. 1990ல் இருந்து 1998 காலகட்டம் வரை தங்கத்தின் தேவை ஆண்டுக்கு 15 சதவீதமாக வளர்ச்சியுற்றது. இது அதே காலகட்டத்தில் வளர்ந்த மொத்த உள்நாட்டு உற்பத்தியை விட, எண்ணை, சர்க்கரை உள்ளிட்ட மற்ற பொருட்களுக்கான தேவை அதிகரித்த விகிதத்தை விட, உலகளவில் தங்கத்தின் தேவை அதிகரித்த விகிதம் மிகவும் அதிகமாகும்.
இப்படி வெள்ளமென உள்நுழைந்த தங்கம், நகை உருவாக்கத் தொழிலில் மாற்றத்தைக் கோருகிறது. அதே காலகட்டத்தில் சிறிய அளவிலான நகைக் கடைகளுக்குப் போட்டியாக வட்டார அளவிலான வீச்சு கொண்ட நகை மாளிகைகள் உருவாகத் தொடங்கின. வாடிக்கையாளர்களில் ஒரு பெரும் பகுதியினர் இனிமேலும் ஆசாரிகளிடம் சென்று நாட்கணக்கில் காத்திருந்து அவர்கள் செய்து தரும் டிசைனை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்கிற நிலை மாறத் துவங்கியது.
கடைக்குச் சென்றோமா பத்துக்கு இருபது டிசைன்களைப் பார்த்தோமா அதில் ஒன்றைப் பொறுக்கியெடுத்தோமா என்று வேலை சுளுவாகியது. இத்தகைய மாளிகைகள், தமது ஷோரூம்களில் வைத்து விற்கும் நகைகளை ஏதாவது ஒரு பட்டறையில் தங்கப் பாளங்களைக் கொடுத்து முழு நகையாக செய்து வாங்கி வந்தன.
இது நகைப் பட்டறைகளுக்கு விழுந்த முதல் அடி. தமது வாடிக்கையாளர்களில் பெரும் பகுதியினரை கவர்ச்சிகரமான ஷோரூம்கள் கொண்ட நகை மாளிகளிடம் அவர்கள் இழந்தனர்.
நகை மாளிகைகளுக்கு இவர்கள் செய்து கொடுத்தாலும், லாபம் முன்பை விடக் குறைவு தான். ஆனாலும் ஓரளவுக்கு வேலையிழப்பை சமாளித்து வந்தவர்களுக்கு இன்னுமொரு இடி சங்கிலித்தொடர் நகை மாளிகைகளின் வரவால் ஏற்பட்டது. தனியார்மய, தாராளமயக் கொள்கைகளால் கொழுத்து விட்ட மேட்டுக்குடி வர்க்கம்,
வாழ்க்கைத்தரமும் சேமிப்பும் மேம்பட்ட நடுத்தர வர்க்கம், இவர்கள் அனைவரிடமும் நிலவிய பிற்போக்குத்தனமான நகை மோகமும், நகை முதலாளிகளுக்கு பொன்னானதொரு வாய்ப்பை, மெய்யாகவே தங்கத் தாம்பாளத்தில் வைத்து வழங்கியது.
நகைக்கடையை சுமக்கும் மணமகள்கள்: செல்வத்தின் செருக்கு!நுகர்வு மோகத்துக்கான வடிகாலாகவும், அந்தஸ்தைக் காட்டிப் பீற்றிக் கொள்ளத் தோதான பகட்டாகவும், அதே நேரத்தில் எச்சரிக்கை உணர்வு மிக்க இந்திய நடுத்தர வர்க்கத்தின் சேமிப்புப் பெட்டகமாகவும், லஞ்ச ஊழல் கருப்புப் பணத்தைப் பதுக்குவதற்கும் வரி ஏய்ப்பு செய்வதற்குமான கையடக்கமான முதலீடாகவும் இருந்த தங்கம், தனிச்சிறப்பானதொரு இடத்தை சந்தையில் பிடித்தது.
ஜாய் ஆலூக்காஸ், கல்யாண் ஜுவல்லரி, ஸ்ரீ குமரன் நகை மாளிகை, ஜோ ஆலுக்காஸ் சன்ஸ், மலபார் கோல்ட், ஆலாபட் ஜுவல்லரி, தனிஷ்க் என்று புற்றீசல் போலக் கிளம்பின சங்கிலித் தொடர் நகைக்கடைகள். இவர்களில் பலர் பாரம்பரிய நகை வியாபாரிகள் அல்ல என்பதுடன்,கார்ப்பரேட் நிறுவனங்களும், கறுப்புப் பண மாஃபியாக்களும்தான் இன்று இத்தொழிலில் கோலோச்சுகின்றனர்.
இவர்களுடைய விற்பனைக்கு ஏற்கெனவே வாடிக்கையாளர்களிடம் நிலவி வந்த தங்க மோகம் போதுமானதாக இல்லை. வாழ்த்து அட்டை வியாபாரிகளும் பரிசுப்பொருள் வியாபாரிகளும், “தந்தையர் தினம், தனயர் தினம், தமக்கையர் தினம், காதலர் தினம், காதல் கைகூடாதவர்கள் தினம்” எனப் பலவகையான தினங்களை உற்பத்தி செய்வதைப் போல நகை வியாபாரிகள் புதிய சம்பிரதாயங்களை உருவாக்கத் தொடங்கினர். ‘உயர்’சாதிகளிலிருந்து மட்டுமின்றி, பிற்படுத்தப்பட்ட சாதிகளிலிருந்தும் நடுத்தர வர்க்கம் பரவலாகத் தோன்றி விட்டதால், இன்ன ஜாதிக்கு இன்ன தாலி என்றும், இன்ன ராசிக்கு இன்ன ராசிக்கல் என்றும் பரிந்துரைக்க ஜோதிட ‘வல்லுநர்களை’ பெரும் நகைக் கடைகள் அமர்த்திக் கொண்டனர்.
ஒரு பத்துப் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் நாம் கேள்வியே பட்டிராத அக்ஷய த்ரிதியை என்ற ஒரு பண்டிகையை பரணிலிருந்து தூசு தட்டி எடுத்தனர். அச்சு ஊடகங்கள், காட்சி ஊடகங்கள் என்று மாறி மாறி மக்கள் மூளைச்சலவை செய்யப்பட்டனர். அட்சய திரிதியை நாளில் நகை வாங்கினால் ‘நல்லது’ என்றும் ‘ஐசுவரியம்’ பொங்கும் என்றும் மக்கள் நம்பவைக்கப்பட்டனர்.
மேல் வர்க்கத்தாரின் மீது பிரமிப்பு கொள்ளும் அடித்தட்டு வர்க்கத்து மக்களும் கூட அந்த நாளில் “ஒரு குந்துமணி அளவுக்காவது வாங்கித்தான் வைப்போமே” என்று சிந்திக்கும் அளவுக்கு அக்ஷய த்ரிதியை ஒரு சடங்காகவே மாறிப்போனது. நல்லதோ கெட்டதோ ஒரு தேவைக்குப் பயன்படும் என்ற நியாயத்தைக் கூறிக்கொண்டு, கடன் வாங்கியாவது அந்த நாளில் தங்கத்தை வாங்குவது ஒரு பழக்கமானது. போதும் போதாதற்கு மக்களிடையே நிலவும் சினிமாக் கவர்ச்சியும் துணைக்கழைத்துக் கொள்ளப்பட்டது. துணிக்கடைகளைப் போலவே நகைக்கடைகளுக்கும் பிரபல நடிகைகள் நடிகர்கள் பிராண்டு அம்பாசிடர்களாகினர்.
கூலிகளாய் ஆக்கப்பட்ட தங்கநகை பட்டறை முதலாளிகள்!
இந்த நூற்றாண்டின் துவக்க ஆண்டுகளில் பரவலாக சிறிய யூனிட்டுகளில் நவீன இயந்திரங்கள் இடம்பெறத் துவங்கின. இதற்கிடையில் பாரம்பரிய நகைத் தொழிலாளர்கள் புதிய தொழில்நுட்பங்களை அறிந்து வேலைச் சந்தையின் போட்டியில் தங்களை தக்கவைத்துக் கொள்ள எடுத்துக் கொண்ட முயற்சிகளை சங்கிலித் தொடர் நகை மாளிகைகள் தொடர்ந்து திட்டமிட்ட ரீதியில் ஒழித்துக் கட்டின.
ஓரளவுக்கு நவீன நகை மாளிகைகளின் தாக்குதலை சமாளித்து குற்றுயிரும் குலை உயிருமாக மிஞ்சிய நகைப்பட்டறைகள் பெரும் நகைக்கடைகளுக்கு குறைந்த கூலிக்கு வேலை செய்து தரும் யூனிட்டுகளாக மாறிப்போயின. மொத்தமாக அவர்களின் வாடிக்கையாளர் அடித்தளமே ஆட்டம் கண்டு நொறுங்கிப் போனது.
சிறுபட்டரைகளிடம் மிச்சம் மீதியிருந்த சுயேச்சைத் தன்மையையும் முற்றாக ஒழிந்து முழுக்க முழுக்க பெரிய நகைமாளிகைகளை அண்டியிருக்கும் அத்துக் கூலிகளாக முழுமையாக மாறிப்போயினர். சிறு பட்டறை முதலாளிகள் எல்லாம் வேலை எடுத்துச் செய்யும் ஏஜென்டுகளாக மாற்றம் பெற்றனர்.
இந்தக் கால கட்டத்திற்குப் பின் ஒரே நகையை ஒரே பட்டரையில் தயாரிக்கும் பாணிக்கு முற்றுப்புள்ளி விழுந்தது. ஒரு நகையில் பல்வேறு அம்சங்களை வெவ்வேறு பட்டறைகளில் தயாரித்து பின்னர் இன்னொரு பட்டறையில் இணைத்துக் கொள்வது என்ற பாணி உருவெடுத்தது. நாடெங்கும் பரவிக்கிடந்த தங்கநகைத் தொழிலாளர்கள் தமது சொந்த ஊர்களில் இருந்து ஒருசில நகரங்களில் வந்து குவிந்தனர். புகழ் பெற்ற ஜெய்பூர் மாடல், பெங்காலி மாடல், கேரள காசு மாலை, மாங்கா மாலை நகைகள் கோவையில் இருந்து தயாராகிறது என்ற செய்தியின் பின்னே உள்ள நிதர்சனம் என்னவென்றால், ஆயிரக்கணக்கான கேரள நகைத் தொழிலாளர்களும், பெங்காலித் தொழிலாளர்களும் கோவையில் வந்து குவிந்துள்ளனர் என்பதாகும்.
சுரண்டப்படும் பல்தேசிய தொழிலாளிகள்!
இப்படி பல்வேறு மாநிலங்களில் இருந்து இறக்குமதி செய்ப்பட்ட தொழிலாளர்களுக்கு சம்பளம் என்பது நிரந்தரமானதல்ல மூன்றிலிருந்து நாலாயிரத்துக்குள் சம்பளம் இருக்கும் மற்றபடி இன்செண்டிவ் அடிப்படையில் தான் வேலை செய்கிறார்கள்.
அதாவது இத்தனை கிராம் ஆபரண உற்பத்திக்கு இத்தனை இன்செண்டிவ் எனும் அடிப்படையில். கோவை நகரம் என்பது சென்னையை ஒப்பிடும் போது அதிகம் செலவு பிடிக்கும் நகரம். எத்தனை சிக்கனமாக வாழ்க்கை நடத்தினாலும் கூட நாலாயிரம் என்பது மாதத்தின் இருபதாவது நாளிலேயே தீர்ந்து போகும். எனவே இன்செண்டிவ் தான் தாக்குப்பிடிப்பதற்கும் ஊருக்கு ஏதோ கொஞ்சம் பணம் அனுப்புவதற்கும் இருக்கும் ஒரே வழி.
இந்தப் பட்டறைகளில் நவீன முதலாளித்துவ பாணியிலான உற்பத்தி முறை பழைய நிலபிரபுத்துவ பாணி உறவுகளோடு கைகோர்த்துக் கொண்டு, தொழிலாளிகளை கசக்கிப் பிழிகிறது. அதாவது, 8 மணி நேரம் அல்லது குறிப்பிட்ட நேர அளவிலான வேலை என்று கிடையாது; நிலையான சம்பளமும் கிடையாது. மாறாக அட்சய திரிதியை, தீபாவளி, முகூர்த்த தினங்கள் போன்று எப்போது பரபரப்பான விற்பனை நடைபெறும் நாள் வருகிறதோ அப்போது பெரு நகைக்கடைகள் தங்கக் கட்டிகளை இது போன்ற பட்டறைகளுக்குக் கொடுத்து நகையாக வாங்குவார்கள்.
அந்த சமயத்தில் மட்டும் ஊழியர்களை கசக்கிப் பிழிவது; அதுவும் இரண்டு அல்லது மூன்று நாட்கள் தூங்காமலும், இடையில் பட்டறையை விட்டு வெளியேற தடை விதிப்பதும் (தங்கத் துணுக்குகளை நக இடுக்குகளில் மறைத்து எடுத்துச் சென்று விடுவார்கள் என்ற சந்தேகத்தில்) கழிவறை வரையில் கண்காணிப்பதும் என்று குறைந்த பட்ச மனிதாபிமானம் கூட காட்டுவதில்லை. தொழிலாளிகளும் அந்த நாட்களில் சம்பாதித்தால் தான் உண்டு. சீசன் அல்லாத நாட்களில் சம்பளம் கிடையாது.
இப்படிப்பட்ட பட்டறைகள் பொதுவில் காற்றோட்டம் இல்லாமலும் அடைசலாகவும் தான் இருக்கும். தப்பித்தவறிக்கூட தங்கத் துகள்கள் பட்டறை முதலாளிகளுக்குத் தெரியாமல் வெளியேறுவதைத் தடுப்பதற்கே இந்த ஏற்பாடு. தொடர்ந்து உட்கார்ந்தே வேலை செய்வதால் மூலவியாதி, முதுகுவலி, தங்கம் உருவாக்குவதில் பயன்படுத்தப்படும் கெமிக்கல்களின் விளைவாய் ஆஸ்துமா போன்ற உபாதைகளோடு தான் பெரும்பாலான நகைத் தொழிலாளிகள் தமது வாழ்வை கழிக்க வேண்டியுள்ளது. சிறிய பட்டறைகளில் தொழிலாளர்களைப் பணிக்கு அமர்த்தியிருந்தாலும் அவர்களோடு சேர்ந்து சிறு முதலாளிகளும் வேலை செய்கிறார்கள்.
முதலாளித்துவ பாணி இயந்திர உற்பத்தியாய் இருப்பதால் பால்ஸ் ஒரு பட்டறை, மோதிரம் ஒரு பட்டறை, கம்மலுக்கு ஒரு பட்டறை, கல் பதிக்க, கம்பி நீட்ட என்று உதிரி உதிரியாகத் தயாராகி, கடைசியில் ஒரு பட்டறையில் இணைக்கப்படுகிறது. இதன் உடன் விளைவாக ஒரு நகைத் தொழிலாளிக்கு முழுமையான ஒரு ஆபரணத்தை உருவாக்கும் நுட்பம் தெரிந்திருக்க வேண்டிய அவசியம் இல்லாது போகிறது.
டிசைன்களை உருவாக்க பட்டைய படிப்பு, கம்ப்யூட்டர்
வடிவமைப்புக்கான படிப்பு என்று ஏற்பட்டதால் பாரம்பரிய தொழில் நுட்ப அறிவு முழுமையாக நிராகரிக்கப்பட்டு கிட்டத்தட்ட அழியும் தருவாயில் உள்ளது. முழுமையான ஆபரண உருவாக்கத் திறனும் நுட்பமும் கொண்ட தொழிலாளி வெறும் கம்பி இழுக்கும் வேலையோ கல்பதிக்கும் வேலையோ செய்யும்படிக்கு நிர்பந்திக்கப்படுகிறார். வேறு எந்த வழியும் இல்லாத நிலையில் குறைகூலிக்கு இது போன்ற பட்டறையில் தொழிலாளியாய்வேலைக்குச் செல்கிறார்.
சீசன் நாட்களில் சம்பாதித்தால் தான் உண்டு எனும் நெருக்கடி காரணமாக, நாட்கணக்கில் தூக்கமில்லாமலும் ஓய்வின்றியும் இவர்கள் உழைக்க வேண்டியிருக்கிறது. தூக்கம் வராமல் இருக்க கனமான உணவைத் தவிர்த்தும், பிஸ்கட்டுகள் சாக்லேட்டுகள் போன்ற நொறுக்குத் தீனிகளைத் தின்று இரண்டு மூன்று நாட்கள் தாக்குப் பிடித்தும் வேலை செய்கிறார்கள் தொழிலாளர்கள். தொடர்ந்து தூங்காவிட்டால் உடலில் உஷ்ணம் அதிகரிக்கும், ரத்தத்தில் யூரியாவின் அளவு அதிகரிக்கும். தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும். ஆனால் தண்ணீர் குடித்தாலோ அடிக்கடி சிறுநீர் கழிக்க எழுந்து போக வேண்டியிருக்கும் என்பதால் அவ்வப்போது உதடுகளை மட்டும் நனைத்துக் கொள்ள மட்டுமே தண்ணீர்.
தங்கத்தின் சூதாட்டமும், இரத்தக்கறை படிந்த வரலாறும்!
தென்னாப்பிரிக்க தங்கச் சுரங்கத்தில் ஒரு தொழிலாளி
சென்ற ஆண்டு மட்டும் இந்தியாவில் 800 டன் தங்க நகைகள் விற்பனையாகியுள்ளது. இதில் கேரளம், ஆந்திரம் மற்றும் தமிழகத்தின் பங்கு மட்டுமே அறுபது சதவீதத்திற்கும் அதிகம். உலகளவில் ஆண்டுதோறும் விற்பனையாகும் தங்கத்தில் 15% இந்தியாவில்தான் விற்பனையாகிறது. எனவே இந்தியாவை ‘தங்கத்தின் இதயம்’ என்கிறார்கள் தங்க வியாபாரிகள்.
தங்கம் இப்போது முன்பேர ஊக வணிகத்தில் பட்டியலிடப்பட்டிருப்பதாலும், டாலரின் வீழ்ச்சி காரணமாக பாதுகாப்பான முதலீட்டின் அடுத்த புகலிடமாகத் தங்கம் இருப்பதாலும், கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளில் அதன் விலை மூன்று நான்கு மடங்கு எகிறியுள்ளது. தங்கத்தின் விலையில் ஏற்பட்ட அபரிமிதமான செயற்கையான விலையேற்றம் என்பது உழைக்கும் மக்களை அதன் அருகில் கூட வர முடியாமல் விரட்டியடித்துள்ளது.
பளபளக்கும் இந்த உலோகத்தின் வெளிச்சத்தில் தமது பகட்டினைக் காட்டும் சீமான்கள் இந்த வெளிச்சத்தின் கீழே இருண்டு கிடக்கும் கோடிக்கணக்கானோரின் வாழ்வை அறிந்திருக்கவே மாட்டார்கள்.
அழிந்து போன கோவை தங்க நகை தொழிலாளிகளை எண்ணியபடி காந்திபுரம் பேருந்து நிலையத்துக்கு வந்து கொண்டிருந்தேன். கல்யாண் ஜுவல்லர்ஸ் கடையின் முன் கூட்டம் அடைத்துக் கொண்டிருந்தது. சிலர் முகமெல்லாம் சிரிப்பாக கடையிலிருந்து வெளியேறிக் கொண்டிருந்தனர். பஞ்சடைந்த நகைத் தொழிலாளின் கண்கள் நினைவிலாடியது. இந்தப் பழைய உலகத்தின் அற்பத்தனங்கள் வைக்கும் செலவு என்பது ஊகபேர சூதாடிகள் நிர்ணயிக்கும் விலையான பவுனுக்கு பதினாறாயிரம் ரூபாய்கள் மட்டும் தானாஸ?
எங்கோ தென்னாப்ரிக்காவின் தங்க வயலின் பொந்துகளுக்குள் எவ்வித பாதுகாப்பு வசதிகளும் அற்று, நச்சுவாயுக்களை சுவாசித்து டன் டன்னாக பாறையை வெட்டி குந்துமணி குந்துமணியாக தங்கத்தைச் சேர்க்கும் அந்தக் கறுப்பினத் தொழிலாளியின் வியர்வைக்கும் இங்கே ஏதோவொரு சந்தினுள் ஒரு இருட்டு அறையினுள் குண்டு பல்பின் வெளிச்சத்தில் வெளியாகும் ஆஸ்துமா இருமலுக்கும் என்ன விலை வைக்க முடியும்? ஸ்பெயின் நாட்டுக் காலனியவாதிகள் கொன்றொழித்த இருபது கோடி செவ்விந்தியர்களின் ரத்தத்திலும் எண்ணி மாளாத கறுப்பின அடிமைகளின் ஏக்கப் பெருமூச்சின் வெப்பத்திலும் தோய்ந்த தங்கம் உங்கள் கழுத்தில் ஊறுகிறது.
இது அழகா, புனிதமா, ஆபாசமா?
source: புதிய கலாச்சாரம், டிசம்பர் – 2010