1. நம்பிக்கை கொண்டோரே! உங்கள் மனைவியரிலும், உங்கள் மக்களிலும் உங்களுக்கு எதிரிகள் உள்ளனர். அவர்களிடம் கவனமாக இருந்து கொள்ளுங்கள் என்ற (64:14) வசனத்தில் மனைவி, மக்கள் கூட நமக்கு எதிரிகளாகக் கூறப்பட்டுள்ளதே! இதன் விளக்கம் என்ன?
2. முஸ்லிம் பெண்களில் அதிகமானவர்கள் சேலை அணிகிறார்கள். இவ்வாறு சேலை அணிவதால் தன்னையும் அறியாமல் இடுப்புப் பகுதி வெளியில் தெரிகிறது. இதனால் மறுமையில் தண்டனை உண்டா?
3. இணை வைக்கும் பெண்களைத் திருமணம் செய்ய திருக்குர்ஆன் தடை செய்கிறது. தற்போது தர்ஹா வழிபாடுகளில் ஈடுபடும் பெண்களை திருமணம் செய்யக் கூடாதா?
4. தன் கணவன் சொல்படி தான் நான் நடப்பேன், மாமனார், மாமியார் சொல்படி நடக்க வேண்டும் என்று குர்ஆன், ஹதீஸில் இல்லை என்று மருமகள் கூறுகிறாள். இதனால் மனைவி பேச்சைக் கேட்டு மகனும் நடக்கின்றான். இவ்வாறு செய்வது கூடுமா? (புகாரியின் 6675, 6920) ஹதீஸின் கருத்துக்கு இது எதிரானது இல்லையா?
1. நம்பிக்கை கொண்டோரே! உங்கள் மனைவியரிலும், உங்கள் மக்களிலும் உங்களுக்கு எதிரிகள் உள்ளனர். அவர்களிடம் கவனமாக இருந்து கொள்ளுங்கள் என்ற (64:14) வசனத்தில் மனைவி, மக்கள் கூட நமக்கு எதிரிகளாகக் கூறப்பட்டுள்ளதே! இதன் விளக்கம் என்ன?
நம்பிக்கை கொண்டோரே! உங்கள் மனைவியரிலும், உங்கள் மக்களிலும் உங்களுக்கு எதிரிகள் உள்ளனர். அவர்களிடம் கவனமாக இருந்து கொள்ளுங்கள்! நீங்கள் பொருட்படுத்தாது அலட்சியம் செய்து மன்னித்தால் அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன். (அல்குர்ஆன் 64:14)
ஒரு நபித்தோழர் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட போது அவரது மனைவி, மக்கள் அவரைத் தடுத்ததாகவும், அதைக் குறிப்பிட்டே இந்த வசனம் அருளப்பட்டதாகவும் திர்மிதி என்ற நூலில் ஒரு ஹதீஸ் இடம் பெற்றுள்ளது. ஆனால் அது பலவீனமான ஹதீஸாகும்.
இறை நினைவில் ஈடுபடுவதை விட்டும் தடுப்பதில் மனைவி, மக்கள், செல்வம் போன்ற அருட்கொடைகள் முன்னிலை வகிக்கின்றன. எனவே தான் இவற்றைச் சோதனை என்று மேற்கண்ட வசனத்திற்கு அடுத்த வசனத்தில் அல்லாஹ் குறிப்பிடுகின்றான்.
உங்கள் பொருட்செல்வமும், மக்கட்செல்வமும், சோதனையே. அல்லாஹ்விடமே மகத்தான கூலி இருக்கிறது. (அல்குர்ஆன் 64:15)
உங்களின் மக்கட் செல்வமும், பொருட் செல்வமும் சோதனை என்பதையும், அல்லாஹ்விடம் மகத்தான கூலி உண்டு என்பதையும் அறிந்து கொள்ளுங்கள் (அல்குர்ஆன் 8:28)
நம்பிக்கை கொண்டோரே! உங்களின் பொருட்செல்வமும், மக்கட்செல்வமும் அல்லாஹ்வின் நினைவை விட்டு உங்களைத் திசை திருப்பி விட வேண்டாம். இதைச் செய்வோரே நஷ்டமடைந்தவர்கள். (அல்குர்ஆன் 63:9)
மனைவி, மக்களில் இறை நினைவை விட்டுத் தடுப்பவர்கள் எதிரிகள் என்பதையே அந்த வசனம் குறிப்பிடுகின்றது என்பதை இங்கு நாம் எடுத்துக் காட்டியிருக்கும் வசனங்களிலிருந்து விளங்கிக் கொள்ளலாம்.
2. முஸ்லிம் பெண்களில் அதிகமானவர்கள் சேலை அணிகிறார்கள். இவ்வாறு சேலை அணிவதால் தன்னையும் அறியாமல் இடுப்புப் பகுதி வெளியில் தெரிகிறது. இதனால் மறுமையில் தண்டனை உண்டா?
முகம் மற்றும் முன் கைகள் ஆகிய பகுதிகளைத் தவிர பெண்கள் தங்கள் உடல் பகுதி அனைத்னையும் அன்னிய ஆண்கள் முன்னால் கண்டிப்பாக மறைத்தே ஆக வேண்டும். சேலை உள்ளிட்ட எந்த ஆடையாக இருந்தாலும் அதை அணிந்தால் உடல் பகுதிகள் வெளியே தெரியும் என்றால் அந்த ஆடையை அணிந்து அன்னிய ஆண்கள் முன்னால் காட்சி தரக் கூடாது.
தன்னையும் அறியாமல் இடுப்பு வெளியில் தெரிந்தால் தண்டனை உண்டா? என்று கேட்டுள்ளீர்கள். இந்த ஆடை அணிந்தால் அதில் இன்னின்ன பகுதிகள் வெளியில் தெரியும் என்பது அறியாத விஷயமல்ல. எனவே அறியாமல் செய்யும் தவறு என்று இதை எடுத்துக் கொள்ள முடியாது. எனவே உடல் பகுதிகள் வெளியில் தெரியும் வகையில் அமைந்துள்ள சேலையை அணிந்து அன்னிய ஆடவர் முன்னால் வரக் கூடாது.
இது போன்று ஆடை அணிந்தும், அணியாத நிலையைக் கொண்ட பெண்களை நரகவாசிகள் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: இரண்டு சாராரை (இன்னும்) நான் கண்டதில்லை. ஒரு சாரார், அவர்களிடம் மாட்டு வால்களைப் போன்ற சாட்டைகள் இருக்கும். அவற்றைக் கொண்டு மக்களை அடித்துக் கொண்டிருப்பர். இன்னொரு சாரார் பெண்கள் ஆவர். இவர்கள் ஆடை அணிந்தும் நிர்வாணமாக இருப்பார்கள். தளுக்கு நடை போட்டு ஆண்களை வளைத்துப் போடுவார்கள். அவர்களின் தலைகள் ஒட்டகத்தின் திமில்களைப் போன்று (கொண்டை போடப்பட்டு) இருக்கும். எவ்வளவோ தொலைவுக்கு சொர்க்கத்தின் நறுமணம் வீசும். ஆனால் இவர்கள் அதன் வாடையைக் கூட நுகர மாட்டார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம் 3971)
3. இணை வைக்கும் பெண்களைத் திருமணம் செய்ய திருக்குர்ஆன் தடை செய்கிறது. தற்போது தர்ஹா வழிபாடுகளில் ஈடுபடும் பெண்களை திருமணம் செய்யக் கூடாதா?
இணை கற்பிக்கும் பெண்கள் நம்பிக்கை கொள்ளும் வரை அவர்களைத் திருமணம் செய்யாதீர்கள்! இணை கற்பிப்பவள் எவ்வளவு தான் உங்களைக் கவர்ந்தாலும் அவளை விட நம்பிக்கை கொண்ட அடிமைப் பெண் சிறந்தவள். இணை கற்பிக்கும் ஆண்கள் நம்பிக்கை கொள்ளும் வரை அவர்களுக்கு (உங்கள் பெண்களை) மண முடித்துக் கொடுக்காதீர்கள்! இணை கற்பிப்பவன் உங்களை எவ்வளவு தான் கவர்ந்தாலும் அவனை விட நம்பிக்கை கொண்ட அடிமை சிறந்தவன். அவர்கள் நரகத்திற்கு அழைக்கின்றனர். அல்லாஹ் தனது விருப்பப்படி சொர்க்கம் மற்றும் மன்னிப்பிற்கு அழைக்கிறான். படிப்பினை பெறுவதற்காக (இறைவன் தனது வசனங்களை மனிதர்களுக்குத் தெளிவுபடுத்துகிறான்.
இணை வைக்கும் பெண்களைத் திருமணம் செய்யக் கூடாது என்ற தடை சிலை வணக்க வழிபாடுகளைச் செய்யும் நபர்களை மட்டும் குறிக்காது. முஸ்லிம்கள் என்று பெயரளவில் தங்களைக் கூறிக் கொண்டு அன்றைய காலத்தில் இணை வைப்பாளர்கள் செய்த காரியத்தை அப்படியே செய்யும் இன்றைய கால முஸ்லிம்களையும் குறிக்கவே செய்யும்.
தடை ஆட்களை வைத்து கூறப்பட்டதல்ல! அவர்களின் செயல்களை வைத்துத் தான் சொல்லப்பட்டுள்ளது. எனவே இணை வைக்கும் செயல் யாரிடம் இருந்தாலும் இந்தத் தடை அவர்களுக்கும் பொருந்தவே செய்யும்.
நான்கு நோக்கங்களுக்காக ஒரு பெண் மணமுடிக்கப்படுகிறாள்:
1. அவளது செல்வத்திற்காக. 2. அவளது குடும்பப் பாரம்பரியத்திற்காக. 3. அவளது அழகிற்காக.
4. அவளது மார்க்கத்திற்காக. ஆகவே, மார்க்கம் உடையவளை (மணந்து) வெற்றி அடைந்து கொள்! என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு,
இந்த நபிமொழியின் அடிப்படையில், திருமணம் செய்பவர்கள் முதன் முதலில் மார்க்கம் உள்ள பெண்ணாகத் தேர்வு செய்யவேண்டும். மார்க்கத்தில் முதலிடம் ஓரிறைக் கொள்கையாகும். அந்த ஓரிறைக் கொள்கைக்கு வேட்டு வைக்கும் இணை வைப்புக் கொள்கையில் ஒரு பெண் இருந்தாலோ அல்லது ஆண் இருந்தாலோ அவர்களை ஒரு போதும் மணமகளாக அல்லது மணமகனாகத் தேர்வு செய்யக் கூடாது என்பதை இந்த நபிமொழியும் விளக்குகிறது.
4. தன் கணவன் சொல்படி தான் நான் நடப்பேன், மாமனார், மாமியார் சொல்படி நடக்க வேண்டும் என்று குர்ஆன், ஹதீஸில் இல்லை என்று மருமகள் கூறுகிறாள். இதனால் மனைவி பேச்சைக் கேட்டு மகனும் நடக்கின்றான். இவ்வாறு செய்வது கூடுமா? (புகாரியின் 6675, 6920) ஹதீஸின் கருத்துக்கு இது எதிரானது இல்லையா?
நல்ல கருத்துக்களை யார் சொன்னாலும் ஏற்று நடக்க வேண்டியது ஒவ்வொரு முஃமினிடமும் இருக்க வேண்டிய நல்ல பண்பாகும்.
யார் தீய சக்திகளை வணங்குவதைத் தவிர்த்துக் கொண்டு, அல்லாஹ்வை நோக்கித் திரும்புகிறாரோ அவர்களுக்கு நற்செய்தி உள்ளது. எனது அடியார்களுக்கு நற்செய்தி கூறுவீராக! அவர்கள் சொல்லைச் செவிமடுத்து அதில் அழகானதைப் பின்பற்றுவார்கள். அவர்களுக்கே அல்லாஹ் நேர் வழி காட்டினான். அவர்களே அறிவுடையவர்கள். அல்குர்ஆன் 37:17,18
மாமியார் ஆகட்டும்; அல்லது மருமகள் ஆகட்டும்; நல்ல கருத்தை யார் சொன்னாலும் ஏற்று நடக்கும் பண்பாடு நம்மிடம் வர வேண்டும். தான் உடைத்தால் மண்குடம், மருமகள் உடைத்தாள் பொன் குடம் என்று மாமியார் நடக்கக் கூடாது. இதைப் போன்று வயதில் மூத்த மாமனார், மாமியாரை அவமதிக்கும் விதமாகவும், அவர்களின் நல்ல கருத்துக்களைக் கூட அவமதிக்கும் விதமாகவும் மருமகள் நடக்கக் கூடாது. குறிப்பாக தாய், தந்தையிடமிருந்து மகனைப் பிரிக்கும் மாபாதகமான காரியத்தைச் செய்யக் கூடாது. மேலும் பெற்றோரின் பேச்சைக் கேட்க விடாமல் அவர்களுக்கு எதிராக நடக்கும்படி கணவனை மாற்றக் கூடாது. அவ்வாறு செய்தால் மிகப் பெரிய தீமை செய்யத் தூண்டியவராக கருதப்படுவார்.
இறைவனுக்கு இணை கற்பிப்பது, தாய் தந்தையரைப் புண்படுத்துவது, கொலை செய்வது, பொய்ச் சத்தியம் செய்வது ஆகியன பெரும் பாவங்களாகும் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (நூல்: புகாரி 6675)
பெற்றோரைப் புண்படுத்தும் காரியத்தைத் தம் கணவர் செய்து பெரும் பாவியாக மாற மனைவியே காரணமாக இருக்கக் கூடாது. கணவனே பெற்றோர்களிடம் கடினமாக நடந்தாலும் நபிமொழியை எடுத்துக் கூறி அவரைத் திருத்த முன்வர வேண்டுமே தவிர எரியும் நெருப்பில் எண்ணெயை ஊற்றும் வேலையைச் செய்யக் கூடாது.
Dheengula Penmani May 2008
ஃபத்வாக்கள் அனைத்தும் www.onlinepj.com