மெளலவி E.M.அப்துர் ரஹ்மான்
قُلْ يَا أَيُّهَا الْكَافِرُونَ ﴿١﴾ لَا أَعْبُدُ مَا تَعْبُدُونَ ﴿٢﴾ وَلَا أَنتُمْ عَابِدُونَ مَا أَعْبُدُ ﴿٣﴾ وَلَا أَنَا عَابِدٌ مَّا عَبَدتُّمْ ﴿٤﴾ وَلَا أَنتُمْ عَابِدُونَ مَا أَعْبُدُ ﴿٥﴾ لَكُمْ دِينُكُمْ وَلِيَ دِينِ ﴿٦﴾
1. சொல்லுக: நிராகரிப்பவர்களே!
2. நீங்கள் வணங்குபவற்றை நான் வணங்க மாட்டேன்.
3. மேலும், நான் வணங்குகிறவனை நீங்களும் வணங்குபவர்களல்லர்.
4. இன்னும் நீங்கள் வணங்கியவற்றை நான் வணங்குகிறவனுமல்லன்.
5. மேலும், நான் வணங்குபவணை நீங்களும் வணங்குபவர்களல்லர்.
6. உங்களுக்கு உங்களது மார்க்கம்; எனக்கு எனது மார்க்கம்.
சர்வ சக்தியும் உடையவன் இறைவன் ஒருவனேயென உணரும் ஒருவன், அழிவின் பக்கமே கொண்டு போகும் பலவீனமான படைப்புகளை ஒருக்காலும் வணங்க மாட்டான். எனவே அல்லாஹ்வை உண்மையாகவே நம்பும் நான், நீங்கள் அறியாமையின் காரணத்தால் வணங்கும் படைப்புகளை ஒருக்காலும் வணங்கமாட்டேன்.நான் கொண்டுள்ள உண்மையான தன்மைகளை நீங்கள் உணரும்வரை, என் வழியிலேயே என்னை விட்டுவிடுங்கள். உங்களுக்குத் தற்போது உங்கள் வழி சிறந்ததாகத் தோன்றலாம். அடுத்து எது உண்மையென்று தெரிந்து கொள்வீர்கள்.
இவ்வத்தியாயம் இறங்கிய வரலாறு:
அபூஜஹீல், ஆஸ்பின்வாயில், வலீத்பின் முஙைரா, அஸ்வத் போன்ற குறைஷிக் காபிர்களான பிரமுகர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சிறிய தந்தையான அப்பாஸ் அவர்கள் மூலம் ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு பின்வருமாறு சொல்லி அனுப்பினார்கள்.
நமது தெய்வங்களைப் பற்றியும் அவைகளுக்கு வணக்கம் செய்வது பற்றியும் முஹம்மது தூஷணமாக பேசக்கூடாது. நமது கூட்டத்தாரில் தலைத்தனம் வகிக்க வேண்டுமென்று அவருக்கு விருப்பம் இருந்தால் அவரைத் தலைவராக்கி விடுகிறோம். பொருள் கிடைக்க வேண்டுமென்ற எண்ணமிருந்தால் அதிகமான பொருளை சேகரம் செய்து கொடுக்கிறோம். அழகிய பெண் வேண்டுமென்ற ஆசை இருந்தால் நமது குலத்தில் அழகில் சிறந்த பெண்ணை கொடுக்கிறோம்.
இவ்விசயத்தை நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கேட்டதும், இவை ஒன்றுமே எனக்கு தேவையில்லை. எனது சமூகத்தவராகிய நீங்கள் கேவலமான முறையில் நாசமடையாமல் நேர்மையான பாதையைக் கடைப்பிடிக்க வேண்டுமென்பதுதான் எனது விருப்பம் என்று பதில் சொல்லி அனுப்பினார்கள். ஆசைகளைக் காட்டி முஹம்மது அவர்களை வசப்படுத்த முடியாதென்பதைத் தெரிந்த குறைஷித் தலைவர்கள், வேறொரு சமரச யோசனையைச் சொல்லி அனுப்பினார்கள். அதாவது:
நமக்குள் ஒற்றுமை இருக்க வேண்டுமானால், ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுக்கவேண்டும். ஒரு வருஷம் அவர் நமது தெய்வங்களை வணங்கி வரவேண்டும். மறு வருஷம் நாம் அவருடைய கடவுளை வணங்குவோம். இவ்வாறு செய்து வருவது இருவரும் ஒற்றுமையாக இருப்பதற்கு நல்ல வழி. இச்சமரச யோசனைக்கு மறுப்பாகவே இந்த அத்தியாயத்தில் உள்ள விஷயங்களைக் கூறும்படி இறைவன் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு கட்டளையிட்டுள்ளான்.
கருத்துரை:
எல்லாவற்ரையும் படைத்து இரட்சித்து ஆளும் சர்வ சக்தியுள்ள ஒரே இறைவனை நான் வணங்குகிறேன். நீங்கள் அவனால் சிருஷ்டிக்கப்பட்ட சூரியன், சந்திரன், நட்சத்திரம் போன்றவைகளையும் உங்கள் கைகளால் உண்டாக்கப்பட்ட சிலைகளை வணங்கி வருகிறீர்கள். இந்த படைப்புகளும், சிலைகளும் உங்களைக் காப்பாற்றக் கூடியவை என நீங்கள் விசுவாசம் கொண்டிருக்கின்றீர்கள். இவைகளால் இலாபமோ நஷ்டமோ உண்டாக்க முடியாது. இந்த உணர்ச்சி உங்களுக்கு உதயமாகும் வரை என் வழியில் என்னை விட்டுவிடுங்கள் உங்கள் வழியில் நீங்கள் இருந்து கொள்ளுங்கள்.வணக்கத்திற்கு மூலமானது தவ்ஹீது எனும் இறைவன் ஒருவன் என்பதை நிலைநிறுத்துவதும், ஷிர்க் எனும் இறைவனுக்கு இணை வைத்தல் நிராகரிப்பாகும்.
இதன் சிறப்பு:
நபித்தோழர் நெªபல் பின் முஆவியா அல்அஷ்ஜஈ ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை நோக்கி அல்லாஹ்வின் தூதரே நித்திரைக்குச் செல்லுங்கால் நான் எதை ஓத வேண்டும்? எனக் கேட்டார். அதற்கு அவர்கள் குல்யா அய்யுஹல் காஃபிரூன் என்ற அத்தியாயத்தை ஓதிவிட்டு நித்திரை செல்லுங்கள் அது (ஷிர்க்) இணைவைத்தலை விட்டும் அகற்றக் கூடியதாகும். (மனத் தூய்மையுடன்) ஓதுபவன் ஷிர்க்கை விட்டும் காப்பாற்றப்படுகிறான். அப்படியே மரித்தாலும் (தவ்ஹீத்) ஏக தெய்வக் கொள்கியின் மீதே மரிக்கிறான் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பதிலளித்தார்கள். (நூல்கள்: அஹ்மது, அபூதாவூது, திர்மதீ, நஸயீ.)