MUST READ
முஸ்லிம்களின் பண்பாட்டு மாற்றங்கள்!
களந்தை பீர்முஹம்மது
முஸ்லிம் சமூகம் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று இப்போது வரையறை இல்லை எப்படியும் இருந்துவிடலாம் என்றும் சொல்வதற்கில்லை! இரண்டுக்கும் இடையிலே சிக்கியுள்ளது. பொது வெளியில் கரைந்தபடியே தனித்தன்மையையும் பேணி வருகிறது. ஒரு சிறிய காலகட்டம்தான் மாற்றவர்களைக் கொண்டுவந்துள்ளது; இனி இதைத் தவிர்க்க முடியாதோ எனும் பதற்றமும் உண்டாகியிருக்கிறது.
உலகம் கிராமமாகச் சுருங்கி வந்த வேகத்தில் பல நல்லவை உதிர்ந்துபோய்விட்டன. வெளிநாட்டுப் பயணங்கள், வேலைவாய்ப்புகள் முஸ்லிம்களிடம் இரண்டுவிதமான தாக்கங்களை உண்டு பண்ணியுள்ளன. முஸ்லிம்கள் சிங்கப்பூர், அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் என்று வேலைகளின் நிமித்தம் பயணிக்கையில் அவர்கள் மேற்கத்திய மோகிகளாக, நுகர்வு வெறியராக, இஸ்லாமியக் கலாச்சாரங்களைக் கைவிடுவதில் தயக்கமற்ற மனிதராகத் திரும்புகிறார்கள். அவர்களுடைய வீடுகள் மேலைப் பண்பாட்டின் வாசனைக்குள் அமிழ்கின்றன.
கால்களை முழுமையாக மறைக்க வேண்டும் என்னும் எண்ணமில்லாமல் பெர்முடாஸ் அணிந்து வெளிவருகிறார்கள். நடைப்பயிற்சி மேற்கொள்கிறார்கள். தாடி இல்லை; தொப்பி இல்லை. மனக்கிளர்ச்சிகள் இல்லாமல் நோன்பு பிடிக்கிறார்கள்; ஏழைகளின் பசியாற்றும் ஜகாத்தை முஸ்லிமின் கடமையாக நினைத்து வழங்குவதில்லை. தம் சொந்த இரக்க மனோபாவங்களைப் பொறுத்து தர்மங்கள் கொடுக்கிறார்கள். மாலையில் ஷாப்பிங் மால்களில், திரையரங்குகளில் சுற்றித் திரிகிறார்கள் தம் இளம் மனைவியருடன் – குழந்தைகளுடன்! இருந்தாலும் முக்கியமான விஷயம், ‘அல்லாஹ்’வை அவர்கள் மறக்கவில்லை.
பிறிதொரு சாரார் முஸ்லிம் நாடுகளுக்கே பயணிக்கிறார்கள். அரபு ஷேக்குகளின் மொழிகளைக் கற்கிறார்கள்; பிரமாண்டமான மசூதிகள் அவர்களின் உள்ளங்களையும் உடல்களையும் ஒருசேர ஆக்ரமிக்கின்றன. அரேபியப் பழங்குடி இனத்தின் கலாச்சாரத்தையே இஸ்லாமியக் கலாச்சாரமாகக் கருதி, சொந்த ஊருக்கு ஓடோடி வந்து தம் பெண்டு, பிள்ளை, அன்னையரையெல்லாம் கருப்புத் துப்பட்டாவால் உடல் முழுக்க மூடி மறைத்துவிட்டுப் பின்னரும் அரேபியா ஓடிச் செல்கிறார்கள். இன்னொரு குழு அதே வேகத்தில் அங்கிருந்து இங்கு ஓடிவருகிறது. “தொழுகைக்கு ஏது தொப்பி?” என்று வீசியெறிந்து விட்டுப் போகிறது; நோன்புக் காலத்தின் இருபது ரக்-அத் தொழுகையின் இடையிலே வந்து புகுந்து, இடையிலேயே நழுவிச் செல்கிறது.
பள்ளி வாசலின் உள்ளே பயபக்தியாய், முழுமையான அமைதியாய் ஒரு பெருங்கூட்டம் ‘தராவீஹ்’ தொழுகையில் ஈடுபட்டிருக்க, இடையிலே வந்து புகுந்து இடையிலேயே அறுத்துக்கொண்டு வெளியேறிய இளைஞர்கள் பலரும் கலகலப்பாகப் பேசிச் சிரித்து விளையாடியவர்களாகப் பள்ளிவாசலையே கலாய்த்துக்கொண்டிருக்கிறார்கள்.
அரபு நாடு செல்லும் முஸ்லிம்களும் தத்தமது படிப்புக்கும் திறமைக்கும் ஏற்றபடி குளிரூட்டப்பட்ட அறைகளிலும் பாலைவனங்களிலுமாய் இருபிரிவுகளாக இருக்கிறார்கள். குளிரூட்டப்பட்ட அறைகளில் பெறப்படும் இஸ்லாம் அப்படியே பாலைவனத்திலும் பெறப்படுகிறது. ஆனால் வருவாய்ரீதியாக முஸ்லிம்கள் இங்கே இரு வகையாகிவிடுகின்றார்கள். என்றாலும் தமிழகம் திரும்பும்போது ஏதோ ஒரு அந்தஸ்து கருதி, இருவகையினரும் போட்டிபோட்டுக்கொண்டு ஒரே கலாச்சாரத்தையே பேசிக்கொண்டிருப்பார்கள்.
நாங்கள் பள்ளிக்கூடம் சென்றுவந்த நாட்களில் எங்கள் ஊரில் (ஒரு வசதி கருதி எங்கள் ஊர் என்று சொல்கிறேன். இதை அப்படியே ‘தமிழகம்’ என்பதாகப் புரிந்துகொள்ள வேண்டும். ஊருக்கு ஊர் பழக்க வழக்கங்கள், கலாச்சாரங்கள் மாறுபட்டும் உள்ளன.)
‘சமைஞ்ச பெண்களை’ப் பார்க்க முடியாது. ஜன்னல்கள் மூடிக்கொள்ளும்-நாம் அந்த வீட்டைக் கடந்து போகும்போது! ஒருவேளை வீட்டுக்குள்ளே செல்ல நேர்ந்தால் சமையலறைக்குள் சமைஞ்ச பெண் ஓடி ஒளிந்துகொள்வாள். எனவே பள்ளிக்கூடம் என்பது அவர்களுக்கு விலக்கப்பட்டிருந்தது. “இன்னொரு வீட்டிலும் அடுப்பூதத்தானே போகிறது. அப்புறம் எதற்குப் படிப்பு?” இது மலையேறிவிட்டது இப்போது.
ஓரளவு வறுமையிலிருந்து மீளும் சக்தி இருந்தாலும், அந்தப் பெண் இன்று பள்ளிக்கூடம் செல்கிறாள். படித்த பெண்ணை மருமகளாய்க் கொண்டால் வம்புதான் என்று எண்ணியதுபோக, இப்போது அவள் வேலைக்குப் போவாள்தானே என்னும் எண்ணத்தில் வந்து நிற்கிறது. திருமணத்திற்கு முன்பும் பின்பும் அவரவர் தன்மைக்கும் வாழ்க்கைக்கும் ஏற்ற படி முஸ்லிம் பெண்கள் வேலைக்குச் செல்கிறார்கள். அநேகமாக வேலைக்குச் செல்லும் பெண்கள் புர்கா முறையை ஏற்றுக்கொண்டார்கள். ஆனால் அலுவலகங்களின் உள்ளே அது பாதியாகிவிடும்.
நகர்ப்புறக் கல்லூரி மாணவிகள் ஜீன்ஸ் பேண்ட் அணிந்து செல்வதும் இருக்கவே செய்கின்றது. இந்த மாணவிகள் சினிமாவிற்கு வரும்போது புர்கா அணிந்துகொள்கிறார்கள். எனவே, மாற்றுச் சமயங்களின் தோழிகள் பெருகிவிட்டார்கள். தீபாவளி, பொங்கல், கிறிஸ்துமஸ் பண்டிகைகளில் முஸ்லிம் மாணவிகள் தோழிகளின் வீடுகளுக்குச் சென்று உற்சாகமாய்ப் பங்கெடுத்துக்கொள்கிறார்கள். தேர்வுகளிலும் சிறந்த மதிப்பெண்களைப் பள்ளி, கல்லூரிகள் அளவில் மட்டுமல்லாமல் மாநில அளவிலும் பெற்று ஒளிர்கிறார்கள். இதனால் முஸ்லிம் கல்வி நிறுவனங்கள் உற்சாகம் பெறுவதுடன், அந்த முஸ்லிம் மாணவியைத் தம் நிறுவனங்களுக்கும் அழைத்துக் கௌரவிப்பதுடன், அவருக்குப் பாடம் போதித்த இந்து-கிறித்தவ ஆசிரியர்களையும் பாராட்டிக் கௌரவிக்கிறார்கள்.
முஸ்லிம்களின் திருமண வைபவங்களிலும் பெரிய மாற்றங்கள் நிகழ்ந்துவிட்டன. இதர சமயத்தினர்போல் முஸ்லிம்களின் ‘நிக்காஹ்’கள் திருமண மண்டபங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளன. அதே சமயத்தில் முஸ்லிம்கள் தொகுப்பாக வாழும் கீழக்கரை, காயல்பட்டினம், மேலப்பாளையம் போன்ற பல ஊர்களில் வீடுகள் அல்லது மசூதிகளிலேயே திருமணங்கள் நிகழ்கின்றன. வீடுகள் வசதியாக இருப்பதுடன், தெருக்களில் போக்குவரத்தும் இருப்பதில்லை. இந்தப் போதுமான இடவசதிகள் கூட்டங்களைச் சமாளிக்க உதவுகின்றன. தெருக்களின் முக்கால் பகுதியை அடைத்துப் பந்தல் போட்டு அங்கேயே சாப்பாடு பரிமாறிக்கொள்கிறார்கள். காயல்பட்டினத்தில் நான்கைந்து ஜோடிகளுக்குச் சேர்த்து ‘நிக்காஹ்’ வைப்பதால் செலவினங்களையும் வீண் அலைச்சல்களையும் நேரவிரயத்தையும் தவிர்த்துக்கொள்கிறார்கள்.
முஸ்லிம்களின் வாழ்விடங்களுக்கு உள்ளேயே நிகழ்ந்த திருமணங்கள் முன்பு நள்ளிரவுகளிலும் நள்ளிரவு தாண்டிய அதிகாலைப் பொழுதுகளிலும் நடந்தன. பக்கத்து வீட்டினரைத் தவிர, முஸ்லிம் மஹல்லாவின் மற்ற வீடுகளில் அனைவரும் தூக்கத்திற்குள் விழுந்திருப்பார்கள். நிக்காஹ் நடக்கும் நேரத்தில் ஒவ்வொரு வீடாகச் சென்று கதவைத் தட்டித் தூக்கத்தில் இருப்போரை எழுப்புவார்கள். கதவைத் தட்டி அழைத்தபின் யாரும் தூங்குவதில்லை.
தூக்கத்தை முறித்துவிட்டு மலர்ந்த முகமாகவே நிக்காஹ் வீட்டுக்கு வருவார்கள். அந்த இரவிலும் ஊர் சுற்றி மாப்பிள்ளையை அழைத்துவருவார்கள். நெருங்கிய உறவினர்களாய் அல்லது நண்பர்களாய் இருப்பின் ஊர்கோலமாய் அழைத்துவரப்படும் மணமகனுக்கு அவரவர் வீட்டு வாசல்களில் பசும்பால் கொடுப்பார்கள்; அவர் அதை மூன்றுமுறை உறிஞ்சிக்கொள்வார்; அங்கேயே மோதிரம் அணிவிப்பார்கள். பத்தமடையில் பெரும்பாலும் எல்லா வீடுகளிலும் கைத்தறித்துண்டு அணிவிக்கிறார்கள்.
முன்பு எங்கள் ஊர் நிக்காஹ்களில் நாதஸ்வரம்-தவில் என்று போட்டு முழக்குவார்கள். கால மாற்றங்கள், செலவு தவிர்ப்பு, அரேபியப் பயணங்கள், இஸ்லாமியப் பண்பாட்டு எழுச்சி என்று எல்லாம் சேர்ந்து நாதஸ்வரத் தவில் கலைகளை ஒரேயடியாக ஓரம்கட்டிவிட்டன. (ஷைத்தானிய கருவிகள் ஓரங்கட்டப்பட்டது நிச்சயமாக நல்ல செய்தியே; அல்ஹம்துலில்லாஹ்.). நள்ளிரவு – அதிகாலைத் திருமணங்களாய் இருந்தபடியால் இந்து-கிறித்துவ நண்பர்கள், அவர்கள் குடும்பத்தினர் திருமணங்களில் கலந்துகொள்ள வாய்ப்பே இல்லாமல் இருந்தார்கள்.
கீழக்கரையில் இப்போதும் இரவில் திருமணங்கள் நடப்பதாகக் கேள்விப்பட்டேன். தொண்ணூறு சதவிகிதத்திற்கும் மேற்பட்டு இப்போது தமிழகம் முழுவதும் பகல் திருமணங்களே நடக்கின்றன. மண்டபங்கள் என்பதால் எல்லாச் சமயத்தவரும் கலந்துகொள்கிறார்கள். மேலும் சைவ உணவுகளும் இப்போது வழங்குகிறார்கள். முஸ்லிம்கள் சைவ உணவுகளையும் பிராமணர்கள், பிள்ளைமார்கள் பிரியாணியையும் வெட்டுகிறார்கள். முன்பு நெய்ச்சோறு மட்டும்தான் இருந்தது. இன்று பிரியாணிக் கலாச்சாரம் மேலோங்கிவிட்டது. மதுரையில் வழங்கப்படுவது பிரியாணியா – பிரியாணியைப் போன்ற தோற்றமுடைய குஸ்காவா என்று புரியவில்லை. தாளிச்ச சாம்பாரும் தருவார்கள் அங்கு! கடந்த செப்டம்பர் மாதம் என் மகள் நிலோவ்னாவின் திருமணம் களக்காட்டில் நடந்தபோது, அசல் பிரியாணிக்குச் சாம்பாரும் ஏற்பாடு செய்துவிட்டோம்.
மேலப்பாளையம் திருமணங்களில் பிரியாணியோ நெய்ச்சோறோ கிடைக்கும் என்று போய்விட்டு ஏமாந்துவிட வேண்டாம். நல்ல அரிசியில் வெள்ளைச் சோறுதான் கிடைக்கும்! கொழுப்பு – இரத்த அழுத்தம்தான் காரணமாம். கறி ஆணம், சாம்பார், பருப்பு என்று தேவைப்பட்டால் அதுவே சைவம் அல்லது அசைவம் என்று சாப்பிட்டுக்கொள்ளலாம். முஸ்லிம்களின் திருமணத்திலும் வரதட்சணைகள் பாடாய்ப்படுத்துகின்றன. ரொக்கம் வேறு – நகை வேறு என்று இருந்த காலம், இப்போது நகைகள் மட்டும் என்னும் கட்டத்துக்குள் நுழைந்துகொண்டிருக்கிறது. அப்படியானால் ரொக்கம் ரத்தாகிவிட்டது என்று அர்த்தமல்ல. ரொக்கமே அதிகப்படியான தங்க நகைகளாக மாறியவாறு இருக்கின்றன என்று அர்த்தம்.
இப்போது முஸ்லிம்களிடையே பரவிவரும் தவ்ஹீத் வாதம், இளைஞர்கள் சிலரை எவ்விதமான வரதட்சணையையும் வாங்கவிடாமல் தடுத்திருக்கிறது. ஆடம்பரங்கள், நேர விரயத்தைக் கட்டுப்படுத்திவிட்டது. ஆனால் இந்த நேர விரயத்தை, தவ்ஹீத்வாதிகள் மேடையில் அரசியல்வாதிகளைப் போல் உரத்த குரலில் பேசிப் பேசியே ஈடுகட்டிவிடுகிறார்கள். (அதாவது, நம்முடைய பொன்னான பொழுதுகளில் இன்னும் கொஞ்சம் பிடுங்கிக்கொள்கிறார்கள்.)
முஸ்லிம்களிடையே உள்ள பிளவுகளை இப்போது பட்டவர்த்தனமாகக் காட்டிக்கொண்டிருப்பவை தர்ஹா கலாச்சாரம் சார்ந்த விஷயங்களே! இதை தர்ஹாச் சீரழிவு (!!!) என்று கொதிக்கிறார் காயல்பட்டினம் கே. எஸ். முஹம்மத் ஷுஐப். அரேபியப் பண்பாட்டுப் படையெடுப்புதான் தமிழகத்தின் தர்ஹாக்களைக் குற்றுயிரும் குலையுயிருமாக ஆக்கிவிட்டது. சந்தனக் கூடு ஊர்வலங்கள் எந்தக் கடலில் போய்க் கரைந்தனவோ தெரியவில்லை. களக்காடு – ஏர்வாடியில் நடந்த சந்தனக்கூடு வைபவங்களுக்கு நாங்கள் குடும்பம் குடும்பமாகச் செல்வோம்.
ஏர்வாடியில் இருந்த ஆயிரத்துக்கும் குறையாத வீடுகள் ஒவ்வொன்றிலும் களக்காடு அல்லது அசலூர் உறவினர்கள் இருப்பார்கள். ஏர்வாடியின் நிறமே மாறிப்போயிருக்கும். ஊரின் அந்த ஈடு இணையற்ற கலகலப்பை இப்போதும் என்னால் வர்ணிக்க முடியாது. நபியின் பேரன்கள் ஹஸன்-ஹுஸைன் பெயரில் இரண்டு சந்தனக்கூடுகள் வெவ்வேறு திசைகளில் இருந்து ஆறாம் தெருவின் ஒரு முக்கியப் புள்ளியில் சந்திக்கும். அதுதான் உச்சக் கட்ட வைபவம். தெருவை அடைத்துக்கொண்டு மனித வெள்ளம். அந்த இரண்டு சந்தனக் கூடுகளும் சந்திக்கும் இடத்தில் – நேரத்தில் திடீரென்று சிலர் கம்புகளுடன் உள்ளே பாய்ந்து கோஷமிட்டவர்களாக அதைத் தடுப்பார்கள். பதிலுக்கு வேறு சிலர் அவர்களுடன் கைகலந்து விரட்டிவிடுவார்கள். பின்பு கூடுகள் சந்திக்கும்; இரண்டும் சேர்ந்து ஆற்றங்கரைக்குப் போகும்.
கம்புகளுடன் சிலர் கூச்சலிட்டபடி ஓடிவருவதும் அதை இன்னொரு கூட்டத்தார் தடுப்பதும் ஆண்டுதோறும் நடந்தபடியே இருந்ததால் அதை இந்த விழாவின் ஒரு சடங்கு என்றே கருதிக்கொண்டிருந்தேன். ஏற்கெனவே ஊரில் வள்ளித் திருமணம், சூரன்குத்து வைபவங்களையும் ஆண்டுதோறும் பார்த்துக்கொண்டிருந்த காலம். வள்ளிக்கு முருகன் தாலி கட்டப்போகும் சமயத்தில் ஒரு தும்மல் விழும். இப்படித் தும்மல் அபசகுனமாக விழுந்துவிட்டதே என்பதால் அந்தத் திருமணம் நடக்காமலேயே திருவிழா முடிந்துவிடும்.
இது போன்ற ஒரு சடங்கு என்றுதான் அந்தக் கம்பு விளையாட்டுகளும் என்று எண்ணியிருந்தால், உண்மை அதுவல்ல. அவர்கள் உண்மையாகவே இந்தச் சந்தனக்கூடுகளை இஸ்லாத்திற்கு ஆகாதது என்று கூறித் தடுக்கவே முயன்றிருக்கிறார்கள். தடுக்க முனைந்த அந்தச் சிலரே இப்போது நூறு, ஆயிரம், பல்லாயிரம் என்று பெருகிவிட்டார்கள். இப்போது கீழக்கரை ஏர்வாடியில், நாகூரில் நடக்கும் சந்தனக்கூடு வைபவங்களில் முன்பிருந்த கூட்டம் திரள்வதில்லை. காணிக்கைகள் வசூலாவதில்லை. (இந்த மாற்றம் அல்லது இதன் முழுத் தன்மைகள் குறித்து அறிய விரும்பும் ஒவ்வொருவரும் தோப்பில் முஹம்மது மீரானின் அஞ்சுவண்ணம் தெரு நாவலைக் கண்டிப்பாக வாசிக்க வேண்டும். வசீகரமான இன்னொரு பரிமாணத்தைத் தோப்பில் எட்டிப்பிடித்திருக்கும் படைப்பு அது.)
பல தர்ஹாக்கள் பொலிவிழந்துவிட்டன. தர்ஹா கலாச்சாரத்தின் வழியாக முஸ்லிம்களிடமிருந்து வேறு சில பண்பாட்டுக் கூறுகளும் கழன்றுபோயின. ஏதாவது ஒரு நேர்த்திக்கடனையொட்டி முஸ்லிம்கள் தங்கள் வீடுகளில் ஃபாத்திஹா ஓதுவார்கள். அவரவர் வசதிக்கேற்ற பதார்த்தங்களைத் தயாரித்து, ஓதி முடித்ததும் அக்கம்பக்கத்தார் வீடுகளுக்கு அவற்றைக் கொண்டுபோய்க் கொடுப்பார்கள். அந்தப் பழக்கம் இப்போது அறவே இல்லை.
நோன்பின் 27ஆம் நாள் லைலத்துல் கத்ர் நாளாகும். குர்ஆன் மானுடகுலத்திற்கு முதன்முதலாக இறங்கிய நாளாக அது கணக்கிடப்படுகிறது. அந்த நாளிலும் பணியாரங்கள், அடைகள், பழங்களைக் கொண்டு ஃபாத்திஹா ஓதுவார்கள். ஒவ்வொரு வீட்டிலிருந்தும் பிறவீடுகளுக்கு அவை வழங்கப்படுவதைப் போலவே, பிறவீடுகளில் இருந்தும் நமக்குப் பல்வேறு வகையான இனிப்பு வகைகள், கனி வர்க்கங்கள் கிடைக்கும். அன்றே 27 வகையான சமையல் வகைகள் செய்யப்படும். கூட்டாஞ்சோறு ஆக்கப்படும். முழுக்கவும் முஸ்லிம்களாகவே நிரம்பியுள்ள ஒரு தெருவைக் கற்பனைசெய்து பார்த்து, அதோடு இந்த நேர்ச்சைப் பரிமாற்றம், மனஸ்தாபம் இருந்தாலும்கூட அந்தக் குடும்பத்தினரைத் தவிர்க்காமல் அவர்களுக்கும் நேர்ச்சையை வழங்கி உறவுகளைப் புதுப்பித்துக்கொள்ளும் அந்தப் பொற்காலங்களைக் கண்ணில் மிதக்கவிட்டுப் பாருங்கள் – சில நொடிகளேனும்! ‘இஸ்லாமிய விழிப்புணர்ச்சி’ என்னும் பெயரின் கீழே போயே போய்விட்டன.
இதே நிலைதான், இன்று இறப்பு நிகழ்ந்த வீட்டிலும்! ‘மய்யத்’தைக் கொண்டுபோய் அடக்கம் செய்த கையோடு, அடக்கம் செய்யப்பட்ட மய்யத்துக்கும் தமக்கும் ஒட்டுமில்லை, உறவுமில்லை என்று முஸ்லிம் சமூகம் ஒதுங்கிவிட்டது. இதனால் இறந்தவரின் பெயரால் முன்பு ஓதப்பட்ட 40 நாள் ஃபாத்திஹா இப்போது இல்லை; விருந்துகள் இல்லை. இவை தவ்ஹீத்வாதிகளின் வருகையால் உண்டானவை. அதேசமயத்தில் தவ்ஹீத்வாதிகளின் செல்வாக்கிற்கு உட்படாதவர்களும்கூட இறந்தவர்கள் பெயரில் ஃபாத்திஹாக்கள் ஓதுவதைக் கைவிட்டுவருகிறார்கள். சில பகுதிகளில் மூன்றாம் நாள் அல்லது ஏழாம் நாளில் உறவினரை அழைத்து, வசதியுள்ளவர்களாயின் ஊரை அழைத்துப் பெரும் விருந்து அளிக்கிறார்கள். நாற்பது நாள் ஃபாத்திஹா ஓதுவது சிலருக்குப் பொருளாதாரச் சுமையாக இருப்பதாலோ அசௌகரியமான ஏற்பாடாக இருப்பதாலோ ஃபாத்திஹா ஓதுதல் விடுபடக்கூடியதாக இருக்கலாம்.
கந்தூரி வைபவங்கள் முஸ்லிம்களின் இன்னொரு தனி அம்சம். இதுவும் தர்ஹாவின் இன்னொரு கலாச்சாரப் படிநிலை. ஊருக்கு ஊர் அரேபியக் கலாச்சாரப் பாதிப்புக்கு ஆளான தவ்ஹீத்வாதிகள் இருப்பதால் அவர்கள் கந்தூரி வைபவத்தை ஏறெடுத்தும் பார்ப்பதில்லை. இதனால் அவர்களுடைய வீடுகளிலிருந்து கந்தூரி வரிவசூலிக்க முடிவதில்லை. கூடுமானவரை கந்தூரி வைபவத்தை முடக்கவே விரும்புகிறார்கள். இருப்பினும் அதை முழுதாய் நிறுத்திவிட முடிவதில்லை.
காயல்பட்டினம் மஹ்லரா கந்தூரி விசேசமானது. பல ஊர்களில் இருந்தும் மக்கள் குழுமுவார்கள். கந்தூரிச் சோறு பெரிய பெரிய சஹன்களில் வைக்கப்படும். ஒவ்வொரு சஹனிலும் நான்கு பேர் சாப்பிடும் அளவுக்குக் கந்தூரிச் சோறு இருக்கும். இஸ்லாம் வலியுறுத்தும் சகோதரத்துவத்தைக் கடைப்பிடிக்கும்வண்ணம் அதில் அனைவரும் ‘எச்சில்’ என்னும் உணர்வு தோன்றாதபடிக்குக் கூடி உண்ணுவார்கள். மற்ற ஊர்களில் அது ஓலைப்பெட்டிகளில் வழங்கப்படுகின்றது.
ஒரு பள்ளிவாசல் – ஒரு ஜமாத் என்ற நிலை மாறி, பல பள்ளிவாசல்கள் பல ஜமாத்கள் என்றாகி முஸ்லிம் சமூகத்தின் ஒற்றுமை பங்கப்பட்டிருப்பது கண்கூடான உண்மை! பெருநாள் ஒரு நாள் என்று இல்லை; ஒரே ஊரில் ஒரே தெருவில் பெருநாள்கள் பல நாள்களாக நீடித்தபடியே போகின்றன. கால மாற்றங்களாலும் பொருளாதாரத் தாக்கங்களாலும் அரசியல் சூழல்களாலும் பல்வேறு சமூகத்தினரின் பண்பாடும் மாறிவருவது இயல்பானதுதான். ஆனால்
முஸ்லிம் சமூகத்தின் பண்பாட்டு மாற்றங்களுக்கு மதமும் இந்த மண்ணில் சம்பந்தப்படாத வேறு சில காரணிகளும் துணையாய் இருக்கின்றன. இவை பிளவுபட்ட மனநிலையையும் வேடிக்கை மனோபாவங்களையும் தோற்றுவிக்கின்றன. இவற்றையெல்லாம் பார்க்கும்போது முஸ்லிமோ அல்லது மாற்றுச் சமூகத்தவரோ அழலாம்; சிரிக்கலாம்; விரக்தியடையலாம்; மனம் சோர்ந்துபோகலாம்! கொண்டாடலாம்! எல்லாவற்றுக்கும் வாய்ப்புகள் வழங்குகின்றன இந்தப் போக்குகள்!
பேரா. நத்தர்ஷா வீட்டுத் திருமணத்திற்குக் காரைக்கால் போய்விட்டு, என் வாழ்நாளில் முதன் முறையாக நாகூர் தர்ஹாவிற்கு சென்றுவந்தேன். அதற்கும் ஓராண்டுக்கு முன்பு என் சகலையின் அழைப்பின் பேரில் ஆத்தங்கரைப் பள்ளிவாசல் போயிருந்தேன்.
நாகூருக்கு நான் சென்றபோது காலை எட்டு மணி. ஆத்தங்கரைப் பள்ளிவாசலுக்கு நான் சென்றபோது மாலை ஐந்து மணி. காலையில் கூட்டம் குறைவான நிலை; மாலையில் கூட்டம் அதிகமான நிலை. இரண்டு தர்ஹாக்களிலும் முஸ்லிம்களுக்குச் சற்றேறக் குறைய நிலையில் மாற்றுச் சமூகத்தவர் கூடியிருந்தார்கள். குமரிமாவட்ட நாடார் சமூகத்தினர் நூற்றுக்கணக்கானோர் ஆத்தங்கரைப் பள்ளிவாசலின் முன் பெரியோரும் சிறியோரும் ஆண்களும் பெண்களும் குழந்தைகளுமாய்க் கூடியிருந்தார்கள். நேர்ச்சைகளைப் பெறப் பயபக்தியுடன் முண்டியடித்தார்கள்! குழந்தைகட்கும் ஊட்டினார்கள். எண்ணிக்கை குறைந்தாலும் உணர்வுகள் குறையாத நிலை நீடிக்கும் என்றே தோன்றுகிறது. நாம் தடுத்தாலும் தடுக்காவிட்டாலும் மாற்றங்கள் வரும்; வரவேண்டும்!
நன்றி: காலச்சுவடு