இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:
எனக்குக் கீழ்ப்படிந்தவர் அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படிந்தவராவார். எனக்கு மாறு செய்தவர் அல்லாஹ்வுக்கு மாறு செய்தவராவார். என்னால் நியமிக்கப்பட்ட தலைவருக்குக் கீழ்ப்படிந்தவர் எனக்குக் கீழ்ப்படிந்தவராவார். என்னால் நியமிக்கப்பட்ட தலைவருக்கு மாறு செய்தவர் எனக்கு மாறு செய்தவராவார். என அபூ ஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவித்தார்.
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:
நினைவில் கொள்க! நீங்கள் ஒவ்வொரு வரும் பொறுப்பாளியே. உங்களில் ஒவ்வொருவரும் தத்தம் பொறுப்பிலுள்ளவை பற்றி (மறுமையில்) விசாரிக்கப்படுவீர்கள். ஆட்சித் தலைவர் மக்களின் பொறுப்பாளராவார். அவர் தம் குடிமக்கள் குறித்து விசாரிக்கப்படுவார்.
ஆண், தன் குடும்பத்தாருக்குப் பொறுப்பாளன் ஆவான். அவன், தன் பொறுப்புக்குட்பட்டவர்கள் குறித்து விசாரிக்கப்படுவான். பெண், தன் கணவனின் வீட்டாருக்கும், அவனுடைய குழந்தைக்கும் பொறுப்பாளி ஆவாள். அவள் அவர்கள் குறித்து விசாரிக்கப்படுவாள். ஒருவரின் பணியாள் தன் எசமானின் செல்வத்திற்குப் பொறுப்பாளியாவான். அவன் அது குறித்து விசாரிக்கப்படுவான்.
நினைவில் கொள்க! உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளியே! உங்களில் ஒவ்வொருவரும் தத்தம் பொறுப்புக்குட்பட்டவை குறித்து விசாரிக்கப்படுவீர்கள்.
முஹம்மத் இப்னு ஜுபைர் இப்னி முத்யிம் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் அறிவித்தார்கள்:
நான் குறைஷியரின் தூதுக் குழுவில் ஒருவனாக முஆவியா ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம் இருந்தபோது அவர்களுக்கு, அப்துல்லாஹ் இப்னு அம்ர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள், ‘விரைவில் கஹ்தான் குலத்திலிருந்து அரசர் ஒருவர் தோன்றுவார்’ என்று அறிவிப்பதாகச் செய்தி எட்டியது. உடனே அவர்கள் கோபம் கொண்டு எழுந்து நின்று அல்லாஹ்வை அவனுடைய தகுதிக்கேற்ப போற்றிப் புகழ்ந்துவிட்டுக் கூறினார்கள்.
இறைவனை துதித்த பின் கூறுகிறேன்: உங்களில் சில பேர் அல்லாஹ்வின் வேதத்திலும் இல்லாத, இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடமிருந்து அறிவிக்கவும் படாத செய்திகளைச் சொல்கிறார்கள் என்று எனக்குத் தகவல் கிடைத்துள்ளது. அவர்கள் உங்களிடையேயுள்ள அறிவீனர்கள் ஆவர். நீங்கள் உங்களை வழிதவறச் செய்துகிற வெற்று நம்பிக்கைகளை வளர்த்துக்கொள்ள வேண்டாமென உங்களை எச்சரிக்கிறேன். ஏனெனில், இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ‘குறைஷியரிடையே தான் இந்த ஆட்சி அதிகாரம் இருந்துவரும். அவர்களைப் பகைத்துக் கொள்ளும் எவரையும் அல்லாஹ் முகம் குப்புறக் கவிழ்க்காமல் விடமாட்டான். அவர்கள் மார்க்கத்தை நிலைநாட்டிவரும் வரை இந்நிலை நீடிக்கும்’ என்றார்கள்.
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:
இந்த ஆட்சியதிகாரம் குறைஷியரிடையே தான் இருந்துவரும்; அவர்களில் இருவர் எஞ்சியிருக்கும் வரை. என இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு அறிவித்தார்.
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:
இரண்டு பண்புகளில் தவிர வேறு எதிலும் பொறாமை கொள்ளாகாது. ஒருவர் தமக்கு இறைவன் அளித்த செல்வத்தை அறப்பணியில் அர்ப்பணித்தல். மற்றொருவர் தமக்கு இறைவன் அளித்த ஞானத்தால் (மக்களின் பிரச்சினைகளுக்குத்) அதைக் கற்பித்துக்கொண்டும் இருத்தல். என அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் ரளியல்லாஹு அன்ஹு அறிவித்தார்.
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:
உலர்ந்த திராட்சை போன்ற (சுருங்கிய) தலையுடைய அபிசீனிய (கறுப்பு நிற) அடிமையொருவர் உங்களுக்குத் தலைவராக ஆக்கப்பட்டாலும் (அவரின் சொல்லைக்) கேளுங்கள்; (அவருக்குக்) கீழ்ப்படியுங்கள். என அனஸ் ரளியல்லாஹு அன்ஹு அறிவித்தார்.
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:
தம் (ஆட்சித்) தலைவரிடம் (மார்க்க விஷயத்தில் குறை) எதையேனும் கண்டு அதை வெறுப்பவர் பொறுமையைக் கடைப்பிடிக்கட்டும். ஏனெனில், ஒருவர் (இஸ்லாமியக்) கட்டமைப்பிலிருந்து ஒரு சாண் அளவுக்குப் பிரிந்து இறந்தாலும் அவர் அறியாமைக் கால மரணத்தையே தழுவுகிறார். என இப்னு அப்பாஸ்ரளியல்லாஹு அன்ஹு அறிவித்தார்.
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:
(இறைவனுக்கு) மாறு செய்யும்படி கட்டளையிடப்படாத வரை, ஒரு முஸ்லிம் தமக்கு விருப்பமான விஷயத்திலும் விருப்பமில்லாத விஷயத்திலும் (தலைமையின் கட்டளையைச்) செவியேற்பதும் (அதற்குக்) கீழ்ப்படிவது கடமையாகும். (இறைவனுக்கு) மாறு செய்யும்படி கட்டளையிடப்பட்டால் (அதைச்) செவியேற்பதோ (அதற்குக்) கட்டுப்படுவதோ கூடாது.
அபூ ஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு மற்றும் ஸைத் இப்னு காலித் அல்ஜுஹனீ ரளியல்லாஹு அன்ஹு ஆகியோர் அறிவித்தார்கள்:
கிராமவாசி ஒருவர் (நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம்) வந்து, ‘இறைத்தூதர் அவர்களே! எங்களிடையே அல்லாஹ்வின் சட்டப்படி தீர்ப்பளியுங்கள்’ என்றார். அவரின் எதிரி (பிரதிவாதி) எழுந்து, ‘இவர் சொல்வது உண்மைதான்; எங்களிடையே அல்லாஹ்வின் சட்டப்படி தீர்ப்பளியுங்கள்’ என்று கூறினார்.
அந்தக் கிராமவாசி ‘என் மகன் இவரிடம் வேலைக்காரனாக இருந்தான். அப்போது அவன் இவருடைய மனைவியுடன் விபசாரம் செய்துவிட்டான். (அதற்குத் தண்டனையாக) ‘உன் மகனைக் கல்லால் அடித்துக் கொல்ல வேண்டும்’ என்று என்னிடம் மக்கள் சொன்னார்கள். எனவே, நான் (இந்த தண்டனையிலிருந்து அவனைக் காப்பாற்றுவதற்காக) அதற்கு பதில் நூறு ஆடுகளையும் ஓர் அடிமைப் பெண்ணையும் ஈட்டுத் தொகையாக வழங்கினேன். பிறகு நான் அறிஞர்களிடம் விசாரித்தபோது, ‘என் மகனுக்கு நூறு சாட்டையடிகளும் ஓராண்டுக் காலத்திற்கு நாடு கடத்தலும் தான் தண்டனையாகத் தரப்படவேண்டும்’ என்று கூறினார்’ என்றார்.
இதைக் கேட்ட நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ‘உங்கள் இருவருக்குமிடையே நான் அல்லாஹ்வின் சட்டப்படியே தீர்பபளிக்கிறேன்: அந்த அடிமைப் பெண்ணும் (நூறு) ஆடுகளும் உம்மிடமே திருப்பித் தரப்பட வேண்டும். உம்முடைய மகனுக்கு நூறு கசையடிகளும் ஓராண்டுக் காலத்திற்கு நாடு கடத்தும் தண்டனையும் தரப்படவேண்டும்’ என்று கூறிவிட்டு, (தமக்கருகிலிருந்த அஸ்லம் குலத்தாரான உனைஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்களைப் பார்த்து) ‘உனைஸே! நீங்கள் இந்த மனிதரின் மனைவியிடம் சென்று, (அவள் தன் குற்றத்தை ஒப்புக்கொண்டால்,) அவளுக்குக் கல்லெறி தண்டனை வழங்குங்கள்’ என்றார்கள். அவ்வாறே உனைஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அப்பெண்ணிடம் சென்று (குற்றத்தை ஒப்புக்கொண்ட) அவளுக்குக் கல்லெறி தண்டனை நிறைவேற்றினார்கள்.
அபூ ஹுமைத் அஸ்ஸாஇதீ ரளியல்லாஹு அன்ஹு அறிவித்தார்:
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இப்னுல் லுதபிய்யா (அல்லது இப்னுல் உதபிய்யா ரளியல்லாஹு அன்ஹு அவர்களை பனூ சுலைம் குலத்தாரின் ஸகாத் பொருட்களை வசூலிக்கும் அதிகாரியாக நியமித்தார்கள். (அவர் பனூசுலைம் குலத்தாரிடம் சென்று ஸகாத் பொருட்களை வசூலித்துக் கொண்டு) இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்தபோது அவரிடம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கணக்குக் கேட்டார்கள்.
அப்போது இப்னுல் லுதபிய்யா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள், ‘இது உங்களுக்காக உள்ளது; இது எனக்கு வழங்கப்பட்ட அன்பளிப்பு’ என்றார்கள். உடனே இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ‘நீங்கள் (உங்களின் வாதத்தில்) உண்மையாளராக இருந்தால் நீங்கள் உங்கள் தந்தையின் வீட்டிலும் தாயின் வீட்டிலும் உட்கார்ந்து கொண்டு உங்களைத் தேடி அன்பளிப்பு வருகிறதா பாருங்கள்’ என்றார்கள்.
பிறகு இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எழுந்து நின்று மக்களுக்கு உரையாற்றினார்கள். அல்லாஹ்வைப் புகழ்ந்து போற்றிவிட்டு, ‘இறைவனைப் போற்றிய பின் கூறுகிறேன்: அல்லாஹ் என்னிடம் ஒப்படைத்துள்ள பணிகளில் சிலவற்றுக்கு உங்களில் சிலரை நான் அதிகாரிகளாக நியமிக்கிறேன். ஆனால், அவர் (போய்விட்டு) வந்து இது உங்களுக்கு; இது எனக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது என்று கூறுகிறாரே! அவர் வாய்மையான வராயிருந்தால் தம் தந்தையின் வீட்டிலும் தாயின் வீட்டிலும் உட்கார்ந்துகொண்டு தம்மைத் தேடி அன்பளிப்பு வருகின்றதா? என்று பார்க்கட்டுமே! அல்லாஹ்வின் மீதாணையாக! நீங்கள் யாரும் அதிலிருந்து எதையும் முறையின்றி எடுக்கக் கூடாது அப்படி எடுப்பவர் மறுமைநாளில் அதைச் சுமந்தபடியே அல்லாஹ்விடம் வருவார்.
அறிக! (அன்று) அல்லாஹ்விடம் கத்தும் ஒட்டகத்துடனும் மாட்டுடனும் ஆட்டுடனும் ஒருவர் வருவதை நிச்சயம் அறிவேன்’ என்றார்கள். பின்னர், நாங்கள் நபியவர்களுடைய அக்குள்களின் வெண்மையைப் பார்க்கும் அளவிற்குத் தம் இரண்டு கைகளையும் உயர்த்தி, ‘(இறைவா!) நான் எடுத்துரைத்து விட்டேனா?’ என்று (வானை அண்ணாந்து நோக்கிக்) கேட்டார்கள்.
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ் ஓர் இறைத்தூதரை அனுப்பினாலும் சரி, ஒருவரை (ஆட்சிக்கு)ப் பிரதிநிதியாக ஆக்கினாலும் சரி அவர்களுக்கு இரண்டு நெருக்கமான ஆலோசகர்கள் அவசியம் இருப்பார்கள். ஓர் ஆலோசகர், அவரை நன்மை செய்யும்படி ஏவி அதற்குத் தூண்டுகோலாக இருப்பார். மற்றோர் ஆலோசகர், அவரைத் தீமை புரியும்படி ஏவி அதற்குத் தூண்டுகோலாக இருப்பார். அல்லாஹ் (குற்றங்களிலிருந்து) யாரைப் பாதுகாத்தானோ அவரே மாசற்றவராக இருப்பார். என அபூ ஸயீத் அல்குத்ரீ ரளியல்லாஹு அன்ஹு அறிவித்தார்.
இதே ஹதீஸ் வேறு பல அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அப்துல்லாஹ் இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு அறிவித்தார்:
நாங்கள் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் (அவர்களின் கட்டளைகளைச்) செவியேற்றுக் கீழ்ப்படிந்து நடப்போம் என உறுதிமொழி (பைஅத்) அளிக்கும்போது அவர்கள், ‘உங்களால் முடிந்த விஷயங்களில்’ என்று சொல்வது வழக்கம்.
Posted in புகாரி