மோடி மஸ்த்தான் ஆட்சியின் யோக்கிதை….
‘மிகச் சிறந்த நிர்வாகி. வெளிப்படையான, ஊழலற்ற ஆட்சியை நடத்துகிறார். மிகவும் எளிமையானவர். மாநிலத்தை, தொழில் துறையில் முன்னேற்றப்பாதையில் அழைத்துச் செல்கிறார். எப்பேர்ப்பட்ட முதல்அமைச்சர் பாருங்கள். அவரைப் போலத்தான் ஆட்சி நடத்த வேண்டும்’
‘ஆயிரக்கணக்கான முஸ்லிம்களைக் கொன்று குவிக்கக் காரணமாயிருந்தார். இந்து மதவெறியர்களின் கொலைவெறித் தாண்டவம் முடியும் வரை எதுவும் செய்யக்கூடாது என காவல்துறைக்கு ஆணையிட்டார். நீதியை வளைத்து, உண்மையைப் புதைத்து, கொலைகாரர்களைச் சுதந்திரமாக நடமாட விட்டார்’
மேலே சொன்ன இரண்டுமே ஒருவரைப் பற்றிய செய்திதான். அவர் வேறு யாருமன்று, குஜராத் முதல்வர் நரேந்திர மோடிதான். ஒரே மனிதரைப் பற்றி, இரண்டுவிதமான செய்திகள், அதுவும் கொஞ்சமும் பொருத்தமில்லாத, முற்றிலும் முரண்பட்ட கோணத்தில். இரண்டில் எது உண்மை, இதில் மறைந்திருக்கும் அரசியல் என்ன?
2007, நவம்பர் 3ஆம் நாளிட்ட தெகல்கா புலனாய்வு வார இதழ் மோடியின் மதவெறியை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தது. 2002 பிப்ரவரியில் நடந்த கலவரம், முதலமைச்சர் மோடி மற்றும் பிஜேபி தலைமையிலான நடுவண் அரசின் ஆதரவுடன், திட்டமிட்டு நடத்தப்பட்டது என்பதை அந்தப் புலனாய்வு இதழ் மறுக்க முடியாத சான்றுகளுடன் முன்வைத்தது. இந்துத்துவக் கலவரக்காரர்களின் வாயிலிருந்தே அத்தனை உண்மைகளையும் காட்சிப் பதிவுகளாக வெளியிட்டது. இருந்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. அடுத்து வந்த காங்கிரஸ் தலைமையிலான நடுவண் அரசும் எந்த நடவடிக்கையையும் எடுக்க முன் வரவில்லை.
இந்நிலையில், குஜராத் உயர் காவல்துறை அதிகாரி சஞ்சீவ் ராஜேந்திர பட், உச்ச நீதிமன்றத்தில் மோடிக்கு எதிராக ஒரு வாக்குமூலத்தைப் பதிவு செய்திருக்கிறார். “இந்துக்கள் கோபத்தை வெளிப்படுத்த அனுமதியுங்கள். அவர்கள் முஸ்லிம்களுக்குப் பாடம் புகட்டட்டும்” என்று முதலமைச்சர் நரேந்திர மோடி எங்களுக்கு உத்தரவிட்டார் என அந்த வாக்குமூலத்தில் சஞ்சீவ் பட் கூறியிருக்கின்றார். இவர் ஏதோ ஊகத்தின் அடிப்படையிலோ, கற்பனையாகவோ இதைச் சொல்லவில்லை. 2002 பிப்ரவரி 27 ஆம் நாள் குஜராத் முதல்வர் மோடி, தனது வீட்டில் கூட்டிய காவல்துறை உயரதிகாரிகளின் அவசரக்கூட்டத்தில் கலந்து கொண்டவர்களுள் ஒருவர் இந்த சஞ்சீவ் பட். அன்று தங்களுக்கு முதல்வர் இட்ட உத்தரவைத்தான் உச்சநீதிமன்றத்தில் பதிவு செய்திருக்கிறார் சஞ்சீவ் பட். அதோடு இவர் அக்கூட்டத்தில் கலந்து கொண்டார் என்பதை, இவரது வாகன ஓட்டியான, தாராசந்த் யாதவ் மீண்டும் உறுதிப்படுத்தியிருக்கிறார். இவற்றின் மீது என்ன விசாரணை மேற்கொள்ளப்படும், மோடிக்கு என்ன தண்டனை விதிக்கப்படும் என்பதெல்லாம், உச்சநீதிமன்றத்தின் நேர்மைக்கான வினாக்கள். இதெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும்.
சிறுபான்மை முஸ்லிம்களுக்கு எதிராக மதவெறியைக் கட்டவிழ்த்துவிட்ட பெரும்பான்மை இந்துக்களின் முதல்வராக மட்டுமே செயல்பட்டவர் நரேந்திர மோடி. இப்படிப்பட்ட மதவெறியரைத் தான், காந்தியவாதி என்று சொல்லிக்கொள்கின்ற அன்னா ஹசாரே முதல் தமிழ்நாட்டின் சீமான் வரை முன்மாதிரி முதல்வர் என்று போற்றுகிறார்கள். மோடிக்கு அவர்கள் சூட்டிய புகழாரம் தான் கட்டுரையின் முதல் பத்தி.
அன்னா ஹசாரே மோடி புகழ் பாடியதற்குக் கடும் எதிர்ப்பு எழுந்திருக்கிறது. அதுவும் குஜராத் மாநிலத்தின் சமூக ஆர்வலர்களிடமிருந்தே அந்த எதிர்ப்பு வெளிப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத் தக்கது.(தி ஹிண்டு ஏப்ரல் 13, 2011)
மோடியின் கிராமப்புற மேம்பாட்டுக்கான மாதிரிகள், ஊடகங்கள் சொல்வது போலத் தொழில் முன்னேற்றம், வளர்ச்சிப் பாதையில் குஜராத் என்பதெல்லாம் தகரத்திற்குத் தங்க முலாம் பூசியது போன்றது என்பது அவர்களின் கூற்று. குஜராத்தின் வளர்ச்சி என்பது மேல்தட்டு மக்கள், பெரும் தொழிலதிபர்கள் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களின் வளர்ச்சிதானே ஒழிய, பெரும்பான்மை கிராமங்களின் வளர்ச்சியாக இல்லை. குஜராத்தின் பெரும்பான்மை சமூக சக்திகள், தங்களின் குறைகளை மறைக்க இந்த ‘குஜராத் முன்னேறுகிறது’ என்கிற முகமூடியை பயன்படுத்திக் கொள்கின்றன என்கின்றனர் அவர்கள்.
இந்தக் கருத்துகளைத் தனித்தனியாக யாரும் சொல்லவில்லை. ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் கையெழுத்திட்டு, கூட்டறிக்கையாகவே வெளியிட்டிருக்கிறார்கள். அந்தக் கூட்டறிக்கையில் கையெழுத்திட்டவர்கள் சாதாரணமானவர்கள் அல்ல. சமூகத்திற்காகப் பணியாற்றுபவர்கள். சமூக உரிமைகளுக்கான மக்கள் கூட்டமைப்பின் மாநிலத் தலைவர் ஜே.எஸ்.பந்துக்வாலா, மனித உரிமைகள் ஒருங்கமைப்பின் இயக்குனர் பிரசாந்த் மற்றும் சமூக ஆர்வலர்கள் ரோகித் பிரஜாபதி, சாராபாய், நந்தினி மஞ்ரேகர் ஆகியோர் அந்தக் கூட்டறிக்கையில் கையெழுத்திட்டுள்ளனர். அன்னா ஹசாரே மோடியை ஆதரித்துப் பேசியதைத் தொடர்ந்து மனித உரிமை அமைப்புகளும், சமூக ஆர்வலர்களும் அவர் தலைமையிலான ஊழலுக்கு எதிரான இயக்கத்திலிருந்து விலகப்போவதாகவும் எச்சரித்திருக்கின்றனர். மேலும் அவர்கள் குஜராத்தின் பின்னோக்கிய வளர்ச்சியை அன்னா ஹசாரே நேரில் வந்து பார்த்துவிட்டுப் பிறகு தன்னுடைய கருத்தை விளக்கவேண்டும் என்றும் கூறியிருக்கின்றனர்.
மோடி தலைமையிலான அரசு விவசாயிகள், பெண்கள், உழைக்கும் வகுப்பார், தலித்துகள், பழங்குடியினர், சிறுபான்மையினர் மற்றும் விளிம்புநிலையில் உள்ள அனைத்து தரப்பினருக்கும் எதிரானது என்றும் அந்தக் கூட்டறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
சரி, இப்போது செய்திக்கு வருவோம். ஊடகங்கள் வெளியிடும் செய்திகள் இவற்றிற்கு நேர்மாறாக இருக்கின்றன. அவை குஜராத்தின் தொழில் வளர்ச்சியையும், மோடியின் நிர்வாகத்தையும் வானளாவப் புகழ்ந்து செய்திகளை வெளியிடுகின்றன. காரணம் பெரிய கட்டமைப்புகளைக் கொண்ட ஊடகங்கள் எல்லாம் பன்னாட்டு நிறுவனங்களின் கையில் இருக்கின்றன. மோடியின் அரசு பன்னாட்டு நிறுவனங்களுக்குத் தாராளம் காட்டி வருகிறது. டாடா கார் தொழிற்சாலை உள்ளிட்ட பெரிய தொழில்நிறுவனங்களுக்கு எல்லாவற்றையும் இலவசமாகத் தந்திருக்கிறது. இதனால் கிராமப்புற விவசாயம் பெருமளவில் பாதிக்கப்பட்டிருக்கிறது. இவைதான் குஜராத்தின் உண்மை நிலை. இதனை இங்கிருந்து கொண்டு நாம் சொல்லவில்லை, அங்கே மக்களோடு மக்களாகக் கலந்து வாழ்ந்து, அவர்களுக்காகப் பணியாற்றிக் கொண்டிருக்கும் சமூக ஆர்வலர்கள் சொல்கின்றனர், பெருமுதலாளிகளின் கைப்பாவைதான் முதல்வர் மோடி என்று.
ஜெர்மானியர்களை யூதர்களுக்கு எதிராக மூளைச் சலவை செய்த, ஹிட்லரின் படுகொலைகளை நியாயப்படுத்திய கோயபல்சின் ‘தி அட்டாக்’ என்ற நாளிதழின் பணியைத்தான் இப்போது இந்த ஊடகங்கள் செய்துவருகின்றன. பளபளப்பான பக்கங்களை மட்டுமே காட்டி, மோடியின் மதவெறி முகத்தை மறைத்து, மக்களிடையே ‘ரொம்ப நல்லவர் மோடி’யின் மாய பிம்பத்தை உலவவிட் டிருக்கின்றன.
‘அங்கு இருக்கின்ற இசுலாமியர்களும் அமைதியாக இருக்கின்றனரே! 2002 கலவரத்திற்குப் பிறகும், மோடியைத்தானே மீண்டும் முதல்வராகத் தேர்ந்தெடுத்திருக்கின்றனர். நிர்வாகத் திறமை மிக்கவர் மோடி என்பதால்தானே, அனைத்தையும் மறந்துவிட்டு, மீண்டும் அவரையே தேர்ந்தெடுத்திருக்கின்றனர் ’ என்று ஒரு பரப்புரை, தமிழ்நாட்டிலும் நடந்துவருகிறது. அரசியலில் வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கின்ற அளவிற்கு, அங்கே சிறுபான்மையினரான இசுலாமியர்களின் வாக்கு வங்கி இல்லை. எதிர்த்துக் குரல் கொடுக்கின்ற அளவிற்கு, அவர்களுக்கு ஆதரவான வலிமையான அமைப்புகளும் அங்கு இல்லை. ஏற்கனவே மதப் பெரும்பான்மையினரால், கொலைவெறித் தாக்குதலுக்கு ஆளான இசுலாமியர்கள், அச்சத்தின் பிடியில் ஆட்பட்டுக் கிடக்கின்றனர். இதுதான் உண்மை.
சு.சாமி, சோ.சாமி போன்ற ஜெயலலிதா வகையறாக்கள் மோடிக்குத் தலைவாழை இலைபோட்டு விருந்து வைப்பதும், விழா நாயகனாக்கித் தூக்கிப் பிடிப்பதும் ஏன் என்று புரிந்து கொள்ள அகராதியைப் புரட்ட வேண்டிதில்லை. அது அவாள்களின் இனப்பாசம். ஆனால் நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமானும் மோடியைப் போற்றிப் புகழ்கிறாரே எப்படி என்று ஒரு கேள்வி எழுகிறது. ஒரு வேளை, ஜெயலலிதாவையே ஆதரித்து, இரட்டை இலைக்கு வாக்குக் கேட்கும்போது, மோடியைப் புகழ்வதில் என்ன வந்துவிடப் போகிறது என்று அவர் நினைத்திருக்கலாம்.
தவறு செய்தவன் தனி மனிதாக இருந்தால், அவன் மனம் திருந்தும் நிலையில் மன்னிக்கலாம், ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் நரேந்திர மோடி என்பவர் தனி மனிதர் அல்லர். இந்துத்துவாவின் அடையாளம். அகண்ட பாரதம் காணத் துடிக்கும், பிஜேபி தலைவர்களில் ஒருவர். எல்லாவற்றிற்கும் மேலாக ஒரு மாநிலத்தின் முதல்வர். அங்குள்ள ஒட்டுமொத்த மக்களின் தன்மான நல்வாழ்க்கைக்குப் பொறுப்பானவர். அப்படிப்பட்டவர் செய்துள்ள மனித உரிமை மீறல்களை மறைத்து, மேலோட்டமாகப் பார்த்துக் கருத்துக்களைச் சொல்வது எப்படி சரியாகும்?
முடக்கி வைக்கப்பட்ட உண்மைகளை மீண்டும் தோண்டி எடுக்க, நல்லதொரு வாய்ப்பை சஞ்சீவ் பட் ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார். இதற்குப் பிறகும், மோடியே நேரடியாக வந்து சொன்னால்தான் நடவடிக்கை எடுப்போம் என்று சட்டமும், நீதிமன்றமும் கருதினால்… குஜராத்தின் தற்காலிக அமைதி இப்படியே காலத்திற்கும் நீடிக்கும் என்று சொல்லுவதற்கில்லை.
நன்றி: கட்டுரையாளர் இரா.உமா, கீற்று இணையம்