அனஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்: அபூதல்ஹா ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் மகன் ஒருவர் நோய்வாய்ப்பட்டிருந்தார். அபூதல்ஹா அவர்கள் (ஏதோ ஒரு பணிக்காக) வெளியே சென்றிருந்தார்கள். அப்பொழுது அந்தச் சிறுவர் மரணம் அடைந்தார். அபூதல்ஹா ரளியல்லாஹு அன்ஹு திரும்பி வந்தபொழுது கேட்டார்கள்: ‘என் மகனின் நிலை என்ன?’
அதற்கு ‘அவர் முன்னைவிடவும் மிக அமைதியாக இருக்கிறார்’ என்று சிறுவரின் தாயாராகிய உம்மு ஸுலைம் ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் சொன்னார்கள்;. பிறகு இரவு உணவை அவர்கள் முன்னால் வைத்தார்கள். அபூ தல்ஹா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் உணவு உட்கொண்டார்கள். பிறகு மனைவியுடன் தாம்பத்திய உறவும் கொண்டார்கள். அவர்கள் ஓய்வு பெற்றபொழுது உம்மு ஸுலைம் ரளியல்லாஹு அன்ஹா சொன்னார்கள்:
“எல்லோரும் சிறுவனை அடக்கம் செய்யுங்கள்!”
பொழுது விடிந்ததும் அபூதல்ஹா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்தார்கள். அவர்களிடம் செய்தி சொன்னார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கேட்டார்கள்:
‘இன்று இரவு நீங்கள் வீடு கூடினீர்களா?’
அதற்கு அபூ தல்ஹா “ஆம்” என்றார்கள்.
அப்பொழுது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ‘யா அல்லாஹ்! இவ்விருவருக்கும் அருள்பாக்கியம் புரியாயாக!‘ என்று பிரார்த்தனை செய்தார்கள் – அவ்வாறே உம்மு ஸுலைம் ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் ஓர் ஆண் மகனைப் பெற்றெடுத்தார்கள்.
அனஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகிறார்கள்:’அபூ தல்ஹா அவர்கள் என்னிடம் குழந்தையைத் தூக்கிக்கொண்டு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் செல்லும்’ என்று சொன்னார்கள்! அதனுடன் சில பேரீத்தம் பழங்களையும் அனுப்பினார்கள்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஏதேனும் உண்டா, அதனிடம்? என்று கேட்டார்கள். ‘ஆம்! பேரீத்தம்பழங்கள் உள்ளன’ என்று சொன்னார்கள் அபூதல்ஹா. அவற்றை எடுத்துத் தங்கள் வாயில் போட்டு மென்றார்கள் நபியவர்கள். பிறகு தங்கள் வாயிலிருந்து எடுத்து குழந்தையின் வாயில் வைத்தார்கள். பிறகு அதை அதன் மேல் வாயிலும் இரு உட்பகுதிகளிலும் தடவினார்கள். அக்குழந்தைக்கு அப்துல்லாஹ் என்று பெயரிட்டார்கள்’ (புகாரி, முஸ்லிம்)
புகாரியின் மற்றோர் அறிவிப்பில் வருகிறது: இப்னு உயைனா ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் அறிவித்துள்ளார்கள்: அன்ஸார்களில் ஒருவர் என்னிடம் சொன்னார்: நான் ஒன்பது பிள்ளைகளைப் பார்த்துள்ளேன். அனைவரும் குர்ஆனை கற்றறிந்த அறிஞராகத் திகழ்ந்தார்கள். அதாவது அந்த ஒன்பது பேரும் (உம்மு ஸுலைமுக்கு பிறந்த) இந்த அப்துல்லாஹ்வின் பிள்ளைகளே!
ஸஹீஹ்முஸ்லிமின் மற்றோர் அறிவிப்பில் வந்துள்ளது: உம்மு ஸுலைம் – அபூ தல்ஹா ரளியல்லாஹு அன்ஹூம் தம்பதியினரின் ஆண் குழந்தை ஒன்று இறந்து விட்டது. அப்பொழுது உம்மு ஸுலைம் ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் தம் குடும்பத்தினரிடம் சொன்னார்கள்;:
‘அபூ தல்ஹாவிடம் அவருடைய மகனைப் பற்றி நீங்கள் எதுவும் சொல்லாதீர்கள். நானே அவரிடம் அவ்விஷயத்தைச் சொல்வேன்!’
அபூ தல்ஹா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் வந்தார்கள். அவர்கள் முன்னால் இரவு உணவை வைத்தார்கள் உம்மு ஸுலைம் அவர்கள். அபூ தல்ஹா உணவு – பானங்களை உட்கொண்டார். பிறகு உம்மு ஸுலைம் ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் அபூ தல்ஹாவுக்காக தம்மை அலங்கரித்தார்கள். அதற்கு முன்பு தம்மை அலங்கரித்ததை விடவும் அழகாக! அபூ தல்ஹா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் உம்மு ஸுலைமுடன் தாம்பத்திய உறவு கொண்டார்கள். -இவ்வாறு அபூ தல்ஹா ரளியல்லாஹு அன்ஹு நன்றாக உணவு உட்கொண்டு தம்முடன் உடலுறவும் கொண்ட பிறகு உம்மு ஸுலைம் ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் சொன்னார்கள்:
‘அபூ தல்ஹாவே! உங்கள் கருத்து என்ன? ஒருகூட்டம் தங்களது பொருளொன்றை ஒருவீட்டாரிடம் இரவலாகக் கொடுத்து வைத்தார்கள்., பிறகு தங்களது பொருளைத் திருப்பிக் கொடுக்குமாறு கேட்கும்பொழுது தர முடியாது என்று சொல்லும் உரிமை அந்த வீட்டாருக்கு உண்டா?’
‘கிடையாது’
‘(அவ்வாறாயின்) உங்கள் மகன் விஷயத்தில் நீங்கள் பொறுமை கொண்டு அல்லாஹ்விடம் கூலியை எதிர்பார்த்திருங்கள்!’
அப்பொழுது அபூ தல்ஹா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கோபம் கொண்டார்கள். சொன்னார்கள்: ‘என்னிடம் முன்னரே எதுவும் சொல்லாமல் இருந்துவிட்டு நான் இப்படி இப்படி எல்லாம் செய்து பெருந்துடக்கை அடைந்த பிறகு இப்பொழுது என் மகனைப் பற்றி சொல்கிறாயே!’ (அதன் பிறகு) அபூ தல்ஹா அவர்கள் புறப்பட்டு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து நடந்த செய்தியை அவர்களிடம் தெரிவித்தார்கள்.
அப்பொழுது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ‘உங்கள் இருவரது இந்த இரவில் அல்லாஹ் அருட்பாக்கியம் புரிவானாக!’ என்று பிரார்த்தனை செய்தார்கள்.
(நபிமொழியின் அறிவிப்பாளர் அனஸ் ரளியல்லாஹு அன்ஹு தொடர்ந்து கூறுகிறார்கள்:) அவ்விதமே உம்மு ஸுலைம் ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் கர்ப்பம் தரித்தார்கள்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒரு பயணம் புறப்பட்டார்கள். (தம் கணவர் அபூ தல்ஹாவுடன்) உம்மு ஸுலைம் அவர்களும் அந்தப் பயணத்தில் சென்றார்கள். நபியவர்களின் வழக்கம் என்னவெனில், பயணத்திலிருந்து திரும்பினால் இரவு நோத்தில் வந்து ஊரினுள் நுழைய மாட்டார்கள்! அந்தப் பயணக்கூட்டம் மதீனாவை நெருங்கியபொழுது உம்மு ஸுலைம் ரளியல்லாஹு அன்ஹா அவர்களுக்குப் பிரசவ வேதனை ஏற்பட்டது. அதனால் அபூதல்ஹா ரளியல்லாஹு அன்ஹு அவர்களும் உம்மு ஸுலைம் ரளியல்லாஹு அன்ஹா அவர்களுடன் தடைபட்டிருக்க வேண்டியதாகி விட்டது. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தொடர்ந்து சென்று கொண்டிருந்தார்கள்.
(அறிவிப்பாளர் சொல்கிறார்கள்:) அப்பொழுது அபூ தல்ஹா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் பிரார்த்தனை செய்தார்கள்: ‘யா அல்லாஹ்! நபிகளார் அவர்கள் (மதீனாவை) விட்டும் கிளம்பினால் நானும் அவர்களுடன் கிளம்புவதும் அவர்கள் மதீனாவில் நுழைந்தால் நானும் அவர்களுடன் மதீனா வந்தடைவதும் எனக்கு மிகவும் பிரியமான ஒன்று என்பதை நீ அறிவாய்! இப்பொழுது நீ அறியக்கூடிய இந்தக் காரணத்தால் நான் இங்கு தடைபட்டு விட்டேனே!’
உம்மு ஸுலைம் ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் சொன்னார்கள்: ‘அபூ தல்ஹாவே! இப்பொழுது பிரசவ வேதனையை நான் உணரவில்லை. எனவே நீங்களும் புறப்படுங்கள்’
அவ்வாறே அனைவரும் புறப்பட்டு வந்தோம். இருவரும் மதீனா வந்தபொழுது உம்மு ஸுலைம் ரளியல்லாஹு அன்ஹா அவர்களுக்கு பிரசவவேதனை ஏற்பட்டது. ஓர்ஆண் குழந்தை பெற்றெடுத்தார்கள்!
அப்பொழுது என் தாயார் என்னிடம் சொன்னார்கள்: ‘அனஸே! யாரும் குழந்தைக்குப் பால் கொடுத்துவிடக் கூடாது., நீ அதனை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் கொண்டு செல்கிறவரையில்!’
காலையில் நான் குழந்தையைத் தூக்கிக்கொண்டு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்தேன். பிறகு முன்னர் சென்றபடி அனைத்து விவரமும் அனஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்களது அறிவிப்பில் உள்ளது.
தெளிவுரை
உம்மு ஸுலைம் ரளியல்லாஹு அன்ஹா அவர்கள், அறியாமைக்காலத்தில் மாலிக் பின் நள்ர் என்பவருக்கு வாழ்க்கைப் பட்டிருந்தார்கள். அவர்தான் அனஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்களுடைய தந்தை! நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இஸ்லாமிய அழைப்புப் பணியைத் தொடங்கியதும் உம்மு ஸுலைம் ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் இஸ்லாத்தை ஏற்றார்கள். தம் கணவரையும் அதன் பக்கம் அழைத்தார்கள்! தம் மகன் அனஸுக்கும் (லா இலாஹ இல்லல்லாஹு முஹம்மதுர் ரஸூலுல்லாஹ்) எனும் திருக்கலிமாவின் பொருள் விளக்கம் அளித்து நன்நெறிப்படுத்தத் தொடங்கினார்கள். ஆனால் மாலிக் பின் நள்ர் இஸ்லாத்தை ஏற்கவில்லை. மாறாக உம்மு ஸுலைமின் இஸ்லாமியப் பற்றுதலைக் குறித்து கோபமடைந்தார். பிறகு சிரியா தேசம் சென்ற அவர் அங்கேயே மரணம் அடைந்தார்!
அதன் பிறகுதான் உம்மு ஸுலைம் அவர்கள் அபூ தல்ஹாவை மணந்தார்கள். இந்த வகையில் அபூ தல்ஹா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அனஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு மாற்றாந் தந்தை ஆவார்.
அபூ தல்ஹா – உம்மு ஸுலைம் தம்பதிக்குப் பிறந்த ஓர் ஆண் மகனின் மரணம் குறித்தே இந்நபிமொழி பேசுகிறது.
அனைவரும் அவரை அபூ உமைர் என்று செல்லமாக அழைப்பார்கள். அவர் ஐந்தாறு வயது வரையில் நல்லாரோக்கியமாகவே இருந்தார். சில அறிவிப்புகளில் வருகிறது: சிறுவர் அபூ உமைர் குருவி ஒன்றை ஆசையோடு வளர்த்து வந்தார். அது ஒருநாள் செத்துவிடுகிறது! ஆசையாக வளர்த்த குருவி அகால மரணம் அடைந்துவிட்டதே என்று அபூ உமைர் கடுமையாக மனம் நொடிந்து போனார்! அதனை அறிந்த நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்கூட உம்மு ஸுலைமின் வீட்டுக்கு வந்து சிறுவர் அபூ உமைருக்கு ஆறுதல் கூறினார்கள். அப்பொழுது அவரது தலையை அன்பாகத் தடவிக் கொடுத்தவாறு கேட்டார்கள்:
‘என்னருமை உமைர்! என்னவாயிற்று நுஃகைர்!’ (நுஃகைர் என்றால் சிட்டுக் குருவி என்று பொருள்.)
பிணியுற்றுக் கடும் கஷ்டத்திற்குள்ளாகியிருந்த மகனுக்கருகே அமைதியே உருவாக அமர்ந்திருந்த உம்மு ஸுலைம் ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் பையன் அமைதியாகத்தானே படுத்திருக்கிறான் என்று நினைத்துக் கொண்டிருந்தார்! ஆனால் அது மரணத்தின் அமைதி என்பது பிறகுதான் தெரிய வந்தது! அப்பொழுது இதயமே நொறுங்கியது போன்றாகிவிட்டது அவர்களுக்கு! ஆனாலும் பொறுமை காத்தார்கள்! கவலையையும் துயரத்தையும் மென்று விழுங்கினார்கள். அந்தச் செய்தி கேட்டு அபூ தல்ஹா ரளியல்லாஹு அன்ஹு அவர்களும் அதிர்ச்சிக்குள்ளாகி விடக்கூடாது என்பதற்காக நயமான முறையில் அவருக்கு அறிவிக்கிறார்கள்!
‘அவன் முன்னைவிடவும் அமைதியாக இருக்கிறான்’
ஒருவகையில் உம்முஸுலைம் உரைத்தது உண்மையே! மனிதனுக்கு மரணத்திற்குப் பிறகுதானே ஆழ்ந்த அமைதி ஏற்படுகிறது! மரணத்தை விடவும் பெரிய அமைதி வேறென்ன இருக்க முடியும்!
உம்மு ஸுலைம் மேற்கொண்ட பொறுமை கண்டு நம் விழிகள் ஆச்சரியத்தால் அகல விரிகின்றன! எவ்வளவு பெரிய விவேகம் வேண்டும் இதற்கு! அதுவும் ஒருபெண்மணி இவ்வாறு செயல்பட்டுள்ளார்களெனில் பன்மடங்கு ஆச்சரியம்!
கணவரிடத்தில் விஷயத்தை வெளிப்படையாகச் சொல்லாமல் மறைத்தே -அதாவது பையன் முன்னைவிடவும் மிகஅமைதியாக இருக்கிறான் என்று சாடைமாடையாகக் கூறிய பாணியும் நமது சிந்தனைக்குரியது! அவ்வாறு பேசுவது கூடும் என்பது இந்நபிமொழியில் இருந்து தெரிகிறது.
அரபி இலக்கியத்தில் இதற்கு அத்- தௌரிய்யா (التورية)
இவ்வாறு பேசுவது கூடும் தான். ஆனால் ஒரு நலனை முன்னிட்டு அல்லது ஒருதீங்கை அதன் மூலம் தவிர்க்கலாமெனும் சூழ்நிலையில் அப்படிப் பேசலாம். தேவையின்றி அவ்வாறு பேசினால் கேட்பவர் அதைப் பொய்யென்று கருதவேண்டியது வரும். அதனால் அவரது மனம் புண்படும், தவறானதோர் எண்ணம் ஏற்படும்! ஆனால் ஏதேனும் தேவை இருந்தால் அவ்வாறு பேசுவதில் தவறில்லை.
ஓர் எடுத்துக்காட்டின் மூலம் இதனை இன்னும் தெளிவாகப் புரியலாம். ஒருதடவை ஒரு பெண்மணி ஏதோ ஒரு தேவைக்காக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்தார். அப்பொழுது நபியவர்கள், ‘உன் கணவர் யார்?’ எனக் கேட்டார்கள். ‘இன்னார்தான் என் கணவர்’ என்று அவள் சொன்னாள். ‘இரண்டு கண்களிலும் வெள்ளை இருக்குமே அவரா?’ என்று (ஏதோ ஒரு குறையைச் சுட்டுவதுபோல்) நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கேட்டார்கள்! பிறகு அந்தப்பெண் விரைவாக வீடு திரும்பி தன் கணவரின் கண்களையே கூர்ந்து கவனிக்கத் தொடங்கினாள். கணவர் கேட்டார்: ‘உனக்கு என்ன ஆனது?’ அப்பொழுது அந்தப்பெண் சொன்னாள்: உங்களுடைய இரண்டு கண்களிலும் வெள்ளை இருப்பதாக நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள். (அப்படி என்ன வித்தியாசம் உங்கள் கண்களில் என்றுதான் யோசித்துக் கொண்டிருக்கிறேன்) கணவர் சொன்னார்: ‘என்னுடைய கண்களில் கருப்பை விடவும் வெண்மை அதிகமாக இருப்பது தெரிகிறதா? அதைத்தான் நபிகளார் குறிப்பிட்டிருப்பார்கள்! – அப்பொழுதான் நபியவர்கள் சுட்டிக் காட்டிய நகைச்சுவையான பேச்சு அந்தப் பெண்ணுக்குப் புரிந்தது!
அவ்வாறு உம்மு ஸுலைம் ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறியதும் – பரவாயில்லை. நோயின் உழற்றல் எதுவுமின்றி மகன் நிம்மதியாய் உறங்கத்தான் செய்கிறார் எனக்கருதிக்கொண்டு வழமையான நடவடிக்கையை மேற்கொண்டார்கள் அபூ தல்ஹா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள். வெளியே சென்று வந்த களைப்பு நீங்கி நன்றாக உணவு உட்கொண்டு உம்மு ஸுலைம் ரளியல்லாஹு அன்ஹா அவர்களுடன் சந்தோஷமாக இருந்தார்கள். தாம்பத்திய உறவும் கொண்டார்கள்! அது வரையில் எதுவும் சொல்லாமல் எல்லாம் முடிந்த பிறகே மகன் மரணம் அடைந்த செய்தியைச் சொல்லி அவனை அடக்கம் செய்யுங்கள் என்றார்கள் உம்மு ஸுலைம் அவர்கள்!
காலையில் சிறுவனை அபூ தல்ஹா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அடக்கம் செய்யும் பொழுதே விஷயம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்குத் தெரியவந்தது! செய்தியைக் கேட்டதும் அவ்விருவருக்கும் குழந்தைப் பாக்கியம் வேண்டி நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பிரார்த்தனை செய்தது அன்புமகனின் பிரிவினால் அவ்விருவரும் மனம் கலங்கக்கூடாது என்பதற்காகவே!
அவ்வாறே ஓர் ஆண் குழந்தை பிறக்கவே அதற்கு அப்துல்லாஹ் என்று பெயர் சூட்டி அதன் அருட்பாக்கியத்திற்காகவும் பிரார்த்தனை செய்தார்கள் நபியவர்கள்.
அன்று பிறந்த அப்துல்லாஹ்வின் எதிர்கால வாழ்வு எப்படி இருந்தது என்பதும் கவனிக்கப்பட்டு அந்த விளக்கமும் இந்த அறிவிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது. ஆம்! மதீனாவாழ் முஸ்லிம்களில் ஒருவர் அந்த விவரத்தை அறிவித்துள்ளார். அன்று நபியவர்கள் எந்தக் குழந்தைக்காக அருட்பாக்கியம் வேண்டிப் பிரார்த்தனை செய்தார்களோ அந்த அப்துல்லாஹ்வுக்கு பிற்காலத்தில் ஒன்பது ஆண்மக்கள் பிறந்தார்கள். அவர்கள் ஒவ்வொருவரும் குர்ஆனைக் கற்றுத் தேர்ந்து பெரும் அறிஞர்களாய்த் திகழ்ந்தார்கள்! இது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் செய்த பிரார்த்தனையின் நற்பயனே அன்றி வேறென்ன!
இந்நபிமொழி மூலம் மேலும் பல விஷயங்கள் தெரியவருகின்றன. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பேரீத்தம் பழங்களை மென்று அதனைக் கையிலெடுத்து குழந்தையின் உள்வாயின் மேற்பகுதியிலும் அடிநாக்கிலும் தடவுவார்கள். அந்த முறைக்கு அரபியில் தஹ்னீக் என்பர்.
நபிகளாரின் உமிழ் நீரின் பாக்கியம் குழந்தைக்குக் கிடைக்க வேண்டும். அதுவே அதன் வயிற்றினுள் முதலில் செல்லவேண்டும் என்பது நோக்கமா? அல்லது அனைத்திற்கும் முதலில் பேரீத்தம் பழச்சாரும் சத்தும் குழந்தையின் வயிற்றுள் செல்லவேண்டும் என்பது நோக்கமா?
முந்தையதுதான் நோக்கமெனில் அது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு மட்டுமே சொந்தமான – பிரத்தியேகமான சிறப்புகளுள் ஒன்றாகும். வேறு யாரும் இது போன்று பேரீத்தம் பழங்களை மென்று குழந்தைக்கு தஹ்னீக் செய்ய வேண்டியதில்லை! ஏனெனில் நபியவர்கள் நீங்கலாக வேறு யாருடைய உமிழ் நீருக்கும் அந்த சிறப்பு கிடையாது!
இரண்டாவதுதான் நோக்கமெனில் அதாவது, பேரீத்தம் பழச்சாரும் சத்தும் குழந்தையின் வயிற்றில் முதலில் செல்ல வேண்டுமென்பது நோக்கம் எனில் ஒவ்வொரு குழந்தைக்கும் இதுபோல் தஹ்னீக் செய்ய வேண்டும் என்று நாம் சொல்லலாம்!
மேலும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பிரார்த்தனை செய்ததன் பயனாக அந்தக் குழந்தைக்கும் அதன் சந்ததிகளுக்கும் அல்லாஹ் பெரும் பாக்கியங்கள் அருளியது அல்லாஹ்வின் வல்லமைக்கான சான்றுகளில் ஒன்றே!
மேலும் குழந்தைகளுக்கு அப்துல்லாஹ் (அல்லாஹ்வின் அடிமை) என்றும் அப்துர் ரஹ்மான் (கருணைமிக்க இறைவனின் அடிமை) என்றும் பெயர் சூட்டுவது சிறப்பானது. விரும்பத்தக்கது என்பதும் இந்நபிமொழியில் இருந்து தெரிகிறது.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அருளினார்கள்: ‘உங்கள் பெயர்களிலேயே அல்லாஹ்வுக்குப் பிரியமானது அப்துல்லாஹ் என்பதும் அப்துர் ரஹ்மான் என்பதும் தான்’ (நூல்: முஸ்லிம்)
அழகிய பெயர்களைத் தேர்வு செய்து உங்கள் பிள்ளைகளுக்குச் சூட்டுவதன் மூலம் அல்லாஹ்விடம் நற்கூலியும் கிடைக்கும், உங்கள் பிள்ளைகளுக்கு நல்லுபகாரம் செய்தவர்களாகவும் நீங்கள் ஆகிறீர்கள்!
ஆனால் இன்று பெரும்பாலான மக்கள் தங்கள் பிள்ளைகளுக்கு நூதனமான பெயர்களைத் தேடுகிறார்கள். இதுவரையில் யாருக்குமே சூட்டப்படாத புதிய பெயர்கள் வேண்டுமாம்! அப்படி ஒரு பெயரைத் தேர்வு செய்யுங்கள் என்று கேட்கிறார்கள்!
இந்தப் போக்கு எதிர் காலத்தில் பிள்ளைகளின் பெரும் மனக் கஷ்டத்திற்கே வழிவகுக்கும்! எவ்வாறெனில் அந்த நூதனமான பெயரைக் கேட்போர் அனைவரும் இது என்ன பெயர்? இப்படியும் ஒரு பெயரா? என்று ஏளனமாகப் பேசும்பொழுது அது பிள்ளைகளின் மனத்தைப் புண்படுத்தும். அந்தப் பாவங்கள் உங்கள் மீதுதான் விழும்! ஏனெனில் அத்தகைய விநோதனமான பெயர்களைச் சூட்டியது நீங்கள்தானே!
இங்கே இன்னொன்றையும் குறிப்பிடுவது பயன்மிக்கதே! அதாவது, சிலர் புதிய பெயர்களைத் தேர்வு செய்வதாகச் சொல்லிக்கொண்டு இறை நிராகரிப்பாளர்களின் பெயர்களைத் தங்கள் பிள்ளைகளுக்குச் சூட்டுகின்றனர்! அல்லது நடிகர் – நடிகைகளின் பெயர்களைச் சூட்டுகின்றனர்! இது எவ்வளவு பெரிய அறியாமை! வெட்கக்கேடு! கேட்டால் இவர்கள் பிரபலங்கள். அதனால் அவர்களின் பெயர்களைப் பிள்ளைகளுக்குச் சூட்டுகிறோம் என்கிறார்கள்! இத்தகைய போக்கு குறித்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் செய்த எச்சரிக்கையைப் பாருங்கள்:
‘யார் பிற கூட்டத்தினரைப் போல் தங்களைப் பாவித்துக் கொள்கிறார்களோ அவர்கள் அந்தக் கூட்டத்தைச் சேர்ந்தவர்களே! ‘ (நூல்: அபூதாவூத், அஹ்மத்)
இன்னும் சிலர் மகான்களின் பெயர்களைச் சூட்டுவதில்தான் பாக்கியம் உள்ளதெனக் கருதுகின்றனர். பெரியார்களின் பெயர்களைச் சூட்டுவதில் தவறில்லைதான். ஆனால் அவையும் நல்ல பெயர்கள்தானா என்பதைப் பார்க்க வேண்டும். கண்டகண்ட பெயர்களிலெல்லாம் தர்ஹாக்கள் உள்ளன. நம் நாடுகளில்! அவையாவும் மகான்களின் பெயர்கள்தானே என்று சொல்லி அந்தப் பெயர்களைச் சூட்டுவது கூடாது!
வேறு சிலர் வெகு காலமாகக் குழந்தைப் பாக்கியம் இல்லாத நிலையில் ஏதேனும் மகானின் பெயரில் நேர்ச்சை செய்துகொண்டு குழந்தை பிறந்ததும் – அது ஆணானாலும் சரி, பெண்ணானாலும் சரியே அந்த மகானின் பெயரைக் குழந்தைக்குச் சூட்டும்பொழுது பிச்சை எனும் வார்த்தையையும் சேர்த்து மைதீன் பிச்சை, நாகூர்பிச்சை என்று சூட்டுகிறார்கள்! இது நமது ஈமான் – விசுவாசத்தையே பாழாக்கிவிடும் போக்காகும்! பிள்ளைகள் அல்லாஹ் நமக்களித்த பிச்சையே தவிர மகான்கள் அளித்த பிச்சை அல்ல!
பொறுமையின் சிகரமாய்த் திகழ்ந்த உம்மு ஸுலைம் ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் பிள்ளையின் மரணத்தினால் பதறிப் பரிதவித்து மனம்நொடிந்து உட்கார்ந்து விடக்கூடாது என்பதைக் கணவருக்கு நயமாக எடுத்துச் சொல்லிட ஒருகேள்வி கேட்டார்கள். அதுவும் நம் சிந்தனைக்குரியது! உயர் தத்துவத்தை விளக்கக் கூடியது!
‘அபூ தல்ஹாவே! உங்கள் கருத்து என்ன? ஒருகூட்டம் தங்களது பொருள் ஒன்றை ஒரு வீட்டாரிடம் இரவலாகக் கொடுத்து வைத்தார்கள். பிறகு தங்களது பொருளைத் திருப்பிக் கேட்கும்பொழுது தர முடியாது என்று சொல்லும் உரிமை அந்த வீட்டாருக்கு உண்டா?’
அதாவது, நம்முடைய பிள்ளைகள் அல்லாஹ்வின் உடமைகள்! அவற்றை அவன் நம்மிடம் இரவலாகத் தந்து வைத்துள்ளான். அவன் விரும்பும் நேரத்தில் நம்மிடம் இருந்து அவற்றைத் திரும்பப் பெற்றுக் கொள்ளும் உரிமை அவனுக்கு உண்டு! -உம்மு ஸுலைம் ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் இப்படி ஓர் உதாரணத்தைக் கூறியது தம் கணவர் அபூ தல்ஹா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் பதற்றம் அடையாதிருப்பதற்காகத்தான். பொறுமை காத்து அதற்கான கூலியை அல்லாஹ்விடம் எதிர்பார்த்திருப்பதற்காகத் தான்!
உம்மு ஸுலைம் ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் பொறுமையிலும் புத்திக்கூர்மையிலும் சிகரமாய்த் திகழ்ந்தார்கள் என்பதையே இது காட்டுகிறது! இல்லையெனில் குழந்தையின் பிரிவால் கடும் துன்பத்திற்குள்ளாவதில் தந்தையைப் போன்றது தான் தாயின் நிலையும்! இன்னும் சொல்லப்போனால் பெண்கள்தாம் பெரும்பாலும் பலவீனமானவர்கள். அதிகம் மனம் நொடிந்து உட்கார்ந்து விடுவர். துயரம் தாளாமல் துடிதுடித்துப்போவர்! ஏனெனில் அவர்கள்தாம் பொறுமையில்லாதவர்கள்! ஆனால் உம்மு ஸுலைம் ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் ஒரு வித்தியாசமான பெண்மணி!
அபூ தல்ஹா ரளியல்லாஹு அன்ஹு அவர்களது கறாமத் எனும் சிறப்புத் தன்மையும் இங்கு கவனிக்கத் தக்கதாகும். அவர்களும் உம்மு ஸுலைமும் நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் பயணத்திலிருந்து திரும்பி வந்துகொண்டிருந்த நிலையில் உம்மு ஸுலைம் ரளியல்லாஹு அன்ஹா அவர்களுக்குப் பிரசவ வேதனை ஏற்பட்டு அபூ தல்ஹா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் பயணத்தைத் தொடர முடியாத நிலை ஏற்பட்டபொழுது அவர்கள் செய்த பிரார்த்தனை ஏற்றுக் கொள்ளப்பட்டது! உடனே உம்மு ஸுலைம் ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் பிரசவ வேதனை தணிந்தது. எந்தத் தொல்லையும் இல்லாதது போன்றாகிவிட்டது! இது அபூ தல்ஹா அவர்களுக்கு அல்லாஹ் அளித்த கறாமத் -அற்புதம் ஆகும். ஆம்! அவர்களது பிரார்த்தனையை ஏற்று உம்மு ஸுலைமின் பிரசவ வேதனையை அல்லாஹ் இலகுவாக்கினான்!
உம்மு ஸுலைம் ரளியல்லாஹு அன்ஹா அவர்களது வாழ்க்கையில் முஸ்லிம் பெண்மணிகளுக்கு மிகச்சிறந்த முன்மாதிரி உள்ளது! ஆணினமே ஆச்சரியப்படத்தக்க வகையிலான பொறுமையும் அறிவுத் திறமையும் அவர்கள் பெற்றிருந்தார்கள்! மகனாரின் மரணச் செய்தியை நயமாக எடுத்துச்சொல்லி கணவரை மகிழ்வித்தது ஒருபெண் தம் கணவருக்கு ஆற்றும் கடமைக்கும் காட்டும் பரிவுக்கும் மிகச்சிறந்த எடுத்துக் காட்டாகும்!
ரியாளுஸ் ஸாலிஹீன்