ஃபாத்திமா நளீரா வெல்லம்பிட்டி
சீதனம் இது அகராதியில் இல்லாத வார்த்தையுமல்ல.. புதிதாக மெருகேற்றப்பட்ட சொல்லும் அல்ல.. ஆனால் நிரந்தரமானது. எல்லா சமுதாய மட்டத்தின் இதயத்துக்குள்ளும் அடங்கி இதயத்தை அடைக்க வைக்கிற வலிமைமிக்க வார்த்தை.
இவ்வையகத்துக்கு பெண் வரம் வேண்டி வந்த சமுகத்துக்தின் காதுகளுக்கு நெருப்பை ஊற்றும் சொல் மட்டுமல்ல.. பெண்ணுக்குப் பெண்ணே (பெரும்பாலும்) எதிரியானவள் என்று வெளிச்சம் போட்டுக்காட்டும் கலங்கரை விளக்கம்.
இந்தச் சீதனம் காலத்துக்குக் காலம் உருமாறி பணமாகப் பொருளாக நகையாக மாற்றமடைந்து தற்போது எதுவுமே வேண்டாமெனக் கூறி (அவசரப்படவேண்டாம்) சிறிதாக ஒரு வீடு அல்லது காணி, நிலம் இப்படி ஏதாவது இருந்தால் போதும் என்ற பவ்வியமான பேச்சு எத்தனை கன்னிகளின் வாழ்க்கைக்குக் கல்லறை கட்டுவிக்கின்றன.
ஏனிந்த அவலம்? காலாகாலம் எழுத்துக்கள் எழுப்பும் வினாதான் இது. இந்நிலை மாறவே மாறாதா? மாறலாம். சீதனம் கேட்கும் பெண் இனமே வாயை மூடவேண்டும். மனமாற்றத்துக்கு உள்ளாக வேண்டும். பெண் எடுப்பவர்கள் விலையை நிர்ணயிக்கிறார்கள். பெண்ணைப் பெற்றவர்கள் பெண்ணை ஏலம்போட்டு ஆணுக்கு விற்கிறார்கள். இதுதான் வாழ்க்கையின் மிகப் பெரிய வியாபாரம்.
மிச்ச சொச்சம் எல்லாவற்றையும் விற்று மகளுக்காக முதலீடு செய்கிறார்கள். ஆனால,; வருவாய்தான் இல்லை. சீதனத்தின் ஆளுமை பெரும்பாலான குடும்பங்களை கண்ணீர் விடவைக்கிறது. இளம் கன்னியர்களின் வயது முதுமையை நோக்கி அரங்கேறுகிறது.
வசதிபடைத்தவர்களின் சீதனம் சம்பந்தமான கொடுக்கல், வாங்கல்கள் அவர்களின் ‘டீல்’ வேறு விதமாக இருக்கும். அந்தஸ்தை உயர்த்திக் காட்டும் விதத்திலும் வியாபார நோக்கிலும் இப்படிப் பல பரிமாற்றங்கள் நடைபெறலாம்.
ஆனால், நடுத்தர வர்க்கத்தின் நிலை மிகவும் அபாயகரமானது. மதில்மேல் பூனையாக அவர்களின் வாழ்க்கைத்தரம். அழகிருந்தால் கல்வித்தரம் கேட்கிறார்கள். கல்வித்தரம் இருந்தால் நல்ல அழகான மூக்கும் மொழியுமான பெண்ணைக் கேட்கிறார்கள். இரண்டும் இருந்தால் சொந்த வீடு அல்லது காணிஸ இப்படிக் கேட்கிறார்கள். ஆண் பிள்ளைகளை வைத்திருக்கும் பெரும்பாலானவர்கள் படிப்பு உயர்தரத்துக்கு ஏற்றமாதிரி சீதனத்தை நிர்ணயிக்கிறார்கள்.
ஆனால், ஆண் குட்டையோ நெட்டையோ கறுப்போ சிவப்போ கல்வி அறிவு குறைந்தவனாக இருந்தாலும் அங்கேயும் ஆண்மகன் என்ற அதிகாரமும் ஆதிக்கமும் தலைதூக்கி நிற்கிறது. ஆனால், பெண் மாத்திரம் அத்தனை அவதாரங்களையும் எடுத்திருக்க வேண்டும். இதனால்தான் மணமாகாத பல பெண்கள் மணமுடிக்கவே வெளிநாட்டுக்கும் உழைக்கப் போகிறார்கள்.
சிலரின் வாதம் இதுதான்.. வாழ்நாள் முழுவதும் வைத்து உழைத்துக் குடும்பத்தைச் சுமப்பவர்களுக்கு சீதனம் கொடுப்பதில் என்ன தவறு என்று கேட்கிறார்கள். குடும்ப பாரத்தை ஆண் மட்டுமல்ல.. அதைவிடப் பலமடங்கு பெண் சுமக்கிறாள். அதனால்தான் பாரபட்சமின்றி அவளை ஒரு தியாகத்தின் மறுவடிவாகப் பார்க்கின்றனர். ஆணுக்குப் பெண்ணும் பெண்ணுக்கு ஆணுமாகப் படைக்கப்பட்டுள்ள இந்த வையகத்தில் எந்தக் காலக்கட்டத்திலும் இவர்கள் தனித்து வாழ்ந்திட முடியாது. இறைவனின் நாட்டப்படி ஒருவரை ஒருவர் சார்ந்தே பல தேவைகளும் அபிலாஷைகளும் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் தனித்து நின்று செயற்பட முடியுமென்ற கர்வம் ஆண்களைப் பிடித்தாட்டுவது அறியாமையும் அறிவீனமுமாகும்.
தற்போதுள்ள சீதனப் பிரச்சினையில் ஓரளவு இளைஞர்கள் திருந்தினாலும் பெற்றோரும் உற்றோரும் விடுவதாக இல்லை. திருமணப் பதிவுக்கு முன்பே வீட்டையோ காணியையோ அவர்களது பெயருக்கு எழுதிக் கையெழுத்திட்டால் மாத்திரமே தலையெழுத்து இல்லறத்தில் அழகாக அமையும்.
ஆனால், ஆண் வயது கடந்து சென்றாலும் இளம்பெண்களை மணம் முடிக்கலாம். பொருளாதார பிரச்சினை காரணமாக வயது கடந்த முதிர்கன்னிகள் வீடுவாசல்களை வைத்துக் கொண்டு மணமகன் தேடினாலும் நரைவிழந்த மணமகன் கூட வரம்கொடுப்பது அரிது. என்றாலும் எல்லா ஆண்களையும் குறைசொல்லமுடியாது. சமுதாய சீர்திருத்தம் என்ற பெயருக்கு ஏற்ப வாழ்க்கையை அழகாக அமைத்துக் கொண்டவர்களும் உண்டு. சமுதாய மேம்பாட்டுக்காக உழைப்போம் என்ற பெயரில் பெண் வர்க்கத்தைச் சுரண்டியவர்களும் உண்டு.
சீதனப் பிரச்சினையால் ஒரு குடும்பத்தில் எத்தனை விதமான பாதிப்புகள் ஏற்படுகின்றன? வாயையும் வயிற்றையும் கட்டி சேமிப்பில் ஈடுபட்டு அல்லது கடன் வாங்கி மூத்தவளுக்குச் செய்த மாதிரியே இரண்டாம் மகளுக்கும் செய்ய வேண்டிய கடமை அல்லது கட்டாய நிர்ப்பந்தம் அந்தக் குடும்பத்தின் பொருளாதாரம், கல்வி, ஆரோக்கியத்தைப் பாதிக்கிறது. கடன்சுமை தாங்காமல் நோயில் விழுந்தவர்களுமுண்டு. தற்கொலை செய்தவர்களும் உண்டு. அவரவர் வசதிக்கு ஏற்ப எதையென்றாலும் கொடுக்கட்டும் கடைசி வரை நல்லபடியாக வாழ்ந்தால் போதும் என்று சொல்லும் நல்ல மனம்படைத்த பெற்றோரும் உள்ளனர். நான் சம்பாதித்து வீடு வாசல் வாங்கி நல்லபடியாக வாழவைக்கிறேன் என்று சொல்லும் ஆண்மகன்களும் இல்லாமல் இல்லை. இவர்கள் வாழ்த்துக்கும் போற்றுதலுக்கும் கௌரவத்துக்கும் உரியவர்கள்.
சமுதாயத்தில் சீதனத்துக்கு எதிரான மறுபடிவம்,மறுமலர்ச்சி பத்து சத வீதம் என்றாலும் சீர்கேடுகளும் பிடுங்கித் திண்ணும் வர்க்கமுமே 90 சத வீதம் இருக்கின்றன என்பது மட்டும் நிஜம்.
நன்றி: வீரகேசரி வாரவெளியீடு 25-04-2010
http://fathimanaleera.blogspot.com/search?updated-max=2010-08-04T09%3A34%3A00-07%3A00&max-results=5