தெளிவுரை
முதல் கோணல் முற்றும் கோணல்
தபூக் போர் ஹிஜ்ரி 9 ஆம் ஆண்டு நடைபெற்றது. முஸ்லிம்கள் மீது போர் தொடுக்கும் நோக்கத்துடன் ரோம் நாட்டுக் கிறிஸ்தவர்கள் பெரும் படை திரட்டிக் கொண்டிருப்பதாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்குச் செய்தி கிடைத்தது. அவர்களை எதிர்த்துப் போர் புரிவதற்காக முஸ்லிம்களை அழைத்துக் கொண்டு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தபூக் நோக்கிப் புறப்பட்டார்கள்.
தபூக்கை அடைந்தபொழுது அங்கு எதிரிகள் யாரையும் காணோம். அவர்களின் போர் நடவடிக்கையோ நடமாட்டமோ எதுவும் இல்லை. முஸ்லிம்களை எதிர்த்து வெற்றிகொள்ள முடியாது எனக்கருதி, கிறிஸ்தவர்கள் பின்வாங்கி விட்டிருந்தார்கள். ஆகையால் நபியவர்கள் தபூக்கில் இருபது நாட்கள் தங்கியிருந்துவிட்டுப் போர் எதுவுமின்றி மதீனா திரும்பினார்கள்.
மதீனாவில் இருந்து முஸ்லிம்கள் போருக்காகப் புறப்பட்டபொழுது கடுமையான கோடை காலம்! பழங்கள் நன்கு விளைந்து அறுவடைக்கு நெருங்கிய பருவம்!
நயவஞ்சகர்களோ மறுமை பற்றிக் கவலைப்படாமல் உலக வாழ்க்கைக்கே முன்னுரிமை கொடுத்தார்கள். அவர்களில் யாரும் போருக்குப் புறப்படவில்லை. கழனிகளிலும் கனிகளிலும் கவனம் செலுத்தினார்கள். நிழலில் தஞ்சம் புகுந்தார்கள். தபூக் நோக்கிப் பயணமாவது அவர்களுக்கு மிகவும் சிரமமாகப்பட்டது! வாய்மையான இறைவிசுவாசிகளோ, நபியவர்களிடம் இருந்து கட்டளை பிறந்ததும் உடனே போருக்குப் புறப்பட்டு விட்டார்கள்! பயணத்தின் நீண்ட தொலைவோ அறுவடைக்குக் காத்திருந்த கனிகளோ அவர்களின் ஊக்கத்தைக் குலைத்திடவில்லை!
ஆனால் கஅப் பின் மாலிக் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் தக்க காரணம் எதுவுமின்றியே தபூக் நோக்கிப் புறப்படாமல் பின்தங்கி விட்டார்கள். அவர்கள் வாய்மையான இறைநம்பிக்கையாளரே தவிர வஞ்சகர் அல்லர்! அவர்கள் சொன்னார்கள்:
‘நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கலந்து கொண்ட எந்தப் போரை விட்டும் நான் எப்பொழுதும் பின் தங்கியதில்லை”
“ஆனால் பத்றுப் போரைத் தவிர’
ஆம்! கஅப் பின் மாலிக் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் ஓர் இறைவழிப் போராளியாகவே திகழ்ந்தார்கள்.
பத்று போரின் பின்னணி!
– பத்று போரில் கஅப் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கலந்து கொள்ளவில்லை. ஏனெனில் அன்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மதீனாவில் இருந்து வெளிக்கிளம்பியது போரை நாடியல்ல. குறைஷிகளின் வாணிபக்குழு ஒன்றைத் தாக்கி வியாபாரச் சரக்குகளைப் பறிக்க வேண்டும் என்றுதான் புறப்பட்டிருந்தார்கள். அதனால் நபியவர்களுடன் வந்தது குறைந்த அளவிலான தோழர்களே!
இங்கு ஓர் உண்மையைப் புரிந்து கொள்ள வேண்டும். மக்காவாசிகளின் வாணிபக்குழு மீது தாக்குதல் தொடுத்து அவர்களின் வியாபாரச் சரக்குகளைப் பறிப்பதற்காக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் முஸ்லிம்களும் புறப்பட்டது வரம்பு மீறிய செயலோ அநீதியோஅல்ல. மக்கத்து குறைஷிகள்தாம் நபியவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் கடும் தொல்லை கொடுத்து மக்காவில் வாழும் உரிமையை அவர்களிடம் இருந்து பறித்து விட்டிருந்தாகள்! வீடு, வாசல்கள், சொத்து – சுகங்கள் அனைத்தை விட்டும் அவர்களை வெளியேற்றியிருந்தார்கள்! ஆகையால் குறைஷிகளின் வாணிபக்குழு மீது தாக்குதல் தொடுத்து அவர்களின் வியாபாரச் சரக்குகளைப் பறிப்பதற்காக முஸ்லிம்கள் மேற்கொண்ட நடவடிக்கை – தங்களுடைய உரிமைகளில் சிலவற்றைத் திரும்ப எடுத்துக் கொள்ளும் முயற்சியே ஆகும்.
ஆக! நபியவர்கள், வாணிபக்குழவை எதிர்கொள்வதற்காகப் புறப்பட்டதால் தான் அதிகப் படையையும் திரட்டவில்லை., போதிய ஆயுதங்களையும் குவித்துக்கொள்ளவில்லை! நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களோடு புறப்பட்டிருந்த முஸ்லிம்கள் வெறும் 313 பேர்தான்! உடன்சென்ற வாகனங்களும் குறைவுதான். எழுபது ஒட்டகங்களும் இரண்டு குதிரைகளும்தான் இருந்தன!
முஸ்லிம்கள் புறப்பட்டு வருவதை அறிந்த வாணிபக்குழுவின் தலைவர் அபூஸுப்யான், வியாபாரக் கூட்டத்தைக் காப்பாற்ற வருமாறு குறைஷிகளுக்குத் தூது அனுப்பிவிட்டுப் பாதையைக் கடலோரமாக மாற்றிக் கொண்டுத் தப்பிவிட்டார்.
அபூ ஸுஃப்யான் அனுப்பிவைத்த ஆள் மக்கா நகர் வந்து அபாய அறிவிப்புச் செய்து உதவி கேட்டதும் குறைஷிகள் – தலைவர்கள், சமூகப் பிரமுகர்கள் உட்பட அனைவரும் போருக்கான ஏற்பாட்டுடன் புறப்பட்டு விட்டார்கள். பெரிய அளவில் ஆயுதங்ளைச் சேகரித்துக் கொண்டு ஏறக்குறைய ஆயிரம் பேர் திரண்டு வந்தார்கள்!
அபூ ஸுஃப்யான் – நாங்கள் தப்பித்து வந்துவிட்டோம்., நீங்கள் மக்கா திரும்புங்கள். இப்போதைக்குப் போர் வேண்டாம் என்று மீண்டும் தூது அனுப்பிக் கேட்டுக்கொண்ட பிறகும் குறைஷித் தலைவர்கள் மக்கா திரும்பவில்லை. சண்டைக்கு வலியவந்தார்கள். ஆம்! குறைஷித் தலைவர்கள் ஆணவத்துடன் போர் முரசு கொட்டிக் கொண்டுவந்து பத்று மைதானம் வந்து முகாமிட்டார்கள். இறுதியில் அவர்களுடைய ஆணவத்திற்குக் கிடைத்த பரிசு வரலாறு காணாத தோல்விதான்!
இவ்வாறு முஸ்லிம்கள் பத்றுப் போரைச் சந்தித்தது எதிர்பாராத ஒன்றாகும். அதனால்தான் அதில் கஅப் பின் மாலிக் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கலந்து கொள்ள இயலவில்லை!
ஆனால் தொடக்க காலத்தில் நபியவர்களிடம் – இஸ்லாத்தின் பேரில் பைஅத் எனும் உறுதிப் பிரமாணம் செய்து கொடுத்த நிகழ்ச்சியில் தாமும் கலந்துகொண்டதைப் பெருமிதத்துடன் குறிப்பிடுகிறார்கள் கஅப் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள். அந்த நிகழ்ச்சி ஹிஜ்ரத்திற்கு முன்பு மினாவில் ஒரு கணவாயில் வைத்து நடைபெற்றது. பத்று போரைவிட அதுதான் தமக்குப் பிரியமானது என்றும் சொல்கிறார்கள். ஏனெனில் ஐயமின்றி அது ஒரு மகத்தான உடன்படிக்கை., மாபெரும் விசுவாசப் பிரமாணம்! ஆனாலும் பத்று போர்தான் காலமெல்லாம் மக்களிடையே பேசப்படும் வகையில் பிரபலம் அடைந்தது! ஏனெனில் அது முக்கியமானதொரு போர். பிரபலம் அடைந்துவிட்டது. என்ன இருந்தாலும் உறுதிமொழி எடுக்கும் ஒரு நிகழ்ச்சி போரைப் போல் பிரபலமாக முடியாது!
ஆக, கஅப் பின் மாலிக் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் தமக்குத்தாமே ஆறுதல் சொல்லிக் கொள்கிறார்கள். பத்றில் கலந்து கொள்ளும் வாய்ப்புத் தப்பினாலும் அந்தக் கணவாய் உடன்படிக்ககையின் பாக்கியம் கிடைத்ததே என்று!
“நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஏதேனும் போருக்குப் புறப்பட நாடினால் அதனை மறைத்தே பேசுவார்கள்’
அதாவது தங்களது நாட்டத்தை வெளிப்படுத்தமாட்டார்கள். எடுத்துக்காட்டாக, தெற்கு நோக்கிப் புறப்பட நாடியிருந்தால் – வடக்கு நோக்கிப் புறப்பட வேண்டும் என்பதுபோல் பேசுவார்கள். கிழக்கு நோக்கிப் புறப்பட நாடியிருந்தால் மேற்கு நோக்கிப் பயணமாக வேண்டும் என்பதுபோல் பேசுவார்கள். – இது நபியவர்கள் மேற்கொண்ட விவேகமிக்க நடவடிக்கை. போர்த் தந்திரம்!
ஏனெனில், எங்குச் செல்லப் போகிறோம் என்பதை வெளிப்படையாகச் சொல்லிவிட்டால் அது பற்றிய செய்தி எதிரிகளுக்குக் கிடைத்துவிடலாம். அதற்கேற்ப அவர்கள் தங்களது திட்டத்தை மாற்றி அமைத்துக் கொள்ளலாம்., போருக்குப் பொருத்தமான இடமென எந்த இடத்தை நபியவர்கள் தேர்வு செய்துள்ளார்களோ அந்த இடத்தை விட்டும் எதிரிகள் விலகிச் சென்றிடவும் செய்யலாம்!
ஆனாலும் தபூக் போர்ச்சூழ்நிலையில் பொதுவான இந்த வழக்கத்திற்கு ஏற்ப நபியவர்கள் மறைத்துப் பேசவில்லை. தபூக் நோக்கிப் புறப்படப் போகிறோம் என்பதைத் தெளிவுபடவே கூறினார்கள். அப்படிச் செய்ததற்குப் பலகாரணங்கள் இருந்தன:
1) முன்பு நாம் குறிப்பிட்டதுபோன்று -அது கடுமையான கோடை காலம். கனிகள் அறுவடைக்குத் தயாராகி வந்த நேரம்! மனித மனம் சுக வாழ்வை நாடும் இயல்புடையதாகவும் சோம்பலின் பக்கம் சாயக்கூடியதாகவும் தானே உள்ளது. எனவே மனத்தைக் கட்டுப்படுத்திப் பயனுள்ள பணிகளில் நாட்டம் செலுத்த வேண்டுமெனில் இலட்சியம் தெளிவாக இருப்பது அவசியம்!
2) மதீனாவில் இருந்து தபூக் வெகுதொலைவில் இருந்தது. எங்கும் ஒரேபாலைவெளி. மணற்பரப்பு!அத்துடன் கோடை வெயிலும் சுட்டெரித்துக் கொண்டிருந்தது! ஆகையால் இந்தப் பயணத்தில் முஸ்லிம்கள் கடுமையான தாகத்தையும் களைப்பையும் சகித்துக்கொள்ள வேண்டும்! இத்தகைய சூழ்நிலையில் எங்குச் செல்கிறோம் என்பதை வெளிப்படையாகச் சொன்னால் தான் அதற்கேற்ப அவர்கள் தங்களைத் தயார் படுத்திக் கொள்ள முடியும்!
3) எதிரிகளோ அதிக வலிமையுடன் இருந்தார்கள். அவர்களின் எண்ணிக்கை திகைப்பூட்டும் அளவு இருந்தது. அதனை எதிர்கொள்ளும் வகையில் முஸ்லிம்கள் ஊக்கத்துடன் இருக்க வேண்டும் என்றுதான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எங்கு நோக்கிப் புறப்படுகிறோம். யாரை எதிர்த்துப் போர் புரியப் போகிறோம் என்பதைத் தெளிவாகக் கூறினார்கள்!
“நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் முஸ்லிம்களும் போருக்கான தயாரிப்பைச் செய்து முடித்திருந்தார்கள் . . .”
ஆனால் கஅப் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அதைப் பிற்படுத்திக் கொண்டே இருந்தார்கள். தினமும் காலையில் வாகனத்தில் ஏறி, இதோ! இப்பொழுதே நான் புறப்பட்டுச் சென்று நபியவர்களை அடைந்துவிடுவேன். முஸ்லிம்களோடு இணைந்துவிடுவேன் என்று கூறுவார்கள்தான். ஆனால் அவர்களால் அப்படிச் செயல்பட முடிவதில்லை. நிலைமை அவர்களை மேலும் மேலும் தாமதப்படுத்திக் கொண்டே சென்றது!
படிப்பினைகள்
இங்கு நாம் கவனத்தில் கொள்ளவேண்டிய பாடம் இதுதான். சத்தியத்தை அறிந்துவிட்டால் உடனே அதன்படி செயல்படத் தொடங்கிட வேண்டும். சத்தியத்தின் பால் முன்னேறிச் செல்ல முயன்று கொண்டிருக்க வேண்டும். ஆரம்பத்திலேயே அப்படிச் செய்யாமல் அசட்டையாக இருந்து விட்டால் அதன் நற்பேற்றையே இழக்க வேண்டிய நிலை வந்துவிடும். குர்ஆனில் அல்லாஹ் கூறுவதைக் கவனியுங்கள்:
“ஆரம்பத்தில் இந்த வேதத்தின் மீது அவர்கள் நம்பிக்கை கொள்ளாதிருந்ததுபோன்று (இப்பொழுதும் நம்பிக்கை கொள்ளாதிருக்கும் வகையில்) அவர்களுடைய இதயங்களையும் பார்வைகளையும் நாம் திருப்புகிறோம். மேலும் வரம்பு மீறிய போக்கிலேயே உழன்று கொண்டிருக்குமாறு அவர்களை விட்டுவிடுகிறோம்” (அல்குர்ஆன் 6:110)
ஆம்! நற்பணிகளை நோக்கி நாம் விரைந்திடவில்லையானால் – ஷைத்தானின் ஊசாட்டமும் மனஇச்சையும் நம்மை மிகைத்துவிடும். எந்த நல்ல காரியமும் நம் கையை விட்டும் போய்விடும்.
எடுத்துக்காட்டாக, தொழுகையை எடுத்துக் கொள்ளுங்கள்! நீங்கள் பலரைப் பார்த்திருக்கலாம். தொழுகைக்காக மஸ்ஜித் நோக்கி வருவார்கள்தான். ஆனால் முன் வரிசைக்கு வரமாட்டார்கள். அதில் அவர்களுக்கு அப்படியொரு அலட்சியம்! எப்பொழுதும் கடைசி வரிசையில்தான் நிற்பார்கள்! அப்படிப்பட்டவர்கள் குறித்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் செய்த எச்சரிக்கையைப் பாருங்கள்: ‘சிலர் தொடர்ந்து தாமதமாகவே வருகிறார்கள். இறுதியில் அல்லாஹ்வும் அவர்களைத் தாமதப்படுத்தி விடுகிறான்” (முஸ்லிம்)
ஆம்! யார் தாமதத்தை வழமையாக்கிக் கொள்கிறார்களோ அவர்களை அல்லாஹ்வும் தாமதத்தில் சிக்கவைத்து விடுகிறான்.
கஅப் பின் மாலிக் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் தபூக்கின் பயண ஏற்பாடுகளை எல்லா முஸ்லிம்களுடனும் சேர்ந்து செய்யாமல் நாளை நாளை என்று தாமதப்படுத்தினார்கள். இறுதியில் மிஞ்சியது தாமதமும் கவலையும் கலக்கமும்தான்!
ஆம்! போரில் கலந்து கொள்ளும் நற்பேறு கைக்கு எட்டாத தொலைவுக்கு விலகிச் சென்றபொழுது – கஅப்(ரலி) அவர்கள், மதீனாவின் தெருக்களுக்கும் கடைவீதிகளுக்கும் வருகிறார்கள். அங்கிருந்த நிலையைக் கண்டதும் அவர்களது மனம் பதறியது. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களோ அபூ பக்ரோ உமரோ உஸ்மானோ அலீயோ (ரளியல்லாஹு அன்ஹும்) யாரும் இல்லை! முஹாஜிர்களும் இல்லை. அன்ஸாரிகளும் இல்லை! தெருக்களில் அங்கும் இங்கும் நடந்து சென்றுகொண்டிருந்தது நயவஞ்சகர்கள் மட்டும்தான்! தவிர நோயாளிகள், முதியவர்கள் என பலவீனப்பட்டவர்கள் இருந்தார்கள், அவ்வளவுதான்!
இப்படிப்பட்டவர்களைத் தவிர வேறு யாரும் மதீனாவில் இல்லையே! அவர்களுடன் நாமும் தங்கியிருக்க வேண்டிய நிலை நமக்கு ஏற்பட்டு விட்டதே என்று தம்மைத்தாமே நொந்துகொள்கிறார்கள் கஅப் ரளியல்லாஹு அன்ஹு!
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தபூக்கில் தோழர்களுடன் இருக்கும்பொழுது கஅப் ரளியல்லாஹு அன்ஹு அவர்களைப் பற்றிக் கேட்டார்கள். அதற்கு பனூ சலிமா கூட்டத்தைச் சேர்ந்த ஒருவர் கஅப் அவர்கள் மீது குற்றம் சுமத்த, அதற்கு முஆத் பின் ஜபல் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் தக்க பதில் கொடுத்தார்கள்! ஆனால் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் குற்றம் சுமத்தியவர் பற்றியோ மறுத்தவர் பற்றியோ எதுவும் கூறாமல் மௌனமாக இருந்தார்கள்.
இந்த நேரத்தில், தூரத்தில் ஒருவர், வெள்ளைவெளேரென ஆடைகள் அணிந்து கானல் அசைவதுபோல் வந்து கொண்டிருந்த நபரைக் குறித்து இவர் அபூ கைஸமாவாகத்தான் இருக்க வேண்டும் என்று நபியவர்கள் சொன்னதுபோன்று அபூ கைஸமாதான் வந்து கொண்டிருந்தார். – இது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் நுட்பமான மதிப்பீட்டையும் கூர்மையான பார்வையையும் எடுத்துக்காட்டுகிறது.
கஅப் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள், அபூ கைஸமா ரளியல்லாஹு அன்ஹு அவர்களைப் பற்றி கூறிய தகவலில் பல விஷயங்கள் நமது கவனத்தை ஈர்க்கின்றன.
அதாவது, போர் நிதி வழங்குமாறு அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஆணையிட்டபொழுது ஒரேஒரு மரைக்கால் பேரீத்தம் பழத்தை நிதியாக அளித்தது, இந்த அபூ கைஸமாதான்! – அதைத்தான் நயவஞ்சகர்கள் கேலிசெய்தார்கள். இந்த ஒருமரைக்கால் பேரீத்தம் பழம் அல்லாஹ்வுக்குத் தேவையா என்ன? என்று நக்கல் பேசினார்கள்.
இதேபோல் – அதிக நிதியுதவி செய்தவர் பற்றியும் – இப்படி அதிக அளவு அள்ளிக்கொடுக்கிறாரே இவர்., அல்லாஹ்வின் உவப்பை நாடியா செய்கிறார், பேரும் புகழுக்காகவும்தானே வாரிவழங்குகிறார்! என்று பேசினார்கள்!
ஆனால் எந்த ஒரு தர்மமனாலும் – அரைப் பேரீத்தம் பழமேயானாலும் ஓர் அணுஅளவுப் பொருளானாலும் அதுவும் இறைவழிப்போருக்கு உதவினால் மறுமையின் நற்பயன் கிடைக்கும் என்கிறது இஸ்லாம்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அருளினார்கள்: ‘திண்ணமாக ஒருமனிதர் பேரீத்தம் பழம் அளவுக்கு ஒருபொருளைத் தர்மம் செய்கிறார். அதனையும் அல்லாஹ் ஏற்றுக்கொள்கிறான். பிறகு அதனை அவருக்காக எவ்வாறு பல்கிப் பெருகச் செய்கிறான் எனில், உங்களில் ஒருவர் தனது ஒட்டகக் குட்டியைக் கண்ணும் கருத்துமாய் வளர்ப்பதுபோன்று பல்கிப்பெருகச் செய்கிறான் அல்லாஹ். இறுதியில் (குறைந்த அளவிலான) அந்தத் தர்மம் உஹுத் மலைபோன்று பெருகி விடுகிறது” (நூல்: புகாரி, முஸ்லிம்)
மற்றொரு தடவை சொன்னார்கள்: “(தர்மம் கொடுப்பதன் மூலம்) உங்களை நரகத்திலிருந்து தற்காத்துக் கொள்ளுங்கள். பாதிப் பேரீத்தம் பழத்தை வழங்குவது மூலமானாலும் சரியே!” (நூல்: புகாரி, முஸ்லிம்)
அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான்: ‘ஒருவன் அணுஅளவு நன்மை செய்திருந்தாலும் அதனை அவன் கண்டுகொள்வான். அணுஅளவு தீமை செய்திருந்தாலும் அதனை அவன் கண்டுகொள்வான்” (அல்குர்ஆன் 99: 8)
இதன்படியே ஒவ்வொரு தோழரும் தத்தம் வசதிக்கும் சக்திக்கும் ஏற்ப போர் நிதிக்கு அள்ளிக் கொடுத்தார்கள். ஆனால் இஸ்லாம் வெற்றிபெறும் வகையில் யாரும் செயல்பட்டு விடக்கூடாது என்பதுதான் நயவஞ்சகர்களின் எதிர்பார்ப்பு! அதனால்தான் அதிகஅளவு நிதி அளித்தவர் பற்றியும் அவதூறு பரப்பினார்கள். குறைவாக நிதி அளித்தவர் பற்றியும் கேலிபேசினார்கள்.
நயவஞ்சகர்களின் இத்தகைய விஷமத் தனத்தையே கஅப் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் இங்கு குறிப்பிட்டார்கள். குர்ஆனும் இதனை ஓரிடத்தில் கூறுகிறது:
“இறைநம்பிக்கையானர்களில் மனமுவந்து வாரிவழங்குவோரின் தர்மங்களைப் பற்றியும் இந்த நயவஞ்சகர்கள் குறை பேசுகிறார்கள். (இறைவழியில் செலவு செய்வதற்காகச்) சிரமப்பட்டு உழைத்ததைத் தவிர வேறெதுவும் பெற்றிருக்காதவர்களப் பற்றியும் இவர்கள் கேலி செய்கிறார்கள். அல்லாஹ் இவர்களைக் கேலி செய்கிறான். மேலும் இவர்களுக்குத் துன்புறுத்தும் தண்டனையும் உண்டு” (குர்ஆன் 9: 79)
இத்தகைய வஞ்சகர்கள் இஸ்லாத்தின் ஆரம்ப காலத்தில்தான் இருந்தனர் என்பதில்லை. அன்றைய வஞ்சகர்களின் வாரிசுகள் இன்றைக்கும் இருக்கத்தான் செய்கிறார்கள். தங்களுடைய மூதாதையர்கள் விட்டுச் சென்ற பணியை – முஸ்லிம்களைக் கேலிபேசுகிற பணியை – இஸ்லாத்திற்குக் கேடு விளைவிக்கிற சூழ்ச்சியை மேற்கொண்டு வருகிறார்கள். இறைவனின் படைப்புகளிலேயே இவர்கள்தாம் மிகவும் கேடுகெட்டவர்கள்!
“என் குடும்பத்தில் விஷய ஞானமுடைய அனைவரிடமும் ஆலோசனை கலந்தேன்”
ஏதாவது பொய்சொல்லித் தப்பிக்கத்தான் கஅப் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் முதலில் திட்டமிட்டுள்ளார்கள். அது பற்றி தம் குடுப்பத்தினரிடம் ஆலோசனையும் செய்துள்ளார்கள். ஆனால் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மதீனா திரும்பிய பொழுது தான் உண்மை சொல்லி விடுவது என்கிற உறுதிப்பாடு அவர்களுக்கு வந்தது.
நயவஞ்சகர்கள் பொய்யான சாக்குப்போக்குகள் சொல்லி, பொய் சத்தியம் செய்தார்கள். தங்களை மன்னிக்கும்படி கோரினார்கள். அவர்களின் வெளிப்படையான நிலையை ஏற்றுக்கொண்டு அந்தரங்கத்தை அல்லாஹ்விடம் ஒப்படைத்தார்கள் நபிவர்கள்! மட்டுமல்ல நயவஞ்சகர்களுக்காகப் பாவ மன்னிப்பு வேண்டிப் பிரார்த்திக்கவும் செய்தார்கள்! ஆனாலும் அது அவர்களுக்கு எவ்விதப்பயனும் அளிக்கவில்லை, அல்லாஹ் கூறுகிறான்:
”(நபியே!) நீர் இவர்களுக்காக பாவமன்னிப்புக் கோரினாலும் கோராவிட்டாலும் சரி; எழுபது தடவைகள் இவர்களுக்காக நீர் பாவமன்னிப்புக் கோரினாலும் கூட அல்லாஹ் இவர்களை ஒருபோதும் மன்னிக்கமாட்டான்.” (அல்குர்ஆன் 9: 80)
ஆனால் கஅப் பின் மாலிக் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் உண்மையே உரைத்தார்கள். தமது தவறை வெளிப்படையாக ஒப்புக் கொண்டார்கள். அது பற்றியே நபியவர்கள் கூறினார்கள்:
“இவர்தான் உண்மை உரைத்துள்ளார்”
கஅப் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் வாய்மைக்கும் சிறப்புக்கும் இதுவே போதுமான சான்று. அதற்கு நபியவர்கள் வழங்கிய நற்சான்றே இது!
“அல்லாஹ் உமது விவகாரத்தில் தீர்ப்பு அளிக்கும் நேரத்தை எதிர் பார்த்திரும்”
கஅப் பின் மாலிக் அவர்கள் அல்லாஹ் – ரஸூலின் கட்டளைக்கு முழுமையாகக் கீழ்ப்படிந்தவராகவும் முழுமையான நம்பிக்கை கொண்டவராகவும் புறப்பட்டுச் சென்றார்கள்.
அப்பொழுது அவர்களுடைய பனூ ஸலிமா குலத்தினர் சிலர் தவறான ஆலோசனையை வலியுறுத்தினார்கள். அப்படிச் செய்யலாமே என்றுதான் கஅப் ரளியல்லாஹு அன்ஹு அவர்களது மனம் முதலில் விரும்பியது. வேறு இரு தோழர்களுக்கும் இதேநிலை எற்பட்டுள்ளது., அவ்விருவரும் உண்மையைத் திரும்பப் பெறுவதற்காக நபியவர்களிடம் செல்லவில்லை என்றும் தெரியவந்தது.
“மக்கள் என்னிடம் சொன்ன இரண்டு பேரும் எப்படிப்பட்டவர்களெனில் இருவரும் பத்று போரில் கலந்து கொண்டவர்கள். அவ்விருவரிலும் எனக்கு முன்மாதிரி இருந்தது”
ஆம்! அல்லாஹ், சில பேருக்குச் சிலநேரங்களில் நல்ல சூழ்நிலையை அமைத்துக் கொடுக்கிறான். வாய்மையில் நிலைத்திருக்க – தீமையை நாடாதிருக்க நல்ல முன்மாதிரியைக் காண்பித்துக் கொடுத்துப் பேருதவி புரிகிறான்! கஅப் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் தம் இருதோழர்களையும் பின்பற்றி உண்மையிலிருந்து பின்வாங்கக்கூடாது என்று உறுதிகொண்டார்கள். சோதனைக்கு மேல் சோதனைகள் வந்தாலும் எல்லாவற்றையும் தாங்குவதெனும் உறுதிப்பாட்டில் உள்ளம் உறுதிபூண்டது! பொய்யிலிருந்து முழுமையாக அவர்களை அல்லாஹ் காத்தருளினான். கஅப் ரளியல்லாஹு அன்ஹு அவர்களது உளத்தூய்மைக்குச் சான்றாகத் திகழும் அந்த உண்மை வரலாற்றை குர்ஆனி லும் இடம்பெறச் செய்து அவர்களுக்குச் சிறப்பளித்தான்!
படிப்பினைகள்
1) நல்லெண்ணம். ஆம்! ஒருவரின் உள்ளத்தில் நல்லெண்ணம் இருந்தால் அல்லாஹ் அவர் மீது பேருபகாரம் புரிகிறான். பாவத்திலிருந்து அவரைக் காப்பாற்றுகிறான். கஅப் ரளியல்லாஹு அன்ஹு அவர்களைப் பாருங்கள். நபிவர்களிடம் பொய் சொல்ல நாடியபொழுது உண்மையே பேசும்படி செய்து அவர்களை அல்லாஹ் காப்பாற்றினான். அதற்குக் காரணம் அவர்களது உள்ளத்தில் உறுதியுடன் உறைந்திருந்த நல்லெண்ணமே!
2) இறைநம்பிக்கையில் முழுஉறுதிப்பாடு. ஏதேனும் சாக்குப்போக்குச் சொல்லி நபியவர்களிடம் இருந்து தப்பித்து விட்டாலும் நாளை அல்லாஹ் கோபம் கொண்டால் அதிலிருந்து தப்பிக்க முடியாது என்று கஅப் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் சொல்லியிருப்பது அவர்களது இறைநம்பிக்கையின் உறுதிப்பாட்டையே எடுத்துக்காட்டுகிறது. நாம் என்றென்றும் நினைவில் கொண்டு பின்பற்றத்தக்க பாடமாகும் இது.
அந்த மூன்று தோழர்கள் மீதும் சமூகத்தடை விதித்து நபியவர்கள் கட்டளை பிறப்பித்தபொழுது அனைத்து மக்களும் அதனை ஏற்று அப்படியே செயல்படுத்தினார்கள்.
“நான் நபியவர்களிடம் ஆஜராவேன்!. ஸலாத்திற்குப் பதில் சொல்லிட உதடுகளை அசைத்தார்களா இல்லையா? என்பதை நான் அறியேன்”
ஆம்! கஅப் பின் மாலிக் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் ஸலாத்திற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களே பதில் சொல்லவில்லை. நபியவர்களோ நற்குணத்தில் சிறந்தவர்கள். அனைவரிடமும் நல்ல முறையில் பழகக்கூடியவர்கள்! ஆயினும் அந்தத் தோழர்களைச் சற்றுக் கடினமாக நடத்தவேண்டும். பண்படுத்த வேண்டும் எனும் கட்டளைக்கு நபியவர்களும் கட்டுப்பட்டார்கள்.
“என்னுடைய இரண்டு தோழர்களும் மிகவும் மனம் நொந்து போனார்கள். அழுதவண்ணம் தங்கள் வீடுகளிலேயே முடங்கி விட்டார்கள்”
ஆம்! அந்த மூவரில் கஅப் பின் மாலிக் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் மட்டுமே மஸ்ஜிதுக்கு வந்து ஜமாஅத் – கூட்டுத் தொழுகையில் கலந்து கொண்டிருந்தார்கள். பிறகு நாட்கள் செல்லச் செல்ல அவர்களும் வீட்டிலேயே தொழலானார்கள். அந்த அளவுக்கு மனவேதனையும் சஞ்சலமும் அவர்களை வாட்டியெடுத்தது! (அதன் விவரம் பின்னால் வருகிறது)
“ஒருநாள் அப்படியே நடந்து சென்றேன். அபூ கதாதாவின் தோட்டத்துச் சுவர் ஏறி உள்ளே சென்றேன்”
அதாவது, வாசல் வழியாக உள்ளே செல்லாமல் சுவர் ஏறிக் குதித்துச் சென்றுள்ளார்கள். வாசல் அடைக்கப்பட்டிருக்க வேண்டும். அல்லது சுற்றுச் சுவரில் ஒருபகுதியில் இடிபாடு ஏற்பட்டு லேசாகத் தாண்டி உள்ளே செல்லும் வகையில் அமைந்திருக்க வேண்டும். (அல்லாஹ் மிக அறிந்தவன்)
“நான் அவருக்கு ஸலாம் சொன்னேன். அல்லாஹ்வின் மீது சத்தியமாக! அவர் எனது ஸலாத்திற்கு பதில் சொல்லவில்லை”
கஅப் அவர்களின் ஒன்றுவிட்ட சகோதரர்தான் அபூ கதாதா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள். மக்கள் எல்லோரும் புறக்கணித்துவிட்ட நிலையில் நெருங்கிய உறவுடைய-பாசத்திற்குரிய சகோதரராவது சந்தோசமாகப் பேசுவார்., ஆறுதல் சொல்லி மனத்தைத் தேற்றுவார் என்றுதான் அவரிடம் சென்றுள்ளார்கள், கஅப்ரளியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆனால் அவரும் பேசவில்லை. ஸலாத்திற்குக் கூடப் பதில் சொல்லவில்லை. – இதற்குக் காரணம் அல்லாஹ்-ரஸூலின் கட்டளைக்கு முழுமையாகக் கீழ்ப்படிய வேண்டும் என்பதுதானே தவிர கஅப் அவர்களைத் தனிப்பட்ட முறையில் புறக்கணிக்க வேண்டும் என்பதல்ல!
“என் கண்கள் இரண்டும் கண்ணீர் வடித்தன. வந்த வழியே திரும்பி சுவர் ஏறித் தாவி வெளியே வந்தேன்”
அபூ கதாதா ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம் – நான் அல்லாஹ்வையும் ரஸூலையும் நேசிப்பவன் இல்லையா? என்று, அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து மூன்றுமுறை கேட்டார்கள், கஅப் பின் மாலிக் அவர்கள். நிலையின் கடுமையை உணர்த்தக்கூடிய மிகப்பெரியதொரு சத்தியமாகும் இது! அபூ கதாதா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் ஆம் என்றோ இல்லை என்றோ எதுவும் சொல்லவில்லை. ஆனால் அவருக்கு நன்றாகத் தெரியும்: கஅப் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அல்லாஹ்வையும் ரஸூலையும் அதிகம் நேசிப்பவர்கள் என்பது! மூன்றாவது தடவையில் ஒப்புக்கு ஒரு பதிலைச் சொன்னார்., அல்லாஹ்வும் ரஸூலும் தான் மிகவும் அறிந்தவர்கள் என்று! இது அந்தக் கேள்விக்குரிய பதிலாகக் கருதப்படாத ஒரு வார்த்தையாகும். – இந்தக் கட்டத்தில்தான் கஅப் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் மனம்நொந்து கண்ணீர் வடித்து விட்டார்கள்.
‘ஷாம் தேசத்து விவசாயி ஒருவர், கஅப் பின் மாலிக்கை எனக்குக் காண்பித்துத் தருபவர் யார்? என்று அங்கே கேட்டுக் கொண்டிருந்தார்”
அன்றைய ஷாம் தேசத்து விவசாயிகளைக் குறிப்பதற்கு நபதி (பன்மை: அன்பாத்) எனும் சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. பாலைவனப்பகுதிகளில் பூமிக்கடியில் எங்கெங்கு தண்ணீர் உள்ளதென ஆய்வு (இஸ்தின்பாத்) செய்வதே அவர்களுடைய பணி. அதனால்தான் அவர்கள் நபதி – அன்பாத் என்று அழைக்கப்படுகிறார்கள்.
‘அவன் என்னிடம் வந்தான். கஸ்ஸான் மன்னன் எழுதிய ஒருகடிதத்தை என்னிடம் கொடுத்தான்”
இந்த கஸ்ஸான் மன்னன் இறைநம்பிக்கை இல்லாதவன். நிராகரிப்பாளன். கஅப் பின் மாலிக் ரளியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு ஏற்பட்ட நெருக்கடியைப் பயன்படுத்திக் குழப்பம் விளைவிக்கத் திட்டமிட்டான். வாய்மைமிக்க அந்தத் தோழருக்கு ரகசியக் கடிதம் எழுதி அனுப்பி அவரைத் தன் பக்கம் இழுக்கச் சதி செய்தான். ஆனால் அல்லாஹ் – ரஸூலின் மீதான நம்பிக்கையில் – வாய்மையான அன்பில் உறுதியாக இருந்த அந்தத் தோழர் அந்தக் கடிதத்தைப் பார்த்தபொழுது இதுவும் ஒரு சோதனையே என்று சொல்லியவாறு அதனை அடுப்பில் வீசி எரித்தார்!
கஅப் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் சொன்னது முற்றிலும் உண்மையே! அதுவும் ஒரு சோதனையே! மிக நெருங்கிய உறவினர் உட்பட மக்கள் அனைவரின் புறக்கணிப்புக்குள்ளாகி மனம் நொந்துள்ள ஒருமனிதரைப் பக்கத்து நாட்டு மன்னனே வலை விரித்து அழைக்கும் பொழுது – ராஜ மரியாதை தருவதாகக் கூறும்போது அதிலிருந்து தப்பிப்பது கடினம்தானே! ஆனால் கஅப் அவர்கள் அந்தச் சோதனையிலும் சாதனை படைத்தார்கள். கடிதத்தை கையில் வைத்துக் கொண்டிருந்தால், அவ்வப்பொழுது அதைப் படித்துப் பார்க்க வேண்டியது வரும்., மன்னனிடம் சென்று நிம்மதியாக இருக்கலாமே என்று தீய மனம் தூண்டும். ஷைத்தானின் ஊசாட்டமும் விரட்டிக் கொண்டுவரும்! அப்படியொரு வழிச்சறுகல் ஏற்பட்டுவிடக் கூடாது., அதற்கான எந்த வாய்ப்பும் இருக்கக்கூடாது என்றுதான் கடிதத்தையே அடுப்பிலிட்டு அழித்தார்கள்!
“வஹி (எனும் இறையருட்செய்தி) தாமதமானபொழுது…. நீர் உம் மனைவியை விட்டும் விலகி இருக்கும்படி நபியவர்கள் உமக்குக் கட்டளையிடுகிறார்கள்”
வஹி வருவது தாமதமானதில் அல்லாஹ் ஒரு தத்துவத்தை அமைத்து வைத்தான். வஹியின் பக்கம் மக்கள் அனைவரையும் ஆர்வம் கொள்ளச் செய்ய வேண்டுமென்பதுதான் அது. வாய்மையும் தூய்மையும் மிக்க இந்தத் தோழர்களின் விஷயத்தில் இப்பேரண்டத்தின் அதிபதி என்ன தீர்ப்பு வழங்குகிறானோ, எப்பொழுது வஹி வரப்போகிறதோ? என்று அனைவரையும் எதிர்பார்க்கச் செய்வதே இறைவனின் நாட்டம் – ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் மீது அபாண்டம் சுமத்தப்பட்ட நிகழ்ச்சியின்போதும் இவ்வாறுதான் வஹி வருவது தாமதமாயிற்று!
இத்தகைய பரபரப்பான சூழ்நிலையில் அந்த மூன்று தோழர்களுக்கும் மேலும் ஒருகட்டுப்பாட்டை விதித்தார்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள். அவர்களை விட்டும் அவர்களுடைய மனைவியரே விலகிக்கொள்ள வேண்டும் என்பது தான் அது.
கஅப் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் நல்ல திடகாத்திரமான – வாலிபத் துடிப்புள்ளவர். மனைவியுடன் வாழக்கூடாது என்று அவரை விலக்கி வைப்பது மிகவும் கஷ்டமான சமாச்சாரம்தான்!
ஆயினும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் தூதுவர் வந்து அந்தக் கட்டுப்பாட்டை அறிவித்த பொழுது –
‘நான் என் மனைவியை மணவிலக்கு செய்துவிடவா? அல்லது நான் என்னசெய்ய வேண்டும்?’ என்றுதான் கேட்டார்கள் கஅப் பின் மாலிக் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆகா! இத்துணை சோதனைகளிடையேகூட நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் கட்டளைக்குக் கீழ்ப்படிவதில்தான் அவர்கள் ஆர்வமாக இருந்துள்ளார்கள். மனைவியை மணவிலக்கு செய்யும்படி சொன்னால்கூட அதற்கும் அவர்கள் தயார் என்பதையே அவர்களது வார்த்தை காட்டுகிறது.
தூது கொண்டுவந்தவர் சொன்ன பதிலையும் கவனியுங்கள். நபியவர்கள் சொல்லி அனுப்பிய வார்த்தைகளையே அவர் திரும்பச் சொன்னாரே தவிர அவற்றை மாற்றவோ புதியதொரு கருத்தைக் கற்பிக்கவோ அவர் முயற்சி செய்யவில்லை. முன்சொன்ன வார்த்தைகளையே திரும்ப ஒருமுறை சொல்லி அவற்றின் யதார்த்தமான கருத்தையே வலியுறுத்தினார். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் கட்டளைகள் – ஹதீஸ்களைப் பொறுத்து ஸஹாபாக்களின் நிலைப்பாடு இதுதான் என்பதும் கவனத்தில் கொள்ளத்தக்கதாகும்!
இக்கட்டுரையின் தொடர்ச்சிக்கு “Next” ஐ “கிளிக்” செய்யவும்