படிப்பினைகள்
இந்நிகழ்ச்சிகளில் நமக்குப் பல படிப்பனைகள் உள்ளன:
1) இறைத்தூதரின் கட்டளைக்கு முழுமையாகக் கீழ்ப்படிதல்! ஊர் விலக்கு எனும் தண்டனை மிகக் கடுமையானது. அதனைச் சற்றுத் தளர்த்த வேண்டும் என்று யாரும் மேல் முறையீடு செய்யவில்லை. அல்லது அதை செயல்படுத்த முடியாதபடி குடும்ப ரீதியான நெருக்கடியையோ குழப்பத்தையோ எவரும் ஏற்படுத்தவில்லை – அந்த மூன்று தோழர்களோ அவர்களுடைய குடும்பத்தினரோ யாரும் அப்படிச் செய்யவில்லை!
அவர்களுடைய மனைவிரேகூட நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் கட்டளையை மீறவில்லை. அலட்சியம் செய்யவில்லை. அதற்குக் கீழ்ப்படிய வேண்டாமென தம் கணவர்களைத் தூண்டவில்லை! நபித்தோழர்களின் வாழ்வில் நடைபெற்ற இத்தகைய சமூகக் கட்டமைப்புக்கு உலகில் வேறெந்த சமூகத்திலும் நிகர் காண்பது கடினமே!
2) தீய சக்திகள் குறித்து எச்சரிக்கையாக இருப்பதும் நமது சமுதாயத்தினுள் ஊடுருவுவதற்கான எந்தச் சந்தர்ப்பத்தையும் அவர்களுக்கு அளிக்காதிருப்பதும்!
3) குழப்பத்திற்கும் வழிகேட்டிற்கும் இழுத்துச் செல்லக்கூடிய வழி வகைகளை அடைத்து விடுவது! – கஸ்ஸான் மன்னனின் கடிதம் கையில் இருந்தால் அவனது நாட்டில் தஞ்சம் புகலாம் எனும் தீய எண்ணத்திற்குப் பலியாக வேண்டியது வரலாம். அதனால் அந்தக் கடிதத்தையே தீயிட்டுக் கொளுத்தி அதன் வழியை அடைத்து விட்டார்கள், கஅப் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள்!
‘பிறகு ஐம்பதாவது நாளின் அதிகாலையில் எங்களது வீடொன்றின் மாடியில் ஃபஜ்ர் தொழுது கொண்டிருந்தேன் “
ஜமாஅத் தொழுகையை அலட்சியம் செய்ததால் அப்படிச் செய்யவில்லை. முன்பு சொன்னதுபோல் – பள்ளிவாசல் சென்றால் பேசுவார் யாருமில்லை. வலியச் சென்று ஸலாம் சொன்னாலும் பதில் வருவதில்லை. இந்நிலையில்தான் கஅப் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் மனம் நொந்து வீட்டிலேயே தங்கி விட்டார்கன். மற்ற இருதோழர்களின் நிலையும் இதுவே!
‘அவரது நற்செய்திக்குப் பகரமாக என்னுடைய இரண்டு ஆடைகளையும் களைந்து அவற்றை அவருக்கு அணிவித்தேன் “
மலை மீதேறி உரக்கக் குரல் கொடுத்தவர் மூலம்தான் நற்செய்தி பற்றிய தகவல் முதலில் கிடைத்தது. அவர்தான் பரிசுக்குரியவர் ஆனார். அணிந்திருந்த இரு நல்லாடைகளையும் களைந்து அவருக்குப் பரிசாக நல்கி விட்டு இரவல் ஆடைகளை அணிந்துகொண்டே நபியவர்களிடம் சென்றார்களெனில் அந்தச் செய்தி எவ்வளவு ஆனந்தத்தை அவர்களுக்கு அளித்துள்ளது என்பதைப் புரிந்து கொள்ளலாம்!
‘நான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் செல்லப் புறப்பட்டேன். மக்கள் கூட்டமாக வந்து என்னைச் சந்தித்தார்கள்”;
எந்த மக்கள்? அல்லாஹ் -ரஸூலின் கட்டளைப்படி அம்மூன்று தோழர்களையும் ஊர் விலக்கிவைத்த அதே மக்கள்தான்! மன்னிப்பு அறிவிக்கப்பட்டதும் அவர்கள் அனைவருக்கும் அளவிலா ஆனந்தம்! ஒருவருக்கொருவர் போட்டி போட்டுக்கொண்டு கூட்டம் கூட்டமாக வந்து வாழ்த்துத் தெரிவிக்கிறார்கள். அதற்குக் காரணம், அவர்களின் உள்ளத்தில் – அவர்களுடைய சகோதரர்களின் பேரில் இருந்த நேசம்தான்! தங்களுக்கு எதை விரும்பினார்களோ அதையே தம் சகோதரர்களுக்கும் விரும்பினார்கள்.
அந்த நேசத்தினால்தான் – அம்மூன்று தோழர்களையும் அல்லாஹ் மன்னித்ததாக அறிவிக்கப்பட்டபொழுது – திருக்குர்ஆனின் வசனங்களையே இறக்கியருளிச் சிறப்பித்தபொழுது யாரும் பொறாமைப்படவில்லை. புளகாங்கிதத்துடன் ஓடோடிவந்து வாழ்த்துக்கூறி மகிழ்வைப் பகிர்ந்து கொள்கிறார்கள்!
“தல்ஹா பின் உபைதுல்லாஹ் எழுந்து என்னை நோக்கி ஓடிவந்தார். எனக்குக் கைலாகு கொடுத்து வாழ்த்துத் தெரிவித்தார்”
பள்ளிவாசலில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் அமர்ந்திருந்த தோழர்களில் தல்ஹா மட்டும்தான் எழுந்துவந்து கஅப் ரளியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு வாழ்த்துத் தெரிவித்தார்கள். இதனைப் பெரும் மரியாதையாகவும் பேருபகாரமாகவும் கஅப் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.
வருகை தருபவருக்காக எழுந்து நிற்பது கூடுமா ?
இந்த இடத்தில் மேலும் சில விவரங்களை அறிந்துகொள்வது பயன் மிக்கது. அதாவது, ஓர் அவையினுள் வருபவரை நோக்கி எழுந்து செல்வதும் கைலாகு கொடுப்பதும் ஆகுமானவையே., கண்ணியம் அளிப்பவையே!
இதே போல வருகை தருபவருக்காக எழுந்து நிற்பதிலும் தவறில்லை. அப்படிச் செய்வது கூடாதென எந்தத் தடையும் வரவில்லை.
ஆனால் ஒருவர் வரும்பொழுது உட்கார்ந்திருப்பவரை எழுந்து நிற்கும்படிச் செய்வதும் எழுந்து நிற்குமாறு வற்புறுத்துவதும் தான் கூடாது என்று தடை வந்துள்ளது. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியிருக்கிறார்கள்: ‘தனது வருகையின் பொழுது பிற மக்கள் நிற்பவர்களாய்க் காட்சியளிக்க வேண்டுமென யார் விரும்புகிறாரோ அவர் தனது இருப்பிடத்தை நரகமாக் கிக்கொள்ளட்டும் ‘‘ (நூல்: அபூ தாவூத், திர்மிதி)
ஆக, எழுவதென்பது மூன்று வகையில் உள்ளது:
வருகை தருபவரை நோக்கி எழுந்து செல்வது
வருகை தருபவருக்காக எழுந்து நிற்பது
உட்கார்ந்திருக்கும் ஒருவருக்கருகில் நின்றுகொண்டிருப்பது
1) வருகை தருபவரை நோக்கி எழுந்து செல்வதில் தவறில்லை. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சொல், செயல், அங்கீகாரம் மூவகை ஆதாரங்களும் இதற்குண்டு.
சொல்லாதாரம்: பனூகுறைளா எனும் மதீனாவாழ் யூதர்களின் விஷயத்தில் தீர்ப்பளிப்பதற்காக ஸஅத் பின் முஆத் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் வருகை தந்தபொழுது யூதர்களை நோக்கி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள்: ‘உங்கள் தலைவரின் பக்கம் எழுந்து செல்லுங்கள் “
– பனூ குறைளா போருக்குப் பிறகு நடந்த ஒரு நிகழ்ச்சியாகும் இது. இந்த யூதர்கள், முஸ்லிம்களுடன் செய்திருந்த உடன்படிக்கைக்கு எதிராகச் செயல்பட்டதாலும் குறிப்பாக, அகழ் யுத்தத்தில் மிகக் கடுமையான நெருக்கடியில் எதிரிகளுக்குச் சாதகமாக அவர்கள் நடந்ததாலும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அந்த யூதர்களை முற்றுகையிட்டுக் கைது செய்தார்கள்.
இவர்களுக்கு என்ன தண்டனை கொடுப்பது? அதுபற்றித் தீர்ப்பளிக்கும் பொறுப்பு ஸஅத் பின் முஆத் ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. ஸஅத் பின் முஆத் அவர்கள், மதீனத்து முஸ்லிம்களில் அவ்ஸ் கோத்திரத்திரத்தின் தலைவர். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஹிஜ்ரத்தை மேற்கொண்டு மதீனா வருவதற்கு முன்பே பனூ குறைளா யூதர்களுக்கும் அவ்ஸ் கோத்திரத்துக்கும் உடன்படிக்கை இருந்தது. அந்த வகையில் இருசாராரும் நேச குலத்தவர்கள் ஆவர். ஆகையால் தங்களது நேசகுலத்தின் தலைவர் ஸஅத் பின் முஆத் அவர்களை நடுவராக ஆக்குவதற்கும் அவர்கள் அளிக்கும் தீர்ப்பை ஏற்றுக்கொள்வதற்கும் அந்த யூதர்கள் ஒப்புக்கொண்டிருந்தார்கள்.
அகழ் யுத்தத்தில் எதிரிகளின் தாக்குதலுக்குள்ளாகியிருந்த ஸஅத் பின் முஅத் ரளியல்லாஹு அன்ஹு அவர்களால் நடக்க இயலாதிருந்தது. அதனால் வாகனத்தின் மீது அமர்ந்து வந்தார்கள். ‘உங்கள் தலைவரின் பக்கம் எழுந்து செல்லுங்கள்” என்று யூதர்களை நோக்கி நபியவர்கள் கூறியதும் அவர்கள் எழுந்து சென்று ஸஅத் ரளியல்லாஹு அன்ஹு அவர்களை வரவேற்று வாகனத்தில் இருந்து கீழே இறக்கினார்கள்! (அந்த யூதர்களுக்கு மரண தண்டனை கொடுக்க வேண்டுமென ஸஅத் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் தீர்ப்பளித்தார்கள் என்பது வரலாறு)
அங்கீகாரம்: இது நாம் விளக்கம் அளிக்கும் இந்த நபிமொழியில் உள்ளது. -கஅப் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் மஸ்ஜிதினுள் நுழைந்தபொழுது அவர்களை நோக்கி தல்ஹாரளியல்லாஹு அன்ஹு அவர்கள் எழுந்து சென்றார்கள். இது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களால் மறுக்கப்படாததால் அவர்களின் அங்கீகாரத்தைப் பெற்றதாகிறது.
செயல் ரீதியான ஆதாரம்:
பனூ ஸகீப் கோத்திரத்தாரின் தூதுக்குழுவினர் – ஹுனைன் போருக்குப் பிறகு ஜுஅரானா எனும் இடத்தில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்தபொழுது அந்தத் தூதுக்குழுவினரை நோக்கி நபியவர்கள் எழுந்து சென்றார்கள். (மற்றோர் அறிவிப்பில், எழுந்து நின்றார்கள் என்றுள்ளது)
2) வருகை தருபவருக்காக எழுந்து நிற்பது. இதில் குற்றமில்லை. வருகை தருபவருக்காக எழுந்து நிற்கவில்லையாயின் அது மரியாதைக் குறைவாகக் கருதப்படும் சூழ்நிலையில் அது ஆகுமானதே! அப்படி நிற்காமலிருப்பது சிறந்ததாயினும் அத்தகையதொரு வழக்கம் நடைமுறையில் இருக்கும்பொழுது அதில் குற்றமில்லை.
3) ஒருவர் உட்கார்ந்திருக்க மற்றொருவர் அவருக்கருகில் – அவருக்குக் கண்ணியம் அளிப்பதற்காக நின்றுகொண்டிருப்பது! இது தடை செய்யப்பட்டதாகும். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள்: ‘அந்நியர்கள் சிலர், சிலருக்கு கண்ணியம் அளிக்கும் பொருட்டு நின்று கொண்டிருப்பது போன்று நீங்கள் செய்யாதீர்கள்” எந்த அளவுக்கெனில், தொழுகையில் கூட இமாம் நிற்க இயலாமல் உட்கார்ந்து தொழுகை நடத்தினால் அவரைப் பின்பற்றித் தொழுபவர்கள் உட்கார்ந்துதான் தொழுதிட வேண்டும். நின்று கொண்டு தொழக்கூடாது.
ஜாபிர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்: ‘நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பிணியுற்ற பொழுது- அவர்கள் உட்கார்ந்து தொழுகை நடத்த நாங்கள் அவர்களைப் பின்பற்றித் தொழுதோம். அபூ பக்ர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள், நபியவர்களின் தக்பீரை உரக்கச் சொல்லிக் கொண்டிருந்தார்கள். நபியவர்கள் எங்களை நோக்கித் திரும்பிப் பார்த்தார்கள். நாங்கள் நின்று கொண்டிருக்கக் கண்டார்கள். உடனே எங்கள் பக்கம் உட்காருமாறு சமிஞ்கை செய்யவே நாங்களும் உட்கார்ந்தோம்., உட்கார்ந்து கொண்டே நபியவர்களின் தொழுகையைப் பின்பற்றித் தொழுதோம். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தொழுது முடித்து ஸலாம் கொடுத்தபொழுது சொன்னார்கள்: சற்று முன்னர் – ரோமர்களும் பாரசீகர்களும் செய்வது போன்று நீங்களும் செய்ய முனைந்து விட்டீர்களே! அவர்கள்தாம் தங்களுடைய மன்னர்கள் உட்கார்ந்து கொண்டிருக்க அவர்களுக்கு அருகில் நின்று கொண்டிருப்பார்கள்! நீங்கள் அவ்வாறு செய்யாதீர்கள்” (முஸ்லிம்)
ஆனால் உட்கார்ந்து கொண்டிருப்பவருக்கு அருகில் மற்றொருவர் நிற்க வேண்டிய தேவை இருந்தால் – அந்தச் சூழ்நிலையில் அது கூடும். ஆம்! ஒருவர் மீது எதிரிகள் திடீர் தாக்குதல் தொடுக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிற சூழ்நிலையில் அவருக்குப் பாதுகாப்பு கொடுப்பதற்காக அவரருகில் மற்றொருவர் நின்று பாதுகாப்புக் கொடுத்துக் கொண்டிருப்பதில் குற்றமில்லை.
இதேபோல ஒருவருக்குக் கண்ணியம் கொடுப்பதற்காகவும் நம்மிடையே உள்ள கட்டமைப்பையும் தலைமைக்குக் கீழ்ப்படியும் பண்பையும் எதிரிகளுக்கு உணர்த்தி உள்ளச்சத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன் அவருக்கு அருகில் ஒருவர் நின்றுகொண்டிருப்பதில் குற்றமில்லை.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வரலாற்றில் – ஹுதைபிய்யா உடன்படிக்கையின் போது இப்படி நடைபெற்றது. உடன்படிக்கை குறித்து பேச்சுவார்த்தை நடத்த மக்கத்து குறைஷிகள் சார்பில் சில தலைவர்கள் வந்தார்கள். அவர்களுக்கும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கும் பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருந்தபொழுது புகழ்பெற்ற நபித்தோழர் முஃகீரா பின் ஷுஅபா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள், கையில் வாளை ஏந்திக்கொண்டு நபியவர்களுக்கு அருகில் நின்றுகொண்டிருந்தார்கள்.
ஆக, உட்கார்ந்திருக்கும் ஒருவருக்கு அருகில் நின்று கொண்டிருப்பதன் நோக்கம் பாதுகாப்பு அளிப்பதாகவோ எதிரிகளுக்கு உணர்த்துவதாகவோ இருந்தால் அதில் குற்றமில்லை.
லட்சியக் குழுவினரின் சிறு தவறுகூட…. !
‘அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நபியவர்களிடம் அவ்வாறு நான் வாக்குறுதி கொடுத்ததில் இருந்து இன்றைய தினம்வரை எந்தச் சூழ்நிலையிலும் பொய் சொல்ல நான் நாடியதில்லை. எதிர் காலத்திலும் அதிலிருந்து அல்லாஹ் என்னைக் காத்தருள்வான் என்கிற நம்பிக்கை எனக்கு உண்டு”
உண்மை பேசியதால் கஅப் ரளியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு அல்லாஹ் ஈடேற்றம் அளித்தான், அல்லவா? அதற்கு கைமாறு செலுத்த வேண்டும். தமது தவறுக்குப் பரிகாரமாகவும் அமைய வேண்டும் என்று இவ்வாறு அவர்கள் சபதம் செய்துள்ளார்கள். இனி வாழ்நாள் முழுவதும் உண்மையே பேச வேண்டுமென உறுதியேற்றுச் செயல்பட்டுள்ளார்கள். வாய்மைமிகு அந்த ஸஹாபியின் வரலாறு உண்மைக்கு ஓர் எடுத்துக்காட்டாகத் திகழும் அளவு புகழ் பெற்றுவிட்டது!
‘நபியையும் – துன்பம் சூழ்ந்த நேரத்தில் அவருக்கு உறுதுணையாக இருந்த முஹாஜிர்களையும் அன்ஸார்களையும் திண்ணமாக அல்லாஹ் பொறுத்தருளினான் “
கஅப் ரளியல்லாஹு அன்ஹு அவர்களுக்கும் ஏனைய இருதோழர்களுக்கும் மன்னிப்பு வழங்கியதாக அறிவித்த இந்த மூன்று வசனங்களின் விளக்கத்தைச் சுருக்கமாகப் பார்ப்போம்.
முதலில் நபியைப் பொறுத்தருளியதாக அல்லாஹ் அறிவித்திருப்பது ஏன்? போரில் கலந்துகொள்ளாதிருக்க சில நயவஞ்சகர்களுக்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அனுமதி அளித்ததைத் தவறு என்று அல்லாஹ் கருதியிருக்கலாம். அல்லது இறைவனின் மன்னிப்பும் கருணையும் – நபி உட்பட எல்லோருக்கும் தேவையே எனும் பொருளிலும் இவ்வாறு சொல்லப்பட்டிருக்கலாம்! – அவர்கள் இறுதி நபி., முந்தைய, பிந்தைய பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்பட்ட தூய்மையான தூதர்!
பிறகு முஹாஜிர்களையும் அன்ஸார்களையும் பொறுத்தருளியதாகக் கூறப்பட்டுள்ளது. அல்லாஹ் இவ்விரு சாராரின் சிறுசிறு பிழைகளை மன்னித்து நன்மைகளை அள்ளி அள்ளி வழங்கினான். உன்னதமான அந்தஸ்துகளை அவர்களுக்கு அளித்தான்.
இந்த வசனத்தில் முஹாஜிர்களை முதலில் கூறியிருப்பதற்குக் காரணம், அவர்கள் அன்ஸார்களை விடவும் சிறந்தவர்கள் என்பதே! ஏனெனில் அவர்கள், ஹிஜ்ரத் (நாடுதுறத்தல்) நுஸ்ரத் (பேருதவி புரிதல்) என்கிற இருவகை தியாகங்களையும் ஒருசேர நிறைவேற்றியவர்கள்!
துன்பம் சூழ்ந்த நேரத்தில் எனும் சொல் தபூக் போரையும் அப்பொழுது நிலவிய கடும் நெருக்கடியையும் சுட்டிக்காட்டுகிறது. வரலாற்றில் இந்த போருக்கு ஃகஸ்வதுல் உஸ்ரா (கஷ்ட காலத்துப் போர்) என்றுகூட ஒருபெயர் உண்டு.
‘அவர்களில் ஒருசிலரின் உள்ளம் நெறிதவறுதலின் பால் சற்று சாய்ந்து விட்டிருந்த பிறகும் . . .”
அதாவது அன்று முஸ்லிம்களில் சிலர் – வாய்மையாளர்களாய் இருந்ததுடனேயே போரில் கலந்திடாமல் தவிர்க்கவே விரும்பினார்கள். ஏனென்று கேட்டால் ஏதாவது சொல்லிக் கொள்ளலாம் என்றே கருதினார்கள். ஆயினும் தக்க நேரத்தில் அவர்களின் உள்ளம் தெளிவு பெற்றது. சத்தியத்தில் நிலைத்திருக்கும் உறுதியை அல்லாஹ் அவர்களுக்கு நல்கினான். அவர்களது தடுமாற்றம் நீங்கியது. தயக்கம் மாறியது. நபியவர்களுடன் சேர்ந்து போருக்குப் புறப்பட்டார்கள்.
‘விவகாரம் ஒத்தி போடப்பட்டிருந்த மூவரையும் அல்லாஹ் மன்னித்து விட்டான். அவர்களது நிலைமை எந்தஅளவு மோசமாகி விட்டதெனில், பூமி இத்துணை விரிவாய் இருந்தும் அவர்களைப் பொறுத்துக் குறுகிவிட்டது. அவர்கள் உயிர் வாழ்வதே கடினமாகி விட்டது”
அந்த மூன்று தோழர்கள் மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கை எனும் ஒட்டுமொத்த சமூகப் புறக்கணிப்பு குறித்துத்தான் இவ்வாறு சித்தரிக்கப் பட்டுள்ளது, குர்ஆனில். ஆம்! பூமி இவ்வளவு பரந்து விரிந்து இருந்தும் இம்மதீனா வாழ் மூன்று தோழர்களின் வாழ்க்கை வட்டம்தான் மிகவும் குறுகலாகி அவர்கள் உயிர் வாழ்வதே சிரமமானது.
இத்தகையதொரு கடுமையான தண்டனை கொடுக்கப்ட்டதன் நோக்கம், போரில் கலந்து கொள்ளாமல் பின்தங்கியிருந்த அந்தத் தோழர்களுக்கு நல்லொழுக்கப் பயிற்சி அளிக்கவேண்டும் என்பதுதான். ஏனெனில் அவர்கள் ஒருலட்சியக் குழுவைச் சேர்ந்தவர்கள். சத்தியத்திற்குச் சான்று வழங்கும் கடமையை ஏற்றிருந்த, நீதி வழிவந்த, நடுநிலைமிக்க ஒரு சமுதாயத்தின் அங்கத்தினர்கள்! உலகில் மனித குலத்தைச் சீர்திருத்தம் செய்யும் லட்சியத்திற்காகத் தோற்றுவிக்கபட்டிருக்கும் உன்னதமான உம்மத்தினர்கள்! இப்படிப்பட்டவர்களின் சிறுதவறுகூட கண்டிக்கப்படாமல்- களையப்படாமல் நீடித்தால் எதிர்காலத்தில் பின்னடைவுக்கும் பெரும் வீழ்ச்சிக்கும் அது வழிவகுத்து விடலாம். மட்டுமல்ல அத்தகைய கடுமையான நடவடிக்கை எடுத்ததில் ஏனைய தோழர்களுக்கும் தக்க படிப்பினை இருந்தது. ஏன் எல்லாக் காலத்து முஸ்லிம்களுக்கும் நல்ல பாடத்தை அது வழங்குகிறது என்பதே உண்மை.
இந்தத் தொடரில் நயவஞ்சகர்களின் மிக மோசமானநிலை குறித்தும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. ஆனால் அவர்களோ நபியவர்களிடம் பொய்யான சாக்குப் போக்குகள் சொல்லித் தப்பித்து விட்டிருந்தர்கள். அந்த மோசமான நிலை இதுதான்:
‘எனவே நீங்கள் அவர்களைக் கண்டுகொள்ளாமலே இருந்துவிடுங்கள். ஏனெனில் அவர்கள் ரிஜ்ஸ் – அசுத்தம் ஆவர்”
அரபி மொழியில் ரிஜ்ஸ் என்றால் நரகல் என்று பொருள். மது நரகல்! மனிதனின் மலம் நரகல்! ஆடுமாடுகளின் சாணம் நரகல்! இதுபோன்று நயவஞ்சகர்களும் நரகல்தான்! (இத்தகைய இழிநிலையிலிருந்து அல்லாஹ் நம்மைப் பாதுகாப்பானாக)
‘திண்ணமாக அல்லாஹ் பாவிகளான இந்த மக்கள் மீது திருப்தி கொள்ளவே மாட்டான் “
நயவஞ்சகத்தை நாம் தவிர்த்துக் கொள்ளவேண்டும். அல்லாஹ்வின் திருப் பொருத்தத்தையும் மன்னிப்பையும் இலட்சியமாகக் கொண்டே நாம் செயல்பட வேண்டும். அல்லாஹ் நம் மீது அதிருப்தி கொண்ட நிலையில் மக்கள் அனைவரும் நம் மீது திருப்தி கொண்டாலும் அது நமக்குப் பயன் அளிக்கப் போவதில்லை! ஆனால் அல்லாஹ் நம்மைப் பொருந்திக் கொண்டானெனில் மக்களின் உள்ளங்களையும் நம் பக்கம் ஈர்த்துக்கொண்டு வருவான். அவர்களும் நம்மைப் பொருந்திக் கொள்ளும்படி செய்வான்!
குர்ஆன் ஓரிடத்தில் கூறுகிறது: ‘எவர்கள் இறைநம்பிக்கை கொண்டு நற்செயல்கள் புரிந்து கொண்டிருக்கிறார்களோ அவர்களுக்காக விரைவில் கருணைமிக்க இறைவன் (மக்களின் உள்ளங்களில்) அன்பைத் தோற்றுவிப்பான்”
“திண்ணமாக அல்லாஹ், பாவிகளான இத்தகைய மக்கள் மீது திருப்தி கொள்ளவே மாட்டான்”
என்கிற வசனம் பாவங்கள் குறித்து எச்சரிக்கை செய்கிறது. எந்த ஒரு பாவத்தைச் செய்தாலும் அது, அல்லாஹ்வின் கோபத்திற்குத்தான் நம்மை ஆளாக்கும். பாவத்தில் பலவகை உள்ளன. குஃபர் – இறை நிராகரிப்பும் நயவஞ்சகமும் கொடிய பாவங்களாகும். தவிர பெற்றோரை நிந்திப்பது பாவம்! இரத்த பந்தத்தை முறிப்பது பாவம்! ஏமாற்றிப் பணம் சம்பாதிப்பது பாவம்! ஒப்பந்தத்தை மீறிச் செயல்படுவது பாவம்! பொய் பேசுவது பாவம்!
ஆக, அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தையும் மன்னிப்பையும் பெற வேண்டுமெனில் பாவங்களை விட்டொழிக்க வேண்டும். அவனது கட்டளைக்குக் கீழ்ப்படிந்து நடக்க வேண்டும்.
அறிவிப்பாளர் அறிமுகம் – கஅப் பின் மாலிக் ரளியல்லாஹு அன்ஹு
கஅப் பின் மாலிக் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் மதீனாவைச் சேர்ந்தவர்கள். மக்காவில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கும் மதீனத்து முஸ்லிம்களுக்கும் நடைபெற்ற இரண்டாம் கணவாய் உடன்படிக்கையில் கலந்து கொண்டு தொடக்க காலத்திலேயே இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள்!
பத்று, தபூக் நீங்கலாக ஏனைய எல்லாப் போர்களிலும் இவர்கள் கலந்து கொண்டார்கள்! நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய கவிஞர்களுள் இவரும் ஒருவர்! முதுமையினால் கண்பார்வை இழந்திருந்தார்கள். 77 ஆம் வயதில் முஆவியா ரளியல்லாஹு அன்ஹு அவர்களது ஆட்சிக் காலத்தில் ஷாம் தேசத்தில் மரணம் அடைந்தார்கள். ஹிஜ்ரி 51 ஆம் ஆண்டு மதீனாவில் மரணம் அடைந்தார்கள் என்று மற்றொரு கருத்தும் உள்ளது.
இதுவரை படித்ததை நினைவு படுத்திப் பாருங்கள்:
1) தபூக் போருக்குப் புறப்படவிடாமல் நயவஞ்சகர்களைத் தடுத்தது எது?
2) பத்று யுத்த்தின் பின்னணியைச் சுருக்கமாக விளக்கவும்.
3) நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஏதேனும் போருக்குப் புறப்பட நாடினால் மறைத்தே பேசுவார்கள் என்பதை விளக்கவும்.
4) கஅப் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் தபூக் நோக்கிப் புறப்படாமல் ஏன் தாமிதமானார்? எப்படித் தாமதமானார்?
5) நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தபூக்கை அடைந்த பிறகு தூரத்தில் வெள்ளைவெளேரென ஆடை அணிந்து கானல் அசைவதுபோல் வந்து கொண்டிருந்தவர் யார்? அவரைக் குறித்து கஅப் ரளியல்லாஹு அன்ஹு கூறியது என்ன?
6) கஅப் ரளியல்லாஹு அன்ஹு அவர்களைப் போல் தபூக்கில் கலந்துகொள்ளாமல் மேலும் இரு தோழர்கள் பின்தங்கினார்கள். அவர்களைக் குறித்து கஅப் அவர்கள் கூறியதன் கருத்தை விளக்கவும்.
7) கஅப் ரளியல்லாஹு அன்ஹு அவர்களுக்கும் அபூ கதாதா ரளியல்லாஹு அன்ஹு அவர்களுக்கும் நடந்த உரையாடல் என்ன, அதிலுள்ள படிப்பினைகள் என்ன?
8) கஸ்ஸான் கொடுத்துனுப்பிய கடிதம் பற்றிய செய்தி என்ன? கஅப் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அளித்த பதில் என்ன? அதிலுள்ள படிப்பினைகள் என்ன?
9) ஐம்பது நாட்கள் வரை நீடித்த ஊர்க்கட்டுப்பாட்டின்பொழுது வஹி இறங்குவது தாமதமானதன் தத்துவம் என்ன?
10) அம்மூன்று தோழர்களின் மனைவியர் தொடர்பாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பிறப்பித்த புதிய கட்டளை என்ன? அதனால் ஏற்பட்ட விளைவுகள் என்ன?
11) ஊர்க்கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருந்த காலகட்டத்தில் அம்மூன்று தோழர்களும் அனுபவித்த துன்பங்களை விளக்கவும்.
12) பனூ குறைளா போர் எப்பொழுது நடைபெற்றது? – எந்த விவகாரத்தில் தீர்ப்பளிக்கும் பொறுப்பு ஸஅத் பின் முஆத் ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது?
13) கஅப் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் தங்களது தவறுக்குப் பரிகாரமாகவும் அல்லாஹ் அளித்த மன்னிப்புக்கு நன்றியாகவும் என்னென்ன செய்தார்கள்?
14) வாய்மையான தோழர்களுக்கு இத்தகைய கடுமையான தண்டனை கொடுக்கப்பட்டதன் நோக்கம் என்ன?
15) இந்நிகழ்ச்சியில் நயவஞ்சகர்களின் நிலைமை என்ன? குர்ஆன் வசனம் அவர்களை எவ்வாறு சுட்டிக்காட்டுகிறது?
source: (ரியாளுஸ் ஸாலிஹீன்) http://islamkural.com/home/?p=3691#more-3691