கர்ப்பத்திற்கான அறிகுறிகள் என்ன?
Dr.ஷர்மிளா
ஒரு பெண் தாய்மை அடையும் போது, அவள் தன்னை மட்டுமல்ல அந்தக்குடும்பத்தையே மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்துகிறாள்.
திருமணம் ஆன எல்லாத் தம்பதியரும் ஆவலோடு எதிர்பார்ப்பது ஒரு குழந்தையைத்தான்.
ஒரு பெண் கர்ப்பம் ஆனதை உறுதி செய்வது எப்படி?
எந்த மாதிரியான அறிகுறிகள் அந்தநேரத்தில் தோன்றும்? என்பது பற்றி பார்ப்போம்.
ஆணின் உயிரணுவும், பெண்ணின் கரு முட்டையும் இணைந்து கருத்தரித்தல் நிகழ்கிறது. கருத்தரித்தல் நடந்த 4 நாட்களுக்குப் பிறகே கருவானது கருப்பை நோக்கி நகர்ந்து வருகிறது.
கருவானது கருப்பைக்குள் பதியமாகாமல் மிதந்து கொண்டிருக்கும் இந்த நிலையிலேயே சில ரசாயன மாற்றங்களை உண்டாக்குகிறது.
இவை, கருமுட்டையைப் பதியம் செய்வதற்கு கருப்பையைத் தயார்படுத்தும் சில அறிகுறிகள் ஆகும். கருத்தரித்த ஒரு வாரம் அல்லது அதற்குப் பிறகுதான் கருப்பையுடன் கரு பதியமாகும்.
இத்தகைய சிக்கலான வேளையில் சில அறிகுறிகள் தோன்றும். அவற்றுள் குறிப்பிடத்தக்கவை:
o மாத விலக்கு தள்ளிப்போகுதல்
o குமட்டல்
o இரவிலும், பகலிலும் அடிக்கடி சிறுநீர் கழித்தல்
o புண்ணோ, அழற்சியோ இல்லாமல் வெள்ளைப்படுதல்
o வாசனையைக் கண்டால் நெடி
o மார்பகம் பெரிதாவது. அதில் தொட்டால் வலி ஏற்படும். மற்றும் மார்பக நரம்புகள் புடைத்துத் தெரியும். மார்பகக் காம்புகள் கருப்பாக மாறும்
o மலச்சிக்கல் இருப்பது போன்ற உணர்வு
o புளி, ஐஸ், மாங்காய் போன்றவற்றின் மீது திடீரென ஏற்படும் ஆசை
– குழந்தையை எதிர்நோக்கும் ஒரு பெண்ணுக்கு இந்த அறிகுறிகள் இருந்தால் அவர் கருத்தரித்திருப்பதை உணர்ந்து கொள்ளலாம்.
இத்தகைய அறிகுறிகள் தெரிந்தவுடன் சம்பந்தப்பட்ட பெண் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
முதல் சில மாதங்கள் மிகவும் சிக்கலான மாதங்களாகும். இந்தக் காலத்தில் குழந்தையின் மூளை, நரம்பு மண்டலம், இதயம் போன்ற முக்கிய உறுப்புகளும், கை-கால்களும் உருவாகின்றன.
இந்தக் காலக்கட்டத்தில் மருந்து, மாத்திரைகள் சாப்பிடுவது, எக்ஸ்-ரே எடுப்பது, மது மற்றும் புகைப்பழக்கம் போன்றவற்றை தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் கருக் குழந்தை பாதிக்கப்படும்.
மேலும், கர்ப்பம் ஆனதாக உணர்ந்து கொள்ளும் அறிகுறிகள், சிலநேரங்களில் வேறு சில காரணங்களுக்காகவும் ஏற்படலாம். அதனால் பரிசோதனை செய்து கொள்வது அவசியம்.
கர்ப்பத்தை சில அறிகுறிகளை வைத்தே உறுதி செய்து கொள்ளலாம். அவை பற்றி இங்கே விரிவாகப் பார்ப்போம்…
1. மாதவிலக்கு நிற்பது
கர்ப்பம் தரித்திருப்பதற்கான முதல் அடையாளம் சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு மாதவிலக்கு நிற்பதுதான். என்றாலும், சில பெண்களுக்கு கருத்தரித்த முதல் மூன்று மாதங்கள் வரைகூட மாதவிலக்கு ஏற்படுவது உண்டு. சில வேளைகளில் கருத்தரிக்காமலேயே மாதவிலக்கு நின்றிருக்கும்.
இதற்கு உடல் இயக்கங்களும், நோய்களும் முக்கியக் காரணமாக இருக்கும். குறிப்பாக, புதிய இடங்களில் குடியேறுதல், புதிய சூழல்களில் பணியாற்றுதல், டீன் ஏஜ் பருவ வயதின் இறுதியில் இருத்தல், அதிக கவலை, டென்ஷன் போன்ற மனநிலைகளில் இருத்தல், குறிப்பிட்ட காலத்தில் ஹார்மோன்கள் கரு முட்டைகளை வெளியிடாத நிலை ஆகிய காரணங்களாலும் மாதவிலக்கு நின்றிருக்கும்.
நோய் என எடுத்துக்கொண்டால், நாட்பட்ட நோய்கள், ரத்த சோகை, ஊட்டச்சத்துக் குறைபாடுகள், உடல்பருமன், அனோரெக்சியா நெர்வோசா என்ற நரம்புத் தளர்ச்சி நோய் போன்றவற்றால் மாதவிலக்குதள்ளிப்போகலாம். ஆகவே, மாதவிலக்கு நிற்பதை மட்டுமே கவனத்தில் எடுத்துக்கொண்டு கருத்தரிப்பை உறுதி செய்ய இயலாது.
2. களைப்பு
பல பெண்களுக்கு காலை நேரத்தில் தூக்கக் கலக்கம், இயல்புக்கு மாறான உடல்சோர்வு, மாலை வேளையில் தலை பாரமாக இருப்பதுபோன்ற உணர்வு போன்றவை உண்டாகும். சில வேளைகளில் தாமாகவே இந்த அறிகுறிகள் மறைந்துவிடும். சிலருக்கு இத்தகைய சோர்வு கருத்தரித்த 12-வது வார வாக்கிலும், சிலருக்கு மிக விரைவாகவும் தெரியும்.
3. மசக்கை
இதை ஆங்கிலத்தில் `மார்னிங் சிக்னெஸ்’ என்பார்கள். முதல் முறையாகத் கருத்தரிக்கும் பெண்களுக்கு இந்தப் பிரச்சினை நிச்சயம் வரும். அடுத்தடுத்த குழந்தை பெறும் பெண்களுக்கு இந்தப் பிரச்சினை வரும் வாய்ப்பு குறைவு. பொதுவாக கருத்தரித்த இரண்டாம் மாதத் துவக்கத்தில் இந்த அறிகுறியை உணரலாம். மாதவிலக்கு நிற்பதோடு, மேற்கண்ட அறிகுறிகளும் இருந்தால், தாங்கள் கர்ப்பம் தரித்திருப்பதை பெரும்பாலும் உறுதி செய்துகொள்ளலாம்.
சில கர்ப்பிணிகளுக்கு உறங்கி எழுந்தவுடனோ, காலை உணவுக்குப் பிறகோ குமட்டல், வாந்தி போன்றவை இருக்கும். எதைச் சாப்பிட்டாலும் நெஞ்சின் மீதே இருப்பதாகத் தெரியும். சாப்பிட நினைத்தாலே குமட்டும்; வாந்தியும் வந்துவிடும். இந்தப் பிரச்சினைகள் காலை நேரத்திற்குப் பிறகு சரியாகும். மீண்டும் அடுத்த நாள் காலையில் மீண்டும் வந்து விடும். இந்த நிலை மாதவிலக்கு நின்ற அடுத்த நாளோ அல்லது இரண்டு வாரங்களுக்குப் பின்னரோ தோன்றும்.
அதுசரி…. இந்த மசக்கை ஏன் வருகிறது தெரியுமா?
கருமுட்டையும், உயிரணுவும் சேர்ந்து கருவானவுடன், முட்டையை வெளியிட்ட கருவணுக்கூடு ஈஸ்டரோஜென் ஹார்மோனை அதிகமாகச் சுரக்கும். இதன் காரணமாகவே இத்தகைய குமட்டலும், வாந்தியும் தோன்றுகின்றன. இதனால் ஏற்படும் சோர்வின் காரணமாக இரைப்பையின் இயக்கம் குறைந்து உணவுப் பொருட்கள் நெஞ்சில் நிற்கின்றன. இதனால் உணவுப் பொருட்களைச் சாப்பிட்டாமல் தவிர்க்கவேண்டியிருக்கும். அப்படி இருந்தும் மசக்கை இருக்கும்போது பெண்கள் மாங்காய் தின்ன ஆசைப்படுவதும், மண்ணையும், அடுப்புக்கரியையும், சாம்பலையும் தின்பதை வழக்கமாகக் கொள்வதும் நடக்கிறது.
இதற்கு காரணம் என்ன?
இந்த காலத்தில் தனக்கு மட்டுமின்றி, தனது கருக்குழந்தைக்கு தேவையான சத்தையும் தாய் பெற வேண்டியுள்ளது. இதனால் உணவு முறையில் மாற்றம் ஏற்பட்டு கருத்தரித்த ஆரம்ப காலத்தில் சிலருக்கு அதிகப் பசி உணர்வும், பலருக்கு பசியின்மையும் உண்டாகும்.
4. அடிக்கடி சிறுநீர் கழித்தல்
சிறுநீர்த்தாரைத் தொற்றோ, அதிகமான சிறுநீர் சேமிப்போ இல்லாதபோதிலும் கர்ப்பிணிகளுக்கு அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு ஏற்படும். இடுப்புக் கூட்டுப் பகுதியில் ஏற்படும் மாற்றங்களால் சிறுநீர்ப்பையில் தோன்றும் அழற்சிகளே இதற்குக் காரணம். இத்தகைய அறிகுறிகள் கருக்காலத்தின் இரண்டாவது, மூன்றாவது மாதங்களில் ஆரம்பிக்கும். வளரும் கருவானது கருப்பையை அழுத்தி, கருப்பை அருகில் இருக்கும் சிறுநீர்ப்பையையும், அழுத்துவதால் இந்த நிலை உண்டாகி, மாதங்கள் செல்லச் செல்ல இந்தப் பிரச்சினைகள் குறைந்து மறைந்து விடும்.
5. மார்பகப் பகுதி மாற்றங்கள்
முதல் முறையாக கர்ப்பம் தரிக்கும்போது மார்பகத்தில் பல்வேறு மாற்றங்கள் உண்டாகின்றன. மார்பகத்தில் உள்ள ரத்த நாளங்களும், மொத்த சுரப்பிகளும் பெரிதாகின்றன. மார்பகக் காம்புகள் நீண்டு, குமிழ்களுடன் பருத்துக் காணப்படும். தொட்டால் வலிக்கும். மார்பகக் காம்புகளில் இருந்து சீம்பால் போல பழுப்பு நிறத்தில் திரவம் சுரக்கும்.
கர்ப்பக் காலம் தவிர, கருப்பை மற்றும் சினைப்பைகளில் கட்டிகள் ஏற்பட்டிருந்தாலும் மார்பகத்தில் இந்த மாற்றங்கள் தோன்றும். எனவே, மார்பக மாற்றங்களையும் கருத்தரிப்புக்கு அடையாளமாகக் கொள்ள சில வேளைகளில் இயலாமல் போய்விடுகிறது.
6. மனநிலை மற்றும் எடையில் மாற்றம்
சில பெண்கள் கர்ப்பம் தரித்த ஆரம்பக் காலத்தில் மிகவும் கவலை மற்றும் துக்கம் நிறைந்தவர்களாகவோ, எதையோ இழந்தவர்களைப் போலவோ காணப்படுகிறார்கள். சிலருக்கு இதனால் தாங்க முடியாத தலைவலி, குறிப்பாக ஒற்றைத் தலைவலி உண்டாகும். கர்ப்பிணிகளுக்கு இந்தக் காலத்தில் உடல் எடை அதிகரிக்கும். இல்லாவிட்டால் குறையக்கூடும்.
7. வயிறு பெரிதாகுதல்
கருக்குழந்தை உருண்டு திரண்டு வளரும்போது இடுப்புக் கூட்டுக்கு மேல் வயிறு பெரிதாக ஆரம்பிக்கிறது. இந்த நிலையில் குழந்தையின் அங்க அசைவுகள் போன்றவை தெரிய ஆரம்பிக்கும். குறிப்பாக 18 முதல்20-வது வாரங்களில் இந்த அசைவு தெரிய ஆரம்பித்து குழந்தை பிறக்கும்வரை நீடிக்கும்.
கட்டிகள் இருந்தாலும் வயிறு பெரிதாகி, அசைவு தெரியும் நிலைகளும் உண்டு.
இந்த கர்ப்பக்கால அறிகுறிகள் சிலருக்கு நோயின் அறிகுறிகளாகவும் இருக்கலாம். அதனால், கரு தரித்திருப்பதை பரிசோதனைகள் மூலம் உறுதி செய்வது அவசியம்.
அறிகுறிகளை வைத்துக் கர்ப்பத்தைக் கண்டறிவதைவிட, நம்பகமான அறிவியல் முறையான பரிசோதனைகளை மேற்கொள்வதுதான் சிறந்தது.
பெண் உறுப்பில் ஏற்படும் மாற்றங்கள், கருப்பை வளர்ச்சி, அதன் மிருதுத்தன்மை ஆகியவற்றைக் கொண்டு மருத்துவரால் முதல் முன்று மாதங்களில் கருத்தரித்திருப்பதை உறுதி செய்து கொள்ள முடியும் என்றாலும், சிறுநீர் பரிசோதனை, ஹார்மோன் பரிசோதனை, அல்ட்ரா சவுண்டு பரிசோதனை போன்றவற்றின் முலமே கர்ப்பம் தரித்திருப்பதை நிச்சயமாக உறுதி செய்ய முடியும்.
பரிசோதனை முறைகள்:
1. சிறுநீர்ப் பரிசோதனை
இந்த பரிசோதனையின்போதே எளிதில் கர்ப்பத்தை உறுதி செய்துவிட முடியும். இந்த பரிசோதனைக்கு தேவையான பெர்க்னன்ஸி டிப் மருந்து கடைகளிலேயே கிடைக்கும். காலையில் விழித்து எழுந்ததும், முதல் சிறுநீரை சுத்தமான பாட்டிலில் பத்திரப்படுத்தி, அதில் ஓரிரு துளிகளை எடுத்து, இந்த டிப்பின் குறிப்பிட்ட பகுதியில் விடவேண்டும். கரு உறுதி செய்யப்பட்டதற்கான அடையாளமும், கரு பதியவில்லை என்பதற்கான அடையாளமும் அந்த டிப்பில் இருக்கும். அதை வைத்து கர்ப்பத்தை உறுதி செய்து கொள்ளலாம்.
2. ஹார்மோன் பரிசோதனை
இது இரண்டாவது பரிசோதனை வகை. ஒரு பெண் கருத்தரித்திருந்தால், ஹிமன் கோரியானிக் கொனடோட்ரோபிக் ஆன்டிசீரம் எனப்படும் சோதனை முலம் அறியலாம். காலையில் எழுந்ததும் வெளிவரும் முதல் சிறுநீரைப் பிடித்து இந்த சோதனையை செய்ய வேண்டும். அதில் சிறுசிறு கட்டிகள் கலந்து வந்தால் பெண் கருத்தரிக்கவில்லை என்றும், அவ்வாறு இல்லாமல் இருந்தால் பெண் கருதரித்திருப்பதையும் அறிந்து கொள்ளலாம். இந்த பரிசோதனையின்போது சிறுநீர் கலங்கலாகவோ, ரத்தம் கலந்து வந்தாலோ பரிசோதனை முடிவில் தவறுகள் நிகழவும் வாய்ப்புகள் இருக்கின்றன. இதைத் தவிர்ப்பதற்காக அல்ட்ரா சவுண்டு பரிசோதனை முறைகள் நடைமுறைக்கு வந்துள்ளன.
3. அல்ட்ரா சவுண்டு பரிசோதனை
மாதவிலக்கு நின்ற ஐந்தாவது வாரத்திலேயே ஒரு பெண் கருவுற்றிருக்கிறாளா இல்லையா என்பதைத் துல்லியமாக இந்த முறையில் கூறிவிடலாம். கருவுற்ற எட்டாவது வாரத்தில் குழந்தையின் இதயம் துடிப்பதையும் இக்கருவியின் முலம் அறிந்து கொள்ளலாம். குழந்தை வளர, வளர அதன் இதயத் துடிப்புகள், வளர்ச்சி போன்ற அனைத்து நிலவரங்களையும் தெரிந்து கொள்ளலாம். பெரும்பாலான மருத்துவர்கள் அல்ட்ரா சவுண்டு பரிசோதனையை மேற்கொள்கிறார்கள்.
4. கரு நெளிவுப் பரிசோதனை
கர்ப்பம் தரித்திருப்பதை அறிந்த பிறகு, நான்காவது மாத வாக்கில் கருவானது தாயின் அடிவயிற்றில் ஒரு துடிப்பை ஏற்படுத்துகிறது. இதற்கு கரு நெளிவு அல்லது `குயிக்கனிங் டெஸ்ட்’ என்று பெயர். இதைக்கொண்டு குழந்தை எப்போதும் பிறக்கும் என்பதை மருத்துவர்கள் தெளிவாகக் கூறுவார்கள். கருவின் அசைவை பிறப்புறுப்பினுள் கையை வைத்துப் பார்த்தல், வயிற்றின் மீது கையை வைத்துப் பார்த்தால் ஆகிய முறைகளிலும் கண்டறிய இயலும்.
இதுபோன்ற வேறு பல பரிசோதனை முறைகளையும் மருத்துவர்கள் பின்பற்றுகிறார்கள்.
நன்றி: Dr.ஷர்மிளா