சொந்த மகனுக்கு ஜகாத் கொடுக்கலாமா?
மஅன் பின் யஜீத் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்: (இவருடைய தந்தையும் பாட்டனாரும் நபித்தோழர்களாவர்) என் தந்தை யஜீத் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் சில தங்க நாணயங்களைத் தர்மம் செய்வதாக எடுத்துச் சென்று பள்ளிவாசலில் இருந்த ஒரு மனிதரிடம் (யாராவது தேவையுடையோருக்கு வழங்குமாறு) கொடுத்து வைத்தார்.
நான் சென்று அவற்றை வாங்கிக் கொண்டேன். அந்தத் தங்க நாணயங்களுடன் என் தந்தையிடம் வந்தேன்.
அவரோ அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நான் உனக்கென நினைக்கவில்லையே! என்றார். நான் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் இந்தப் பிரச்சனையைக் கொண்டு சென்றேன். அப்பொழுது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள்: யஜீதே! நீ நினைத்தது உனக்கு. மஅனே! நீ பெற்றுக் கொண்டது உனக்கு. (நூல்: புகாரி)
இந்த நபிமொழி சுவையானதும் சிந்தனைக்குரியதுமான நிகழ்ச்சி ஒன்றை எடுத்துரைக்கிறது.
நபித்தோழராகிய யஜீத் ரளியல்லாஹு அன்ஹு சில தங்க நாணயங்களை எடுத்துக் கொண்டு தர்மம் செய்வதற்காக பள்ளிவாசல் சென்றபோது அங்கு ஏழைகள் யாரும் இல்லை. அங்கே அமர்ந்திருந்த ஒருவரிடம் சென்று யாராவது ஏழை எளியவர் வந்தால் அவருக்கு என் சார்பாக இவற்றை வழங்கவும் என்று சொல்லிக் கொடுத்து விட்டு வந்தார்.
சற்று நேரத்தில் அவருடைய மகனாரின் கையிலேயே அந்தத் தர்மம் வந்து சேர்ந்தது. அது எப்படி?
நாணயங்களை வாங்கிச் செல்பவர் – அவற்றைக் கொடுத்த யஜீதின் மகனார்தான் என்பதை அந்தமனிதர் அறியாதிருக்கலாம். அல்லது மஅன்கூட ஓர் ஏழைதானே என்பதால் அவருக்குக் கொடுத்திருக்கலாம்!
ஆனால் தாம் கொடுத்து வைத்திருந்த தர்மத்தைத் தம் மகனே வாங்கினார் எனும் விவரம் யஜீத் ரளியல்லாஹு அன்ஹு அவர்களுக்குத் தெரியவந்ததும் -உன்னை நான் நினைக்கவில்லையே என்று அங்கலாய்க்கிறார். அதாவது, வேறெவருக்காவது கொடுக்க வேண்டும் என்று தானே பணத்தைக் கொடுத்தேன். உனக்குத் தரவேண்டும் என்று நான் கொடுக்கவில்லையே’ என்கிறார்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தீர்ப்பளித்தார்கள். அது,ஓர் அடிப்படை உண்மையை உணர்த்துகிறது. அமல்களெல்லாம் எண்ணங்களைப் பொறுத்தே உள்ளன., ஒருமனிதன் நல்லது செய்ய நாடினால் அது அவனுக்கு நற்கூலியாகவே அமையும் என்பதே அந்த உண்மை! இதனால்தான் இந்நிகழ்ச்சியை இந்தப் பாடத்தின் கீழ் கொண்டு வந்துள்ளார்கள் இமாம் நவவி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள்.
இந்த நிகழ்ச்சியில் – தமது தர்மம் சொந்த மகனுக்கே போய்ச் சேர வேண்டுமென யஜீத் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் நினைக்கவில்லை. யாரேனும் அந்நிய ஏழைக்குக் கிடைக்க வேண்டும் என்றே எண்ணினார். எனவேதான் யஜீதே! நீ நினைத்தது உனக்கு என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள். அதாவது, நீ எண்ணிய எண்ணத்தின்படி உனக்குக் கூலி உண்டு.
இந்த நபிமொழியின் வெளிச்சத்தில் பல சட்ட நுணுக்கங்கள் தெளிவாகின்றன.
தந்தைக்கும் மகனுக்கும் ஏற்படுகிற இதுபோன்ற விஷயங்களில் தீர்ப்புக்காக நடுவர் ஒருவரை நாடிச்செல்வது பெற்றோரை நிந்திக்கும் குற்றமாகாது.
செல்வந்தர் ஒருவர் ஒரு மனிதருக்கு ஜகாத் பணம் கொடுக்கிறார். அந்த மனிதர் ஏழைதான். ஜகாத் வாங்கிடத் தகுதியானவர்தான் எனக் கருதியே கொடுக்கிறார். ஆனால் பிறகுதான் தெரியவருகிறது, அவர் ஏழை அல்ல என்பது இவரது ஜகாத் கூடுமா? கூடாதா?
கூடும். அவர் மீதான கடமை நீங்கிவிடும். ஏனெனில் அவர் நினைத்தது ஓர் ஏழைக்கு ஜகாத் வழங்கிட வேண்டுமென்றுதான். எனவே அவரது நிய்யத் – எண்ணத்தின்படி அவருக்கு நிச்சயம் கூலி கிடைக்கும்.
ஒருவர் தனது சிறிய தோட்டம் ஒன்றை அல்லாஹ்வின் பாதையில் வக்ஃப் செய்ய எண்ணினார். ஆனால் எனது இன்ன தோட்டத்தை வக்ஃப் செய்கிறேன் என்று அவர் சுட்டிக்காட்டியது அவரது பெரிய தோட்டத்தை! அவரது சொல், எண்ணத்திற்கு மாறானது. ஆனாலும் அவர் எண்ணியது போல் சிறிய தோட்டம்தான் வக்ஃப் செய்யப்பட்டதாக ஆகும். தவறாகச் சுட்டிக் காட்டியதால் எந்தப் பாதிப்பும் வராது.
ஒருவர் ஹஜ் – உம்ரா இரண்டையும் வேறுபடுத்தி அறியாதவர்., மக்களோடு சேர்ந்து அவரும் ஹஜ்ஜுக்காகப் புறப்பட்டார்., எல்லோரும் முதலில் உம்ரா செய்துவிட்டு இஹ்ராம் களைந்தனர். அவரும் அதுபோலவே செய்ய நாடினார்., செய்தார்! ஆனால் தல்பியா சொல்லும் பொழுது லப்பைக் ஹஜ்ஜன் – இதோ ஹஜ்ஜுக்காக ஆஜராகி விட்டேன்,, என்று சொல்லிவிட்டார். இப்பொழுது இவரது நிய்யத் – எண்ணம் போல் அது உம்ராவாகவே நிறைவேறும். எல்லோரையும் போல் அவரும் உம்ரா செய்துவிட்டு இஹ்ராம் களைந்தது கூடும். லப்பைக் ஹஜ்ஜன் என்றதால் எந்தப் பாதிப்பும் ஏற்படாது. இவ்வாறு இந்நபிமொழியின் நிழலில் மேலும் பல உண்மைகள் வெளிச்சத்திற்கு வருகின்றன.
இந்த நபிமொழியின் மூலம் மேலும் தெரிய வருகிறது: ஒருமனிதன் தன் சொந்த மகனுக்கும் தர்மம் வழங்கலாம். அது ஆகுமானதே!
இதற்கு இன்னொரு நிகழ்ச்சியும் ஆதாரமாக உள்ளது. அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஏழை எளியோருக்குத் தர்மம் வழங்குமாறு தம் தோழர்களுக்கு கட்டளையிட்டார்கள். அதில் அதிக அளவு ஆர்வம் ஊட்டினார்கள்.
அப்பொழுது அப்துல்லாஹ் இப்னு மஸ்வூது ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் மனைவி ஜைனப் ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் தமது செல்வத்தில் சிறிது தர்மம் கொடுக்க நாடினார்கள்.
இதனை அறிந்த அவர்களின் கணவராகிய இப்னுமஸ்வூது ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் -உனது தர்மத்தைப் பெற உன் கணவரும் (அதாவது நானும்) நம் பிள்ளைகளுமே மிகவும் தகுதியானவர்கள். – ஏனெனில் ஜைனபின் கணவராகிய இப்னு மஸ்வூத் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் ஏழையாக இருந்தார்கள். ஆனால் ஜைனப் ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் அதனை ஏற்கவில்லை., நான் இதுபற்றி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் விசாரித்துத்தான் எதுவும் செய்யமுடியும் என்று சொல்லி விட்டார்கள்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து வினவியபொழுது அவர்கள் பதிலளித்தார்கள். அப்துல்லாஹ் சொன்னது சரிதான். நீ தர்மம் வழங்குபவர்களிலேயே உன் கணவரும் உன் பிள்ளைகளும்தாம் மிகவும் அருகதையானவர்கள்.
ஆனால் இன்னொன்றையும் இங்கு கவனிக்க வேண்டும். ஒருமனிதன் தன் மகனுக்கு ஜகாத் வழங்குவது கூடும். ஆனால் ஒரு நிபந்தனை: அவ்வாறு மகனுக்கு ஜகாத் கொடுப்பதை தன் இன்னொரு கடமைக்கு ஈடாக்கக் கூடாது.
அதாவது, தாம் கொடுத்து வரும் ஜகாத் பணமே மகனின் செலவுக்குப் போதுமானது. அவனது செலவுக்கென கொடுத்து வரும் பணத்திற்கு இந்த ஜகாத்தை ஈடாக்கி விடலாம் எனும் நிலை இருக்கக்கூடாது.
ஆனால் மகன் தனியே வாழ்கிறான். அவன் மீது கடன் உள்ளது. அதனை அடைப்பதற்கு ஜகாத் வழங்கினால் அது கூடும். எடுத்துக்காட்டாக, மகன் ஓட்டிச் சென்ற வாகனம் விபத்துக்குள்ளாகி கடன் சுமை அதிகமாகி விட்டது. அவ்வளவு பணம் அவனிடம் இல்லை. பெரும் சிரமத்திற்கு ஆளாகி விட்டான் என்றால் தந்தை தனது ஜகாத் பணத்தை மகனுக்குக் கொடுத்து மகனின் கடன் சுமை தீர உதவலாம். அது கூடும்.
அறிவிப்பாளர் அறிமுகம் – மஅன் பின் யஜீத் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள்
மஅன் என்பது இவருடைய இயற்பெயர். இவரும் இவரது தந்தை யஜீதும் பாட்டனார் அக்னஸும் – மூவருமே ஸஹாபிகள் (நபித்தோழர்கள்) “நானும் என் தந்தையும் என் பாட்டனாரும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து (இஸ்லாத்தை ஏற்றுக் கொள்வதாக) சத்திய பிரமாணம் செய்து கொடுத்தோம்” என்று மஅன் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் நினைவு கூர்கிறார்கள். டமாஸ்கஸ் யுத்தத்தில் கலந்துகொண்ட இவர்கள் கூஃபா நகரில் தங்கியிருந்தார்கள். பிறகு எகிப்து வந்தார்கள். பிறகு டமாஸ்கஸில் குடியேறினார்கள்.
மர்வான் உடைய ஆட்சிக் காலத்தில் ளஹ்ஹாக் பின் கைஸ் என்பாரின் தலைமையில் ஹிஜ்ரி 64 ஆம் ஆண்டு நடைபெற்ற மர்ஜ் ராஹத் என்ற போரில் பங்கேற்று அதிலே அவர்கள் ஷஹீத் ஆக்கப்பட்டார்கள். மஅன் பின் யஜீத் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் முஆவியா ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் ஆட்சிக்காலத்தில் நடந்த யுத்தங்களில் முஆவியா ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் படைகளில் இருந்தார் என்று சொல்லப்படுகிறது. இவர்கள் மூலம் ஐந்து நபிமொழிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
source: (ரியாளுஸ் ஸாலிஹீன்) http://islamkural.com/home/?p=3591#more-3591