டாக்டர் ஜெரால்ட் டர்க்ஸ் (Dr.Jerald Dirks), ஹார்வர்ட் பல்கலைகழகத்தில் “Masters in Divinity” பட்டம் பெற்றவர். உளவியலில் முனைவர் (Doctorate in Psychology) பட்டம் பெற்றவர். சுமார் அறுபது கட்டுரைகள் உளவியலிலும், சுமார் 150 கட்டுரைகள் அரேபிய குதிரைகளின் வரலாற்றை பற்றியும் வெளியிட்டுள்ளார்.
பைபிளில் நல்ல ஞானம் பெற்றவர். United Methodist சர்ச்சில் உதவிப் பாதிரியாராக (Deacon, Ordained Minister) இருந்தவர்.
இவரைப்பற்றி நான் ஏற்கனவே “அமெரிக்காவில் முஸ்லிம்கள் – கொலம்பஸ்சுக்கு முன்னரும் பின்னரும்” என்ற தலைப்பிலான பதிவில் குறிப்பிட்டுள்ளேன்.
இறைவன், தான் நாடுவோரை இஸ்லாத்தின் பக்கம் கொண்டு வரும் ஒவ்வொரு விதமும் ஆச்சர்யமூட்டுபவை, அழகானவை.
அரேபிய குதிரைகளின் வரலாற்றை ஆய்வு செய்ய ஆரம்பித்து, அதன் மூலமாக முஸ்லிம்களின் நட்பு கிடைத்து, அவர்களால் குரானை ஆராயத் தொடங்கி, 1993 ஆம் ஆண்டு இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார் டர்க்ஸ். அன்றிலிருந்து இன்றுவரை அவர் நம் உம்மத்துக்கு ஆற்றிய பணிகள் அளப்பரியவை. அல்ஹம்துலில்லாஹ்
சிலர், அதிக கஷ்டங்களின்றி இஸ்லாத்திற்குள் வந்து விடுகின்றனர். ஸுப்ஹானல்லாஹ். ஆனால், பலருக்கும் அப்படி இருப்பதில்லை. அவர்கள் அனுபவிக்கக்கூடிய மனப் போராட்டங்களை அவர்கள் நிலையில் இருந்து பார்த்தால் தான் புரியும். டாக்டர் டர்க்ஸ் அவர்கள் இஸ்லாத்திற்கு வந்த விதமும் அப்படித்தான். சுலபத்தில் அது நடந்து விடவில்லை.
இந்த பதிவில், இன்ஷா அல்லாஹ், அவர் இஸ்லாத்திற்கு வந்த விதம் குறித்து, அவர் சொன்ன தகவல்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளவிருக்கிறேன்….
“நான் ஹார்வர்ட் பல்கலைகழகத்திலிருந்து வெளியே வந்த 1974 ஆம் ஆண்டிலிருந்து 1993 ஆம் ஆண்டு வரை ஒரு அசாதாரண கிருத்துவனாக இருந்தேன். இறை நம்பிக்கை அதிகம் உண்டு. பைபிளை தொடர்ந்து படிப்பேன். ஆனால், ஏசு அவர்களின் தெய்வத்தன்மையிலோ அல்லது திருத்துவத்திலோ நம்பிக்கை இல்லை. ஆக, மற்ற கிருத்துவர்கள் போலல்லாமல் ஒரு அசாதாரண கிருத்துவனாக இருந்தேன்.
என் வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்ப்படுத்திய ஆண்டு 1991. அப்போது நானும் என் மனைவியும் அரேபிய குதிரைகளின் வரலாற்றை ஆய்வு செய்து கொண்டிருந்தோம். அந்த குதிரைகளைப் பற்றிய சில ஆவணங்கள் அரபி மொழியில் இருந்தன. அவற்றை ஆங்கிலத்தில் மொழிப்பெயர்க்க அரபி அறிந்த நபர்களின் உதவி தேவைப்பட்டது. அப்போது என் பகுதியில் வசித்து வந்த சகோதரர் ஜமால் அறிமுகமானார். எங்களுக்கு உதவ அவர் ஒப்புக்கொண்டார்.
எங்கள் பண்ணைக்கு வந்த அவர் குதிரைகளை பார்வையிட்டார், பிறகு அந்த ஆவணங்களை வாங்கிப் பார்த்தார். மொழிப் பெயர்த்து தருவதாக உறுதியளித்தார். அவர் புறப்படும் முன் என்னிடம் வந்து,
“நான் தொழ வேண்டும், அதற்கு முன்பாக உளு செய்யவேண்டும், அதற்கு உங்களது குளியலறையை பயன்படுத்தி கொள்ளலாமா?” என்று கேட்டார்.
உளு செய்து விட்டு வந்தவர், தரையில் வைத்து தொழ என்னிடம் சில பேப்பர்கள் வேண்டும் என்று கேட்டு வாங்கிக்கொண்டார்.
முஸ்லிம்களுடைய தொழுகை மிகவும் வலிமையான ஒன்றாக தெரிந்தது. நாட்கள் செல்ல செல்ல, ஜமால் மற்றும் அவரது குடும்பத்தினருடன் மிகவும் நெருங்கி விட்டோம். ஜமால் அவ்வப்போது குர்ஆன் மற்றும் ஹதீஸ்களிலிருந்து வசனங்கள் சிலவற்றை எடுத்துக் கூறுவார். நிச்சயமாக, எப்படியாவது எங்களை இஸ்லாத்தின்பால் கொண்டு வந்துவிடவேண்டும் என்ற எண்ணம் அவருக்கு இருந்ததில்லை. அவர் குர்ஆன் மற்றும் ஹதீஸ்களிலிருந்து எடுத்துச் சொன்ன அந்த வசனங்கள் அவர் சொல்ல வந்த கருத்தை தெளிவாக சொல்லத்தானே தவிர எங்களை இஸ்லாத்தின்பால் கொண்டுவர அல்ல.
ஆனால் ஜமால் அவர்களின் தாவாஹ் மிக வலிமையானது. எங்களை அவர் இஸ்லாத்தின்பால் நேரடியாக கூப்பிடவில்லை. அவருடைய தாவாஹ் என்பது அவரது நடவடிக்கையில் தான் இருந்தது. மிக நேர்மையானவர், மிக பண்புள்ளவர். வியாபாரத்தில் அவர் காட்டிய நேர்மை, தன் குடும்பத்தாரிடம் காட்டிய அன்பு என்று எல்லாமே எங்களை மிகவும் கவர்ந்தன.
காலப்போக்கில் வேறு சில அரேபிய குடும்பங்களோடும் நட்பு வளர்ந்தது. Wa’el மற்றும் அவரது குடும்பத்தினர், அஹ்மத் மற்றும் அவரது குடும்பத்தினர் என்று இவர்கள் அனைவரும் மிக அழகான, அர்த்தமுள்ள வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந்தனர்.
இப்போது எனக்குள்ளே கேள்விகளை கேட்க ஆரம்பித்தேன்,
“என்னையும், என்னுடைய இந்த முஸ்லிம் நண்பர்களையும் எது பிரிக்கிறது?, நானும் என் மனைவியும் இவர்களைப் போலத்தான் வாழ நினைக்கிறோம். ஆனால் எங்களால் முடியவில்லை, என்ன காரணம்?, என்னையும் இவர்களையும் எது பிரிக்கிறது? “
நான் அவர்களிடம் இது பற்றி கேட்டிருக்கலாம். ஆனால் அவர்களிடம் கேட்பதற்கு சங்கடமாக இருந்தது. அதுமட்டுமல்லாமல், நான் ஏதாவது கேட்டு, அதை அவர்கள் தவறாக நினைத்து கொண்டால், எங்கள் நட்புக்கு பாதிப்பு வந்துவிடுமே என்ற சிறு அச்சம். அதனால் அவர்களிடம் கேட்கவில்லை.
நான் ஹார்வர்ட் பல்கலைகழகத்தில் இஸ்லாமைப் பற்றி சிறிது படித்து இருக்கிறேன். இப்போது என் வீட்டில் இருந்த இஸ்லாமைப் பற்றிய அரை டஜன் புத்தகங்களை தூசி தட்ட தொடங்கினேன். அவை அனைத்தும் முஸ்லிமல்லாத நபர்களால் எழுதப்பட்டவை. அவைகளை மறுபடியும் படித்தேன். இரண்டு வெவ்வேறு ஆங்கில மொழிபெயர்ப்பு குரான்களை வாங்கினேன். படிக்கத் தொடங்கினேன்.
குர்ஆனைப் படித்த போது அதனுடன் என்னை தொடர்பு படுத்திக் கொள்ள ஆரம்பித்தேன் (I am started to connect very much with Qur’an).
அதுமட்டுமல்ல, நான் பைபிளை மிக ஆழமாக ஆராய்ந்தவன். நான் குர்ஆனில் பார்த்த பைபிள் சம்பத்தமான சில வாக்கியங்களை, நிச்சயமாக ஏழாம் நூற்றாண்டு படிக்காத மனிதர் எழுதியிருக்க முடியாது. இது இறைவனின் ஊக்கமாகத்தான் இருக்கவேண்டும் என்ற முடிவுக்கு வந்தேன் (This must be inspired by God).
இந்த முடிவு நிச்சயமாக ஒரு அசௌகர்யமான உணர்வைத் தந்தது. இத்தனை நாளாய் நான் கொண்டிருந்த நம்பிக்கையை இந்த புத்தகம் அசைத்துப் பார்ப்பதை நான் விரும்பவில்லை. நான் கிருத்துவத்தில் மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்தவன். குர்ஆன் எனக்குள் ஏற்ப்படுத்திய இந்த தாக்கத்தை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. மன போராட்டங்கள் ஆரம்பித்தன.
இது சம்பந்தமாக நிறைய முறை என்னுடைய மனைவியுடன் ஆலோசித்துள்ளேன். அவரும் இஸ்லாத்தை பற்றி அதிகம் பேச ஆரம்பித்தார்.
அது 1992 ஆம் ஆண்டு, டிசம்பர் மாதத்தின் பிற்பகுதி. அரேபிய குதிரைகளின் வரலாற்றைப் பற்றி மேலும் அறிந்து கொள்ள மத்திய கிழக்கிற்கு பயணம் மேற்க்கொள்ள ஆயத்தமானோம். பாஸ்போர்ட் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து கொண்டிருந்தோம். அந்த விண்ணப்பத்தில் ஒரு கேள்வி,
“உங்கள் மதம் என்ன?”
“கிருத்துவன்” என்று பூர்த்தி செய்தேன்.
சிறிது நேரத்திற்கு பின், பக்கத்தில் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொண்டிருந்த என் மனைவி என்னிடம் திரும்பி,
“மதம் என்னவென்று கேட்கப் பட்டிருக்கிறதே, என்ன எழுதினீர்கள்?”
இந்த கேள்வியை அவர் கேட்டவுடன் ஒரு நொடி திகைத்து விட்டேன்.
“என்ன கேள்வி இது?, நாமென்ன முஸ்லிமா?, நாம் கிருத்துவர்கள் தானே?” என்று சொல்லி பலமாக சிரித்து விட்டேன்.
நான் உளவியலில் தனித்துவம் பெற்றவன். எனக்கு நன்கு தெரியும், ஒருவருக்கு டென்ஷன் அதிகமிருந்தால் அதிலிருந்து விடுபட அவர் சிரிக்க முயல்வார். இது அந்த சூழ்நிலையில் எனக்கும் பொருந்தும்.
• அப்படி என்ன டென்ஷன் எனக்கு?
• அந்த எளிமையான கேள்வியை பூர்த்தி செய்ய ஏன் எனக்குள் இவ்வளவு போராட்டங்கள், டென்ஷன்.
• இதையெல்லாம் விட, நான் ஏன் “நாமென்ன முஸ்லிமா?” என்று கேட்க வேண்டும்.
எது எப்படியோ, சிரித்து சமாளித்து விட்டேன்.
பிறகு என் மனைவி சொன்னார், “இல்லை இல்லை, protestant, Methodist என்று இவற்றில் எதுவென்று கேட்டேன்”.
பிறகு ஜனவரி 1993 ஆம் ஆண்டில், என்னுடைய மூன்றாவது குர்ஆன் ஆங்கில மொழிபெயர்ப்பை படிக்கத் தொடங்கி இருந்தேன். இதிலாவது எனக்கு சாதகமான விஷயங்கள் இருக்கிறதா என்று ஆராயத் தொடங்கினேன். நிச்சயமாக நான் முன்பு படித்த இரண்டு மொழிபெயர்ப்புகளும் என்னுள் அதிக தாக்கத்தை ஏற்ப்படுத்தி இருந்தன. இது இறைவனின் வார்த்தைகளாக இருக்குமோ என்ற அந்த முடிவை நான் விரும்பவில்லை.
அதே மாதம், தொழுகைகளை செயற்படுத்தி பார்ப்போமே என்று தொழ ஆரம்பித்தேன். அப்போது எனக்கு அரபி தெரியாது. அதனால் ஆங்கிலத்திலேயே சூராக்களை ஓதி தொழுதேன். அப்போது நான் பெற்ற அந்த மன அமைதி அற்புதமானது.
ஆக, குர்ஆனைப் படிக்கிறேன், முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இறைவனின் தூதர் என்று நம்ப ஆரம்பித்திருக்கிறேன், ஐவேலை தொழுகிறேன், ஆனால் முஸ்லிமில்லை. உள்ளுணர்வு நான் முஸ்லிம் என்று சொல்லுகிறது. ஆனால் வெளியில் ஏதோ ஒன்று தடுக்கிறது. நான் இன்னும் கிருத்துவன் தான்.
என்னுடைய மதிய உணவை ஒரு அரேபிய உணவகத்தில் எடுத்துக்கொள்ளும் வழக்கத்தை கொண்டிருந்தேன். அன்றும், வழக்கம் போல அங்கு சென்றேன். என்னுடைய மூன்றாவது ஆங்கில மொழிபெயர்ப்பு குர்ஆனை திறந்து படித்துக் கொண்டிருந்தேன். ஆர்டர் எடுக்க, அந்த உணவகத்தின் உரிமையாளரான மஹ்மூத் வந்தார். நான் என்ன படித்து கொண்டிருக்கிறேன் என்று பார்த்தார். ஒன்றும் சொல்லவில்லை. ஆர்டர் எடுத்துக்கொண்டு சென்று விட்டார்.
சில நிமிடங்களுக்கு பிறகு, மஹ்மூதின் மனைவி இமான் உணவுகளை கொண்டு வந்தார். அவர் ஒரு அமெரிக்கர், இஸ்லாத்தை தழுவியவர். வந்தவர், நான் குர்ஆன் படித்துக் கொண்டிருப்பதை பார்த்து,
“நீங்கள் முஸ்லிமா?” என்று பணிவுடன் கேட்டார்.
ஆனால் நானோ மிகக் கடுமையாக,
“NOoooooooooooooooooooooooooo………….”
என்று எரிச்சலுடன் கத்திவிட்டேன். இதை கேட்டவுடன் கண்ணியத்துடன் விலகி சென்று விட்டார் அவர்.
ஆனால், என்ன ஆயிற்று எனக்கு?, நான் ஏன் அப்படி நடந்துக்கொண்டேன்?, அப்படி என்ன தவறான கேள்வியை கேட்டு விட்டார் அவர்?. இது நிச்சயமாக நானில்லை. சிறு வயதிலிருந்தே அனைவரையும் மரியாதையுடன் அழைக்கத் தெரிந்த எனக்கு, இன்று என்னாயிற்று?
இப்படியாகப்பட்ட கேள்விகள் துளைத்தெடுக்க ஆரம்பித்தன. குரான் படிப்பதை நிறுத்தி விட்டேன். மிகுந்த குழப்பம். பெரிய தவறு இழைத்துவிட்டதாக எண்ணினேன். சகோதரி இமான் பில்லைக் கொண்டு வந்தார். நான் அவரிடம் மன்னிப்பு கேட்டேன்.
“உங்களிடம் நான் கடுமையாக நடந்துக் கொண்டேன் என்று அஞ்சுகிறேன். இங்கே பாருங்கள், நீங்கள் என்னிடம், நான் இறைவன் ஒருவனே என்று நம்புகிறேனா என்று கேட்டால், அதற்கு என்னுடைய பதில், ஆம் என்பது.
நீங்கள் என்னிடம், முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இறைவனின் தூதர்களில் ஒருவர் என்று நம்புகிறேனா என்று கேட்டால், அதற்கும் என்னுடைய பதில், ஆம் என்பது தான்”
நான் என்னுடைய பதிலை தெளிவாக சொல்லவில்லை. அது எனக்கு நன்றாகவே தெரிந்தது. அவர் கேட்ட கேள்விக்கு நேரடியான பதிலில்லை அது.
என்னை புரிந்துக் கொண்டார் அவர். நான் என் மனதில் ஒரு போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறேன் என்று அவர் அறிந்திருக்க வேண்டும்.
“ஒன்றும் பிரச்சனையில்லை. ஒரு சிலருக்கு இஸ்லாத்தை ஏற்க நீண்ட காலம் எடுக்கும்” என்று சொல்லி விடைபெற்றார் அவர்.
நிச்சயமாக நான் என் மனதில் ஒரு போராட்டத்தை நடத்திக் கொண்டிருந்தேன். என்னை அறியாமலேயே ஆங்கிலத்தில் சகோதரி இமான் முன்பு ஷஹாதா சொல்லி விட்டேன். ஆனால் நான் வெளிப்படையாக முஸ்லிமாவதை ஏதோ ஒன்று தடுத்துக் கொண்டிருக்கிறது. என் உள்ளுணர்வு நான் முஸ்லிம் என்று சொன்னாலும், நான் இத்தனை நாளாய் கொண்டிருந்த என்னுடைய அடையாளத்தை, அதாவது கிருத்துவன் என்ற அடையாளத்தை விட்டு விட மனம் வரவில்லை. இன்னும் நான் கிருத்துவன் என்று தான் சொல்லிக் கொண்டிருக்கிறேன்.
பிறகு மார்ச் 1993ல், மத்திய கிழக்கில் மகிழ்ச்சியாக நாட்கள் சென்று கொண்டிருந்தது. அது ரமலான் மாதம். அங்கிருந்தவர்களுடன் சேர்ந்து நானும் என் மனைவியும் நோன்பு நோற்றோம். இப்போது அவர்களுடன் சேர்ந்து வெளிப்படையாக ஐந்து வேலை தொழ ஆரம்பித்தேன்.
இப்போது நான்,
• ஈசா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் தெய்வத்தன்மையில் என்றுமே நம்பிக்கை கொண்டிருந்ததில்லை.
• இறைவன் ஒருவனே என்று நம்புகிறேன்.
• முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவனுடைய தூதர் என்று நம்புகிறேன்.
• ஐந்து வேலை தொழுகிறேன்.
• நோன்பு நோற்கிறேன்…
இப்படி முஸ்லிம்களை போன்று நடந்துக் கொள்கிறேன். ஆனால் முஸ்லிமில்லை. இன்னும் நான் கிருத்துவன் தான். கேட்வர்களுக்கு இது நிச்சயம் குழப்பத்தை தரும். ஆனால் என் மனப்போராட்டங்கள் இப்படித் தான் இருந்தன.
என்னைப் பார்த்து “நீங்கள் முஸ்லிமா?” என்று யாராவது கேட்டால், அவர்களுக்கு நேரடியாக பதில் சொல்லாமல், ஒரு ஐந்து நிமிடங்களாவது ஏதாவது பேசி தலைப்பை திசை திருப்பிவிடுவேன். கடைசி வரை அவர்கள் கேட்ட கேள்விக்கு நேரடியான பதிலாக அது இருக்காது.
இப்போது மத்திய கிழக்கில் எங்களது பயணம் கடைசி கட்டத்தை எட்டியிருந்தது.
ஒரு ஃபலஸ்தீன முதியவருடன், ஃபலஸ்தீன அகதிகள் முகாமில், ஒரு குறுகிய சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தேன். அந்த முதியவருக்கு ஆங்கிலம் அவ்வளவாக தெரியாது. அப்போது எதிரே ஒருவர் வந்தார். அவருக்கும் ஆங்கிலம் தெரியவில்லை.
எதிரே வந்த அந்த சகோதரர் ஸலாம் சொன்னார், நான் பதிலளித்தேன். தொடர்ந்து ஒரு கேள்வியை கேட்டார்.
எனக்கு அரபி சிறிதளவே அப்போது தெரியும். ஒரு சில வார்த்தைகள் பேசுவேன். மற்றவர்கள் பேசினால் சிறிதளவு புரியும். அந்த சிறிதளவு அரபி ஞானம் போதும், அவர் கேட்ட கேள்வியை புரிந்துக்கொள்ள.
ஆம். அதே கேள்விதான்.
“நீங்கள் முஸ்லிமா?”
இப்போது என்ன சொல்வது?. ஏதாவது சொல்லி மழுப்பக் கூட முடியாது. ஏனென்றால் நாங்கள் மூவர் தான் இருக்கிறோம். மற்ற இருவருக்கும் ஆங்கிலம் தெரியாது. அவர்கள் மொழியிலேயே மழுப்பலாம் என்றால், எனக்கு அரபி சரளமாக தெரியாது.
எனக்கு தெரிந்த சிறிதளவு அரபியில் தான் நான் பதில் சொல்லியாக வேண்டும். வேறு எந்த வழியும் இல்லை. என்னிடம் இப்போது இரண்டே இரண்டு பதில்கள்தான்,
• ஒன்று “நாம்” (N’am, அரபியில் “ஆம்” என்று அர்த்தம்),
• மற்றொன்று “லா” ( La, “இல்லை” என்று அர்த்தம்).
இந்த இரண்டில் ஏதாவது ஒன்றை இப்போது நான் சொல்லியாக வேண்டும், வேறு சாய்ஸ் இல்லை.
இப்போது குரானின் ஒரு வசனம் ஞாபகத்திற்கு வந்தது,
“திட்டமிடுதலில் அல்லாஹ்வே சிறந்தவன்”
ஆம், அது நிச்சயமான உண்மை. இப்போது என்னை அவன் வசமாக சிக்க வைத்துவிட்டான். என்ன பதில் சொல்வது?
அல்ஹம்துலில்லாஹ்…சில நொடிகள் பதற்றத்திற்கு பிறகு, இறுதியாக அந்த வார்த்தை வெளியே வந்தது….
“நாம்”…………………..
இதே காலக்கட்டத்தில் என்னுடைய மனைவியும் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார்…அல்ஹம்துலில்லாஹ்…”
ஸுப்ஹானல்லாஹ், இஸ்லாத்தை ஏற்க ஒருவர் படும் மனப் போராட்டங்களை மிக அழகாக வெளிப்படுத்திவிட்டார் டர்க்ஸ் அவர்கள்.
இஸ்லாமை ஏற்றுக்கொண்ட பிறகு டர்க்ஸ் மற்றும் அவரது குடும்பத்தினர் சந்தித்த பிரச்சனைகளும் அதிகம். நேற்று நண்பர்களாக இருந்தவர்கள் இன்று நண்பர்களில்லை. அவரது தொழிலும் வீழ்ச்சியடைந்தது. ஆனால் இவையெல்லாம் இஸ்லாம் என்ற வாழ்க்கை நெறிக்கு முன் ஒன்றுமில்லை என்று கூறுகிறார் அவர்.
இன்று, அவரும் அவரது குடும்பத்தினரும் முஸ்லிம் அமெரிக்கர்களால் பெரிதும் விரும்பப்படுகின்றனர்.
முஸ்லிம்கள், அமெரிக்காவில் கொலம்பஸ்சுக்கு முன்னிலிருந்தே இருக்கின்றனர், அவர்கள் இந்த நூற்றாண்டில் வந்து குடியேறியவர்கள் இல்லை, சுமார் ஆயிரம் ஆண்டுகளாகவே அமெரிக்கா தான் அவர்களது தாய் நாடு என்ற உண்மையை வெளிக்கொண்டு வந்தவர்களில் ஒருவர் (இவருக்கு முன்னரே Dr. அப்துல்லாஹ் ஹக்கீம் க்வீக் அவர்கள் இது பற்றி எழுதி இருக்கிறார்கள்).
அந்த புத்தகம் மட்டுமல்லாமல் மற்றும் பல புத்தகங்களையும் எழுதியிருக்கிறார் அவர்.
டர்க்ஸ் அவர்களின் துணைவியார் டெப்ரா டர்க்ஸ் (Debra Dirks) அவர்களோ, “Islam Our Choice: Portraits of Modern American Muslim Women” என்ற புத்தகத்தை எழுதியவர்.
அதில், தன்னைப் போல இஸ்லாத்தை தழுவிய ஆறு அமெரிக்க சகோதரிகள்,
• இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட விதம்,
• ஏற்றுக்கொண்டதற்கு பின்னால் அவர்கள் சந்தித்த துயரங்கள்,
• தங்கள் குழந்தைகளை முஸ்லிம்களாக வளர்க்க அவர்கள் எதிர்க்கொள்ளும் சவால்கள்
என்று ஒரு முஸ்லிம் அமெரிக்க சகோதரியின் வாழ்க்கையை அழகாக பதிவு செய்திருக்கிறார். இவருடைய இந்த புத்தகம் புதிதாய் இஸ்லாத்தை ஏற்கும் சகோதரிகளுக்கு பெரும் உதவியாய் இருக்கிறது.
இறைவன் இந்த தம்பதியருக்கு, மென்மேலும் கல்வி ஞானத்தையும், மன பலத்தையும் தந்தருள்வானாக…ஆமின்
டெப்ரா டர்க்ஸ் அவர்களின் இந்த புத்தகத்தை போல, இஸ்லாத்தை புதிதாய் தழுவும் சகோதரிகளுக்கு பெரிதும் உதவியாய் இருக்கும் மற்றொரு புத்தகம், “Daughters of Another Path: Experiences of American Women Choosing Islam”.
இந்த புத்தகம் சற்று வித்தியாசமானது. ஏனென்றால், இது புதிதாய் இஸ்லாத்தை ஏற்கும் அமெரிக்க சகோதரிகளுக்கானது அல்ல, அவர்களின் முஸ்லிமல்லாத பெற்றோர்களுக்கானது.
இதை எழுதிய கரோல் அன்வே (Carol L. Anway) அவர்கள் முஸ்லிமல்ல. ஆனால் அவருடைய மகள் இஸ்லாத்தை தழுவியவர். தன் மகளின் இந்த முடிவால் பெரிதும் துயரமடைந்த அவர், காலப்போக்கில் அதை ஏற்றுக்கொண்டார். ஆனால் தன்னைப் போல பல தாய்மார்கள் இருப்பதை உணர்ந்த அவர், அவர்களில் சிலரை (சுமார் 53 பேர்) நேர்க்காணல் செய்து வெளியிட்ட புத்தகம் தான் இது.
இதில்,
• முஸ்லிமல்லாத பெற்றோர்களின் உணர்வுகளை,
• பெண்கள் ஏன் இவ்வளவு எதிர்ப்பையும் மீறி இஸ்லாத்தை தழுவுகிறார்கள் என்பதை,
• எப்படி காலப்போக்கில் அந்த பெற்றோர்கள் தங்கள் அருமை மகள்களின் பண்புகளை பார்த்து ஏற்றுக் கொள்கிறார்கள்
என்பது போன்ற விஷயங்களை ஆராய்ந்து எழுதியிருக்கிறார் அவர்.
CNN தொலைக்காட்சி செய்தியறிக்கையின் படி, அமெரிக்காவில் உள்ள முஸ்லிம்களில் 25% பேர் இஸ்லாத்தை ஏற்றவர்கள். அவர்களில் பெண்களே அதிகம். இந்த எண்ணிக்கை எப்போதும் போல அதிகரித்து கொண்டு தான் வருகிறது.
புதிதாய் இஸ்லாத்திற்கு வரும் பெண்கள் தங்கள் பெற்றோர்களை சமாதானப்படுத்த இது போன்ற புத்தகங்கள் அவர்களுக்கு பெரிதும் உதவியாய் இருக்கின்றன…அல்ஹம்துலில்லாஹ். பல அமெரிக்க சகோதரிகள் தங்கள் பெற்றோருக்கு பரிசாய் கொடுக்க நினைக்கும் புத்தகங்களில் இதுவும் ஒன்று.
இறைவன், இஸ்லாத்தை ஏற்கும் சகோதரிகளுக்கு மென்மேலும் மன வலிமையை தந்தருவானாக…ஆமின்
இறைவன் நம் அனைவரையும் என்றென்றும் இஸ்லாத்தில் நிலைக்கச்செய்வானாக…ஆமின்.
அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன்…
My Sincere Thanks To,
1. Brother Eddie of thedeenshow.com.
2. The Islamic Bulletin, San Francisco, CA.
References:
1. Dr.Jerald Dirks’ Interview with Br.Eddie for thedeendhow.
2. A Christian Minister’s Conversion to Islam – welcome-back.org
உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ
source: http://ethirkkural.blogspot.com/search/label/Dr.Jerald%20Dirks