அரபு நாடுகளின் வேஷம் கலைகிறது!
[ அமெரிக்காவின் நண்பனாகவும் இஸ்ரேலின் ரகசிய ஒற்றனாகவும் முபாரக் இருந்து வந்தார் என்பது தான் அவரது வாழ்நாள் சாதனை. பாலஸ்தீனர்களுக்கு முற்றிலும் துயரத்தை அளித்துக் கொண்டிருந்து இஸ்ரேலுக்கு அரபுலகத்திலிருந்து அதிபர்களை நண்பர்களாக பொறுக்கிக் கொண்டிருந்தார். இன்று அந்த துரோகத்திற்கு பரிசு கிடைத்திருக்கிறது.
எகிப்தை தொடர்ந்து ஏமன், ஜோர்டான், லிபியா, லெபனான், குவைத் என்று அரபுலகின் மக்கள், தேசம் தோறும் வெகுண்டெழுந்தனர். அதிபர்களின் இருக்கைகளுக்கு நெருக்கடி வருவதை புரிந்து கொண்டு விரைவாக செயலாற்றத் தொடங்கினர்.
வெறும் தோற்றப் பொழிவைத் தவிர அரபு மக்களிடத்தில் இஸ்லாம் ஒரு நுட்பமான வாழ்வியலின் அடிப்படையாக புழக்கத்தில் இல்லை என்பதே உண்மை. இதற்கு பின்னனியிலும் அமெரிக்க ஐரோப்பிய சக்திகளின் கொடுங்கரங்கள் உண்டு. இன்று அரபுநாடுகளை ஆக்கிரமித்துக் கொண்டிருந்த ஆட்சியாளர்களின் பதவிகளுக்கு ஆபத்து வந்திருக்கிறது. இந்த தொடக்கத்தைக் கண்டு நயவஞ்சகத்தை விதைத்துக் கொண்டிருந்த வெளியுலகம் திகைத்து நிற்கிறது. தங்கள் எண்ணை வள நண்பர்கள் எரியும் புரட்சியில் வீழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதைக் கண்டு பதைக்கிறார்கள்.
ஆனால், ஜனநாயகத்தை முலாம் பூசிக் கொண்ட இவர்களால் இந்த தோல்வியை வெளிப்படையாக ஒப்புக்கொள்ளமுடியாது. அரபுலகத்தின் அத்தனை இழிவுக்கும், அறியாமைக்கும் இஸ்லாமே காரணம் என்று வெளிவுலகம் நம்பவைக்கப்பட்டிருக்கிறது. இன்று அந்த நம்பிக்கையின் ஒப்பனைகள் உதிரத் தொடங்கிவிட்டது.]
பிரெஞ்சு புரட்சியின் போது மக்கள், “எங்களுக்கு ரொட்டி வேண்டும்” என்று கேட்டபோது, லூயி மன்னர் மனைவி ரொட்டி இல்லை என்றார் ‘அப்போ நாங்கள் எதை சாப்பிடறது” என்ற போது, மக்களிடம் “கேக்” சாப்பிடுங்கள் என்றார். பற்றிக் கொண்டது பிரெஞ்சு புரட்சி. ஒருத்தனுக்கு பிரச்சனை ஆரம்பிக்கும்போது சைத்தான் நுனி நாக்கில் உட்கார்ந்து கொண்டு மிருதங்கம் வாசிப்பான் என்றால் அது மிகையாகாது. பல்வேறு மக்கள் கிளர்ச்சிகளுக்கு ஆட்சியார்களின் அடாவடி, அடிதடியான சொற்கள் தான் காரணமாகின்றன.
துனிசியாவில் வேலை கொடு என்று கேட்ட இளைஞன் முஹம்மது பவுசிசி காவல் படையால் அடித்து உதைத்த போது விரக்தியில் அவன் சுயமாக தீவைத்துக் கொண்டு மாண்டான். இச்சம்பவம் சித்தி பௌசித் நகரில் 2010, டிசம்பர் 17ல் நடந்தது. பவுசிசியின் தாயார் உள்ளூர் நகராட்சி அலுவலகம் முன்பு அழுது புலம்பி ஆர்ப்பாட்டம் செய்தார். இக்காட்சியை பலியான பவுசிசியின் உறவினர் ஒருவர் உதவியால் அடுத்த நாள் அல்ஜஸீரா தொலைகாட்சி ஒளிபரப்பியது. இச்சம்பவம் தான் துனிசியாவில் பெரும் தாக்கத்தையும் கலவரத்தையும் உண்டு பண்ணியது.
இச்சம்பவம் மொராக்கோ முதல் எமிரேட் வரை குமிழ்களாக கொதித்து கொண்டிருந்த மக்கள் உணர்ச்சியை வெந்நீர் ஊற்று போல் பீறிடச் செய்தது. 30 வருடம் 40 வருடம் என அதிபர் மாளிகையின் இருக்கைகளை தேய்த்துக் கொண்டிருந்த அதிபர் நாற்காலியில் நட்டுகள் கழறத் தொடங்கின. துனிசியாவின் அண்டை நாடான எகிப்தில் சுனாமி போல சுருட்டி அடித்தது மக்கள் புரட்சி. இதை அடக்குகிறேன் பார் என்ற அதிபர் ஹோஸ்னி முபாரக், அடிச்ச அலையில் மூட்டை முடிச்சுகளை அள்ளிப் பொறுக்கிக் கொண்டு கடற்கரை நகரமும் அதிபர்கள், வெளிநாட்டு அதிபர்கள் ஆகியோரின் பூலோக சொர்க்கமுமான ஷாம் – அல் – ஷேக் தீவு நகரில் போய் தன்னை குடும்பத்தோடு திணித்துக் கொண்டார். தனது அருமை மகன் ஜமால் முபாரக்கை அதிபராக்கும் 40 ஆண்டு கனவு 20 ஆண்டு முயற்சி என அனைத்தும் கரைந்தோடும் கானல் நீரானது.
அமெரிக்காவின் நண்பனாகவும் இஸ்ரேலின் ரகசிய ஒற்றனாகவும் முபாரக் இருந்து வந்தார் என்பது தான் அவரது வாழ்நாள் சாதனை. பாலஸ்தீனர்களுக்கு முற்றிலும் துயரத்தை அளித்துக் கொண்டிருந்து இஸ்ரேலுக்கு அரபுலகத்திலிருந்து அதிபர்களை நண்பர்களாக பொறுக்கிக் கொண்டிருந்தார். இன்று அந்த துரோகத்திற்கு பரிசு கிடைத்திருக்கிறது.
படைகளை முன்னிருத்தி மக்களை மிரட்டிப் பார்த்தார். 300 உயிர்கள் பலியாயின. ஆயினும் திமிறிய கூட்டம் முபாரக் வெளியேறும் வரை ஓயப் போவதில்லை என்றது. ஆண்களும், பெண்களும் 30 லட்சம் பேர் தஹ்ரீர் சதுக்கத்தில் திரண்டனர். அந்த வாரத்தின் வெள்ளிக்கிழமை சிறப்புத் தொழுகையையும் போராட்டக் களத்திலேயே நிகழ்த்தினர். அந்த தொழுகைக்கு எகிப்தின் முதன்மை மத அறிஞரும் அல் அஸ்ஹர் பல்கலை கழகத்தின் பேராசிரியர் டாக்டர் யூசுப் அல் கர்ளாவி தலைமை தாங்கினார். என் வாழ்நாளிலேயே இப்படி ஒரு மக்கள் புரட்சியை காணும் வாய்ப்பு பெற்றேன் என்று உணர்சி வசப்பட்டார்.
“ஜனவரி 25ல் தஹ்ரீர் விரையுங்கள்!” – இதுதான் Face-Bookல் வெளியான தகவல். இப்படியொரு செய்தியை வெளியிட்டார் எகிப்தின் புரட்சிப் பெண் அஸ்மா மெஹ்ஃபூஸ். அவர் வெளியிட்ட படத்தில் எகிப்தின் நான்கு இளைஞர்கள் தீ கொழுத்திக் கொண்ட காட்சி நகர்கிறது. அதன் முடிவில், “அல்லாஹ்வை தவிர எதற்கும் அஞ்சாதீர்கள் – தாமாக மாற்றிக் கொள்ளாத எந்த ஒரு சமுதாயத்தையும் நாம் மாற்றிடுவதில்லை” என்கிறான் அல்லாஹ். எனவே, ஜனவரி 25ல் தஹ்ரீர் வாருங்கள். முபாரக்கின் அராஜக ஆட்சியை ஒழிப்போம் என்பதாக முடிகிறது அந்த ஒளிபரப்பு.
தஹ்ரீரில் என்ன நடக்கிறது என்று காண்பதற்காக சென்ற லட்சக்கணக்கான மக்களே பின்னர் அஸ்மாவுடன் சேர்ந்து கொண்டு புரட்சிக்கான திரட்சியை வலுவேற்றினார். Face-Bookம் அஸ்மாவும் புரட்சியின் மைய அட்சாக விளங்கினார்கள். முபாரக், உடனடியாக Face-Book, Twitter, அல்ஜசீரா ஆகிய ஊடகங்களை தடைசெய்தார்.
ராணுவம் இந்த நேரத்தில் நல்ல பிள்ளையாக நடந்து கொண்டது. துனிசியா புரட்சியின் போதும் எகிப்து புரட்சியின் போதும் அமெரிக்க அரசு அந்நாடுகளின் ராணுவ தலைமைகளுடன் நேரடித் தொடப்பில் இருந்து நிலைமையை கண்காணித்தது. எகிப்தியர்கள் தாங்கள் 7 ஆயிரம் ஆண்டு கால தொன்ம நாகரீகத்துக்கு சொந்தக்காரர்கள் என்பதை செயலில் நிருபித்தனர். தஹ்ரீர் சதுக்கத்தில் 30 லட்சம் பேர் புழங்கிய ஒரு தெருவெளியில் சிதறிய குப்பைகளை கரங்களால் துப்புறப்படுத்தினர். துனிசியாவின் அதிபராக இருந்த ஜெயினுதீன் பென் அலி அம்மக்களால் துரத்தப்பட்டதை மேற்கோள் காட்டிய ஒரு எகிப்தியர், இந்த அரபு பகுதியில் 22 பென் அலிகள் இருக்கிறார்கள். அவர்கள் அத்தனை பேரும் துரத்தப்பட வேண்டும் என்றார்.
எகிப்தை தொடர்ந்து ஏமன், ஜோர்டான், லிபியா, லெபனான், குவைத் என்று அரபுலகின் மக்கள், தேசம் தோறும் வெகுண்டெழுந்தனர். அதிபர்களின் இருக்கைகளுக்கு நெருக்கடி வருவதை புரிந்து கொண்டு விரைவாக செயலாற்றத் தொடங்கினர்.
ஏமனிலும், ஜோர்டானிலும் வேலையில்லா நிலைமை உயர்ந்த விகிதத்தை எட்டி விட்டது. இதுவே, அரசுக்கு எதிராக பெரிய அளவில் பேரணி, ஆர்ப்பாட்டங்கள் நடக்க காரணமானது. ஏமனில் நீண்ட காலம் அதிபராக இருந்துவரும் அப்துல்லாஹ் சாலிஹ் போராட்டக்காரர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். 2013ல் தனது ஆட்சி முடிவடையும் போது மீண்டும் பதவிக்கு வரமாட்டேன் என்று சொல்லிப்பார்த்தார். எனது குடும்பத்தில் இருந்தும் கூட யாரும் பதவிக்கு வர மாட்டார்கள் என்றார். தலைநகர் சானாவில் பிரச்சனை வெடிப்பதற்கு முன்பாக, தான் வாழ்நாள் அதிபராக நீடிக்கும் வகைக்கு அரசியல் அமைப்பு சட்டத்தை திருத்துவது பற்றி சாலிஹ் ஆழமாக சிந்தித்துக் கொண்டிருந்தார். 1978ல் இருந்து சாலிஹ் ஏமனில் ஆட்சி செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
சானாவின் வீதிகள் ஆர்ப்பாட்ட குரல்களால் அதிர்ந்து கொண்டிருந்த போது அதிபர், அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு தருவதாக கூறினார். ஏமனில் மக்கள் மிகப்பெரிய அளவில் புரட்சி செய்தது இதுவே முதல் முறை. ஜனவரி தொடக்கத்தில் ரொட்டியும், சுதந்திரமும் கேட்டுத்தான் ஜோர்டானியர்கள் வீதியில் வந்து போராடினார்கள். கூடவே நடப்பு அரசின் ராஜினமாவும். வேலை இல்லாதார் எண்ணிக்கை 30 சதவீதத்தை எட்டி விட்டது. சூழ்நிலையை கட்டுப்படுத்த பிரதமரையும், அமைச்சரவையையும் அதிபர் நீக்கினார். புரட்சியை வழிநடத்தியது இஸ்லாமிய செயல் முன்னணி என்ற அமைப்புதான். இந்த அமைப்பு அரசு விலகுவது தொடர்பான கோரிக்கையில் ஒதுங்கிக் கொண்டது. வெளிப்படையான தேர்தல் மட்டுமே வேண்டும் என்றது.
இதற்கு முன்னாள் ஜோர்டானில் 1970ல் ‘கருப்பு செப்டம்பர்’ என்ற பெயரில் ஒரு கிளர்ச்சி அரசுக்கு எதிராக ஏற்பட்டது. பத்தா கட்சியால் வழிநடத்தப்பட்ட பாலஸ்தீன கொரில்லா படை, அரசு படையுடன் மோதிய போது அந்த கிளர்ச்சி நடந்தது. ஜோர்டான் மக்கள் தொகையில் பாலஸ்தீனர்கள் குறிப்பிடத்தக்க செல்வாக்கை கொண்டுள்ளார்கள்.
புதிய பிரதமராக மஃரூப் பக்கித்தை அரசு அறிவித்த போது இஸ்லாமிய செயல் முன்னணி அம்முடிவில் திருப்தி கொள்ளவில்லை.மேலும் அமைச்சரவையில் பங்கெடுக்கும்படி விடப்பட்ட வேண்டுகோளையும் அம்முன்னணி நிராகரித்துவிட்டது.
பக்கித்தின் புதிய அமைச்சரவை, உண்மையான அரசியல் சீர்திருத்தம் வர செயல் பூர்வமான, விரைவான, உறுதியான நடவடிக்கைகளை எடுக்கும், ஜோர்டானில் ஜனநாயகத்தை விரைவுபடுத்தும், அனைத்து ஜோர்டான் மக்களும் பாதுகாப்பு, கௌரவ வாழ்க்கை இரண்டுக்கும் உத்தரவாதமளிக்கும் என்றும் மன்னரின் அலுவலகம் தெரிவித்தது. மன்னர் அப்துல்லாஹ்வின் ஆட்சியில் இதுவரை உண்மையாகவும் நேர்மையாகவும் தேர்தல் நடைபெற்றதே இல்லை.
ஏமனும்,ஜோர்டானும் அமெரிக்காவுடன் ராணுவ ஒத்துழைப்பு உடைய நாடுகள். இஸ்ரேலை அங்கீகரித்த முதல் இரண்டு அரபு நாடுகள் எகிப்தும் ஜோர்டானும்தான். ஏமனில், ராணுவ நடவடிக்கைகளில் ஈடுபட அமெரிக்காவுக்கு முழு சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது. அரபு பகுதியில் தனக்கு வேண்டப்பட்ட இரு நாடுகளில் அரசியல் சீர்குலைவு ஏற்படுவதை அமெரிக்கா நிச்சயம் விரும்பவில்லை.
துனிசியா கொடுத்த துணிச்சலில் உடனடியாக மக்கள் கிளர்ச்சி ஏற்பட்டது அல்ஜீரியாவில் தான். ஆனால் அங்கு அரசு துரிதமாக செயல்பட்டு புரட்சியை நமத்துப்போக செய்தது. அல்ஜீரியா பேரணிக்கு தடை விதித்தது. மட்டுமல்லாமல் அத்தியாவசியப் பொருட்களின் விலையை உடனடியாக குறைத்தது. வேலையின்மை, வீட்டு மனை தட்டுப்பாடு, இளைஞர்கள் மத்தியில் நிலவிய அன்னிய தன்மை (alienation) ஆகியன முக்கியமான பிரச்சனைகள். இப்பகுதியில் மற்ற நாடுகளைவிட அல்ஜீரியா சுதாரித்துக் கொண்டு நன்கு செயலாற்றியது.
அல்ஜீரியாவின் மதச்சார்பற்ற கட்சிகள் இணைந்து, “மாற்றம் மற்றும் மக்களாட்சிக்கான தேசிய கூட்டமைப்பை” உருவாக்கியிருக்கின்றன. இவ்வமைப்பு பேரணிக்கு தடை விதிக்கப்பட்டிருந்தும் தடையை மீறி பேரணி நடத்தப் போவதாக அறிவித்தன. அரசை மாற்றும் நோக்கத்தோடு பிப்ரவரி 12 ம் தேதி பேரணிக்கு வரும்படி அழைப்பு விடுத்தது. வீக்கி லீக்ஸ் வெளியிட்டிருந்த அமெரிக்க ரகசிய ஆவணங்களில், 2008ம் ஆண்டு ஆவணம் ஒன்றின் படி அல்ஜீரியா அரசு பலகீனமாகவும், புதிராகவும் உள்ளதாக தெரிவிக்கிறது. மேலும் முன்னெப்போதும் இல்லாத அளவில் அந்நாட்டில் ஊழல் மலிந்து விட்டதாகவும் அந்த ஆவணத்தில் தெரிய வந்துள்ளது.
பிப்ரவரி 3ஆம் நாள் அல்ஜீரிய அதிபர் அப்துல் அஜீஸ் பூத்தாப்ளிக்கா விடுத்த செய்தி ஒன்றில், நாட்டில் 19வருடங்களாக நிலவி வந்த அவசர கால சட்டங்கள் (emergency laws) வெகு விரைவில் நீக்கப்படும் என்றார். எதிர்கட்சிகளுக்கு அரசு கட்டுப்பாட்டில் உள்ள ஊடகத்தில் நேரம் ஒதுக்கித் தரப்படும் என்று அறிவித்தார்.
அல்ஜீரியாவின் அண்டை நாடான மொராக்கோவும் புரட்சிக்கு விதிவிலக்கில்லை. முக்கிய நகரங்களில் கிளர்ச்சிகளை கட்டுப்படுத்த அரசு படைகளை அனுப்பி வைத்ததாக தகவல்கள் வெளியாயின. பிரஞ்சு நாளிதழான Le Nouvel Observateur-க்கு மொராக்கோ நாட்டின் பிரபல இதழாளர் அபுபக்கர் ஜமாய் அளித்துள்ள பேட்டியில், “புரட்சி வெடித்தால் மக்களிடையே உள்ள செல்வங்களின் ஏற்றத்தாழ்வு (disparities in wealth) காரணமாக துனிசியாவைவிட அதிகமான ரத்த ஆறு ஓடும், கலவரம் வெடிக்கும்” என்றார்.
மொராக்கோ மன்னர் ஆறாம் முகம்மதுவின் உறவினர் இளவரசர் மூலே ஹக்கீம் (Mulay Hachim) El Pais என்ற ஸ்பெயின் நாட்டு நாளிதழுக்கு பேட்டிளித்த போது, “புரட்சி வெடித்தால் அரசு நிர்வாகத்தின் ஒவ்வொரு பிரிவும் சீர்குலையும் என்றார். அடுத்ததாக, சூடான். இந்நாட்டில் அதிபர் உமர் அல் பசீருக்கு எதிராக கலகம் வெடித்தது. இவர் 1989 முதல் சூடானின் அதிபராக இருந்து வருகிறார். தொடக்கத்திலேயே முகம்மது அப்துல் ரகுமான் என்ற மாணவர் கொல்லப்பட்டார். உடனே இளைஞர்கள் மத்தியில் முகம்மது அப்துல்ரகுமான் Heroவாக உயர்ந்துவிட்டார். சூடான் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர்கள் உட்பட செயலாளிகள் பலர் கைது செய்யப்பட்டனர். ஜனவரியின் தொடக்கத்திலேயே இஸ்லாமிய தலைவர் ஹசன் அல்துராபி கைது செய்யப்பட்டார்.
கடந்த மாதம் தெற்கு சூடான் தனி நாடாக பிரிக்கப்பட்டது. இதற்கு அதிபர் தான் பொறுப்பேற்க வேண்டும் என்கின்றனர் பெரும்பாலான சூடானியர்கள். தெற்கு பகுதியில் தான் நாட்டின் எண்ணெய் வளம் புதைந்துள்ளது. இப்பகுதி சட்டப்படியாகவே வடக்கு சூடானில் இருந்து பிரிந்து சென்றது.
அடுத்ததாக, புரட்சி வெடித்த நாடு லிபியா. இதன் அதிபர் மம்மர் அல் கடாஃபி. அமெரிக்காவின் சிம்ம சொப்பணம் என்று வர்ணிக்கப்பட்டவர். 40 ஆண்டுகளாக அந்நாட்டின் அதிபராக இருந்து வருகிறார். லிபியாவில் கடாஃபி வெளியேறினால் அடுத்து பதவிக்கு வர வெளிப்படையான மக்கள் தலைவர்கள் இல்லை. மேலும் எந்த ஒரு எதிர்கட்சியும் இல்லை. இவரது மகன் சயீப் அல் இஸ்லாம் தான் அடுத்த அதிபராக வரக்கூடும் என்பது இதுவரை எதிர்பார்ப்பாக இருந்தது. லிபியாவிலும் கடாஃபியின் குடும்பமே அரசின் அனைத்து துறைகளையும் ஆக்கிரமித்து வந்தது. அவரது மகன் சயீப் மேற்கத்திய ஆதரவாளர் மற்றும் தாராள சிந்தனை கொண்டவர் என்று சொல்லப்படுகிறது. அரசு தொலைக்காட்சியில் தோன்றிய சயீப், ‘மக்கள் போர்’ (Civil war) தோன்றிவிட்டதாக எச்சரிக்கை விடுத்தார். அத்துடன் அவர் அதிபராகும் கனவு நீர்த்துப் போனது. பிப்ரவரி 20 க்கு பிறகு அரசியல் சீர்திருத்தம் ஏற்படும் என்றும் சயீப் கூறினார்.
தலைநகர் திரிப்போலியில் முன்பின் தெரியாத தனிநபர்கள் ஒன்று திரண்டுதான் எதிர்ப்பு போராட்டங்களை நடத்தினர். லிபியா தீர்வுக்கான தேசிய முன்னணி (National Front for the salvation of Libya) – லிபியாவின் ஆறு கோடியே 50 லட்சம் மக்களுக்கு ஆதரவு தெரிவித்திருக்கிறது. லிபியாவில் ஆட்சியாளர்கள் அரசியல் கட்சிகளை தொடர்ந்து நசுக்கி வந்துள்ளனர். கடாஃபி தனது அரசியல் பிரகடனமான Green Bookல் அரசியல் கட்சிகளுக்கு எதிரான தனது நிலைப்பாட்டை சொல்லியுள்ளார். 1997ல் சிரியாவின் பாத் கட்சியின் தலைவரும் அதிபருமான ஹஃபீஸ் அல் ஆசாத் லிபியாவுக்கு வருகை தந்தார்.
அப்போது அவரை வரவேற்க வைக்கப்பட்ட விளம்பர அட்டைகளில் (Placards), “அரசியல் கட்கள் அனைத்தும் துரோகிகள்” என்று குறிப்பிடப்பட்டிருந்தன. கடாஃபி தொலைகாட்சியில் தோன்றிய போது அவருடன் யாரும் காணப்படவில்லை. முன்னாள் பிரதமரும் தற்போதைய தேசிய எண்ணெய் வள கழகத்தின தலைவராக இருக்கும் சுக்கிரி கானம் (Shukri Ghanum) மட்டும் கடஃபிக்கு அருகில் இருப்பதாக நம்பப்படுகிறது. தற்போது லிபியாவில் குழப்பம், வன்முறை அரசியல் குலைவு மட்டுமே காணப்படுகிறது.
ராணுவம் லிபியாவில் ஆட்சிப் பொறுப்பேற்க வாய்ப்பில்லை என்கின்றனர். கடஃபி 1969-ல் மன்னராட்சியை நீக்கிவிட்டு ஒரு ராணுவ தளபதியாகத்தான் லிபியாவை கைப்பற்றினார்.
லிபியாவில் ராணுவம் சக்தி வாய்ந்த அமைப்பாக இல்லை. கடாஃபியின் மகன்களில் ஒருவரான காமிஸ்சின் தலைமையில் தான் ஒரு உள்நாட்டு பாதுகாப்பு படை இருந்து வந்தது. பெங்காசி நகரில் ஏற்பட்ட கலகத்தை இரும்புகரம் கொண்டு இவர் அடக்கினார் என்றும் சொல்லப்படுகிறது. கடாஃபியின் குடும்பம் மற்றும் வேண்டப்பட்டவர்கள் நல்லபடியாக ஊழலில் சம்பாதித்தார்கள் என்றும் குற்றச்சாட்டப்படுகிறது.
கடாஃபி மகன் சயீப் அல் இஸ்லாம், “கடாஃபி அறக்கட்டளை அமைப்பை” நிர்வகித்து வருகிறார். மனித உரிமைகள் மற்றும் ஊடகங்களுக்கு பாதி அளவிலான சுதந்திரம் ஆகியவற்றை சயீப் நடை முறைப்படுத்தினார்.
கடாஃபி வெளியேறினால் அந்த இடத்தை இஸ்லாமிய கொள்கையாளர்கள் நிரப்புவார்கள் என்று யாரும் எதிர்பாக்க முடியாது. இதே நிலைதான் அனைத்து அரபு நாடுகளிலும் உள்ளது. புரட்சிக்குபின் இஸ்லாம் அரபு நாடுகளில் ஒரு அரசியல் உறுதிமிக்க வடிவத்தில் இடம்பெறப்போவதில்லை. லிபியா இளைஞர்கள் பலரை ஆப்கான் மற்றும் ஈராக் போரில் கலந்து கொள்ள அனுப்பி வைத்ததும், அல்கொய்தாவுடன் தொடர்புடையதுமாக கருதப்படும் “லிபியா இஸ்லாமிய போர்படை” (Libyan Islamic Fighting Group) யை சார்ந்தவர்கள் என சந்தேகத்திற்குரியவர்கள் பலர் லிபியாவில் தோற்கடிக்கப்பட்டனர். இவ்வமைப்பினர் பலர் சிறையிலிடப்பட்டுள்ளனர். அல்லது பொதுமன்னிப்பில் விடுவிக்கப்பட்டனர் என்றும் சொல்லப்படுகிறது.
லிபியாவின் பள்ளிவாசல்கள் அனைத்தும் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. கடாஃபிக்கு பின்னர் லிபியாவில் இருக்கும் பழங்குடியினர் அரசியலில் முக்கிய பங்காற்றக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பழைய மதச்சார்பற்ற எதிர்கட்சிகளும் இஸ்லாமிய அமைப்பும் இணைந்து கடாஃபிக்கு பிந்தை லிபிய அரசை தீர்மானிக்கக்கூடும் என்றும் சொல்லப்படுகிறது. 1970ல் எண்ணெய் வளத்தை கடஃபி தேசியமயமாக்கினார். 1988ல் ஸ்காட்லாந்து நாட்டின் லாக்கர் பீ (Locker bie) நகரின் மேலே சென்று கொண்டிருந்த Pan Am என்ற அமெரிக்க விமானத்தை கடாஃபி தான் ஆள் அனுப்பி குண்டு வைத்து தகர்த்தார் என்று குற்றம் சாட்டப்பட்டது. அப்போது அமெரிக்காவின் அதிபராக இருந்த ரொனால்ட் ரீகன், “மத்திய கிழக்கின் முட்டாள் நாய்” என்று கடாஃபியை வர்ணித்தார்.
2003 டிசம்பரில் அமெரிக்கா மற்றும் பிரிட்டனுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்திய கடாஃபி அணு ஆயுதங்கள், ரசாயன ஆயுதங்கள் உயிரியல் ஆயுதங்கள், தயாரிப்பதை, வெளிநாட்டிற்கு விற்பதை நிறுத்திக் கொள்வதாக ஒப்பந்தம் செய்து கொண்டார். இதன்பிறகு கடாஃபி அமெரிக்கா மற்றும் ஐராப்பிய நாடுகளின் நல்ல நண்பனாக மாறினார்.
நாட்டின் பல்வேறு பிரிவினருடன் மக்களாட்சி குறித்து நேர்மையான இனிமையான விவாதங்கள் நடத்தி வந்தார். ஆனால் தற்போதைய சூழல் பழைய கடாஃபியை வெளியாக்கியது. “மக்கள் கிளர்ச்சியை என்ன விலை கொடுத்தும் ஒடுக்குவேன்” என்றார். உள்நாட்டு ஆயுதங்கள், வெளிநாட்டு ஆயுதங்கள் கொண்டு லிபியா படை சொந்த மக்களை தாக்கியது. நூற்றுக்கணக்கானவர்கள் கொலை செய்யப்பட்டனர். லிபியாவில் அல்ஜீரியர்கள் 60,000 பேர், பங்காளதேஷிகள் 50,000 பேர், இந்தியர்கள் 18,000 பேர், சீனர்கள் 15,000 பேர் பிரச்சனைகளை அடுத்து வெளியேறத் தொடங்கினர்.
ஆக, துனிசியா தொடங்கி லிபியா வரை மக்கள் அடக்குமுறைக்கு எதிராக ஆர்பரித்து வெளிப்பட்டுள்ளனர். வெளி உலகை பொறுத்த மட்டில் அரபு நாடுகளில் என்ன நடக்கிறது என்று தெரியாது. அங்கு மன்னர்கள் ஆட்சி நடத்துவதாகவும், இஸ்லாமிய மத சட்டம் அம்மக்களை அடக்கி ஆள்வதாகவும் ஒரு ஒப்பனை காட்டப்பட்டு வந்தது. பாகிஸ்தானில் ராணுவம் ஆட்சியை கைப்பற்றினால் அங்கு ஜனநாயகம் செத்துவிட்டதாக ஒப்பாரி வைக்கும் மேற்குலகம் அரபு நாடுகளில் நடந்து வரும் இழிவான செங்கோல் ஆட்சிகள் பற்றி கவலை தெரிவிக்கவில்லை. அம்மக்கள் தான் அந்த அரசுகளை மாற்றவேண்டும் என்று சொல்லி வந்தனர். அந்த ஆட்சியார்களுடன் கைகுலுக்கி, மாநாடு நடத்தி, ஒப்பந்தம் போட்டு வளங்களை சுரண்டி வந்தனர்.
ஒரே கையெழுத்து. எதிர்த்து பேச, விளக்கம் கேட்க எதிரிகளும் இல்லை. எதிர்கட்சிகளும் இல்லை. அத்தனை வளத்தையும் அப்படியே அள்ளிச் செல்லலாம். 30 ஆண்டு 40 ஆண்டு ஆட்சிகள் இதற்குத்தான் பயன்பட்டன. வளங்களை விற்று ஆயுதங்களை வாங்கிக் குவித்ததை தவிர அந்த ஆட்சியாளர்கள் எந்த மாற்றமும் செய்ததில்லை. வெளி உலகம் அறிவியல், பொருளியல், சமூகவியலில் அசுர வளர்ச்சி கண்டு வந்தபோது அரபுலக ஆட்சியாளர்கள் எதிரிகள் பற்றி சிம்ம சொப்பணங்களை கண்டு வந்தனர்.
இஸ்ரேலுக்கு எதிரான வீராவேச வசனங்களை தவிர வேறெந்த அறிமுகமும் இவர்களுக்கு இல்லவே இல்லை. எண்ணெய் விற்ற காசு எத்தனை நாளைக்கு எரியும். எண்ணெய்க்கு பதில் இறக்குமதி செய்யப்பட்ட உணவுப்பொருட்களைக் கொண்டு மக்களின் வயிற்றுப் பசியை ஆற்றினர். ஆனால் தனிமனித சுதந்திரம், கருத்து சுதந்திரம், உலக தரமான கல்வி, அறிவியல் முன்னேற்றம், தரமான வேலைவாய்ப்பு, சுயமான வருமானம், நேர்மையான தேர்தல், தோழமையான எதிர்கட்சி இவற்றைப் பற்றி அவர்கள் சிந்தித்ததும் இல்லை. கவலைப்பட்டதும் இல்லை.
இவர்கள் அத்தனை பேருக்கும் உள்ள ஒரு ஒற்றுமை குடும்ப அரசியல் ஒன்றுதான். ஒவ்வொருவரும் தனது குடும்பத்தில் இருந்து ஒருவரை அதிபராக்க காத்திருந்தனர். இந்த நேரத்தில்தான் மக்கள் புரட்சி வெளிப்பட்டது. அந்த மக்களும் மத நம்பிக்கைக்காகவோ; மதச் சட்டங்களைக் கொண்ட ஒரு அரசுக்காகவோ கிளர்ச்சி செய்யவில்லை. ஐரோப்பிய வடிவிலான தேர்தல் முறையான ஜனநாயக அரசை அமைக்கவே விரும்புகின்றனர். மேலும் கம்யூனிசம் அங்கு ஓரளவு செல்வாக்கு பெற்றிருக்கிறது. எனவே, அரபு மக்களின் இழிவான மந்தநிலை வாழ்க்கைக்கு இஸ்லாம் ஒருபோதும் காரணமாக இருக்கவில்லை. ஆனால், மதமே காரணம் என்று புலம்பி வந்த மேற்குலக புத்திசாலிகளின் நயவஞ்சக பரப்புரைகளை இந்த புரட்சி அப்பட்டமாக வெளிப்படுத்திவிட்டது. இஸ்லாமிய இறையியலின் அடிப்படையில் வளர்ச்சி கண்டிருக்க வேண்டிய மனிதவளமும் பண்பாட்டுச் செறிவும் வீழ்த்தப்பட்டிருக்கிறது.
வெறும் தோற்றப் பொழிவைத் தவிர அரபு மக்களிடத்தில் இஸ்லாம் ஒரு நுட்பமான வாழ்வியலின் அடிப்படையாக புழக்கத்தில் இல்லை என்பதே உண்மை. இதற்கு பின்னனியிலும் அமெரிக்க ஐரோப்பிய சக்திகளின் கொடுங்கரங்கள் உண்டு. இன்று அரபுநாடுகளை ஆக்கிரமித்துக் கொண்டிருந்த ஆட்சியாளர்களின் பதவிகளுக்கு ஆபத்து வந்திருக்கிறது. இந்த தொடக்கத்தைக் கண்டு நயவஞ்சகத்தை விதைத்துக் கொண்டிருந்த வெளியுலகம் திகைத்து நிற்கிறது. தங்கள் எண்ணை வள நண்பர்கள் எரியும் புரட்சியில் வீழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதைக் கண்டு பதைக்கிறார்கள்.
ஆனால், ஜனநாயகத்தை முலாம் பூசிக் கொண்ட இவர்களால் இந்த தோல்வியை வெளிப்படையாக ஒப்புக்கொள்ளமுடியாது. அரபுலகத்தின் அத்தனை இழிவுக்கும், அறியாமைக்கும் இஸ்லாமே காரணம் என்று வெளிவுலகம் நம்பவைக்கப்பட்டிருக்கிறது. இன்று அந்த நம்பிக்கையின் ஒப்பனைகள் உதிரத் தொடங்கிவிட்டது.
by Editor, samuthayaotrumai