ஹிஜாப் தரும் சுதந்திரம்!
என்ன பார்க்கிறாய்?
என்னைப் பார்க்கும்போது
என்னில் என்ன பார்க்கிறாய்?
நான் சுதந்திரப் பறவையா?
கட்டுக்கோப்புக்குள் அடங்கியவளா?
இயந்திர உலகில் மாட்டியவளா?
கண்ணால் ஊடுருவி முகம் சுளிக்கிறாய்
கண்ணாடியாக என் மேனி தெரியாததாலோ?
கட்டுக்கோப்புடன் நானிருப்பதாலோ?
நாகரீகம் அறியாதவளாக
பிணைக்கப்பட்ட கைதியாக
நான் தெரிகிறேனோ உனக்கு?
எனக்கென்று சொந்தக் குரல்
எனக்கென்று சுயசிந்தனை இல்லை என்கிறாய்
வேண்டாவெறுப்பாக மூடிக்கொள்கிறேன் என்கிறாய்
மூடி மறைத்தால் – கூண்டு கிளியா?
முடியை மறைத்தால் – அநாகரீகமா?
காட்ட மறுத்தால் – திணிப்பா?
சிறு வட்டத்தில் அடைப்பட்டவளென்று எண்ணி
பரிதாபத்தோடும், எரிச்சலோடும் பார்க்கின்றாய்
‘சுதந்திரத்தின்’ பொருள் அறியாமலேயே
கவலையும், துயரமும்
கோபமும், வேதனையும் எனக்கு
கண்களின் ஓரம் கண்ணீரும் இருக்கு
கண்ணீரின் காரணம்
நீ என்னை ஒதுக்குவதாலும்
உன் கேலிக் கூத்தாலும் அல்ல
நீ உனையே ஒதுக்குவதால்
உனை நீயே ஏமாற்றிக் கொள்வதால்
இறுதி நாளில் பாவியாக நிற்கப் போவதால்
அடுத்தவர் கண்களுக்கு நான் அழகாக
காட்சிப் பொருளாக
வடிவமான சிலையாக இல்லாமலிருக்கலாம்
இஸ்லாம் எனக்களித்த சட்டத்தை மதிக்க விரும்புகிறேன்
அக அழகே முக அழகு என்னில் சொல்கிறேன்
ஆதிக்கம் இல்லாமல் என்னையே ஆள்கிறேன்
அமைதியில் என் அழகும்
பொறுமையில் என் மென்மையும்
ஒழுக்கத்தில் என் பெண்மையும் காணலாம்
மன வலிமை
சரியான முடிவெடுக்கும் திறன்
சிந்திப்பதை செயல்படுத்தும் பக்குவம் உண்டு
வாழ வழியில்லாமல் வறுமை விரட்டும்போதும்
உழைப்புக்கு ஊதியம் மறுக்கும் போதும்
குட்டைப் பாவாடையும், இறுக்கும் மேலாடையும்
கைகொடுக்கும் என்றாலும் வேண்டாம் என்பேன்
கிடைப்பது எனக்கு மதிப்பும், மரியாதையும்
கீழ்த்தர பார்வை என் மீது பட்டதில்லை
அந்நிய கைகள் எனைத் தொட நினைத்ததில்லை
அந்நிய மோகத்திற்கு அடிமைப்படவுமில்லை
ஆண்களின் உணர்வை சீண்டவுமில்லை
கண்களால் கற்பழிப்பவன் என் கண்ணில் பட்டதில்லை
உண்மையில் நானே சுதந்திரப் பறவை
விண்ணில் பறக்கும் என் சிறகே ‘ஹிஜாப்’
அபயத்தை அளிக்கும் கவசமே ‘அபாயா’
அணிந்துக் கொண்டு பறப்போம் சுதந்திரமாக!
நன்றி: திருமதி. ஜெஸிலா, துபாய்