அறிவு எஜமானர்கள்!
ஜெ.ஜஹாங்கீர்
வேதங்களைச் சமூகங்கள் மறந்து விட்டன. வேதம் வாசிப்பது அதன் வழி நடப்பது வாழ்வை அமைப்பது எச்சமூகத்திலும் இல்லை. சிறப்பான கல்வி கொடுக்கிறோம். நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற வைத்து வாழ்க்கையில் உயர்த்துகிறோம். உயர்வான பதவிகளில் அமர்த்துகிறோம் என்று செயல்படும் பெரிய நிறுவனங்களிலிருந்து வெளியேறியவர்கள் அந்தக் கல்வி நிறுவனப் பெயரைக் காப்பதில்லை. லஞ்சம் பெறுகின்றனர்.
அறம், தர்மம், நேர்மை, நியாயத்தை வெறுக்கின்றனர். கணக்கீட்டாளர், ஊழியர் கணக்கில் குளறுபடி செய்து வேதனைப்படுத்துகின்றனர். உழைப்பை வீணாக்குகின்றனர். அதிகாரம் கைகளில் உள்ளது என்பதற்காக பொது மக்களைப் பந்தாடுவது, உயர்வான மதிப்பெண்ணும், உயர்தரக் கல்வியும் பெற்றவர்களுடைய நிலைப்பாடாகவிருக்கிறது.
வெள்ளையர் பாணியைக் காப்பியடித்து மிருகம் போல் கல்விக் கூடங்கள் நடத்தியதன் விளைவு அங்கிருந்து வெளியேறிவர்களும் மிருகமாய் நடந்து கொள்கின்றனர்.
ஒருவர் 25 வருடம் படித்துக் கொண்டேயிருப்பார் பேண்ட், சட்டை இஸ்திரிபோட்டுத்தான் போடுவார். வாகனத்தில் பயணிப்பார். நடந்து செல்ல மாட்டார். இவருக்கு தையல் தொழிலாளி சட்டை பேண்ட் தைத்து தரணும் அவர் படிக்கக் கூடாது. துணிகளைத் துவைக்க சலவைத் தொழிலாளி வேண்டும் அவர் படிக்கக் கூடாது. காரோட்டி வேண்டும் அவர் படிக்கக் கூடாது. மிடுக்கோடு இவர் எட்டு மணி நேரப்பணி செய்வார். சனி, ஞாயிறு விடுமுறையோடு 30 நாள் சம்பளம் இவருக்குத் தரணும். 10 மணிக்கு அலுவலகம் வந்து ஒன்று ஒன்றரை லஞ்ச் டயம் போக்கி 5 மணிக்கு பேக்கைத்தூக்கி தோளில் போட்டு காலையில் செய்து விட்டு வந்த ஒப்பணையை மீண்டும் சரிப்படுத்தி கிளம்பி விடுவார். யாரும் கேட்கக் கூடாது. 7, மணிவரை அலுவலகத்தில் இருக்க மாட்டார். இருந்தாலும் குடிமகன் பதில் பெற முடியாது. நேரம் முடிந்துவிட்டது நாளை வாருங்கள் என வருகையாளர் விரட்டப்படுவார்.
ஒரு பார்பர், டைலர், தச்சர் இது போல் பேச முடியாது. பேசினால் அவர்கள் வயிறு காயும். தனியார் நிறுவனங்களில் சம்பளம் பிடித்தம் அபராதம் நடைமுறையில் உள்ளன. வேலை செய்தாலும், செய்யா விட்டாலும் அரசாங்கத்தில் சம்பளம் கிட்டும் என்ற கபடத்தனம் எல்லோர் மனத்திலும் பதுங்கியிருப்பதால் அரசு வேலைக்கு படையெடுக்கின்றனர், முண்டியடிக்கின்றனர்.
நீதித்துறையைச் சேர்ந்தவர் விடுமுறையில் சென்றால் அவருக்காக வழக்கு வாய்தா போட்டு முடக்கப்படக் கூடாது. அடுத்துள்ள அமர்வு நீதிபதியவர்கள் நடத்த வேண்டும். மேல் அதிகாரி விடுமுறையில் சென்றால் கீழுள்ளவர் அவர் பணியை முடித்துக் கொடுக்க வேண்டும். காவல் நிலையத்தில் ஆய்வாளர் இல்லையெனில் துணை ஆய்வாளர் ஆய்வாளர் இடத்திலிருந்து பணியை முடிக்க வேண்டும். துணை ஆய்வாளர் வராத போது ஏட்டு. ஏட்டு இல்லையெனில் ரைட்டர். ஒருவருமே வராதிருந்தாலும் பாரா நிற்கும் காவலர் காத்திருக்கும் பொது ஜனத் தேவையை நிறைவேற்றிக் கொடுக்கலாம். பிரச்சினையைத் தீர்த்து அனுப்பலாம். அரசுப் பணியிலுள்ளவர் வெளியே சென்றால் இணையதளத்தில் பதிவு செய்து செல்ல வேண்டும் பொது மக்கள் அலைச்சல் தவிர்க்கப்படும். இவ்வாறு செயல்படத்துவங்கினால் நிர்வாகம் சீர்பெறும்.
ஜனநாயக முறைக்கு அரசியல் தேவை எனக் கூறப்படுகிறது. மக்கள் பிரதிநிதி எம்.பி என்று உச்சரிக்கும் உதடுகள் அடுத்த நொடி எம்.பியாக 20 கோடி செலவாகும் எனக் கூறுகிறது. ஏன் இந்த முரண்பாடு? மக்கள் பிரதியாக மாற நினைப்பவர் 20 கோடி செலவிட்ட பின் மக்கள் சேவை செய்ய மாட்டார். அவருக்கான சேவைகளே அவர் பணிகளாக அமையும், மந்திரி ஆசனத்தை அறிவிலிகள் நிரப்பக்கூடாது. நுண்ணறிவாளர் நிரப்பவேண்டும். பைசா செலவில்லாமல் நாட்டுக்கு உறுப்பினர் தேர்வானால் அவரே மக்கள் பணியாற்றுவார்.
குடும்பக் கட்டுப்பாடு திட்டத்தால் பெண்கள் தமது அரை வாழ்க்கையை அநியாயமாக இழந்துள்ளனர். அறுவை சிகிச்சையால் உள்ளுறுப்பில் சீழ். காப்பர் டியால் புண், வலி. 35 வயதில் கர்ப்பப்பை இறக்கம். சிசேரியன் ஊசியால் மரணிக்கும் வரை முதுகுத்தண்டுவலி. உடலுறவில் நாட்டமின்மை. 40 வயதில் கிழவி தோற்றம். கணவன் வேறு பெண்ணை நாடுதல். உறவு வெட்டுப்பட்டது. குடும்பம் சிதைந்தது. இங்கு தொட்டுக் காட்டப்பட்ட அனைத்து பிரச்சினைகளும் பாரதப்பண்பாட்டுக் கூறுகளோ, தமிழ்ப்பண்பாட்டுக் கூறுகளோ அல்ல. பரங்கியர், வெள்ளையர் பண்பாட்டுக் கூறுகள்.
ஆட்சி முறை, அலுவலக நடைமுறை, உடுத்தும் உடை, உச்சரிக்கும் மொழி, கற்கும் கல்வி, குடும்ப வாழ்வு அனைத்திலும் ஆங்கிலேயரைப் பின்பற்றி ஒழுகுவதால் எந்த முன்னேற்றமும் இல்லாது போனது நம்மிடம். அளவிட முடியா லஞ்சம். நிர்வாகச் சிதைவு. மனிதாபிமானமற்ற செயல். பாராபட்சமுறை அனைத்தும் காணப்படுகின்றன. ஆங்கிலேயர் சிந்தனை மூளைக்குள் பதுங்கியிருப்பதால், அவர்கள் நாட்டுக்குப் போய் வேலை செய்து தங்களை வளப்படுத்துவதில் காட்டும் மும்முரத்தை அநீதியை தட்டிக் கேட்பதில் ஒரு வார்த்தையும் உச்சரிப்பதில்லை. தான் பணி செய்யும் நாடு அடுத்த நாட்டை ஆக்கிரமிக்கிறது. அநீதியிழைக்கிறது. பொய்க்காரணங்கள் கூறி அம்மக்களை அழித்தொழிக்கிறது. யார் எக்கேடு கெட்டால் என்ன எனக்கு என் குடும்பம் முக்கியம் என்ற மௌனங்கள் தொடர்வது பாரதத் தாயின் மைந்தன் என்பதற்கான அடையாளமில்லை.
பள்ளியில் தமிழ்ப் பாடம் வேண்டாம். வழக்காடு மன்றத்தில் தமிழில் வாதிட வேண்டாம். இரண்டு சமூகங்கள் இப்படிச் சிந்திக்கின்றன. இவர்களை மற்ற சமூகத்தவர் பின் தொடர்கின்றனர். பால், சக்கரை, உப்பு, பருப்பு, அரிசி, மிளகாய் கையிருப்பில் உள்ளன. தேவையுள்ளவர் எடுத்துத் திண்ண முடியாது. ஒருவர் இறங்க வேண்டிய நிறுத்தத்தில் பேருந்து நிற்காது. மற்றொருவர் இறங்க வேண்டிய நிறுத்தத்தில் நிற்கும். ஒருவருக்கு 36 ரூபாய் பேருந்து. மற்றொருவருக்கு 5 ரூபாய் பேருந்து. குடிமகனுக்கு வேண்டாம் இந்த பாராபட்சம். அலுவலகம் செல்பவர் அறிவாளி. வீட்டிலிருப்பவர் முட்டாள். படித்தவருடன் படிக்காதவர் போட்டி போட முடியாது. இந்த சிந்தனை மழுங்கடிப்பை மக்களிடம் ஏற்படுத்தி அதன்மேல் ஆட்சி நடத்திய ஆங்கிலேயர் வாழ்வு, வழிமுறை பாரதநாட்டு மக்களுக்கு வேண்டாம். அறிவு எஜமானர்களிடமிருந்து தமிழக மக்கள் காப்பாற்றப்பட வேண்டும். அறிவு முதலாளித்துவ ஆதிக்கம் குறையாமல், விலைவாசி குறையாது. மக்கள் வாழ்வு செழிக்காது. எந்த மாற்றமும் ஏற்படாது.
– ஜெ.ஜஹாங்கீர்
நவம்பர் 2010 முஸ்லிம் முரசு
source: http://jahangeer.in/?paged=8