அறிந்தும், பலரால் சரியாக அறியப்படாத தலைவர் (2)
இல்லற ஜோடிக்கு ஓர் இலக்கணம்
மண்ணின் தந்தை என்று மாமனாராலேயே புகழப்பட்டவர்:
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு ஒரு விதத்தில் சகோதரராகவும், நபியின் மகளை திருமணம் செய்ததினால் மருமகனாகவும் இருந்த அலீ ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் குடும்ப வாழ்வில் மிகவும் இனினையாக வாழ்ந்தவர் என்றே சொல்ல முடியும்.
மனைவி ஏதாவது குற்றம் செய்துவிட்டால் மாட்டை அடிப்பது போல், அல்லது அதைவிடக் கேவலமான முறையில் நடந்து கொள்ளும் கணவர்களை இன்று நாம் காண்கிறோம். ஆனால் அலி பின் அபீதாலிப் அவா்களோ தனது மனைவியுடன் ஏதும் பிரச்சினை ஏற்பட்டால் அந்த இடத்தை விட்டு சற்று நேரத்திற்கு ஒதுங்கி இருப்பவராகவே காணப்பட்டார்.
அப்படித்தான் ஒரு நாள் மனைவியுடன் தனக்கு ஒரு மனஸ்தாபம் ஏற்பட்ட போது பள்ளியில் சென்று உறங்கிக் கொண்டிருந்தார் அந்த நேரத்தில் நடந்த ஒரு சுவாரஸ்யமான சம்பவத்தைப் பாருங்கள்.
அபூஹாஸிம் ஸலமா பின் தீனார் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் கூறியதாவது: ஒரு மனிதர் சஹ்ல் பின் ஸஅத் ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம் வந்து, இன்னவர் – அதாவது மதீனாவின் ஆளுநர் (மர்வான் பின் ஹகம்) அலீ ரளியல்லாஹு அன்ஹு அவர்களை மிம்பருக்கருகில் (விரும்பத் தகாத பெயரால்) அழைக்கிறார் என்று சொன்னார். சஹ்ல் பின் சஅத் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள், அவர் (அப்படி) என்ன சொன்னார்? என்று கேட்க அம்மனிதர் அபூ துராப் (மண்ணின் தந்தை) என்று அழைக்கிறார் என்று பதிலளித்தார்.
இதைக் கேட்டு ஸஹ்ல் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் சிரித்துவிட்டு அல்லாஹ்வின் மீதாணையாக! நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தாம் அலீ ரளியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு அந்தப் பெயரைச் சூட்டினார்கள். அலீ ரளியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு அதை விடப் பிரியமான ஒரு பெயர் எதுவும் இருந்ததில்லை என்று சொன்னார்கள் – இந்த ஹதீஸை முழுமையாகச் சொல்லும்படி நான் ஸஹ்ல் ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம் கேட்டுக் கொண்டு அபுல் அப்பாஸ் (ஸஹ்ல் பின் ஸஅத்) அவர்களே! அது எப்படி? என்று கேட்டேன்.
அதற்கு அவர்கள் சொன்னார்கள்: (ஒருமுறை) அலீ ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் ஃபாத்திமா ரளியல்லாஹு அன்ஹா அவர்களிடம் சென்றார்கள். பிறகு (அலீ ரளியல்லாஹு அன்ஹு – ஃபாத்திமா ரளியல்லாஹு அன்ஹா இடையே மனஸ்தாபம் ஏற்படவே) வெளியே வந்து பள்ளிவாசளில் படுத்துக் கொண்டார்கள். (அப்போது ஃபாத்திமா ரளியல்லாஹு அன்ஹா அவர்களின் வீட்டுக்கு வந்த) நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உன் பெரிய தந்தையின் மகன் (அலீ) எங்கே? என்று கேட்க அவர்கள் பள்ளிவாசளில் இருக்கிறார் என்று பதிலளித்தார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அலீ ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம் சென்ற போது அவர்களுடைய மேல்துண்டு அவர்களுடைய முதுகிலிருந்து (தரையில்) விழுந்து விட்டிருப்பதையும் (தரையிலுள்ள) மண் அவர்களுடைய முதுகில் ஒட்டிக் கொண்டிருப்பதையும் கண்டு அவர்களுடைய முதுகிலிருந்து மண்ணைத் துடைக்கலானார்கள். அப்போது (எழுந்து) அமருங்கள் அபூதுராப் (மண்ணின் தந்தை) அவர்களே! என்று (நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்) இருமுறை சொன்னார்கள். (புகாரி – 3703)
மருமகனை தீவிரவாதியாகப் பார்க்கும் மாமனாரும், மாமனாரை ஜென்மப் பகை கொண்டவனாகப் பார்க்கும் மருமகன்களையும் நாம் அடிக்கடி பார்திருக்கிறோம். ஆனால் இப்படி பாசமும், நேசமும் ஒரு சேர இடம்பெற்ற, மாமனாரையும், மருமகனையும் யாராவது பார்த்திருக்கிறோமா?
மாமனார் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வீட்டிட்கு வந்து மருமகனை விசாரிக்கிறார், மருமகன் மனைவியுடன் அதாவது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மகள் ஃபாத்திமா ரளியல்லாஹு அன்ஹா தன் கணவர் கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு சென்று பள்ளியில் உறங்கிக்கொண்டிருப்பதாக ஃபாத்திமா ரளியல்லாஹு அன்ஹா கூறுகிறார்கள்.
உடனே மகளின் கணவரின் கோபத்திற்கான காரணம் என்ன? அவர் ஏன் பள்ளியில் போய் உறங்க வேண்டும் என்பதைத் தெரிந்து கொள்வதற்காக தேடிச்செல்கிறார்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்.
அங்கு அலீ ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் உறங்குகிறார்கள், முதுகில் இருந்த துண்டு தரையில் வீழ்ந்து கிடக்கிறது. தரையில் உள்ள மண்ணோ மருமகனின் முதுகில் ஒட்டிக் கொண்டிருக்கிறது, இதைப் பார்த்த மாமனாரோ உடனே மகளின் கணவரின் முதுகில் இருந்த மண்ணைத் தட்டி விடுகிறார்கள்.
அப்போதுதான் அலீ ரளியல்லாஹு அன்ஹு அவர்களைப் பார்த்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மிக அழகான புகழாரமாக மண்ணின் தந்தையே என்று மிகவும் பாசத்தோடும், பரிவோடும் குறிப்பிட்டு எழுப்புகிறார்கள்.
இந்தப் பெயர் அலீ ரளியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு மிகவும் விருப்பத்திற்குறியதாக இருந்ததை நாம் அறிய முடிகிறது.
இளவரசியைக் கரம் பிடிக்க இத்கிர் புல் வியாபாரம் செய்த இளம் வீரர்
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மகள் ஃபாத்திமா ரளியல்லாஹு அன்ஹா அவர்களை திருமணம் செய்துகொள்வதற்கு பலரும் விருப்பம் தெரிவித்தார்கள். குறிப்பாக நபியின் உற்ற நண்பர்களான அபு பக்கர், உமர் ரளியல்லாஹு அன்ஹு ஆகியோரும் விருப்பம் தெரிவித்தார்கள்.
ஆனால் நபியவர்களோ அந்த இருவருக்கும் பாத்திமா அவர்களை தீருமணம் செய்து வைக்கவில்லை. சில காரணங்களினால் மறுத்துவிட்டார்கள்.
அலீ ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்டவுடன் அதனை ஒத்துக் கொண்டார்கள்.
ஃபாத்திமா ரளியல்லாஹு அன்ஹாவை அவர்களை திருமணம் செய்த அலீ பின் அபீதாலிப் ரளியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு திருமணம் செய்ததற்கான வலீமாவை கொடுப்பதற்கு வசதியில்லாமல் இருந்தது. அதனால் தான் தன்னிடம் இருந்த இரண்டு கிழட்டு ஒட்டகங்களையும் எடுத்துக் கொண்டு புல் விற்பதற்காக செல்கிறார்கள். புற்களை விற்றாவது தனது வலீமாவைக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் அவா்களை மிகைத்திருந்தது.
அந்தச் சந்தர்ப்பத்தில் அலீ ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் சற்றும் எதிர்பாராத ஒரு சம்பவம் அங்கு நடந்தேறியது.
அலீ பின் அபீதாலிப் அலீ ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியதாவது: பத்ருப் போரில் கிடைத்த பொருட்களில் (எனது பங்காக) அல்லாஹ்வின் தூதருடன் சேர்ந்து கூட்டாக ஒரு முதிர்ந்த வயதுடைய ஒட்டகம் எனக்குக் கிடைத்தது. அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எனக்கு மற்றொரு (கிழட்டு) ஒட்டகத்தையும் கொடுத்திருந்தார்கள். ஒரு நாள் அவ்விரண்டையும் நான் அன்சாரி ஒருவரின் வீட்டு வாசலுக்கருகே அமரச் செய்தேன். இத்கிர் புல்லை விற்பதற்காக அதன் மீது ஏற்றிக் கொண்டுவர நான் விரும்பியிருந்தேன். அப்போது பனூ கைனுகா குலத்தைச் சேர்ந்த பொற் கொல்லன் ஒருவன் (புல் வாங்கி ஏற்றிக் கொண்டு வர உதவியாக) என்னுடன் இருந்தான்.
ஃபாத்திமா ரளியல்லாஹு அன்ஹா அவர்களை மணம் புரிந்த வலீமா விருந்திற்காக அந்தப் புல் விற்ற பணத்தைப் பயன்படுத்த நான் நாடியிருந்தேன். (நான் என் ஒட்டகத்தை வாசலில் அமரச் செய்திருந்த) அந்த வீட்டில் (என் சிறிய தந்தை) ஹம்ஸா பின் அப்தில் முத்தலிப் மது குடித்துக் கொண்டிருந்தார். அவருடன் ஓர் அடிமைப் பாடகியும் இருந்தாள். அவள் ஹம்ஸாவே! இந்த முதிர்ந்த பருத்த ஒட்டகங்களைக் கொன்று (உங்கள் விருந்தாளிகளுக்குப் பரிமாறி) விடுங்கள் என்று பாடினாள். உடனே ஹம்ஸா அவர்கள் அந்த இரு ஒட்டகங்களின் மீதும் பாய்ந்து அவற்றின் திமில்களை வெட்டி இடுப்பைக் கிழித்தார்கள். பிறகு அவற்றின் ஈரல் குலைகளை வெளியே எடுத்துக் கொண்டார்கள். அருவருப்பூட்டிய அந்த பயங்கரக் காட்சியை நான் கண்டேன்.
உடனே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் சென்றேன். அப்போது அங்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் ஸைத் பின் ஹாரிஸா அவர்களும் இருந்தார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் நடந்த (நிகழ்ச்சியின்) செய்தியைக் கூறினேன். உடனே அவர்கள் ஸைத் பின் ஹாரிஸா அவர்களுடன் புறப்பட்டார்கள். அவர்களுடன் நானும் சென்றேன். ஹம்ஸா அவர்களிடம் சென்று தமது கோபத்தை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வெளிப்படுத்தினார்கள். ஹம்ஸா அவர்கள் தமது பார்வையை உயர்த்தி நீங்கள் என் முன்னோர்களின் அடிமைகள் தாமே? என்று கூறினார்கள். இதைக் கேட்ட நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், அவர்களை விட்டு அப்படியே (திரும்பாமல்) பின்னோக்கி நடந்து வந்து வெளியேறி வந்து விட்டார்கள். இந்த நிகழ்ச்சி மதுபானம் தடை செய்யப்படுவதற்கு முன்பு நடந்தது.
அறிவிப்பாளர்களில் ஒருவரான இப்னு ஜுரைஜ் ரஹ்மதுல்லாஹி அலைஹி கூறுகிறார்கள்:
நான் அறிவிப்பாளர் இப்னு ஷிஹாப் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களிடம் திமில்களின் இறைச்சியையுமா (ஹம்ஸா அலீ ரளியல்லாஹு அன்ஹு அவர்கள்) எடுத்துக் கொண்டார்? என்று கேட்டேன். அதற்கு அவர்கள் ஆம் அவ்விரண்டின் திமில்களையும் அவர் வெட்டி எடுத்துக் கொண்டு சென்று விட்டார் என்று கூறினார். (புகாரி – 2375 )
திருமண வலிமா விருந்தை கொடுப்பதற்காக புல் விற்கச் சென்றவரின் ஒட்டகங்களை குடி போதையில் இருந்த ஹம்ஸா ரளியல்லாஹு அன்ஹு அலீ ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் வெட்டி சாய்த்துவிடுகிறார்கள்.
அதைத் தட்டிக் கேட்க வந்த நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் தகாத வார்த்தையையும் பேசுகிறார்கள் அந்த சந்தர்ப்பத்தில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நடந்து கொண்ட விதம் இங்கு கவனிக்கத்தக்கது.
ஹம்ஸா அவர்கள் குடி போதையில் இருக்கிறார்கள் என்பதை அறிந்த நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மேலதிகமாக ஹம்ஸா ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம் பேசாமல் திரும்பி வந்துவிடுகிறார்கள்.
போதையில் இருப்பவனிடம் தனது வீரத்தைக் காட்டக் கூடாது என்பதினால் தான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இப்படி நடந்து கொள்கிறார்கள்.
நற்குணத்தின் பிறப்பிடம் அல்லவா நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்?
”(நபியே!) நீங்கள் சிறந்த நற்குணத்தில் இருக்கிறீர்கள்.” (68 – 04)
மது அருந்துவது தடை செய்யப்படுவதற்கு முன் நடந்த இந்த நிகழ்சியின் மூலம் அலீ ரளியல்லாஹு அன்ஹு தமக்குறிய இரண்டு ஒட்டகங்களையும் இழந்தார்கள்.
ஆனாலும் சிறந்த கவுரவம் கொண்ட ஆண் மகன் என்பதற்கு அடையாளமான புல் விற்றாவது வலீமா கொடுக்க வேண்டும் என்ற அலி அவர்களின் எண்ணம் அனைத்து ஆண்களுக்கும் ஒரு சிறந்த படிப்பினையாகும்.
ஆடம்பரத்தை விரும்பாத அற்புத தம்பதியினர்
நூலைப் போல் சேலை, தாயைப் போல் பிள்ளை என்பார்கள். அது போல் கணவனுக்கு ஏற்ற மணைவியாக ஃபாத்திமா ரளியல்லாஹு அன்ஹா அவர்களும், மணைவிக்கு ஏற்ற கணவராக அலீ ரளியல்லாஹு அன்ஹு அவர்களும் வாழ்ந்ததைப் போலவே, மகளினதும், மருமகனினதும் எண்ண ஓட்டத்தை புரிந்து நடக்கக் கூடியவர்களாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சட்டதிட்டத்தை ஏற்று நடக்கக் கூடியவர்களாக ஃபாத்திமா ரளியல்லாஹு அன்ஹா, அலீ ரளியல்லாஹு அன்ஹு அவர்களும் வாழ்ந்தார்கள்.
அதிலும் ஆடம்பரத்திற்காக குடிப்பது கூல் கொப்பளிப்பது பண்ணீர் என்ற விதத்தில் வாழும் பலர் இருக்கும் போது இருந்த ஆடம்பரத்தைக் கூட மற்றவர்களுக்காக தாரை வார்த்துக் கொடுத்த உயரிய குணம் ஃபாத்திமா ரளியல்லாஹு அன்ஹா, அலீ ரளியல்லாஹு அன்ஹு தம்பதியினருக்குத்தான் உரியது. அதற்கான மிக அழகான ஒரு நிகழ்வை நாம் ஸஹீஹான ஹதீஸ்களிலே பார்க்க முடியும்.
மிக அழகான ஒரு நிகழ்வு
இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியதாவது: நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் (தமது மகள்) ஃபாத்திமா ரளியல்லாஹு அன்ஹா அவர்களின் வீட்டுக்கு வந்தார்கள். ஆனால் அவர்களிடம் செல்லவில்லை. (திரும்பிப் போய் விட்டார்கள்.) (இதற்கிடையில் அங்கே) அலீ ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் வந்தார்கள். ஃபாத்திமா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் அலீ ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம் விஷயத்தைச் சொன்னார்கள்.
அலீ ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அதை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் சொல்ல நான் ஃபாத்திமாவின் வீட்டு வாசலில் பல வண்ணச் சித்திரங்கள் வரையப்பட்ட திரைச் சீலை ஒன்றைக் கண்டேன். எனக்கும் இந்த (ஆடம்பரமான) உலகத்திற்கும் என்ன தொடர்பு? (அதனால்தான் திரும்பி வந்துவிட்டேன்) என்று கூறினார்கள். அலீ ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் ஃபாத்திமா ரளியல்லாஹு அன்ஹா அவர்களிடம் சென்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதைச் சொன்னார்கள். அதற்கு ஃபாத்திமா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் அந்தத் திரைச் சீலையின் விஷயத்தில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தாம் விரும்புவதை எனக்குக் கட்டளையிடட்டும். (அதன்படியே நான் நடந்து கொள்கிறேன்) என்று கூறினார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அதை இன்னாரின் வீட்டாரிடம் அனுப்பி விடு. அவர்களுக்குத் தேவையுள்ளது என்று கூறினார்கள். (புகாரி – 2613)
ஃபாத்திமா ரளியல்லாஹு அன்ஹா அவர்களின் வீட்டிற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் வருகிறார்கள், வீட்டில் ஒரு திரைச் சீலை தொங்கிக் கொண்டிருப்பதைப் பார்க்கிறார்கள், மகளுடன் கூடப் பேசாமல் உடனே திரும்பிவிடுகிறார்கள்.
காரணம் கேட்பதற்காக மருமகன் வருகிறார் அவரிடம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்ன பதில் எனக்கும் இந்த (ஆடம்பரமான) உலகத் திற்கும் என்ன தொடர்பு? (அதனால்தான் திரும்பி வந்துவிட்டேன்) என்பதுதான்.
செய்தியைக் கேட்ட மகளோ நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அந்தத் திரைச் சிலை விஷயத்தில் எதைச் சொன்னாலும் தாம் அதற்கு உடன்படுவதாக உடனே அறிவிக்க, கஷ்டப்படும் மக்களுக்காக அதனை கொடுத்துவிடும்படி உத்தரவிடுகிறார்கள் இறைவனின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்.
மார்க்கத்திற்காக எதையும் நாம் விட்டுக் கொடுக்கத்தயார் என்று பெயரளவில் வீராப்பு பேசும் மக்கள் எங்கே? இருந்த ஒரு திரைச் சீலையைக் கூட ஏழைகளுக்காக பங்கு வைத்த நபியின் குடும்பத்தினர் எங்கே?
பட்டாடையும், பங்கு வைத்த உத்தமர்
அலீ ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியதாவது: நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எனக்குப் பட்டு அங்கி ஒன்றை அன்பளிப்புச் செய்தார்கள். அதை நான் அணிந்து கொண்டேன். (அதைக் கண்ட) நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் முகத்தில் கோபக் குறியை நான் கண்டேன். ஆகவே அதைப் பல துண்டுகளாக்கி எங்கள் (குடும்பப்) பெண்களிடையே பங்கிட்டு விட்டேன் (புகாரி – 2614)
நபியவர்கள் தமது பட்டு ஆடை ஒன்றை அலீ ரளியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு அன்பளிப்பு செய்கிறார்கள், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தந்த ஆடையல்லவா என்று உடனே ஆசையுடன் அதனை அணிந்து கொள்கிறார்கள் அலீ ரளியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆனால் பட்டாடை ஆண்களுக்கு தடுக்கப்பட்டது என்ற செய்தி அவர்களுக்கு நினைவிற்கு வரவில்லை போலும், இதனைப் பார்த்த நபியவர்களோ கடும் கோபமடைந்து கோபப் பார்வை பார்க்க விஷயத்தை விளங்கிக் கொள்கிறார்கள் அலீ ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் உடனே தான் உடுத்தியிருந்த ஆடையை பல துண்டுகளாக வெட்டி குடும்பத்தில் இருந்த பெண்களுக்கு பங்கிட்டுவிட்டார்கள்.
மார்க்கம் எதை எடுத்து நடக்கும்படி சொல்கிறதோ அதனை எடுத்து நடக்கக் கூடியவராகவும், எதனைத் தவிர்ந்துகொள்ளச் சொல்கிறதோ அதனை உடனே தவிர்ந்துகொள்ளக் கூடியவராகவும் அலீ ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் இருந்தார்கள் என்பதற்கு இது ஒரு நேரடியான சான்றாகும்.
ஆட்சியாளருக்குக் கட்டுப்பட்ட இளவரசியும், அவருடைய கணவரும்:
எந்த ஒரு நாட்டின் ஆட்சியாளராக இருந்தாலும் அவருக்குப் பின் அரியணை ஏறுவது அவருடைய வாரிசுகளாகத் தான் இருப்பார்கள் ஆனால் இஸ்லாத்தின் தூதர் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய ஆட்சியில் அந்த வழமை இருக்கவில்லை.
நபியின் மரணத்திற்குப் பின் தேசத்தின் ஆட்சியாளராக தெரிவு செய்யப்பட்டவர் அபூ பக்கர் ஸித்தீக் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள்.
அந்த அபு பக்கர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் ஆட்சிக் காலத்தில் ஃபாத்திமா ரளியல்லாஹு அன்ஹா அவர்களுக்கும், அபூ பக்கர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களுக்கும் மத்தியில் ஒரு சின்ன மனக்கசப்பு ஏற்பட்டது. மனக்கசப்பு ஏற்பட்டாலும் அந்த காரணத்தை வைத்து ஃபாத்திமா ரளியல்லாஹு அன்ஹா அவர்களோ அல்லது அவருடைய கணவர் அலி பின் அபீ தாலிப் ரளியல்லாஹு அன்ஹு அவர்களோ அபு பக்கர் ஸித்தீக் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் ஆட்சிக்கு எதிராக செயல்படவில்லை.
தன் தந்தை இறைவனின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மரணிக்கும் போது விட்டுச் சென்ற சொத்தில் பாரிசு முறைப்படி தனக்குச் சேர வேண்டிய சொத்தை கேட்டு அபு பக்கர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம் செல்கிறார்கள், அபு பக்கர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களோ நபிமார்களின் சொத்துக்கு யாரும் வாரிசாக வர முடியாது என்று நபியவர்களே தன்னிடம் கூறிய செய்தியை பாத்திமா அவா்களிடம் எடுத்துச் சொல்கிறார்கள்.
இதைக் கேட்ட ஃபாத்திமா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் அபு பக்கர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களுடன் சிறிது கோபப்பட்டாலும் அவருடைய ஆட்சிக்கு எதிராக ஒரு சிறு துரும்பைக் கூட அசைக்கவில்லை. அபூ பக்கர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம் ஃபாத்திமா ரளியல்லாஹு அன்ஹா மற்றும் அலீ ரளியல்லாஹு அன்ஹு ஆகியோர் வாரிசு சொத்தைக் கேட்டது தொடர்பான சம்பவத்தைப் பார்ப்போம்.
ஃபாத்திமா ரளியல்லாஹு அன்ஹாவுக்கு அபூபக்ர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள், அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், (நபிமார்களான) எங்கள் சொத்துகளுக்கு வாரிசாக யாரும் வர முடியாது. நாங்கள் விட்டுச் செல்பவையெல்லாம் தருமம் செய்யப்பட வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள் என்று பதிலளித்தார்கள். ஆனால், இதனால் ஃபாத்திமா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் கோபமுற்று அபூபக்ர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களுடன் பேசுவதை விட்டு விட்டார்கள். அவர்கள் மரணிக்கும் வரை அபூபக்ர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களுடன் பேசாமலேயே இருந்து விட்டார்கள்.
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்குப் பிறகு ஆறு மாதங்களே ஃபாத்திமா ரளியல்லாஹு அன்ஹா வாழ்ந்தார்கள். அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் (தமது தனி நிதியாக) விட்டுச் சென்ற கைபர், ஃபதக் ஆகிய பகுதிகளின் சொத்துகளிலிருந்தும் மதீனாவில் இருந்த, அவர்கள் தருமமாக விட்டுச் சென்ற சொத்திலிருந்தும் தமக்குப் பங்கு தரும்படியே அபூபக்ர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம் ஃபாத்திமா ரளியல்லாஹு அன்ஹா கேட்டுக் கொண்டிருந்தார்கள்.
அபூபக்ர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் ஃபாத்திமாவின் கோரிக்கையை ஏற்க மறுத்து, அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் செய்து கொண்டிருந்த எதனையும் நான் செய்யாமல் விட மாட்டேன். ஏனெனில், அவர்களுடைய செயல்களில் எதனையாவது நான் விட்டு விட்டால் நான் வழிதவறி விடுவேனோ என்று அஞ்சுகிறேன் என்று சொன்னார்கள்.
(அபூபக்ர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களுக்குப் பின்) நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மதீனாவில் தருமமாக விட்டுச் சென்ற சொத்தை உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள், அலீ ரளியல்லாஹு அன்ஹு அவர்களுக்கும் அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்களுக்கும் (அதன் வருமானத்திலிருந்து தம் பங்கின் அளவிற்கு எடுத்துக் கொள்ளும்படி) கொடுத்து விட்டார்கள்.
கைபர் மற்றும் ஃபதக்கில் இருந்த சொத்துகளை உமர் அவர்கள் (யாருக்கும் கொடுக்காமல்) நிறுத்தி வைத்துக் கொண்டு, அவ்விரண்டும் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தருமமாக விட்டுச் சென்றவை. அவை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய உரிமைகளை நிறைவேற்றுவதற்காகவும் அவர்களுக்கு ஏற்படும் (திடீர் பொருளாதாரப்) பிரச்சினை(கள் மற்றும் செலவினங்)களுக்காகவும் (ஒதுக்கப்பட்டு) இருந்தன. அவ்விரண்டின் அதிகாரமும் ஆட்சித் தலைவரிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என்று சொன்னார்கள்.
இமாம் ஸுஹ்ரீ ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் (இந்த ஹதீஸை அறிவித்த போது), அந்த (கைபர், ஃபதக் பகுதியிலிருந்த) இரு சொத்துக்களும் இன்று வரை அவ்வாறே (ஆட்சியாளரின் பொறுப்பிலேயே) இருந்து வருகின்றன என்று சொன்னார்கள். (புகாரி – 3093)
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மரணத்திற்குப் பின் சுமார் ஆறு மாதங்கள் மாத்திரமே ஃபாத்திமா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் இவ்வுலகில் வாழ்ந்தார்கள்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்குப் பின் முதலாவதாக ஆட்சிப் பொருப்பை ஏற்று நடத்திய அபு பக்கர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் மரணத்திற்குப் பின் இஸ்லாமிய சாம்ராஜ்யத்தின் ஆட்சியாளராக உமர் பின் கத்தாப் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் பொருப்பேற்றார்கள்.
உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் ஆட்சிக் காலத்தில் அலி பின் அபீதாலிப் ரளியல்லாஹு அன்ஹு அவர்களும், அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்களும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் விட்டுச் சென்ற சொத்தில் தமக்குறிய பங்கைக் கேட்டார்கள் அப்போது உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் மிக முக்கியமான பல நபித் தோழர்கள் முன்னிலையில் ஒன்றுக்குப் பல முறை விசாரித்துவிட்டு ஒரு முக்கியமான நிபந்தனையையும் விதித்து அந்த சொத்துக்களை அலி ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடமும் அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடமும் ஒப்படைத்தார்கள். இது தொடர்பாக,
புகாரியில் இடம்பெற்றிருக்கும் விரிவான ஒரு செய்தி:
முஹம்மத் பின் ஜுபைர் பின் முத்இம் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் கூறியதாவது: நான் மாலிக் பின் அவ்ஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம் சென்று அந்த (ஃபதக் தொடர்பான) நிகழ்ச்சி பற்றிக் கேட்டேன். அவர்கள் கூறினார்கள்:
”கடும் உச்சி வெயில் அடித்துக் கொண்டிருந்த நீண்ட ஒரு பகல் வேளையில் என் வீட்டாருடன் நான் அமர்ந்திருந்த போது (கலீஃபா) உமர் பின் கத்தாப் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் தூதர் ஒருவர் என்னிடம் வந்து, இறை நம்பிக்கையாளர்களின் தலைவர் அழைக்கிறார், வாருங்கள் என்று சொன்னார். நான் அவருடன் சென்று உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறைக்குள் நுழைந்தேன். அவர்கள் அங்கே ஒரு கட்டிலில் ஈச்ச ஓலையாலான மேற்பரப்பில் அதற்கும் தமக்கும் இடையே பாய் எதுவுமில்லாமல் ஒரு தோல் தலையணையின் மீது சாய்ந்தபடி அமர்ந்திருந்தார்கள். நான் அவர்களுக்கு சலாம் சொல்லி விட்டு அமர்ந்தேன்.
அப்போது அவர்கள், மாலிக்கே! உங்கள் குலத்தாரில் சில குடும்பத்தார் நம்மிடம் வந்தனர். அவர்களுக்கு (அளவு குறிப்பிடாமல்) சிறிய ஓர் அன்பளிப்புத் தரும்படி நான் உத்தரவிட்டுள்ளேன். அதை உங்கள் கைவசமாக்கிக் கொண்டு அவர்களிடையே நீங்கள் பங்கிட்டு விடுங்கள் என்று சொன்னார்கள். நான், இறைநம்பிக்கையாளர்களின் தலைவரே! வேறெவரிடமாவது இந்தப் பொறுப்பை நீங்கள் ஒப்படைத்தால் நன்றாயிருக்குமே என்று சொன்னேன். அதற்கு அவர்கள், நீங்கள் அதைக் கைவசமாக்கிக் கொண்டு சென்று அவர்களிடையே பங்கிடுங்கள் என்று (மீண்டும்) உமர் அவர்கள் சொன்னார்கள்.
நான் உமரிடம் அமர்ந்து கொண்டிருந்த போது, அவர்களிடம் அவர்களுடைய மெய்க் காவலர் யர்ஃபஉ என்பவர் வந்து, உஸ்மான் ரளியல்லாஹு அன்ஹு, அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் ரளியல்லாஹு அன்ஹு, ஸுபைர் ரளியல்லாஹு அன்ஹு, சஅத் பின் அபீ வக்காஸ் ரளியல்லாஹு அன்ஹு ஆகியோர் தங்களைச் சந்திக்க அனுமதி கேட்கிறார்கள். தாங்கள் அவர்களுக்கு அனுமதியளிக்கிறீர்களா? என்று கேட்டார். உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள், ஆம் என்று அவர்களுக்கு (தம்மைச் சந்திக்க) அனுமதியளித்தார்கள்.
அவர்கள் (அனை வரும்) உள்ளே வந்து சலாம் சொல்லி அமர்ந்தார்கள். பிறகு யர்ஃபஉ சற்று நேரம் தாமதித்து வந்து, அலீ ரளியல்லாஹு அன்ஹு அவர்களையும் அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்களையும் தாங்கள் சந்திக்க விரும்புகின்றீர்களா? என்று கேட்டார். அதற்கு உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள், ஆம் என்று அவ்விருவருக்கும் (தம்மைச் சந்திப்பதற்கு) அனுமதியளிக்க, அவ்விருவரும் உள்ளே நுழைந்தனர். இருவரும் சலாம் சொல்லி அமர்ந்தனர்.
அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள், இறைநம்பிக்கையாளர்களின் தலைவரே! எனக்கும் இவருக்கும் (அலீக்கும்) இடையே தீர்ப்பளியுங்கள் என்று சொன்னார்கள்… அல்லாஹ், தன் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு பனூ நளீர் குலத்தாரின் செல்வத்திலிருந்து (ஃபய்உ நிதியாகக்) கொடுத்த சொத்துகள் தொடர்பாக இருவரும் சச்சரவிட்டு வந்தனர். அப்போது உஸ்மான் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் மற்றும் அவர்களுடைய தோழர்களின் குழு, இறைநம்பிக்கையாளர்களின் தலைவரே! அவர்களுக்கிடையே தீர்ப்பளித்து, ஒருவரை மற்றவரின் பிடியிலிருந்து விடுவித்து விடுங்கள் என்று கூறியது.
உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள், பொறுங்கள். எந்த அல்லாஹ்வின் கட்டளையால் வானமும் பூமியும் நிலைபெற்றிருக்கின்றனவோ அவன் பொருட்டால் கேட்கின்றேன். அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், (நபிமார்களான எங்களுக்கு) எவரும் வாரிசாக மாட்டார். நாங்கள் விட்டுச் செல்வதெல்லாம் தருமமே என்று தம்மைக் குறித்துக் கூறியதை நீங்கள் அறிவீர்களா?” என்று கேட்டார்கள். அதற்கு அந்தக் குழுவினர், அவர்கள் அவ்வாறு சொல்லத்தான் செய்தார்கள் என்று பதிலளித்தனர். உடனே, உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள், அலீ ரளியல்லாஹு அன்ஹு அவர்களையும் அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்களையும் நோக்கி, அல்லாஹ்வின் பொருட்டால் உங்கள் இருவரிடமும் கேட்கின்றேன்: அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவ்வாறு சொன்னதை நீங்கள் அறிவீர்களா? என்று கேட்டார்கள்.
அவ்விருவரும், ஆம், அவ்வாறு சொல்லியிருக்கிறார்கள் என்று பதிலளித்தனர். உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள், அவ்வாறெனில், உங்களிடம் இந்த விஷயத்தைக் குறித்துப் பேசுகிறேன். போரிடாமல் கிடைத்த இந்தச் செல்வத்திலிருந்து சிறிதைத் தன் தூதருக்கு உரியதாக அல்லாஹ் ஆக்கியுள்ளான். அவர்களைத் தவிர வேறெவருக்கும் அவன் அதைக் கொடுக்கவில்லை… (என்று கூறிவிட்டு,) அல்லாஹ் எந்தச் செல்வத்தை அவர்களின் பிடியிலிருந்து விடுவித்துத் தன் தூதரிடம் திருப்பிக் கொடுத்தானோ அந்தச் செல்வம் உங்கள் குதிரைகளையும் ஒட்டகங்களையும் (அறப் போர் புரிவதற்காக) நீங்கள் ஓட்டிச் சென்றதால் கிடைத்ததல்ல. மாறாக அல்லாஹ், தான் நாடுகின்றவர்களின் மீது தன்னுடைய தூதர்களுக்கு அதிகாரம் வழங்குகின்றான். மேலும், அல்லாஹ் அனைத்தின் மீதும் பேராற்றல் உள்ளவனாக இருக்கின்றான் என்னும் (இந்த 59: 6) இறை வசனத்தை ஓதினார்கள்.
தொடர்ந்து, எனவே, இது இறைத் தூதருக்கென ஒதுக்கப்பட்ட செல்வமாகும். அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களை விட்டு விட்டு அதை அவர்கள் தமக்காகச் சேகரித்துக் கொள்ளவில்லை அதை உங்களை விடப் பெரிதாகக் கருதவுமில்லை. உங்களுக்கு அதைக் கொடுத்தார்கள் உங்களிடையே அதைப் பரவலாகப் பங்கிட்டார்கள். இறுதியில், அதிலிருந்து இந்தச் செல்வம் மட்டுமே மீதமாயிற்று. அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இந்தச் செல்வத்திலிருந்து தம் வீட்டாரின் வருடச் செலவை அவர்களுக்குக் கொடுத்து வந்தார்கள். அப்படிக் கொடுத்த பிறகு மீதமுள்ளதை எடுத்து அல்லாஹ்வின் (பாதையில் செலவிடும்) செல்வத்தை எந்த இனங்களில் செலவிடுவார்களோ அவற்றில் செலவிடுவார்கள். இவ்வாறே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் வாழ்நாளில் செயல்பட்டு வந்தார்கள். (இவ்வளவும் சொல்லிவிட்டு,) அல்லாஹ்வின் பொருட்டால் உங்களை நான் கேட்கின்றேன். இதை நீங்கள் அறிவீர்களா?” என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், ஆம் (அறிவோம்) என்று பதிலளித்தார்கள்.
பிறகு, அலீ அவர்களிடமும் அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடமும், உங்கள் இருவரையும் அல்லாஹ்வின் பொருட்டால் கேட்கின்றேன். நீங்கள் இதை அறிவீர்களா? என்று கேட்டுவிட்டு (தொடர்ந்து), பிறகு அல்லாஹ் தன் தூதரை அழைத்துக் கொண்டான். அப்போது அபூபக்ர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள், நான் அல்லாஹ்வின் தூதருடைய (ஆட்சிக்குப்) பிரதிநிதியாவேன் என்று கூறி அ(ந்த செல்வத்)தைத் தம் கைவசம் எடுத்துக் கொண்டார்கள். அது விஷயத்தில் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் செயல்பட்டதைப் போல் செயல்பட்டார்கள்.
அல்லாஹ்வின் மீது ஆணையாக! அவர்கள் அது விஷயத்தில் வாய்மையாகச் செயல்பட்டார்கள் நல்ல விதமாக நடந்து கொண்டார்கள் நேரான முறையில் நடந்து, உண்மையையே பின்பற்றினார்கள். பிறகு அபூபக்ர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களையும் அல்லாஹ் அழைத்துக் கொண்டான். அப்போது நான் அபூபக்ர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் பிரதிநிதியாக ஆனேன். அதை என் ஆட்சிக் காலத்தில் இரண்டு வருடங்களுக்கு என் கைவசம் எடுத்துக் கொண்டு, அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அதில் நடந்து கொண்ட முறைப்படியும் அபூபக்ர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் நடந்து கொண்ட முறைப்படியும் நானும் செயல்பட்டு வந்தேன். நான் அது விஷயத்தில் வாய்மையாகச் செயல்பட்டேன் நல்ல விதமாக நடந்து கொண்டேன் நேரான முறையில் நடந்து கொண்டேன் உண்மையையே பின்பற்றினேன் என்பதை அல்லாஹ் அறிவான்.
பிறகு, நீங்கள் இருவரும் என்னிடம் வந்து பேசினீர்கள் நான் உங்களிடம் ஒருமுறை பேசினேன். உங்கள் இருவரின் விஷயமும் (கோரிக்கையும்) ஒன்றாகவே இருந்தது. அப்பாஸே! நீங்கள் என்னிடம் உங்கள் சகோதரர் மகனிடமிருந்து உங்களுக்குச் சேரவேண்டிய (வாரிசுப்) பங்கைக் கேட்ட படி வந்தீர்கள். இவரும் என்னிடம் தன் மனைவிக்கு அவரது தந்தையிடமிருந்து கிடைக்க வேண்டிய (வாரிசுப்) பங்கை (பெற) விரும்பியபடி வந்தார்…. அலீ ரளியல்லாஹு அன்ஹு அவர்களைத் தான் அப்படிச் சொன்னார்கள்…. நான் உங்கள் இருவரிடமும், அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், (நபிமார்களான நாங்கள் விட்டுச் செல்லும் சொத்துக்களில்) எங்களுக்கு எவரும் வாரிசாவதில்லை.
நாங்கள் விட்டுச் செல்வதெல்லாம் தருமமே என்று சொன்னார்கள் என்றேன். எனினும், அதை உங்கள் இருவரிடமே கொடுத்து விடுவது தான் உசிதமானது என்று எனக்குத் தோன்றிய போது நான், நீங்கள் இருவரும் விரும்பினால் அல்லாஹ்விடம் செய்து கொண்ட ஒப்பந்தமும் அவனுக்களித்த உறுதி மொழியும் உங்கள் பொறுப்பாக இருக்க, நீங்கள் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எப்படி அதன் விஷயத்தில் செயல்பட்டார்களோ, அபூபக்ர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் எப்படி அதன் விஷயத்தில் செயல்பட்டார்களோ, நான் ஆட்சிக்கு வந்ததிலிருந்து அதன் விஷயத்தில் எப்படிச் செயல்பட்டேனோ அதன் படியே நீங்கள் இருவரும் செயல் படுவீர்கள் என்னும் நிபந்தனையின் அடிப்படையில் உங்கள் இருவரிடமும் கொடுத்து விடுகிறேன் என்று சொன்னேன்.
அதற்கு நீங்கள் இருவரும், எங்களிடம் அதைக் கொடுத்து விடுங்கள் என்று சொன்னீர்கள். அதன்படியே அதை உங்கள் இருவரிடமும் கொடுத்து விட்டேன் என்று சொன்னார்கள்.
பிறகு (குழுவினரை நோக்கி), ஆகவே, நான் உங்களிடம் அல்லாஹ்வின் பெயரால் கேட்கின்றேன். நான் இவ்விருவரிடமும் அந்த நிபந்தனையின்படி அந்தச் சொத்தைக் கொடுத்து விட்டேனா? என்று கேட்டார்கள். குழுவினர், ஆம் (கொடுத்து விட்டீர்கள்) என்று பதிலளித்தனர். பிறகு அலீ ரளியல்லாஹு அன்ஹு மற்றும் அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு ஆகியோரை நோக்கி, நான் உங்கள் இருவரையும் அல்லாஹ்வின் பெயரால் கேட்கின்றேன். நான் அதை உங்கள் இருவரிடமும் அந்த நிபந்தனையின்படியே கொடுத்து விட்டேனா? என்று கேட்க, அவ்விருவரும், ஆமாம் என்றார்கள்.
உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள், இதைத் தவிர வேறொரு தீர்ப்பை நீங்கள் என்னிடமிருந்து கோருகின்றீர்களா? எவனது அனுமதியுடன் வானமும் பூமியும் நிலை பெற்றுள்ளனவோ அவன் மீது சத்தியமாக! நான் அந்த விஷயத்தில் இதைத் தவிர வேறெந்தத் தீர்ப்பையும் தர மாட்டேன். உங்கள் இருவராலும் அதைப் பராமரிக்க முடியவில்லை என்றால் என்னிடம் அதைக் கொடுத்து விடுங்கள். அதை உங்களுக்கு பதிலாக நானே பராமரித்துக் கொள்வேன் என்று சொன்னார்கள். (புகாரி – 3094)
– RASMIN M.I.Sc
source: http://rasminmisc.blogspot.com/2011/04/blog-post_10.html