[ உல்லாசமாக வாழ, ஊர்சுற்ற விரும்பி பெண்கள் வேலைக்குச் செல்லவில்லை. மற்ற சமூகத்தவர் வளர்ச்சி தம் சமூக வீழ்ச்சி அவர்கள் கண்முன்பாகக் காட்சியளித்து முதுகில் நெட்டித்தள்ளுகிறது.
அடுத்த தெரு, ஊர், நகரம் தெரியாமல் கட்டுப்பெட்டியாய் வாழ்ந்த பெண்கள் பிறரிடம் கையேந்தாது வாழ கண்ணீருடன் ஒன்றியம், தாலுக்கா, மாவட்டம், தாண்டி மாநில அளவில் பணிக்காகப் பயணிக்கின்றனர்.
பிதுங்கி வழியும் பேருந்தில் அன்னிய ஆடவரை இடித்து கம்பிகளில் தொங்கி அலுவலகம், இல்லம் பயணிப்பது மனத்தைக் கசக்கிப் பிழிகிறது.
காலப்போக்கில் தனித்துவம் கெட்டு கலாச்சாரச் சீரழிவை அதிகப்படுத்தும். மிகைப்படாது தடுத்தல், மீட்டெடுத்தல் சமூக அக்கறையுள்ள முஸ்லிம் அமைப்புகள், தலைமைத்துவத்தினருடைய எதிர்காலப் பணியாகவிருக்கிறது.]
கண்ணீரில் பெண்கள்!
காலத்தின் வளர்ச்சிக்கொப்ப புறச்சூழல் தேவை கருதி ஆண்களை விட பெண்கள் நிரம்பப் படித்துள்ளனர். பட்டாம்பூச்சியாகப் பறந்து பல கனவுகளுடன் இல்லறத்தைத் துவங்கும் அவர்கள் வாழ்வில் கணவனுடைய வருவாய் போதவில்லை. வீட்டு வாடகை, மின்சாரம், ஆட்டோ, பள்ளிக்கட்டணம், எரிவாயு, உணவு, மருத்துவச் செலவு, மருந்து தேவை அனைத்தும் சமாளிக்க, நகர்ப்புறத்தில் வாழ குறைந்த பட்சம் மாதம் 25,000/-& தேவைப்படும் நிலையில், தேவைகளைச் சமாளிக்க நிர்ப்பந்தமாகப் பெண்கள் வேலைக்குச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
வேலை தேடல், விண்ணப்பித்தலில் இன்று கடும் போட்டி நிலவுகிறது. 100 நபர் தேவை வேலைக்கு 18,000 பேர் பரீட்சை எழுதுகின்றனர். தரமான கல்வி பெறாத முஸ்லிம்கள் போட்டியைச் சமாளிக்க இயலாமல் திணறுகின்றனர். சமூக அந்தஸ்துள்ள மதத்தினர், சாதியக் கட்டமைப்புள்ளவர்கள் சாதிக்கின்றனர்.
சமூக அந்தஸ்தை கோட்டை விட்ட முஸ்லிம் சமூகம் கை கட்டி வேடிக்கை பார்க்கிறது. இன்று இளநிலைப்பட்டதாரிக்கு மூவாயிரத்திலிருந்து ஆறாயிரம். முதுநிலைப் பட்டதாரிக்கு 10,000 தரமிலாத பி.இ படித்தவர்க்கு நான்காயிரம் இன்றைய மார்க்கெட் சம்பளம்.
வியாபாரத்தின் பக்கம் நாட்டமுடைய முஸ்லிம்களுக்கு புதிய பொருளாதாரக் கொள்கையால் உட்புகுந்த பெருவணிகம் வியாபாரக் கதவை இறுக்க மூடிக்கொண்டதால் சிறுவணிகத்தின் பக்கமும் படித்த இளைஞர்கள் செல்ல முடியாத நிலை. இந்த சூழ்நிலையில் குடும்பவண்டி குடைசாய்ந்து விடாதிருக்க பெண்கள் வேலைக்குச் செல்லும்நிலை தவிர்க்கவியலாமல் உருவெடுத்திருக்கிறது.
உல்லாசமாக வாழ, ஊர்சுற்ற விரும்பி பெண்கள் வேலைக்குச் செல்லவில்லை. மற்ற சமூகத்தவர் வளர்ச்சி தம் சமூக வீழ்ச்சி அவர்கள் கண்முன்பாகக் காட்சியளித்து முதுகில் நெட்டித்தள்ளுகிறது. அடுத்த தெரு, ஊர், நகரம் தெரியாமல் கட்டுப்பெட்டியாய் வாழ்ந்த பெண்கள் பிறரிடம் கையேந்தாது வாழ கண்ணீருடன் ஒன்றியம், தாலுக்கா, மாவட்டம், தாண்டி மாநில அளவில் பணிக்காகப் பயணிக்கின்றனர்.
பிதுங்கி வழியும் பேருந்தில் அன்னிய ஆடவரை இடித்து கம்பிகளில் தொங்கி அலுவலகம், இல்லம் பயணிப்பது மனத்தைக் கசக்கிப் பிழிகிறது. காலப்போக்கில் தனித்துவம் கெட்டு கலாச்சாரச் சீரழிவை அதிகப்படுத்தும். மிகைப்படாது தடுத்தல், மீட்டெடுத்தல் சமூக அக்கறையுள்ள முஸ்லிம் அமைப்புகள், தலைமைத்துவத்தினருடைய எதிர்காலப் பணியாகவிருக்கிறது.
முஸ்லிம் சமூகத்தில் 25 சதம் பேர் பொருளாதார வளர்ச்சயில் ஓரளவு மேம்பட்டுள்ளனர். 50 சதம் பேர் பலமான முன்னேற்றம் கண்டுள்ளனர். 25 சதம்பேர் அன்றாடங்காய்ச்சிகள். பொருளாதாரப் பலமுள்ள 50 சதம் பேர் தத்தமது பகுதிகளில் பெண்களுக்குப் பயன்படும் வகையினில் தொழில் நிறுவனங்கள், உற்பத்திக் கூடங்கள், வீட்டு உபயோகப் பொருட்களைச் சுயமாகச் செய்து விற்கக்கூடிய வகையிலான பயிற்சிக் கூடங்கள் நிறுவி பெண்கள் அவர்களது பகுதியிலிருந்து வெளியேறாதவாறு பாதுகாக்க வேண்டும்.
வெறுமனே வெற்று வார்த்தைகளைக் கொண்டு பெண்கள் வேலைக்குச் செல்லக்கூடாது என்றால் எவரும் செவிமடுக்கத் தயாரில்லை. அது நடுநிலையான சொல்லாடலுமில்லை.
குறைவான கட்டணத்தில் மருத்துவ பரிசோதனை, சேவை, உணவுப்பண்டங்கள் கூட்டு முயற்சியில் வழங்குதல், ஈட்டுப் பொருளில்லாது தவணை முறையில் திருப்பிச் செலுத்தும் முறையில் ஒப்பம் பெற்று கடனளித்தல், தமது சுயத்துக்குப் பயன்படுத்தும் அந்தஸ்து, நட்பு வாய்ப்பைப் பயன்படுத்தி நல்லதோர் வேலை பெற்றுக் கொடுத்தல், திருமணத்துக்கு உதவுதல் போன்றவை நிறைவேற்றப்பட்டால் நிச்சயம் எதிர்காலப் பெண் சமூகம் கட்டமைப்போடு பயணப்படும். சமூக ஓடுவியல் சிதையாது.
– அமீர்கான், டிசம்பர் 2010 முஸ்லிம் முரசு.