போலியோவும் எய்ட்ஸும்தான் ஒழிக்கப்பட வேண்டிய நோய்களா?
“ஆங்கிலத்தில் எழுதியிருந்தால் நோபல் பரிசு கிடைத்திருக்கும்!” – அசோகமித்திரன்
“மருத்துவம் என்பது உயிர்காக்கும் சேவை! மனித உயிர்களை மூலதனமாக்கி மருத்துவத்தை வியாபாரமாக்கும் வித்தையைத்தான் பல மருத்துவர்கள் செய்துவருகிறார்கள். நம்முடைய அரசுகளும் இந்த வியாபாரத்தின் கூட்டு கொள்ளையர்கள் என்பதுதான் அவலம்.
அதனால்தான் ஆண்டுதோறும் கிட்டத்தட்ட மூன்றரை லட்சம் பேர் உயிரிழக்கக் காரணமான தொழுநோய் பற்றி கண்டுகொள்ளாமல், வெறுமனே 864 பேரை மட்டுமே பாதிக்கும் (உயிரிழப்பு அல்ல!) போலியோவுக்கு அதிகமாக நிதி ஒதுக்குகிறார்கள்.
போலியோ வந்துவிட்டால் குணப்படுத்த முடியாது என்று மக்கள் மேல் உள்ள அக்கறையில் அப்படிச் செய்யவில்லை. வெட்ட வெளிச்சமாகச் சொல்லப்போனால் போலியோவுக்குக் கிடைக்கும் பன்னாட்டு தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் நிதியும் சொட்டு மருந்து தயாரிக்கும் மருந்து கம்பெனிகள் மூலம் கிடைக்கும் கமிஷன் தொகையும்தான் காரணம்!” மருத்துவத்துறையில் நடக்கும் சுரண்டல்களை ஆதாரத்தோடு அடுக்கிக்கொண்டே போகிறார் மருத்துவர் புகழேந்தி.
மருத்துவத்துறை கார்ப்பொரேட் மயத்தால் மக்களை சுரண்டி பைகளை நிரப்பிக்கொண்டிருக்கும் சூழலில் பத்து ரூபாய்க்கு மருத்துவம் செய்துகொண்டிருக்கிறார் மருத்துவர் புகழேந்தி. கடந்த 18 ஆண்டுகளாக கல்பாக்கம் அருகே இருக்கும் வாயலூர் கிராமத்தில் பார்த்துக்கொண்டிருக்கிறார் இவர். மக்கள் நலனுக்கு எதிரான மருத்துவ திட்டங்களை பின்பிளைவுகள் பற்றி கவலையில்லாமல் விமர்சிக்கும் ஒரே மருத்துவர் இவர் மட்டுமே!
“மத்திய பட்ஜெட்டில் எய்ட்ஸ், போலியோ போன்ற நோய்களை கட்டுப்படுத்த சென்ற ஆண்டைவிட இந்த ஆண்டு கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாக அறிவித்திருக்கிறார்கள். அந்த அறிவிப்பிலேயே எய்ட்ஸ் நோயாளிகளின் எண்ணிக்கை 53 லட்சத்திலிருந்து 25 லட்சத்திற்கு குறைந்திருப்பதாக சொல்கிறார்கள். நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்திருக்கும் பட்சத்தில் எதற்காக சென்ற ஆண்டைவிட அதிகமாக நிதி ஒதுக்க வேண்டும்? அரசு தந்திருக்கும் கணக்கின்படி பார்த்தாலும் எப்படி ஒரு வருடத்தில் லட்சக்கணக்கில் நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்துவிடும்? அத்தனை பேரும் இறந்திருக்க வேண்டும் அல்லது தவறான புள்ளிவிவரம் அரசுக்கு கொடுக்கப்பட்டிருக்க வேண்டும்.
போலியோவில் நடந்ததுபோல்தான் எய்ட்ஸிலும். எய்ட்ஸ் தடுப்புக்காக பரிந்துரைக்கப்படும் சிரிஞ்ச், காண்டம், இரத்தப் பரிசோதனை போன்றவற்றால் பயனடையும் மருந்து தயாரிக்கும் பன்னாட்டு நிறுவனங்களின் மீதும் கார்ப்பொரேட் மருத்துவமனைகள் மீதும் அரசுகளுக்கு உள்ள கரிசனமே அதிக நிதி ஒதுக்கீட்டுக் காரணம்!
காண்டமை பயன்படுத்துங்கள், ஊசியை ஒரே ஒருமுறை மட்டும் உபயோகியுங்கள் என்று சொல்பவர்கள், அறுவை சிகிச்சையின்போது பயன்படுத்தும் கருவிகள் மூலம் பரவும் எய்ட்ஸ் பற்றி ஏன் எந்த எச்சரிக்கையையும் மக்களுக்கு சொல்வதில்லை?
நமது மேன்மைக்குரிய நீதிமன்றங்களும்கூட இதே வழியில் சிந்திப்பதுதான் நமக்கு வேதனையாக இருக்கிறது. தைராய்டு வருவதாக சொல்லி, அயோடின் கலக்காத சாதாரண உப்பை தடை செய்ய உத்தரவு போடுகிறது நீதிமன்றம். கேன்சர் போன்ற உயிர்கொல்லி நோயை உண்டாக்கும் பீடி, சிகரெட், மதுபானங்களை தடை செய்ய நீதிமன்றங்கள் ஏன் உத்தரவு போடுவதில்லை-?
மது, சிகரெட் பாக்கெட்டுகளின் மேல் எச்சரிக்கை வாசகம் அச்சடிக்கப்பட்டிருப்பதுபோல, அயோடின் கலக்காத உப்பு பாக்கெட்டுகளின் மீதும் எச்சரிக்கை வாசகம் அச்சடித்து விற்க அனுமதித்திருக்கலாம். அப்படி எதுவும் செய்யவில்லை. அயோடின் கலந்த உப்புக்கு பெரிய அளவில் மார்க்கெட்டை பிடித்து வைத்திருக்கும் டாடா போன்ற நிறுவனங்கள் பலனடைவதைத்தான் அரசு விரும்புகிறது” என்று அரசின் தகிடுதத்தங்களை அடுக்கிக்கொண்டே போன மருத்துவர் புகழேந்தி சற்றே இடைநிறுத்தினார். பெண்களுக்கான நலத்திட்டங்களின் இப்படித்தானா? என்கிற கேள்விக்கு புகழேந்தியின் பதில்ஸ
“பொதுவான நோய்களைத்தவிர பெண்களுக்கென்றே தனிப்பட்ட சில மருத்துவ பிரச்னைகளும் உள்ளன. உலகில் சத்துக்குறைவால் பாதிக்கப்படும் நான்கில் மூன்று பெண்கள் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். இதனால் பிரசவத்தின்போது தாயும் குழந்தையும் உயிரிழப்பது அதிகமாக நிகழ்கிறது. நம்முடைய ஆணாதிக்க குடும்பச்சூழலையும் இதற்கு காரணமாகக்கூற முடியும். இரத்தசோகையால் பாதிக்கப்படும் பெண்களும் இந்தியாவில்தான் அதிகம்! இரண்டரை கோடி பெண்கள் கர்ப்பபையில் தோன்றும் ஃபைபிராய்டு கட்டிகளால் ஆண்டுதோறும் பாதிக்கப்படுகிறார்கள். இருந்தும் பெண்களுக்கான திட்டங்கள் அரசுகளால் மேற்கொள்ளப்படாமலேயே உள்ளன” என்கிறார்.
“ஒவ்வொரு தனிமனிதனுடைய நலனிலும் அக்கறை செலுத்தவேண்டியது அரசின் கடமை. அரசோ, தனிநபர் ஒருவருக்கு செய்யும் மருத்துவச் செலவு 15 சதவீதம் மட்டுமே. மீதி 85 சதவீத மருத்துவ செலவுகளை மக்களே பார்த்துக்கொள்கிறார்கள்.
வருடந்தோறும் போடப்படும் பட்ஜெட்டில் 2 சதவீதத்துக்குள்தான் மருத்துவநிதி ஒதுக்கப்படுகிறது. உலக சுகாதார நிறுவனம் நிர்ணயித்துள்ள குறைந்தபட்ச நிதியான 5 சதவீதத்தைக்கூட எட்டவில்லை” என்றவர், அடுத்து சொன்ன விஷயம் நம் ஆட்சியாளர்களின் நிஜ சொரூபங்களை வெட்டவெளிச்சமாக்குகிறது.
“வயிற்றுப்போக்கு, நிமோனியா போன்ற நோய்களுக்கு குறைந்தது 5 லட்சம் பேர் வருடந்தோறும் பலியாகிறார்கள். போலியோ உள்ளிட்ட தண்ணீர் மூலம் பரவும் அத்தனை நோய்களையும் வராமல் தடுக்க முடியும். மருத்து விஞ்ஞானிகள் மூளையை குழப்பி கண்டுபிடித்த வாயில் நுழையாத மருந்துகளால் அல்ல. பாதுகாக்கப்பட்ட தண்ணீரால்! நம் அரசியல்வாதிகளுக்கு தண்ணீரில் போதிய வருமானம் இல்லை என்று நன்றாகவே தெரியும்!” மருத்துவர் புகழேந்தி ஆட்சியாளர்களை நன்கு புரிந்து வைத்திருக்கிறார்.
– மு.வி.நந்தினி
source: http://mvnandhini.wordpress.com/