ஜே.ஜாஃபர் சித்திக், கம்பம்.
ஏக இறைவனாகிய அல்லாஹ் இந்த மபெரும் பிரபஞ்சத்தைப் படைத்து உயிர் ஜீவராசிகளுக்கு பல அருட்கொடைகளை வழங்கி ஒரு குறிப்பிட்ட காலக் கெடுவை நிர்ணயித்துள்ளான். கருணையுள்ள இறைவன் மனித இனத்திற்கு பகுத்தறிவு மற்றும் வழ்க்கைக்குத் தேவையான பல்வேறு திறன்களை அருட்கொடையாக வழங்கி கண்காணித்துக் கொண்டிருக்கிறான்.
நபி ஆதம் அலைஹிஸ்ஸலாம் முதல் இறுதி நபி முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வரை பல்வேறு நபிமார்களை அனுப்பி இந்த மனித இனம் எவ்வாறு வாழ்க்கை நெறிமுறைகளை அமைத்துள் கொள்ள வேண்டும் என்பதற்கு இறை நெறி நூல்களை அருளியுள்ளான்.
ஒவ்வொரு காலக்கட்டத்திலும் மனித சமுதாயத்திற்கு வழிகாட்டல் நூலை அருளிய இறைவன், இறுதியாக நபி முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய முழு உலக உம்மத்திற்கும் மறுமை நாள் வரை அல்குர்ஆனை வழிகாட்டல் நூலாக ஆக்கியுள்ளான்.
(நபியே) ‘இந்நெறிநூலை நாமே உம்மீது இறக்கி வைத்தோம், அறிவுடையவர்கள் அதன் வசனங்களை கவனித்து ஆராய்ந்து நல்லுணர்ச்சி பெறுவார்களாக’.(அல்குர்ஆன் 36:39).
உங்களது இறைவனால் உங்களுக்கு வஹ்யி மூலம் அறிவிக்கப்பட்டவற்றை பின்பற்றுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவைகளை நன்கறிபவனாகவே இருக்கின்றான் (அல்குர்ஆன் 33:2).
ஆனால் அல்லாஹ்வால் சபிக்கப்பட்ட ஷைத்தான் மனித சமுதாயத்தை வழிகெடுத்து சிலைகளை கடவுளாக வணங்கச் செய்தும், நபிமார்களை இறைவன் நிலைக்கு உயர்த்தியும் இனனும் பலரை நாத்திகவாதிகளாகவும் ஆக்கியுள்ளான். மேலும் முன்னோர்கள் மீதும் குருட்டு பக்தியை ஏற்படுத்தியுள்ளான்.
இது மட்டுமல்லாமல் மனித ஷைத்தான்களும் பல கொள்கைகளைச் சொல்லி மக்களை பல கூறுகளாகவும் பிரித்து வைத்துள்ளனர்.
இன்று உலகில் உள்ள அறிவுஜுவிகள் தாங்கள் படைக்கபட்ட நோக்கத்தை மறந்து வாழ்கின்றனர். கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்று வாழ்கின்றனர்.
இறுதி வழிகாட்டல் நூல் அல்குர்ஆனைப் பற்றிப் பிடித்து பின்பற்றாமல் விட்டதால் உலகில் அநீதி, மோசடி, ஏமாற்று வேலைகள், பொருளாதார சுரண்டல், லஞ்சம், மது, கொலை, கொள்ளை ஆகியவை நிறைந்து காணப்படுகின்றன.
இன்று மக்கள் ஆட்சி, மன்னர் ஆட்சி என்ற மக்களால் நடைமுறைப் படுத்தப்பட்டு வருகின்றன. மக்களால் சட்டம் இயற்றப்பட்டு நடைமுறைப்படுத்துவதற்கும், இறைவனால் மக்களுக்காகவே அருளப்பட்ட சட்டங்களுக்கும் பெருத்த வேறுபாடுகள் உள்ளன.
இறைச்சட்டம் என்றும் மக்களுக்கு நன்மை தரக்கூடியது. ஏற்றத்தாழ்வுகள் இல்லாதது, முரண்பாடுகள் அற்றது, ஆனால் மனிதர்களால் இயற்றப்படும் சட்டங்கள் நிச்சயமாக நீதமானதாக இருக்காது. ஏற்றத்தாழ்வுகள் கொண்டதாக இருக்கும், ஏனென்றால் அல்லாஹ் கூறுகிறான்:
(ஆரம்பத்தில்) மனிதர்கள் ஒரே கூட்டத்தினராகவே இருந்தனர், பிறகு நன்மாராயம் கூறவும், அச்சமூட்டி எச்சரிக்கை செய்யவும் அல்லாஹ் நபிமார்களை அனுப்பி வைத்தான். அத்துடன் மனிதர்களிடையே ஏற்படும் கருத்து வேறுபாடுகளைத் தீர்த்து வைப்பதற்காக அவர்களுடன் உண்மையுடைய இறை நெறி நூலையும் இறக்கிவைத்தான்..(அல்குர்ஆன் 2:213).
ஆனால் ஆட்சியாளர்கள் மனிதக்கரங்கால் இயற்றப்பட்ட சட்டத்தை அமுல் படுத்துவதால் சீரான நிலையை ஏற்படுத்த முடிவதில்லை. இதனால் போராட்டங்களும், ஆர்பாட்டங்களும் நடைபெறுவதைக் காண முடிகிறது.
இந்நிலை மாற தீர்வுதான் என்ன? முஸ்லிம் சமுதாயம் தங்களுடைய உரிமைகளை எப்படி பெற்றுக் கொள்வது? நடுநிலைச் சமுதாயம் என்ற அல்லாஹ் கூறியுள்ள நிலைக்கு எப்படி மாறுவது? இதோ அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் முன்னறிவிப்பை ஆழமாகச் சிந்தியுங்கள்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அருளினார்கள்: – நிச்சயமாக எனகக்குப் பிறகு சுயநலப் போக்கும். நீங்கள் வெறுக்கக்கூடிய வேறு சில காரியங்களும் நடைபெறும்! நபி தோழர்கள் கேட்டார்கள், அல்லாஹ்வின் தூதரே! அப்பொழுது நாங்கள் என்ன செய்ய வேண்டுமென எங்களுக்குக் சட்டளையிடுகிறீர்கள்? நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.
உங்கள் மீதுள்ள கடமையை நீங்கள் நிறைவேற்ற வேண்டும், மேலும் உங்களுக்குச் சேரவேண்டிய உரிமைகளை அல்லாஹ்விடம் நீங்கள் கேட்க வேண்டும். அறிவிப்பாளார் – இப்னு மஸ்ஊத் (ரழி) நூல்: புகாரி, முஸ்லிம்.
உஸைத் பின் ஹுளைர் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
அன்ஸாரி தோழர்களில் ஒருவர் கேட்டார், அல்லாஹ்வின் தூதரே! இன்ன மனிதரை அதிகாரியாக நீங்கள் நியமித்தது போன்று என்னையும் அதிகாரியாக நியமிக்கக் கூடாதா? அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள், எனக்குப் பிறகு (உங்கள் உரிமைகளைப் புறக்கணிக்கும் வகையிலான) சுயநலப் போக்கை நீங்கள் சந்திக்க வேண்டியது வரும், அப்போது பொறுமையை மேற்கொள்ளுங்கள். (மறுமை நாளில்) தடாகத்தின் அருகே என்னை நீங்கள் சந்திக்கும் வரையில்!. நூல்: புகாரி, முஸ்லிம்.
இவ்விரு நபிமொழிகளும் எதிர்காலத்தில் ஆட்சியாளர்களிடம் தலைதூக்கும் சர்வாதிகாரப்போக்கு குறித்து எச்சரிக்கை செய்வதுடன் அந்தச் சூழ்நிலையில் பொறுமை மேற்கொள்ள வேண்டுமென நற்போதனையும் தருகின்றன.
உங்கள் மீதுள்ள கடமையையும் நிறைவேற்றி, உங்களுக்குச் சேரவேண்டிய உரிமைகளை அல்லாஹ்விடம் கேட்கவேண்டும் என்று கூறிய நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்: அரசாங்கம் உங்களுக்குச் சேரவேண்டிய உரிமைகளை தாரவிட்டாலும் அல்லது கொடுத்த உரிமையை அபகரித்துக் கொண்டாலும், உங்களக்கு அநீதியிழைத்தாலும் செவியேற்றல், கீழ்படிதல் என்கிற உங்கள் கடமையை நீங்கள் நிறைவேற்றாமல் புறக்கணித்து விடாதீர்கள். குழப்பம் விளைவிக்காதீர்கள்! பொறுமையை மேற்கொள்ளுங்கள், ஆட்சியதிகாரத்தில் அவர்களுடன் தகராறு செய்யாதீர்கள்.
அத்தகைய ஆட்சியாளர்களுக்கு அல்லாஹ் நேர்வழிகாட்ட வேண்டுமென நீங்கள் பிரார்த்தனை செய்யுங்கள்.
சுயநல போக்குடைய ஆட்சியாளர்களின் தன்னிச்சையான நடவடிக்கையின் போது பொறுமை மேற்கொள்ளுமாறு ஏவும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வார்த்தை கவனிக்கத்தக்கது.
மனிதர்களின் மனங்கள் கஞ்சத்தனம் மிக்கவை, மக்களின் உரிமைகளைப் பறித்து சொந்த வாழ்வை வளப்படுத்திக் கொள்ளும் ஆட்சியாளர்களைக் கண்டால் அதனைப் பொறுத்துக் கொள்வது மனித மனங்களுக்கு மிகவும் சிரமம்! இத்தகைய மனித இயல்பை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நன்கு அறிந்திருந்தார்கள்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உண்மையில் இறைத்தூதரே என்பதற்கான ஆதாரமும் இதிலுள்ளது. ஆம்! ஆட்சியாளர்கள் மக்களின் சொத்துக்களைத் தன்னிச்சையாகவே அனுபவித்து வருகின்றார்கள். அவர்களின் உல்லாச வாழ்க்கையை நாம் பார்க்கிறோம். உணவு, பானத்தில் வீண்விரயம், ஆடம்பரமான வீடுகள், சொகுசாக மாளிகைகள், வாகன வசதிகள் மற்றும் மக்களின் பொதுச் சொத்துக்களைத் தங்களின் நலனுக்காகத் தாராளமாக செலவு செய்வதைக் காணலாம்.
இந்தச் சூழ்நிலை மாற, ஆட்சியாளர்கள் நேர்வழி திரும்ப வேண்டுமென அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்வதும், அவர்களுக்கு அழகிய முறையில் புத்திமதி புகன்று கொண்டிருப்பதும் தான் அனைவருக்கும் நலம் பயக்கக் கூடியதாகும்.
நாட்டின் பொதுச் சொத்தை சுயநலனுக்காகப் பயன்படுத்துவது நாட்டு மக்களைக் கொதிப்படையச் செய்யும் கடுமையான விஷயமே! மக்கள் தங்களுடைய உரிமைகளைக் கேட்டு வீதியில் இறங்கிப் போராடக் கூடத் தயங்க மாட்டார்கள்.
கொந்தளிப்பதையும், கிளர்ச்சியையும் ஏற்படுத்தக் கூடிய இது போன்ற சூழ்நிலைகளில் பொறுமையை மேற்கொண்டு, அமைதியான முறையில் ஆட்சியாளர்களைச் சீர்திருத்த நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் போதனை வழங்குகிறார்கள்.
உரிமைகள் பறிக்கப்பட்டு உள்ளங்களைப் புண்படுத்தும் இத்தகைய கடினமான சூழ்நிலையில் நீங்கள் பொறுமையை மேற்கொண்டால் அதற்குரிய கூலியாக மறுமைநாளில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது தடாகத்தில் பானம் அருந்தும் பெரும் பாக்கியம் கிடைக்கும்!.
இதிலிருந்து மறுமை நாளில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களோடு தடாகத்திற்கு வந்து நீர் அருந்தும் பாக்கியம் பெற வழிவகுக்கும் காரணிகளுள் பொறுமையும் ஒன்றென்பதைத் தெளிவாக நாம் புரிந்து கொள்ளலாம்.
இந்த இடத்தில் இன்னொரு உண்மையை நாம் அறிந்திட வேண்டும், அதாவது மக்கள் எந்த லட்சணத்தில் வாழ்கிறார்களோ அதற்கேற்பவே அவர்களின் ஆட்சியாளர்கள் அமைவார்கள். உலகில் காணப்படும் நிதர்சனமான உண்மையாகும். ஜனநாயகம். சர்வாதிகாரம் உள்ளதெனச் சொல்லப்டும் நாட்டிலும் சரி இதைத் தானே நாம் காண்கிறோம்.
மக்கள் நீதிநெறி தவறினால் அல்லாஹ்வுக்கும், தங்களுக்கும் மத்தியிலான உறவுகளில், அதாவது அவனுக்கு ஆற்றவேண்டிய கடமைகளை நிறைவேற்றுதல், அவனுக்கு அஞ்சி வாழுதல், தீமைகளை தவிர்த்தல், நன்மைகளைப் பரவலாக்குதல், இறை மார்க்கத்தின் பக்கம் அழைப்பு விடுத்தல் போன்ற விஷயங்களை மக்களை பேணிடவில்லையெனில் மேலே சொன்னது போன்று தீய ஆட்சியாளர்களை அவர்கள் மீது அல்லாஹ் திணித்து விடுகிறான்.
இவ்வாறே அக்கிரமக்காரர்களில் சிலரை வேறு சிலருக்கு நெருங்கியவர்களாய் நாம் ஆக்குவோம். அவர்கள் சம்பாதித்துக் கொண்டிருந்த தீமைகளின் காரணத்தால்.. (அல்குர்ஆன் 6:129).
ஆம்! மக்கள் நல்லவர்கள் எனில் அவர்களைப் போன்ற நல்ல ஆட்சியாளர்களை அல்லாஹ் அவர்களுக்கு இலகுவாக்கிக் கொடுக்கிறான், மக்கள் தீயவர்கள் எனில் அவர்களுக்கு வாய்க்கும் ஆட்சியாளர்களும் தீயவர்களாகவே அமைவார்கள்.
உண்மைதானே! அல்லாஹ் நுண்ணறிவுமகிக்கவன், ஞானம் உடையவன். மக்கள் எப்படிப்பட்டபவர்களோ அப்படித்தான் அவர்களுடைய ஆட்சியாளர்களiயும் அமைக்கிறான்! அதனால்தான் அல்லாஹ் குர்ஆனில் தெளிவாக மனித சமுதாயத்திற்கு எச்சரிக்கை செய்கின்றான். எந்தவொரு சமுதாயமும் தங்களுடைய நிலையை மாற்றிக் கொள்ளதவரை அந்த சமுதாயத்தை அல்லாஹ் மாற்றமாட்டான்.. (அல்குர்ஆன்: 8:53, 13:11).
(நம்பிக்கையாளர்களே!) உங்கள் பொருள்களிலும், உங்கள் ஆத்மாக்களிலும் (நஷ்டம்) இழைக்கப்படுவதன் மூலம்) நிச்சயமாக நீங்கள் சோதிக்கப் படுவீர்கள். உங்களுக்கு முன்னர் நெறிநூல் கொடுக்கப்பட்டவர்களாலும், இணை வைத்து வணங்குபவர்காளாலும், பல வசைமொழிகளை நிச்சயமாக நீங்கள் செவியுறுவீர்கள். (இத்தகைய கஷ்டங்களை) நீங்கள் பொறுமையுடன் சகித்துக் கொண்டிருந்து அல்லாஹ்வை பயந்தவர்களாக வாழ்ந்து வந்தால் (நீங்கள் வெற்றியடைவீர்கள்) நிச்சயமாக இதுதான் வீரச்செயலாக இருக்கும்…(அல்குர்ஆன் 3:196).
அவர் (தன் விருப்பத்திற்கு மாறாக) ஒரு பெண் குழந்தையைப் பெற்றெடுத்தபோது ‘என் இறவைனே! நான் ஒரு பெண்ணையே பெற்றேன்’ என்று கூறினார். ஆயினும் (அவர் விரும்பிய) ஆண், இந்தப் பெண்ணைப் போன்றல்ல என்பதை அல்லாஹ் (தான்) நன்கறிவான். (பிறகு, இம்ரானின் மனைவி) நிச்சயமாக நான் அதற்கு ‘மர்யம்’ எனப் பெயரிட்டேன், அதனையும் அதன் சந்ததியையும் விரட்டப்பட்ட ஷைத்தானின் வஞ்சனைகயிலிருந்து நீ காப்பாற்ற உன்னிடம் பிரார்த்திக்கிறேன்! என்றார்..(அல்குர்ஆன் 3:38).
நீங்கள் (ஏதும்) அறிந்த விஷயத்தில் வீணாக இதுவரையில் தர்க்கித்துக் கொண்டிருந்தீர்கள், நீங்கள் ஒரு சிறிதும் அறியாத விஷயத்தில் ஏன் தர்க்கிக்க முன் வந்துவிட்டீர்கள், அல்லாஹ்தான் (இவை அனைத்தையும்) நன்கறிவான், நீங்கள் அறியமாட்டீர்கள்..(அல்குர்ஆன் 3:66).
இப்றாஹீம் யூதராகவும் இருக்கவில்லை, கிருஸ்தவராகவும் இருக்கவில்லை, எனினும், இறைவனுக்கு முற்றிலும் வழிப்பட்ட நேரான முஸ்லிமாகவே இருந்தார். அன்றி அவர் இணைவைத்து வணங்குபவராகவும் இருக்கவில்லை.. (அல்குர்ஆன் 3:67).
நிச்சயமாக இப்றாஹீமுக்கு மனிதர்களில் நெருங்கியவர் (எவர் என்றால்) அவரைப் பின்பற்றியவர்களும், இந்த நபியும். (இவரை) நம்பிக்கை கொண்டவர்களும்தான். அல்லாஹ் இந்த நம்பிக்கையாளர்களை (நேசித்து) பாதுகாப்பவனாக இருக்கிறான்..(அல்குர்ஆன் 3:68).
(அன்றி) நீங்கள் ஒவ்வொரு வழியிலும் உட்கார்ந்து கொண்டு அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டவர்களைப் பயமுறுத்தி, அல்லாஹ்வுடைய வழியில் அவர்கள் செல்வதைக் தடை செய்து அதில் கோணலை உண்டு பண்ணாதீர்கள், வெகு சொற்ப மக்களாக இருந்த உங்களை அதிக தொகையினராக ஆக்கி வைத்ததையும் எண்ணி (அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தி) வாருங்கள். (பூமியில்) விஷமம் செய்து கொண்டு அலைந்தவர்களின் முடிவு எவ்வாறாயிற்று என்பதையும் கவனித்துப் பார்ப்பீர்களாக! (என்றும் கூறினார்) (அல்குர்ஆன் 7:86).
(பெண்களைவிட்டு) ஆண்களிடம் (மோகம் கொண்டு) செல்கிறீர்கள். (பயணிகளை) வழிமறித்துக் கொள்ளையடிக்கிறீர்கள், (மக்கள் நிறைந்த) உங்கள் சபைகளிலும் (பகிரங்கமாகவே) மிக்க வெறுக்கத்தக்க இக்காரியத்தைச் செய்கின்றீர்களே! என்று கூறினார், அதற்கவர்கள் ‘மெய்யாகவே நீங்கள் உண்மை சொல்பவராக இருந்தால் அல்லாஹ்வுடைய வேதனையை எங்களிடம் கொண்டு வாருங்கள்’ என்று கூறியதைத் தவிர (வேறொன்றும்) அவருடைய மக்கள் கூறவில்லை..(அல்குர்ஆன் 29:29).
நன்மையும் தீமையும் சமமாகிவிடாது, (ஆதலால், நபியே! தீமையை) நீங்கள் நன்மையைக் கொண்டே தடுத்துக் கொள்ளுங்கள், அவ்வாறாயின், உங்களுடைய கொடிய எதிரியை அதே சமயத்தில் உங்களுடைய உண்மையான, மிக்க நெருங்கிய நண்பனைப் போல் காண்பீர்கள் (அல்குர்ஆன் 41:34).
அன்றி, நம் கட்டளைகளைப் பற்றித் தெளிவான வசனங்களை நாம் அவர்களுக்குக் கொடுத்தோம். (இவ்வாறிருந்தும்) அவர்கள் தங்களுக்கிடையிலுள்ள பொறாமையின் காரணமாக, அவர்களிடம் (நெறிநூல்) ஞானம் வந்ததன் பின்னர், அவர்கள் தங்களுக்குள் (தர்க்கித்துக் கொண்டு) பிரிந்துவிட்டனர். (நபியே) நிச்சயமாக உங்களது இறைவன் அவர்கள் தர்க்கிக்துக் கொண்டவைகளைப் பற்றி மறுமையில் அவர்களுக்கிடையில் தீர்ப்பளிப்பான் (அல்குர்ஆன் 45:17).
நன்றி: அந்நஜாத் மாத இதழ் – ஜூன் 2010.