[ ”இந்தியாவின் 38 முக்கிய நகரங்கள் நிலநடுக்கத்தால் மிதமாகவும், அதிகமாகவும் பாதிக்கப்படும் பகுதிகளில் அமைந்துள்ளன.” – பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் துணைத் தலைவர் சசீதர் ரெட்டி.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை சென்னை மாநகரம் நிலநடுக்கத்துக்கு இலக்காகும் பகுதியாக உள்ளது. கல்பாக்கம் அணுமின் நிலையம், கூடங்குளம் அணுமின் நிலையம் ஆகியன மிதமான நிலநடுக்க வாய்ப்புள்ள பகுதிகளில் அமைந்துள்ளன.
இந்தியாவில் உள்ள 20 அணுஉலைக் கூடங்களும் நிலநடுக்கத்தைத் தாங்கும் வலிமைகொண்ட தொழில்நுட்பத்தால் அமைக்கப்பட்டவை என்று அணுஉலை அதிகாரிகள் சொல்கிறார்கள்.
ஆனாலும், எல்லாமும் நன்றாகச் செல்லும்வரை எல்லாமும் நல்லதுதான். ஏதாவது துயரம் நடந்துவிடும்போதுதான் பல உண்மைகள் அம்பலப்படுகின்றன.]
ஜப்பான் நாட்டின் ஃபுகுஷிமா அணுஉலைக்கூடம் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டு, அணுக்கதிர் வீச்சு பரவியதும், அதைத் தொடர்ந்து அணுஉலைக் கூடங்கள் குறித்த சிந்தனை மறுஆய்வுக்கு உள்படுத்தப்பட வேண்டும் என்ற விவாதங்களும் இன்னும் முடிந்தபாடில்லை. அதற்குள்ளாக இன்னொரு அதிர்ச்சித் தகவலைத் தருகிறது இந்திய தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம்.
இந்தியாவின் 38 முக்கிய நகரங்கள் நிலநடுக்கத்தால் மிதமாகவும், அதிகமாகவும் பாதிக்கப்படும் பகுதிகளில் அமைந்துள்ளன என்று பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் துணைத் தலைவர் சசீதர் ரெட்டி அளித்துள்ள பேட்டியில் குறிப்பிட்டுள்ள, தகவலும், இந்தியாவில் உள்ள எந்தக் கட்டடமும் நிலநடுக்கத்தைத் தாங்கும் தொழில்நுட்பத்தால் அமைக்கப்படவில்லை என்ற விவரமும் விஷயம் புரிந்தவர்கள் அனைவருக்கும் அதிர்ச்சியானதுதான்.
ஏற்கெனவே 2001 ஜனவரி 31-ம் தேதி குஜராத் மாநிலம், கட்ஜ் பகுதியில் நேரிட்ட நிலநடுக்கத்தால் 20,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 1,67,000-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். 4 லட்சம் வீடுகள் தரைமட்டமா யின. 6 லட்சம் மக்கள் வாழிடம் இல்லாமல் வேறு நகரங்களுக்கு இடம் பெயர்ந்தனர். ஆயிரம் கோடிக்கும் அதிகமான பொருளாதார இழப்பு ஏற்பட்டது. இந்தத் துயரச் சம்பவம் நடந்து பத்து ஆண்டுகள் கழிந்த பிறகும்கூட, நிலநடுக்கத்தைத் தாங்கிநிற்கும் வலிமையுள்ள கட்டடங்களை உருவாக்குவதற்கான முயற்சிகளை இந்திய அரசு மேற்கொள்ளவில்லை என்றால், இந்த மெத்தனத்தை என்னவென்பது.
தற்போது பேரிடர் மேலாண்மை ஆணையம் குறிப்பிடும் 38 நகரங்களில் பெருநகர்களான மும்பை, தில்லி, கொல்கத்தா, சென்னை ஆகியனவும் உள்ளன. இங்கெல்லாம் எவ்வளவு விரைவாகக் கட்டடங்கள் எழுப்பப்பட்டு வருகின்றன என்பதும், இடநெருக்கடி காரணமாக, அனைத்துக் கட்டடங்களுமே பல அடுக்கு மாடிகளாக அமைவதையும் காண முடிகிறது. இங்கே மிகச் சிறிய அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டாலும் அதன் இழப்பு எத்தகையதாக இருக்கும் என்பதை நினைத்துப் பார்க்கவே அச்சமாக இருக்கிறது.
ஐஐடி-மும்பை தலைமையில் நாட்டில் உள்ள 6 ஐஐடி கல்வி நிறுவனங்களில் நிலநடுக்கத்தைத் தாங்கிநிற்கும் கட்டடங்கள் குறித்த தொழில்நுட்பங்கள் விவாதிக்கப்பட்டு, 10 வகையான கட்டடங்களையும் அதற்கான தொழில்நுட்பத்தையும் வகைப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.
நிலநடுக்கத்தைத் தாங்கிநிற்கும் தொழில்நுட்பத்தில் கட்டடங்களை அமைப்பதைக் கட்டாயமாக்கும் அதிகாரம் மாநில அரசின் பட்டியலில் இருப்பதால், பேரிடர் மேலாண்மை ஆணையம் அனைத்து மாநிலங்களுக்கும் இது தொடர்பாகக் கடிதம் அனுப்பியதாகவும், அந்தக் கடிதத்துக்குக் குறிப்பிடும்படியான பதில் ஏதும் கிடைக்கவில்லை என்பதையும் அறியும்போது, மாநில அரசுகளும் இந்த விஷயத்தில் மெத்தனமாக இருப்பதைக் காண முடிகிறது.
இந்தியாவில் உள்ள 200-க்கும் அதிகமான மாவட்டங்கள் நிலநடுக்கத்தில் 4-வது 5-வது நிலையில் (ஆபத்தான இடம் என்பதற்கான அடையாளம்) இருப்பதாகப் பேரிடர் மேலாண்மை ஆணைய அதிகாரிகள் கூறுகின்றனர். இந்நிலையில், நிலநடுக்கத்தைத் தாங்கிநிற்கும் தொழில்நுட்பத்தை மட்டுமே கட்டடங்களில் கையாள வேண்டும் என்று மத்திய அரசே நேரடியாக ஏன் கட்டளை பிறப்பிக்கக்கூடாது? இத்தகைய மிக முக்கியமானதொரு முடிவை எதற்காக மாநில அரசு செய்தால் செய்யட்டும் என்கிற பாணியில் விட்டு வைக்கவேண்டும்?
நிலநடுக்கத்தால் அடிக்கடி பாதிக்கப்படுவோம் என்று உணர்ந்து, மக்களுக்கும் பயிற்சிகள் கொடுத்திருக்கிறது ஜப்பான். அப்படியாக நிலநடுக்கத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கும் ஒரு நாட்டுக்கே, நிலநடுக்கம் ஒரு பெரிய துயரமாக இருக்கும்போது, எந்தவிதமான தயாரிப்புகளும், முன்னெச்சரிக்கைகளும், பயிற்சியும் இல்லாத இந்தியாவில் நிலநடுக்கம் ஏற்பட்டால் அதன் பாதிப்பு எப்படி இருக்கும்?
ஜப்பான், பிலிப்பின்ஸ், இந்தோனேஷியா, மலேசியா வரை பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ள நிலநடுக்கம் இந்தியாவில் நிகழ்வதற்கான வாய்ப்புகள் அதிகமுள்ளது என்பதைப் புரிந்துகொண்டு, புதிய கட்டடங்கள் அனைத்தும் நிலநடுக்கத்தைத் தாங்கும் தொழில்நுட்பத்தில் மட்டுமே அமைய வேண்டும் என்பதைக் கட்டாயமாக்க வேண்டும். அதேவேளையில், இதற்கான தொழில்நுட்பங்கள் கட்டுமானத் துறைக்கு எளிதில் கிடைக்கவும், இது குறித்த பயிற்சிகளை கட்டடப் பொறியாளர் முதல் மேஸ்திரிகள் வரை அளிக்கவும் வேண்டும்.
அந்தமான், அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாநிலத்தின் பல பகுதிகள், நில அதிர்வும், பூகம்பம் தாக்கும் அபாயம் உள்ள பகுதிகள். இங்கு கட்டப்பட்டுள்ள வீடுகள் , முழுக்க மரத்தை கொண்டு கட்டப்பட்டுள்ளன. இயற்கை பேரிடர் அபாயத்திலிருந்து, மக்கள் எளிதில் தப்பிக்க இங்கு வசதி உள்ளது. தமிழகத்திலுள்ள பல வீடுகளும், அடுக்கு மாடி குடியிருப்புக்களும், செங்கல் சிமின்ட் இரும்பு பொருட்களை கொண்டு கட்டப்படுகின்றன. மக்கள், தங்கள் வாழ்க்கையும், வசிப்பிடமும் நிரந்தரமானது என்று கருதுவதே அவர்களின் அழிவுக்கு காரணம். நில அதிர்ச்சி, மற்றும் பூகம்பம் போன்ற இயற்கை இடர்களிலிருந்து மக்கள் தங்கள் உயிரை காப்பாற்றிக்கொள்ள வேண்டும். அதற்கு, அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். தினமணியின் எச்சரிக்கையை, சாதாரணமாக கருத கூடாது. நினைத்தாலே நடுங்க வைக்கும், பேரழிவை சமாளிக்க வேண்டாமா?
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை சென்னை மாநகரம் நிலநடுக்கத்துக்கு இலக்காகும் பகுதியாக உள்ளது. கல்பாக்கம் அணுமின் நிலையம், கூடங்குளம் அணுமின் நிலையம் ஆகியன மிதமான நிலநடுக்க வாய்ப்புள்ள பகுதிகளில் அமைந்துள்ளன. இந்தியாவில் உள்ள 20 அணுஉலைக் கூடங்களும் நிலநடுக்கத்தைத் தாங்கும் வலிமைகொண்ட தொழில்நுட்பத்தால் அமைக்கப்பட்டவை என்று அணுஉலை அதிகாரிகள் சொல்கிறார்கள். ஆனாலும், எல்லாமும் நன்றாகச் செல்லும்வரை எல்லாமும் நல்லதுதான். ஏதாவது துயரம் நடந்துவிடும்போதுதான் பல உண்மைகள் அம்பலப்படுகின்றன.
மத்திய அரசு மெத்தனம் காட்டினாலும், தமிழக அரசு ஒரு முன்மாதிரி மாநிலமாக, நிலநடுக்கம் தாங்கும் கட்டடத் தொழில்நுட்பத்தைக் கட்டாயமாக்குவது அவசியம்.
நன்றி: தினமணி