வீடியோ விளையாட்டுக்களின் விபரீதம்!
ஆலிஃப் அலி
நாம் வாழ்ந்துகொண்டிருக்கும் இன்றைய இலத்திரனியல் உலகில் பல இலத்திரனியல் சாதனங்களைக் கையாளவேண்டிய அவசியப்பாட்டை எதிர்நோக்கியுள்ளோம். அதிலும் வளர்ந்துவரும் தகவல் புரட்சியின் வேகத்திற்கு எம்மையும் ஈடுசெய்துகொள்ள இச்சாதனங்களின் உபயோகம் தவிர்க்க முடியாததாக மாறியுள்ளது. அந்தவகையில் தொலைக்காட்சி, இணையம் என்பன உலக நடப்புகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள உதவும் பொருத்தமான ஊடகங்களாக விளங்குகின்றன.
எனினும், சமூகத்தில் பரவலாகக் காணப்படும் இச்சாதனங்களால் நாம் எதிர்நோக்கிவரும் புதுவகையானதொரு நோய்குறித்து ஆராய்வதே இந்தக்கட்டுரையின் நோக்கமாகும்.இச்சாதனங்களை எல்லை மீறிப் பயன்படுத்துவதனால் அனேகமானோர் இவற்றுக்கு அடிமையாகி உள, உடல் ரீதியான நோய்களுக்கும் ஆளாகிவருகின்றனர். இனி நாம் கணினி விளையாட்டு மற்றும் விடியோ விளையாட்டுக்களினால் எமது சிறு பராயத்தினர் எதிர்நோக்கியுள்ள ஆபத்துக்கள் பற்றி சற்று ஆராய்வோம்.
கணினியின் பரவலாக்கம், பல இடங்களுக்கு அலைந்து திரிந்து, பல நாட்களில் செய்து முடிக்க வேண்டிய கடினமான வேலைகளையும் கணினித் திரைக்கு முன்னால் அமர்ந்து குறுகிய நேரத்திற்குள் செய்து முடிக்க வழி வகுத்துள்ளது. அவ்வாறுதான் கணினி விளையாட்டுக்களும்.
முன்பெல்லாம் மைதானத்தில் களைப்புடன், வியர்வை வடிய வடிய, பலமுறை விழுந்து, காயங்களுடன் விளையாடிய விளையாட்டுக்களை இன்று துளியும் வியர்வை சிந்தாது, களைப்புறாது கணினிக்கு முன்னால் அமர்ந்தவாறு விநோதமாக விளையாட சாத்தியப்பட்டுள்ளது. என்றாலும் இந்த சாத்தியப்பாடுகள் இன்றைய பெரும்பாலான இளைஞர்களையும் குழந்தைகளையும் இதற்கு அடிமைப்பட வைத்துவருகிறது. கணினி மற்றும் வீடியோ விளையாட்டுக்களுக்கு அடிமையாதல் தொடர்பாக ஊடகங்கள் வெளியிட்ட அண்மைக்கால செய்திகள் ஆய்வாளர்கள் மத்தியில் பெறும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
தென்கொரியாவைச் சேர்ந்த 28 வயதுடைய ஒரு இளைஞன் தொடர்ச்சியாக 50 மணித்தியாலங்கள் வீடியோ விளையாட்டுக்களில் ஈடுபட்டதனால் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்துள்ளான். இது போன்றுதான் லீபோர்பல்லில் 14 வயதுடைய சிறுவன் ஒருவன் இரத்த உறைவின் காரணமாக மரணமடைந்துள்ளான். அவன் தொடர்ச்சியாக சுமார் 10 மணித்தியாலங்கள் ஒரே நிலையில் அமர்ந்தவாறு வீடியோ விளையாட்டுக்களில் ஈடுபட்டமையாலேயே இந்நிகழ்வு நடந்துள்ளது என பின்பு அறியப்பட்டுள்ளது.
இவ்வருட ஜூன் மாத இறுதியில் அமெரிக்க வைத்தியர்க்ள ஒன்றியத்தால் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் “நீண்டநேரம் வீடியோ விளையாட்டுக்களில் ஈடுபடுவதானது தவிர்க்கமுடியாதவாறு விளையாடுபவர்களை அதற்கு அடிமைப்பட வைக்கிறது” எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
சுமார் 15 மில்லியன் தென்கொரியர்கள் தொடர்ச்சியாக வீடியோ விளையாட்டுக்களில் ஈடுபடுவதாக சர்வதேச ஆய்வறிக்கையொன்று விளக்குகிறது. மேலும் பிரித்தானியாவில் வீடியோ விளையாட்டுக்களில் ஈடுபடுவோர்களில் 12%ஆனவர்கள் அதற்கு அடிமையாகி உள்ளனர். அவர்களுல் பெரும்பான்மையானோர் சிறுவர்களாக உள்ளனர். இவ்வாறே அமெரிக்காவிலும் சுமார் 8% இளைஞர்கள் மிக்க ஆபத்தான நோய்களுக்கு ஆளாகியுள்ளனர். இவ்வாறு எங்கு பார்;த்தாலும் இந்தப்புது வகை வீடியோ விளையாட்டுக்களுக்கு அடிமையாதல் என்ற நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இருந்தேவருகின்றனர். இது ஒரு சர்வதேச நோயாகப் பரிணமித்துள்ளது.
பர்லின் நகரில் சுமார் 80 சதவீதமான சிறுவர்கள் தமக்கென பிரத்தியேகமாக ஒரு கணினியை வைத்திருக்கின்றனர். அவர்களில் விளையாடுவதற்கென்றே கணினியைப் பயன்படுத்தும் 12சதவீதமானவர்கள் விளையாட்டுக்களுக்குப் படிப்படியாக அடிமைப்பட்டுவருவதாக இத்துறையில் தேர்ச்சி பெற்ற ஸியாடெல் என்ற வைத்தியசாலையின் ஆய்வுக்குழு வெளியிட்ட அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. அவ்வறிக்கை வெளியிடும் இன்னுமொரு திடுக்கிடச் செய்யும் செய்திதான் கணினி விளையாட்டுக்கு அடிமைப்படுவதானது போதைப்பொருளுக்கு அடிமைப்படுவதைவிட மிகவும் ஆபத்தானது என போதைப்பொருளுக்கு அடிமையானவனின் நடத்தைப் பண்புகளுடன் கணினி விளையாட்டுக்கு அடிமையானவனின் பண்புகளை ஒப்பு நோக்கி ஆய்வாளர்கள் வெளியிட்டுள்ள முடிவாகும்.
இன்று கணினிப் பாவனையாளர்களில் அநேகாமானோரின் பொழுது போக்காக கணினி விளையாட்டுக்களே காணப்படுகின்றன. இங்கு ஒரு சாராரின் பொழுது போக்கு இன்னொரு சாராரின் சம்பாத்தியமாக அமைகிறது. பொழுது போக்கிற்காக கணினி விளையாட்டுக்களை வாங்கி விளையாடுவதனால் அது கணினி விளையாட்டுக்களை வடிவமைக்கும் நிறுவனங்களுக்கு வெகுவாரியான வருமானத்தை ஈட்டிக்கொடுக்கிறது. கணினி விளையாட்டுக்களைத் தயாரிக்கும் ஒரு நிறுவனம் ஹொலிவுட் திரைப்படம் தயாரிக்கும் ஒரு நிறுவனம் பெறும் வருமானத்தைவிட பன்மடங்கு அதிகமான வருமானத்தைப் பெறுவதாக ஒரு அறிக்கை குறிப்பிடுகிறது. Microsoft, Electronic Arts, Sony போன்ற கணினி நிறுவனங்களுக்கு உலகின் நாலாபக்கங்களிலிருந்தும் பணம் வந்து குவிய பிரதானமான காரணம் அவை தயாரிக்கும் கணினி விளையாட்டுக்கள் ஆகும். Sony நிறுவனத்தயாரிப்பான Play station, Microsoft இன் தயாரிப்பான X box போன்ற கணினி விளையாட்டுக்கள் இன்று உலகளவில் பலராலும் பயன்படுத்தப்படுவதாக அறியப்பட்டுள்து.
கணினி விளையாட்டுக்கு அடிமையானோரின் உடல் உற்சாகமும், உடற்பலமும் குன்றிச் செல்கிறது. அத்தோடு ஒரே இடத்திலிருந்துகொண்டு உணவையும் உட்கொள்வதால் உடல் அபரிமிதமாகப் பருத்துச்செல்கிறது. விளையாட்டு மைதானத்;தில் ஓடி, பாய்ந்து, உதைத்து, விழுந்து, எழுந்து விளையாடுகின்ற கால்பந்து, கரப்பந்து, போன்ற விளையாட்டுக்களால் கிடைக்கும் உடற்பலம், உட்சாகம், சீரான இரத்த ஓட்டம, உடற் பயிற்சி என்பன வெறுமனே கணினிகளுக்கு முன்னால் பல மணிநேரங்கள் அமர்ந்து கொண்டு விரல்களை அசைப்பதனால் மாத்திரம்; கிடைக்கப் போவதில்லை. மேலும் பலருடன் சேர்ந்து விளையாடுகையில் சாதகமான தகவல் பரிமாற்றமும் புரிந்துணர்வும் சமூகத்தில் விட்டுக்கொடுப்புடன் நடந்துகொள்ளும் மனப்பாங்கும் உருவாகின்றது. ஆனால் கணினி விளையாட்டின் மூலம் மனிதன் சமூகத்திலிருந்து தனிமைப்படுத்தப் படுகிறான்.
இன்னும் சொல்வதானால் தொடர்ச்சியான வீடியோ விளையாட்டினால் உடல் தசைகள் செயலிழந்து உறுப்புக்கள் முடமாக வாய்ப்புண்டு. மேலும் முதுகுத் தண்டிலும் கழுத்துப்பகுதியிலும் மூட்டு வலிகள் ஏற்படுகின்றன. அத்தோடு விளையாடும்போது ஒரே இலக்கைப் பார்த்துக் கொண்டிருப்பதனால் கடுமையான தலைவலியும் ஏற்படுகிறதென வைத்தியர்கள் கூறுகின்றனர். சிறுவர்களின் கிரகித்தலைக் கூட்டக்கூடிய மிகச்சிறந்த வழியாக கணினி விளையாட்டுக்கள் அடையாளப்படுத்தப்படுவதாக அண்மையில் செய்தியொன்று வெளியாகியது. இது ஓரளவு உண்மையாக இருப்பினும் மேற்கூறிய ஆய்வுகளுடன் ஒப்பிடுகையில் 99% ஆனவை ஆபத்தாகவே உள்ளதனால் அதிலிருந்து முற்றாகத் தவிர்ந்து கொள்ள வேண்டும்.
நீண்டகாலம் கணினித்திரைக்கு முன் அமர்ந்திருப்பவர்களில் 80 சதவீதமானோர் ஏதோ ஒரு வகையில் நோய் வாய்ப்படுவதாக Science Daily என்ற சஞ்சிகை மேற்கொண்ட ஆய்வு குறிப்பிடுகின்றது. பெரும்பாலான கணினிப் பாவனையாளர்களுக்கு தலைவலி ஏற்டபடக் காரணம் கணினித்திரையிலிருந்து வெளியாகும் ‘ட்ரினனில் பொஸ்பேட்’எனும் இரசாயன ஒளிக்கதிராகும்இதனால முகத்தில்சொறி, மூச்சுத்தினறல் என்பனவும் ஏற்படுவதாகக் காண்டறியப்பட்டுள்ளது. இவ்வகையான ஒளிக்கதிர்கள் வெளியேறக்காரணம் கணினி அதிகமாக வெப்பமடைவதாகும். இவ்வொளிக்கதிர்கள் கணினித்திரையிலிருந்து சுமார் 2 அடிகளுக்கு உட்பட்ட பகதிகளிலேயே சஞ்சரிக்கும்.
கணினிக்கு முன்னால் அமர்ந்து வேளை செய்பவர்கள் இவ்வாறான கணினியின் ஆபத்துக்களிலிருந்து தம்மைப் பாதுகாத்துக்கொள்ள சில பாதுகாப்பு நடவடிக்கைகளை ஏற்படுத்திக் கொள்ளலாம். எனினும் மனிதனை உடல் ரீதியாகவும், உளரீதியாகவும் பாதிப்படையச் செய்து முழு நேரத்தையும் குடித்துக் கொண்டிருக்கும் கணினியூயூவீடியோ விளையாட்டுக்களை விட்டும் முற்று முழுதாக ஒதுங்கவதுதான் அவற்றின் தீங்கிலிருந்து உள்ள பாதுகாப்பு முறையாகும்.
வீடியோ விளையாட்டுக்களின் மற்றொரு பயங்கரமான விளைவுதான் அவற்றை விளையாடுபவர்களின் உள்ளத்தில் அதனைச் செய்து பார்க்க வேண்டும் என்ற உணர்வை ஏற்படுத்துகின்றது. கடந்த சில வருடங்கள் உலகளவில் நடந்த சில சம்பவங்கள் இதனை உணர்த்தி நிற்கின்றன. டேவின் மூர் என்ற இளைஞன் Grand Theft Auto என்ற மோட்டார் வாகனங்களைத் திருடும் வீடியோ விளையாட்டை விளையாடியுள்ளான். பின்பு அதனைச் செய்துபார்க்க ஒரு வாகனத்தைத் திருடி பொலிஸாரிடம் அகப்பட்டுவிட்டான். பின்பு விளையாட்டில் சித்தரிக்கப்படுவது போன்றே பொலிஸாரிடம் தப்பிக்க பொலிஸாரின் துப்பாக்கியைப் பாரித்து மூன்று பொலிஸ்காரர்களைச் சுட்டுக்கொன்றுள்ளான்.
இவ்வாறே 17 வயதுடைய இளைஞன் ஒருவன் 14 வயதுடைய தனது நண்பனை கத்தியால் குத்தி சுத்தியலால் அவனது தலையை அடித்து நொறுக்கியுள்ளான். பொலிஸாரிடம் பிடிபட்டபோது அவனிடமிருந்து பணம் களவாடவே இவ்வாறு செய்ததாக வக்குமூலம் கொடுத்துள்ளான். இவ்விளைஞன் Man hunt என்ற கொலை கொள்ளை போன்ற கொடூரக்காட்சிகள் அடங்கிய வீடியோ விளையாட்டில் ஈடுபட்டவன் என்பது விiசாரணைகள் மூலம் தெரியவந்தது. இவ்விளையாட்டில் கொலை கொள்ளை என்பவற்றைச் செய்ய சுத்தியல், கத்தி என்பன பயன்படுத்தப்படுகின்றன. இதன் விளைவாகத்தான் இக்கொலையும் இடம்பெற்றுள்ளது. இதன் பின்னர் நியூஸிலாந்தில் இவ்வீடியோ விளையாட்டுக்கள் விற்பனை செய்வது தடைசெய்யப்பட்டது.
2002 இல் ஜெர்மனியில் இர்பகட்நகரில் ரொபட் ஸ்டீபன் ஹவ்ஸர் என்ற இளைஞன் தனது பாடசாலைக்குள் நுழைந்து ஆசிரியர்களையும் மாணவர்களையும் சரமாரியாகச்சுட்டு வீழ்த்தியுள்ளான். இவனும் பயங்கரமான விளையாட்டுக்களில் ஈடுபடுபவன் என்பது பொலிஸ் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. இவ்வாறே அமெரிக்கவில் 10 வயதான வில்லியம் பக்னரும் 14 வயதான ஜோஸ்வா பக்னரும் உடன்பிறந்த சகோதரர்கள். துப்பாக்கியைப் பயன்படுத்தும் வீடியோ விளையாட்டுக்களை அதிகாமாக விரும்பும் இவர்கள் ஒருமுறை அதனைப் பரீட்சித்துப் பார்க்க ஆசைப்பட்டு தனது தந்தையின் கைத்துப்பாக்கியைத் திருட்டுத்தனமாக எடுத்துக்கெண்டு வீதியில் இறங்கி கண்னில் பட்ட வாகனங்களையெல்லாம் சுட்டுத்தள்ளினர். இதில் சில உயிரிழப்புக்கள் ஏற்பட்டு சிலர் காயங்களுக்குள்ளாகினர்.
இவ்வாறு கணினி மற்றும் வீடியோ விளையாட்டுக்களில் ஈடுபடுபவர்களின் உள்ளத்தை இவ்விளையாட்டுக்கள் மிகப்பயங்கரமாகப் பாதிக்கச்செய்கின்றன.சிறு வயது முதல் இவ்வாறான விளையாட்டுக்களில் ஈடுபட்டு வளரும் ஒரு குழந்தை பெரியவனாகும்போதுசமூகத்தில்பல குழப்பங்களுக்கும்காரணமானவனாக மாறுகின்றான்.எனவே வீடியோ விளையாட்டுக்களில் மூழ்கிப்போயிருக்கும் இளைஞர்களும் பிள்ளைகளின் விருப்புக்குத் தலையாட்டும் பெற்றோர்களும் இது விடயத்தில் மிக கவனம் எடுத்துக்கொள்ள வேண்டும். வெறும் பொழுது போக்கிற்காக விளையாடப்படும் வீடியோ விளையாட்டுக்கள் அநியாயமாக ஒரு உயிரையே காவுகொள்ளும் விபரீதத்தன்மை கொண்டவை என்பதைச் சான்றாதாரங்களோடு ஆராய்ந்தோம்.
எனவே தொழிநுட்ப முன்னேற்றத்தின் உச்சத்தில் வாழ்ந்துகொண்டிருக்கும் நாம் எதனையும் தூர நோக்கோடு அணுகவேண்டும். அவற்றின் சாதக பாதகங்களை நன்கு ஆராய்ந்து எக்கும் எமது ஈமானுக்கும் உகந்ததெனின் மாத்திரம் அவற்றைப் பயன்படுத்தவேண்டும். எனவே இதுகுறித்து மேலும் சிந்தித்து இவற்றிலிருந்தும் விலகி நடப்போம்…!
source: http://aliaalifali.blogspot.com