கணவன் மனைவி உறவு மதிக்கப்பட வேண்டும்! (2)
அன்பு வைப்பவரின் அன்பை நேசி; துன்பம் வரும் போதும் இன்பமாய்த் தெரியும்.
மகிழ்ச்சியாக வாழ நினைக்கும் ஒவ்வொரு கணவன்-மனைவிக்குள்ளும் ஒரு தவிப்பு இருந்து கொண்டிருக்கிறது.
ஆனால்.. ”என்னதான் ஒருவரில் மற்றவர், கரைய நினைத்தாலும்கூட, இரு வெவ்வேறு தனி நபர்களாக அவர்களின் இயல்பு இருந்தால்தான் அவர்களின் அந்த வாழ்க்கை நீடித்த மகிழ்ச்சியுடன் சுவாரஸ்யமானதாகவும் இருக்கும்” என்கிறார்கள் நிபுணர்கள்.
ஒருவர் மூக்கை மற்றவர் இடிக்காதபடி, ஒருவர் முதுகில் இன்னொருவர் சவாரி செய்யாதபடி… ஆனால், ஒருவர் தேவையை இன்னொருவர் பூர்த்தி செய்யும் வாழ்க்கையே நீடித்த மகிழ்ச்சித் தருவதாக அமையுமாம்!
ஒருவர் மூக்கை மற்றவர் இடிக்காதபடி என்றால்?
”நீ மூச்சுவிட்டால் கூட எனக்குத் தெரியணும்!” என்பது போல், மனைவியை கணவன் குடைவதும் அல்லது மனைவி கணவனைக் குடைவதும்தான்!
கணவன் மனைவியாக இருந்தாலும் ஒரு பெண்ணுக்கும் ஆணுக்கும் தனித் தனி நபர்கள் என்ற ரீதியில் பல்வேறு விருப்பு, வெறுப்புகள், தேவைகள் போன்றவை இருக்கின்றன. அவை எல்லாவற்றையுமே நூறு சதவிகிதம் கணவன் அல்லது மனைவியிடம் பகிர்ந்து கொள்ளமுடியாமல் போகலாம்.. சொல்லப் போனால் அப்படி பகிர்ந்து கொள்ள அவசியமும் இல்லை” என்று ஆலோசனை சொல்கிறார்கள் நிபுணர்கள்.
தம்பதியர் ஒருவர் மேல் மற்றவர் அன்பாகவும், மகிழ்ச்சியான இல்லறத்தை விரும்பக்கூடியவர்களாகவும் இருக்கும் பட்சத்தில், வீணான சில அனாவசிய உராய்தல்கள் சின்னச் சின்ன தொந்தரவுகளைத் தரக்கூடாது என்பதற்காகவே நல்ல நோக்கத்துடன் இப்படி பரிந்துரைக்கிறார்கள்.
மயிலாடுதுறையிலுள்ள ஒரு கிராமத்தில் பிறந்த பெண் அவர். பட்டிக்காட்டில் பிறந்த பெண் என்று மாமியாருக்கு மருமகளைப் பார்த்தால் ஒரு ஏளனம். நல்லவேளையாக கணவன் அவளைப் புரிந்துகொண்டு அனுசரணையாக இருந்தான். ஆனால், அவன் அலுவலகம் போய்விட்டால் மாமியார், அவளை தன் பேச்சுக்களால் மனம் நோகச்செய்துவிடுவார்.
திருமணமான ஆரம்பத்தில், மாமியாரின் இந்த இம்சையைத் தாங்கமுடியாமல் அன்புக் கணவன் வந்தவுடன் ”இது போல அத்தை பேசினார்!” என்று சொல்லி அழுதாள். ”உங்க அம்மாவுக்கு நீங்க சொல்லக்கூடாதா?” என்று சண்டை போட்டாள்.
அப்புறம் தினமும் இதுபோல சண்டை போட வேண்டி வந்தது. அன்பு மனைவி, வயதான அம்மா என்று இரண்டு பக்கமும் பேச முடியாமல் கணவன் திகைத்துப் போய் நிற்பதை அந்தப் பெண் உணர ஆரம்பித்ததுமே, தன் மாமியார் பற்றி கணவரிடம் குறை சொல்வதை நிறுத்திவிட்டாள் அவள்.
”என்ன ஆச்சு?” என்று கணவன் பிறகு கேட்டபோது கூட ”அதெல்லாம் எப்பவோ சரியாப் போச்சு! இப்பல்லாம் நாங்கரொம்ப ஃப்ரெண்ட்ஸாயிட்டோம் தெரியுமா?” என்று உண்மையை மறைத்துவிட்டாள். தான் அப்படி விஷயங்களை மறைத்தது தன் கணவனுக்கு எவ்வளவு பெரிய நிம்மதி உணர்வைத் தந்தது என்றும் மெல்ல மெல்ல அவளாலேயே உணர முடிந்தது.
அதன்பின் மாமியாரை எப்படி தன் அன்பாலேயே சமாளிப்பது என்று கற்றுக் கொண்டு விட்டாள் அந்தப் புத்திசாலிப் பெண்!
”என்னளவில் நான் கையாள வேண்டிய ஒரு விஷயத்தைப் பற்றி என்னத்துக்காக அவரிடம் உண்மையைச் சொல்லி அவரை நான் டென்ஷன் படுத்திக்கொண்டிருக்கவேண்டும்?” என்று கேட்கிறார் அப்பெண்.
இதுபோன்ற விஷயங்கள்தான் என்றில்லை. தோழிகளோடு அமர்ந்து அடிக்கும் கிண்டல்கள் பற்றி… உருப்படாதவன் என்று பெயரெடுத்த தம்பியாக இருந்தாலும் உடன் பிறந்தவனுக்கு சில உதவிகள் செய்து பார்த்து அவனை நல்வழிக்குக் கொண்டு வர முயற்சிப்பது பற்றி… அலுவலகத்தில் உரிமையுடன் சகஜமாக பேசும் நண்பர்கள் பற்றி… என்று இன்னும் கூட சில விஷயங்கள் இருக்கலாம்.
இப்படி தம்பிக்கு உதவ நினைப்பதாலும் அலுவலக நண்பர்கள் பற்றி தேவையில்லாத விஷயங்களை வீட்டில் பேசாமல் இருப்பதாலும் உங்கள் கணவரை நீங்கள் நேசிப்பதில் குறை வைக்கிறீர்கள் என்று அர்த்தமல்ல.. சொல்லப் போனால், கணவருடன் இருக்கும் நேரத்தை இன்னும் நிம்மதியுடன், இன்னும் மகிழ்ச்சியுடன் செலவழிப்பதற்காக வீண் சலசலப்புகளைத் தவிர்க்கவே இந்த வழிமுறைகள்!
”என் கணவர் மற்ற கணவர்கள் போலல்ல.. எல்லாவற்றையும் அழகாகப் புரிந்து கொள்வார். அதனால் நான் எனது பள்ளி நாட்களில் ஏற்பட்ட ஈர்ப்பைக் கூட ஒன்று விடாமல் சொல்லிவிட்டேன். அவரும் அதை ரொம்ப சகஜமாக எடுத்துக் கொண்டுவிட்டார்!” என்று தன் திருமண ரிசப்ஷன் போது இப்படிச் சொன்னார் ஒரு இளம் பெண்.
அந்தப் பெண்ணின் முதல் குழந்தை பிறந்த நாளை கிராண்டாகக் கொண்டாட ஏற்பாடு செய்தார்கள்.
கணவரின் சார்பில் அவரது பல நண்பர்கள் வர, மனைவி, தன் தோழிகளையும் தன்னோடு படித்தவர்களையும் அழைக்க விருப்பப்பட்டார்.
”இங்க பார்! இது நம்ம குழந்தையோட பர்த்டே.. இங்கே உன்னோட பழைய காதல் கதையெல்லாம் எதுக்குப் புதுப்பிக்கணும்!” என்று கணவரிடமிருந்து பட்டென்று பதில் வர திகைத்துப் போனார் அந்த இளம்பெண்.
”எவ்வளவு சகஜமாக, பெருந்தன்மையாக எடுத்துக் கொண்டார்” என்று கடந்த இரண்டு வருடங்களாக தான் நம்பிக் கொண்டிருந்த ஒரு விஷயம் இப்படியொரு சந்தர்ப்பத்தில் எவ்வளவு குரூரமாக வெளிப்படுகிறது என்று திகைப்பாக இருந்தது.
அதெல்லாம் அந்த வயதின் சின்னச் சின்ன ஈர்ப்புகள்! எப்போதோ முடிந்து போய்விட்டவிஷயம்! இப்போதைக்கு அதற்கு அர்த்தமும் இல்லை என்றுதானே அவரை நம்பி நான் இதைச் சொன்னேன். இப்படி நம்மைக் குத்திக் காயப்படுத்தி விட்டாரே என்று வேதனையாகிவிட்டது அந்தப் பெண்ணுக்கு!
எல்லோருமே இப்படிக் குத்திக் கிழிப்பவர்கள் இல்லை என்றாலும், இந்த விஷயம் இத்தனை நாளாக இன்னும் ஞாபகத்தில் இருக்கப் போய்த்தானே அதுபற்றி பேசுகிறாள்? என்று மனதுக்குள் நினைக்க சந்தர்ப்பங்கள் இருக்கிறது என்கிறார்கள் மனவியல் நிபுணர்கள்.
கவனியுங்கள்… குடும்ப வாழ்க்கையை வீணான சில உராய்தல்கள் இன்றி கொண்டு செல்லத்தான் இவற்றை பயன்படுத்தலாமே தவிர, மற்றபடி உங்கள் வாழ்க்கையில் புதிதாக சில வீணான விரிசல்கள் ஏற்பட இவை வழிவகுக்கக் கூடாது.
மேலே சொன்னவை பெண்களுக்கானது மட்டுமல்ல.. ஆண்களுக்கானதும்தான்!