கிராமங்களில் ”சோழியன் குடுமி சும்மா ஆடுமா” என்று ஒரு பழமொழி உண்டு. என்ன பொருள் என்றால், எதை எடுத்தாலும் ஒரு ஆதாயம் இல்லாமல் அந்தக் காரியத்தில் அவன் இறங்க மாட்டான் என்பது.
கருணாநிதி ஆட்சியில்; சாதனைகளில் குறிப்பிடத் தக்கன இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி கலைஞர் வீட்டு வசதித் திட்டம், கலைஞர் காப்பீட்டுத் திட்டம், ஒரு ரூபாய் அரிசி போன்றவை. இதில் ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.
o முதலில் இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டித் திட்டத்தை எடுத்துக் கொள்வோம்.
ஐந்து கட்டங்களாக, இது வரை ஒரு கோடியே 62 லட்சம் வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. அரசு காண்ட்ராக்டுகளைப் பொறுத்த வரை, குறைந்த டெண்டருக்கு ஒப்பந்தம் வழங்கினாலும், அதில் இரண்டு சதவிகித கமிஷன் கட்டாயம் உண்டு. இது போல, கட்டாயம் கமிஷன் கொடுத்தே ஆக வேண்டும்.
இந்த இரண்டு சதவிகிதம் எவ்வித விதி மீறலும் இல்லாமல், நியாயமாக டெண்டர் வழங்கினால். விதி மீறல் இருந்தால், இந்த இரண்டு சதவிகிதம் என்பது பத்து சதவிகிதம் வரை உயரும். ஒரு கலர் டிவி சராசரியாக 2300 ரூபாய் விலை வருகிறது. மொத்தம் 1,62,28,000 கலர் டிவிக்கள். 1,62,28,000 X 2300 = 3732,44,00,000. இதில் இரண்டு சதவிகிதம் 74,64,88,000. எவ்வளவு சாதாரணமாக 74 கோடியை அடித்திருக்கிறார்கள் பாருங்கள்.
மேலும், டெண்டரில் தவறான தகவல் கொடுத்ததற்காக உலக வங்கியால் 2013 வரை தடை செய்யப் பட்டது வீடியோகான் நிறுவனம். இந்த நிறுவனத்துக்கும், கணிசமான அளவு கலர் டிவி சப்ளை செய்வதற்கான ஆணைகள் வழங்கப் பட்டுள்ளன. வீடியோகானுக்கு வழங்கப் பட்ட ஆணைக்கான கமிஷன் நிச்சயமாக இரண்டு சதவிகிதத்திற்கு மேற்பட்டு தான் இருக்கும்.
இது தவிரவும், ஒரு வீட்டுக்கு கலர் டிவி வழங்கப் பட்டால், உடனடியான தேவை என்ன ? கேபிள் இணைப்பு தானே? தமிழகத்தில் மற்ற மாவட்டங்களில் இல்லாத அளவுக்கு, அதிகமாக கேபிள் இணைப்புகள் இருப்பது, சென்னை மாநகரில் தான். ஒரு வாதத்திற்காக, 1,62,28,000 கேபிள் இணைப்புகள் புதிதாக பெறப்படுகின்றன என்று வைத்துக் கொள்வோம். ஒரு கேபிள் இணைப்புக்கு 100 ரூபாய் வாங்குகிறார்கள்.
இதில் கணிசமான தொகை, சன் குழுமத்தின் சுமங்கலி கேபிள் விஷனுக்குப் போகிறது. ஒரு உதாரணத்திற்கு 100 ரூபாயில் 30 ரூபாய் சன் டிவிக்கு, அதாவது கருணாநிதியின் பேரன்களுக்குப் போகிறது என்று குறைந்த பட்ச அளவீட்டில் எடுத்துக் கொண்டாலும் கூட, 1,62,28,000 கலர் டிவிக்களில் 62 லட்சத்து சில்லரையை தவிர்த்து விட்டு, 1 கோடி என்று மட்டும் எடுத்துக் கொண்டால் கூட, சன் குழுமத்திற்கான மாதாந்திர வருமானம் மட்டும் 30 கோடி. எப்படி இருக்கிறது, இந்த நூதன ஊழல் ? இதுதான் கருணாநிதி. அதனால் தான் அவர் பனங்காட்டு நரி என்று பாசத்தோடு அழைக்கப் படுகிறார்.
o அடுத்தபடியாக கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தை எடுத்துக் கொள்ளலாம். இந்தியாவில், ஏழை மக்கள் அதிகம் இருப்பதால், அவர்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும் என்று, மத்திய அரசு பல்வேறு திட்டங்களை இயற்றி வருகிறது. பொது சுகாதாரத்துறை மற்றும் மருத்துவப் பணிகள் துறை என, தமிழ் நாட்டிலும் இலவச மருத்துவ சிகிச்சை வழங்கப் பட்டே வருகிறது. இந்த சுகாதாரத் துறையில் இன்னும் எத்தனை கோடிகளை முதலீடு செய்தாலும், தகும். அத்தனை பற்றாக்குறைகள் இருக்கின்றன. போதுமான செவிலியர்கள் நியமிக்கப் படுவதில்லை. மருத்துவர்கள், கட்டாய பணிக்காலம் முடிந்தவுடன், தனியார் மருத்துவமனைகளுக்கு சென்று விடுகிறார்கள். பல மருத்துவமனைகளில் மருத்துவர் பணியிடங்கள் காலியாக இருக்கின்றன. இந்தக் குறைகளை சீர் செய்து, அரசு மருத்துவமனைகளை செம்மையாக்குவது ஒவ்வொரு அரசின் கடமை. இது ஒன்றும் செய்ய முடியாத காரியமே அல்ல. மிக மிக எளிதாக, புதிய மருத்துவர்களை தேர்ந்தெடுப்பதன் மூலமும், புதிய தலைமைச் செயலக கட்டிடத்தைக் கட்டுவதில் காட்டும் முனைப்பை மருத்துவமனைகள் கட்டுவதில் காட்டுவதன் மூலமும், எளிதாகச் செய்ய முடியும்.
மேலும், நிதிப் பற்றாக்குறை இருந்தாலும், அதையும் சமாளிக்க முடியும். சிறப்பு பொருளாதார மண்டலங்கள் அமைக்கப் படுகையில், அங்கே தொழில் தொடங்கும், பல்வேறு நிறுவனங்களுக்கு ஐந்தாண்டுகளுக்கு டாக்ஸ் ஹாலிடே என்று அழைக்கப் படும், வரி விலக்கு அளிக்கப் படுகிறது. இதன் மூலம், பந்நாட்டு நிறுவனங்கள் கோடிக்கணக்கில் லாபம் சம்பாதிக்கின்றன. அந்த நிறுவனங்களை, அரசு மருத்துவமனை கட்டித் தரும் பொறுப்பை ஏற்றுக் கொள்ளுமாறு கோரிக்கை வைத்தால், மனமுவந்து ஏற்றுக் கொள்ளும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை. தேவைப்பட்டால், அந்த நிறுவனம் கட்டித் தரும் மருத்துவமனைக்கு அந்த நிறுவனத்தின் பெயரையே வைத்தாலும் தவறு இல்லை.
ஆனால், இது எதையும் கருணாநிதி செய்யவில்லை. மாறாக, கலைஞர் காப்பீட்டுத் திட்டம் என்ற ஒரு கபோதித் திட்டத்தை இயற்றுகிறார். அதன் படி, ரேஷன் அட்டை வைத்திருப்பவர், இத்திட்டத்தில் ஒரு குறைந்த தொகை செலுத்தி உறுப்பினர் ஆனால், ஆண்டுதோறும், ஒரு லட்சம் வரை, இலவச அறுவை சிகிச்சையை எந்த தனியார் மருத்துவமனையிலும் மேற்கொள்ளலாம் என்பதே அந்தத் திட்டம். ரஷ்யாவிலும், ராமச்சந்திராவிலும், துட்டு கொடுத்து படித்த டாக்டர்களெல்லாம் தங்களிடம் உள்ள அளவில்லா பணத்தை வைத்து புற்றீசல் போல மருத்துவமனைகளை திறந்து, போணியாகாமல் உட்கார்ந்து கொண்டிருக்கிறார்கள். இவர்கள் அத்தனை பேருக்கும், அரசுப் பணத்தை சுரண்டிக் கொடுப்பதற்காக உருவாக்கப் பட்டதே இந்த கலைஞர் காப்பீட்டுத் திட்டம்.
அது என்னமோ தெரியவில்லை… என்ன மாயமோ தெரியவில்லை... அரசு ஊழியர் இன்ஷுரன்சும் சரி, கலைஞர் காப்பீட்டுத் திட்ட இன்ஷுரன்சும் சரி. ஸ்டார் இன்ஷுரன்ஸ் நிறுவனத்திற்கே வழங்கப் பட்டுள்ளது. இந்த ஸ்டார் இன்ஷுரன்ஸ், துபாயில் உள்ள, ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் சம்பந்தப்பட்டுள்ள எடிசலாட் நிறுவனத்தின் உரிமையாளருக்கு பெரும் பங்கு உள்ள நிறுவனம் என்பது கூடுதல் செய்தி. இந்த ஸ்டார் இன்ஷுரன்ஸ் ஊழலைப் பற்றி எழுதினால், தனிக் கட்டுரை எழுதும் அளவுக்கு ஏராளமான விஷயங்கள் இருக்கின்றன.
நீங்கள் ஒரு தனியார் மருத்துவமனை வைத்திருக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் மருத்துவமனையை கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தின் படி அங்கீகரிக்கப் பட்ட மருத்துவமனையாக சேர்த்துக் கொள்வதற்கு, குறைந்த பட்சம் இரண்டு லட்ச ரூபாய் அளவுக்கு வசூல் செய்யப் பட்டுள்ளது. இப்படி லஞ்சம் கொடுத்து, உறுப்பினர் ஆகும் மருத்துவமனை பக்கம் ஏழை பாழைகள் தலைவலி என்று போனால், அவர்கள், படுக்க வைத்து, வயிற்றில் கத்தியை வைக்கிறார்கள். வைத்து விட்டு, ஸ்டார் இன்ஷுரன்ஸிடம் பணம் பெற்றுக் கொள்கிறார்கள். மிக மிக கொடுமையான ஊழல் மட்டுமல்ல இது. அயோக்கியத்தனமானதும் கூட. இந்த அயோக்கியத்தனத்தை தங்கள் சாதனையின் ஒரு பகுதியாக கருணாநிதி ஊர் ஊராக கூறி வருவது, கேலிக்கூத்தின் உச்சக் கட்டம்.
o அடுத்து ஒரு ரூபாய் அரிசித் திட்டத்தை எடுத்துக் கொள்வோம். இந்த ஒரு ரூபாய் அரிசித் திட்டம் ஓரளவுக்கு விளிம்பு நிலை மக்களுக்கு பயன் தருகிறது என்பது உண்மைதான். ஆனால், விளிம்பு நிலை மக்களுக்காக மட்டும் பொது விநியோகத் திட்டம் செயல்படுவதில்லையேஸ ஏறக்குறைய ரேஷன் கார்டு வைத்திருக்கும் அனைவருக்கும் தானே இந்தத் திட்டம் பொருந்தும்.
தமிழ்நாட்டில் 1 கோடியே 89 லட்சத்து 93 ஆயிரத்து 206 ரேஷன் கார்டுகள் இருக்கின்றன. இதில் ஒரு ரூபாய் அரிசிக்கு தகுதியான கார்டுகள் மட்டும் 1 கோடியே 78 லட்சம். இந்த குடும்ப அட்டைகளுக்கு வழங்கப் படும் ஒரு ரூபாய் அரிசியை 10 சதவிகிதத்திற்கு மேல் பயன்படுத்தப் படுவதில்லை. மீதம் உள்ள 90 சதவிகிதத்தில், கேரளாவுக்கும் ஆந்திராவுக்கும் பெரும் பகுதி அரிசி கடத்தப் படுகிறது.
கேரளாவில், தமிழ்நாட்டில் உபயோகிக்கத் தயங்கும், கொட்டையான அரிசியை பிடித்தமான உணவாக உண்பார்கள். ஒரு ரூபாய் அரிசியை ஐந்து ரூபாய்க்கு விற்றாலும் ஐந்து மடங்கு லாபம் இல்லையா ? இது போல அன்றாடம் அரிசிக் கடத்தல் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது. அரசுக் கணக்குப் படியே, 2006-2007ல் மட்டும் பறிமுதல் செய்யப் பட்ட கடத்தல் அரிசி 1,18,343 க்விண்டால்கள். கடந்த ஐந்தாண்டுகளுக்கும் கணக்குப் போட்டுக் கொள்ளுங்கள். இது கருணாநிதியின் காவல்துறை பிடித்த அரிசியின் தொகை. பிடிக்காமல் வெற்றிகரமாக கடத்தப் பட்ட அரிசியின் அளவு, சொல்ல முடியாத அளவுக்கு உள்ளது.
மேலும், சமீப காலங்களில், அரிசி மாவு அரைத்து ரெடி மேடாக விற்கும் கடைகள் பெருகியிருப்பதை பார்த்திருப்பீர்கள். ஒரு கிலோ மாவு 20 ரூபாய். 20 ரூபாய்க்கு மாவு தருபவர் பாசுமதி அரிசியிலா மாவு தயாரிப்பார். எல்லாம் இந்த ஒரு ரூபாய் அரிசி தான். மூன்று மடங்கு விலை கொடுத்து, ஒரு கிலோ மூன்று ரூபாய்க்கு வாங்கினாலும், ஒரு கிலோ மாவை 20 ரூபாய்க்கு விற்றால் எத்தனை கொள்ளை லாபம் பாருங்கள் ? இந்த அரிசிக்கான மானியத்தில் பெரும் பகுதி, மத்திய அரசால் வழங்கப் படுகிறது. இப்போது புரிகிறதா ஒரு ரூபாய் அரிசியின் மகிமை ?
o 108 ஆம்புலன்ஸ் சேவை. இந்த ஆம்புலன்ஸ் சேவை என்னவோ பார்ப்பதற்கு பயன் தருவது போல தோன்றினாலும், இதன் பிறப்பே சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
இந்த 108 ஆம்புலன்ஸ் சேவையை செயல்படுத்துவதற்காக, ஒப்பந்தம் செய்து ஆணை வழங்கப் பட்ட நிறுவனம், கருணாநிதி போல, கவனமாக திருடத் தெரியாமல் திருடி மாட்டிக் கொண்ட சத்யம் நிறுவன அதிபர் ராமலிங்க ராஜு வோடு. இந்த நிறுவனத்துக்கு இதற்கான ஆணை வழங்கப் பட்டதிலேயே பெரும் முறைகேடு நடந்திருப்பதாக, அரசு வட்டாரங்கள் கூறுகின்றன. சத்யம் நிறுவனத்தின் முறைகேடுகள் வெளியே வராமல் இருந்திருக்குமானால், மேலும் பல திட்டங்களை சத்யம் நிறுவனத்தோடு செய்து கொள்ள கருணாநிதி தயாராக இருந்தார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
o கலைஞர் வீட்டு வசதித் திட்டம். இந்தத் திட்டத்தின் கீழ், குடிசைகளாக இருக்கும் வீடுகளை கான்கிரீட் வீடுகளாக மாற்றித் தரும் திட்டம் இது. இந்த நேரத்தில் கலைஞர் பாராட்டு விழா ஒன்றில், குஞ்சாமணி பேசும் போது, கொடுக்குற தெய்வம் கூரையைப் பிச்சுகிட்டு கொடுக்கும் என்ற வாக்கைக் கூட கலைஞர் பொய்யாக்கி விட்டார். ஏனென்றால், கலைஞர் ஆட்சியில் கூரையே இல்லாமல் எல்லாமே கான்க்ரீட் வீடுகளாம்.
குடிசைகளை மாற்றி கான்கிரீட் வீடுகளாக்குகிறோம் என்பதே ஒரு மோசடித் திட்டம். நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக சென்னை மாநகரின் சேரிப் பகுதிகள் என்று அழைக்கப் படும் பகுதிகளில் குடியிருந்த மக்களை, சென்னையை அழகுப் படுத்துகிறோம் என்று, அகற்றி, சென்னையிலிருந்து 40 கிலோ மீட்டர் தொலைவில் கண்ணகி நகர் என்ற இடத்தில் வீடு கட்டித் தருவதற்கு பெயர் கலைஞர் வீட்டு வசதித் திட்டமா ? சென்னை நகரின் மாநகராட்சிப் பள்ளிகளில் படித்துக கொண்டிருந்த அந்தக் குழந்தைகள் வேரோடு பிடுங்கப் பட்டு, கண்ணகி நகரில் சென்று தூர எறியப் படுவது வசதியா ?
சரி.. இதிலாவது காசு பார்க்காமல் இருப்பார்களா என்று பார்த்தால், இதிலும் காசுதான். “கலைஞருக்கு நன்றி… கலைஞருக்கு நன்றி” என்று வீட்டு வசதித் திட்டத்தைப் பற்றி எப் எம் விளம்பரம் கேட்டிருப்பீர்கள். இந்த விளம்பரம் தொடர்பாக என்ன நடந்திருக்கிறது என்று பார்ப்போம்.
இத்திட்டத்திற்காக செய்யப் பட்ட விளம்பரத்திற்கான மொத்த தொகை, ஒரு கோடியே, 60 லட்சத்து, 71 ஆயிரத்து 827 ரூபாய். சரி. இத்திட்டத்திற்கு எதற்காக முதலில் விளம்பரம்? உங்கள் குடிசை வீட்டை கான்கிரீட் வீடாக மாற்றித் தருகிறோம், விண்ணப்பம் தாருங்கள் என்று அறிவிப்பு அந்தப் பகுதியில் வெளியிட்டால், அத்தனை பேரும் விண்ணப்பத்தோடு நிற்க மாட்டார்களா? இதற்கு எதற்காக விளம்பரம்ஸ. அதுவும், மக்கள் பணம் ஒன்றரை கோடியில் ? மேலும் இந்த விளம்பரங்கள் அனைத்தும் 2010-2011 ஆண்டில் மட்டும வழங்கப் பட்டுள்ளன. இந்த விளம்பரங்கள் தேர்தலை மனதில் வைத்து வெளியிடப்பட்டிருக்காதா என்ன ? யோசித்துப் பாருங்கள். நமது வரிப்பணம், திமுக பிரச்சாரத்திற்கு எப்படி பயன்பட்டிருக்கிறது என்று ?
இந்த விளம்பரங்கள் வழங்கியதிலும் நேர்மை இல்லை. எஃப்.எம். ரேடியோவில் வழங்கப்பட்ட விளம்பரங்களில் அதிகபட்ச தொகையான 9 லட்ச ரூபாயை பெற்றிருப்பது கேடி சகோதரர்களின் சூரியன் எஃப்.எம்.
நாளிதழ் விளம்பரங்களில், தினத்தந்தி, இந்து, மாலைமலர் தவிர்த்து சொல்லிக் கொள்கிறார் போல, ஒரு நாளிதழும் இல்லை. சேம்பிளுக்கு சில நாளிதழ் பெயர்கள்.. குஞ்சாமணியின் விடுதலை, மணிச்சுடர், மதுரை மணி, எதிரொலி, தினச்சுடர், பிற்பகல், தினசரி, தினத்தூது, தினமுரசு போன்றவை.
விடுதலை ஏடையெல்லாம், குஞ்சாமணியே படிக்க மாட்டார். அப்புறம் எதற்காக அதற்கு விளம்பரம் ? தமிழ் நாளிதழ்களில் ஓரளவுக்கு நல்ல சர்குலேஷன் வைத்திருக்கும் தினமணியின் பெயர் இல்லை. கருணாநிதியின் கைக்கூலியாகவே மாறிப்போய் விட்ட, என்.ராமின் இந்த பத்திரிக்கையில் விளம்பரம் வந்திருக்கிறது. டெக்கான் க்ரோனிக்கிள், இந்தியன் எக்ஸ்பிரஸ் மற்றும் டைம்ஸ் ஆப் இந்தியாவுக்கு விளம்பரமே தரப்படவில்லை என்பது, கருணாநிதிக்கு ஜால்ரா போடாதவர்களுக்குத் தரும் எச்சரிக்கையே.
இப்படிப் பட்ட பின்னணியில் தான், கருணாநிதி அரசின் இந்த சாதனைகளை பார்க்க வேண்டும். இப்போது அடுத்ததாக மிக்சி, க்ரைண்டர், வாஷிங் மிஷின், ப்ரிட்ஜ், 35 கிலோ இலவச அரிசி என்ற இவர்களின் அறிவிப்பு மொத்த கஜானாவையும் காலி செய்யவோ என்ற அச்சத்தை ஏற்படுத்துகிறது..
“ஸ்பெக்ட்ரம்’ ஊழலும் ‘இலவச கலர் டி.வியும்’ ஒரு வித்தியாசமான அலசல்
தமிழகத்தில் தி.மு.க., ஆட்சிக்கு வர காரணமாக இருந்த இலவச கலர், “டிவி’ திட்டம், தற்போது அக்கட்சிக்கு எதிரான பிரசார பீரங்கியாக மாறியுள்ளது, தி.மு.க.,வினர் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2006ம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் தி.மு.க., ஆட்சியில் அமர, வீடுதோறும் இலவச கலர், “டிவி’ உள்ளிட்ட கவர்ச்சிகரமான தேர்தல் வாக்குறுதிகளே காரணமாக இருந்தது. கவர்ச்சிகரமான வாக்குறுதிகள் மூலம் ஆட்சியைப் பிடித்த தி.மு.க.,வும் பொறுப்புக்கு வந்ததும், கவர்ச்சி திட்டங்களை நிறைவேற்றுவதில் அக்கறை காட்டியது. அதிலும், வாக்காளர்களை மிகவும் கவர்ந்த இலவச கலர், “டிவி’ வழங்க அதிக அக்கறை எடுத்து செயல்பட்டது. அதன்படி, மாநிலம் முழுவதும் ஒரு கோடியே 52 லட்சத்து 80 ஆயிரம் இலவச கலர், “டிவி’க்கள் வழங்க முடிவு செய்யப்பட்டு, அதை எல்காட் நிறுவனம் மூலமாகவும் கொள்முதல் செய்ய ஆரம்பித்தது.
தற்போது வரை, எல்காட் மூலம் ஒரு கோடியே 41 லட்சத்து 28 ஆயிரம் கலர், “டிவி’க்கள் கொள்முதல் செய்யப்பட்டு, ஒரு கோடியே 37 லட்சத்து 48 ஆயிரம் “டிவி’க்கள் வினியோகம் செய்யப்பட்டு விட்டது. மீதியுள்ள “டிவி’க்கள் அனைத்தும், பல மாவட்ட அரசு அலுவலகங்களில் வினியோகம் செய்வதற்காக வைக்கப்பட்டுள்ளன. இன்னும் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட கலர், “டிவி’க்களை கொள்முதல் செய்ய கடந்த செப்டம்பரில் முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார். இதற்காக, தமிழக அரசு மூவாயிரம் கோடி ரூபாய்க்கு மேல் செலவு செய்துள்ளது. இப்படியாக தமிழக அரசால் வழங்கப்பட்ட இலவச கலர், “டிவி’ தற்போது தி.மு.க., ஆட்சிக்கு எதிராக, பிரசாரம் செய்யும் பீரங்கியாக மாறியுள்ளது அக்கட்சியினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தி.மு.க., சார்பில் மத்திய தகவல் மற்றும் தொலைத்தொடர்புத்துறை அமைச்சராக இருந்த ராஜா, ஸ்பெக்ட்ரம் 2ஜி ஒதுக்கீட்டில் நாட்டுக்கு 1.76 லட்சம் கோடி வருவாய் இழப்பை ஏற்படுத்தி, பல ஆயிரம் கோடி ரூபாய் சுயலாபம் அடைந்துள்ளார் என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. அந்த குற்றச்சாட்டால் ராஜா அமைச்சர் பதவியை இழந்தார். அகில இந்திய அளவில் தி.மு.க.,வுக்கு கெட்டபெயர் ஏற்பட்டது. மேலும், தி.மு.க.,வுக்கும், காங்கிரஸ் கட்சிக்கு உள்ள கூட்டணி உறவிலும் விரிசல் தோன்ற ஆரம்பித்துள்ளது. ஸ்பெக்ட்ரம் 2ஜி ஊழல் விஷயத்துக்காக பார்லிமென்ட் கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று பா.ஜ., இடதுசாரிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பார்லிமென்ட் புறக்கணிப்பில் ஈடுபட்டன.
இப்படி ஸ்பெக்ட்ரம் 2ஜி விஷயம் குறித்து, ஒவ்வொரு செய்தியும் தமிழ், ஆங்கில நாளிதழ்களில் தினமும் வெளியாகிறது. தமிழ், ஆங்கில செய்தி சேனல்கள் இடைவிடாது, இச்செய்தியை ஒளிபரப்பி வருகின்றன.தமிழக அரசிடம் இலவச கலர், “டிவி’ பெற்றுள்ள மக்களும் ஸ்பெக்ட்ரம் 2ஜி ஒதுக்கீடு ஊழல் பற்றிய செய்திகளை ஆர்வமாக பார்த்து வருகின்றனர்.
சில வாரங்களாக, அரசு அலுவலகங்கள் முதல் டீகடை பெஞ்ச் வரையிலும், வீடுகளில் பெண்கள் மத்தியிலும், அதைவிட பள்ளி, கல்லூரிகளில் மாணவ, மாணவியர் மத்தியிலும் ஸ்பெக்ட்ரம் 2ஜி ஊழல் பற்றித்தான் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது என்றால், அதற்கு முக்கிய காரணம், தமிழ் நாளிதழ்களும், அரசின் இலவச கலர், “டிவி’யும் தான்.மின்சாரம் இல்லாத வீடுகளுக்கும் மின்சார இணைப்புடன் இலவச கலர், “டிவி’ வழங்கியதால் அடித்தட்டு மக்கள் கூட ஸ்பெக்ட்ரம் 2ஜி முறைகேடு செய்திகள் பற்றி தெளிவாக தெரிந்து கொள்ளும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. மொத்தத்தில், தமிழகத்தில் மூலை முடுக்கெல்லாம் ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரம் தெரிய இலவச கலர், “டிவி’ காரணமாக அமைந்து விட்டது.
இலவச கலர், “டிவி’ என்ற கவர்ச்சிகரமாக வாக்குறுதி மூலம் ஆட்சிக்கு வந்த தி.மு.க.,வின் நற்பெயர், “ஸ்பெக்ட்ரம்’ விஷயத்தில் மக்களிடம் கெட்டுப்போகவும் இலவச கலர், “டிவி’ தான் காரணமாக அமைந்து விட்டது என கூறும் தி.மு.க.,வினர், கடும் அதிர்ச்சியில் உள்ளனர்.ஆட்சிக்கு வர உதவிய இலவச கலர், “டிவி’ என்ற கவர்ச்சி திட்டம், தி.மு.க.,வுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்தும் அளவுக்கு, “பூமராங்’காக மாறியுள்ளதை குறிப்பிட்டு, தி.மு.க.,வினர் ஒவ்வொருவரும் வருத்தம் கலந்த பயத்துடன் புலம்பி வருகின்றனர்.