ஆறு மாதங்களிலும் குழந்தை பிறக்கலாம்!
ஆலிஃப் அலி, இஸ்லாஹியா வளாகம்..
அல்குர்ஆன் முளையவியல் (Embryology) தொடர்பாக ஆழமான பல்வேறு அறிவியல் உண்மைகளை இற்றைக்குப் பதினான்கு நூற்றாண்டுகளுக்கு முன்பே கூறிவிட்டுள்ளது. விஞ்ஞானம் வளர்ச்சியுற்றிராத அந்தப் பாலைவன மண்ணிலே தோன்றிய ஒருவரால் நிச்சயமாக இந்த விஞ்ஞான உண்மைகள் கூறப்பட்டிருக்க முடியாது. இது இறை வழிகாட்டலின் பிரகாரமே முன்மொழியப்பட்டுள்ளது.
ஆனால், அண்மைக்காலங்களில் கண்டுபிடிக்கப்பட்ட பல விஞ்ஞான அற்புதங்களை எத்தனையோ நூற்றாண்டுகளுக்கு முன்னர் அல்குர்ஆன் குறிப்பிட்டுள்ள விதம்தான் உலகப் புகழ்பெற்ற விஞ்ஞானிகளையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
நீண்ட காலமாக ஒரு குழந்தை ஏழு மாதங்களுக்குப் பின் பிறந்தால் மட்டுமே அதன் உயிரைக் காப்பாற்ற முடியும் என்று விஞ்ஞானிகள் கூறிவந்தனர். ஆனால் அல்குர்ஆன் கணிதவியல் அடிப்படையில் ஒரு குழந்தை ஆறு மாதங்களிலும் பிறக்க முடியும் என்பதை இற்றைக்கு 1400 ஆண்டுகளுக்கு முன்பே நிறுவிவிட்டது.
இவ்விஷயத்தை மறுத்துவந்த பிரபல முளையவியல் பேராசிரியர் Dr.கீத்மூர் அவர்கள்கூட, பேராசிரியர் அப்துல்கரீம் ஸைதான் அவர்கள் அல்குர்ஆனின் நிழலில் இதனைத் தெளிவுபடுத்தியதும் பல ஆராய்ச்சிகளின் பின் ஆச்சரியத்துடன் ஏற்றுக்கொண்டுள்ளார். இதனை அல்குர்ஆன் எவ்வாறு நிறுவுகின்றது என்பதனை இங்கு நாம் சற்று அவதானிப்போம்.
ஒரு தாய் தன் குழந்தையை வயிற்றில் சுமப்பது தொடர்பாகவும் அதற்குப் பாலூட்டுவதுதொடர்பாகவும் அல்குர்ஆனில் பல வசனங்கள் காணப்படுகின்றன. அவற்றுள் மிக முக்கியமான இரண்டு வசனங்களை இங்கு நோக்குவோம். ஒன்று
1. “இன்னும் (அவனுக்கு பால்குடி மறக்கடித்து) விடுவது இரண்டு வருடங்களிலாகும்” (லுக்மான்:14) மற்றையது
2. “அவனைச் சுமப்பதும் பால்குடிக்கவைப்பதும் முப்பது மாதங்களாகும்” (அஹ்காப் :15)
இந்த இரண்டு வசனங்களிலும் இரண்டு விதமான தவணைகள் கூறப்பட்டுள்ளன.
பால்குடி மறக்கடிக்கச் செய்வது இரண்டு வருடங்களில் என்றும் சிசுவைக் கருவில் சுமப்பதும் பின் அதற்குப் பாலூட்டுவதும் முப்பது மாதங்கள் என்றும் இங்கே கூறப்பட்டுள்ளன. இக்கால எண்ணிக்கைகளை நாம் மாத அடிப்படையில் கணக்கிட்டால் இரண்டு வருடங்கள் பாலூட்டுதல் என்பது 24 மாதங்களைக் குறிக்கின்றது.
அவ்வாறாயின் கருவில் சுமப்பதும் அதன் பின்னர் பாலூட்டுவதும் 30 மாதங்கள் என்றால் பாலூட்டுவது 24 மாதங்களும் கருவில் சுமப்பது 6 மாதங்களும் என்றே அமைகின்றது. இதனை இவ்வாறு சுருக்கமாகப் பார்த்தால் (சுமப்பது 6 மாதங்கள் + 10 பாலூட்டுவது 24 மாதங்கள் = மொத்தமாக 30 மாதங்கள்) ஆக இந்த வசனம் ஒரு தாய் தன் குழந்தையை ஆறு அல்லது அதற்கு மேட்பட்ட கால மாதங்களில் பிரசவிக்க முடியும் என்பதையே சுட்டுகின்றது.
இது ஒரு வரலாற்றுச் சம்பவத்துடன் தொடர்புருகின்றது. உஸ்மான் ரளியல்லாஹு அன்ஹு அவர்களது ஆட்சிக்காலம். ஒரு பெண் திருமணம் முடித்து ஆறு மாதங்களில் குழந்தை பெற்றுவிட்டாள். அவ்வாறு அவள் வழமைக்கு மாறாக ஆறு மாதங்களில் குழந்தையொன்றைப் பிரசவித்தமைக்கான காரணம் அவள் திருமணத்திற்கு முன்பு யாருடனோ தகாத தொடர்பில் ஈடுபட்டிருக்க வேண்டும் என்ற சந்தேகத்தைக் கிளப்பி விட்டது. எனவே அவளுக்கு விபசாரத்திற்கான தண்டனை வழங்க வேண்டும் என்று உஸ்மான் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் அவையிலே அலசப்பட்டது.
இதனை செவியுற்ற அலீ ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் மேற்;குறிப்பிட்ட அல்குர்ஆனிய வசனங்களை ஆதாரமாகக் காட்டி ஒரு பெண் ஆறு மாதங்களிலும் குழந்தையொன்றைப் பிரசவிக்க முடியும் என்ற உண்மையை நிறூபித்துக்காட்டினார். அதனை ஏற்றுக்கொண்ட உஸ்மான் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அப்பெண்மனிக்கான தண்டனையை ரத்துசெய்தார்கள்.
இதனை நபியவர்கள் கூறிய திருமொழியொன்றும் உறுதிப்படுத்துகின்றது. ஒரு முறை அண்ணலார் அவர்கள் இவ்வாறு பகர்ந்தார்கள். “ஒரு குழந்தை தாயின் கருவறையில் கருவுற்றதும் அதன் நான்காம் மாதத்தில் அச்சிசுவிடம் ஒரு வானவர் அனுப்பி வைக்கப்படுகின்றார். அவர் அச்சிசுவில் அதற்கான ஆன்மாவை ஊதி இணைத்துவிடுகின்றார்” (முஸ்லிம்)
எனவே ஒரு சிசு அதன் நான்கு மாதங்கள் பூர்த்தியுற்றதும் சதைப் பிண்டம் எனும் நிலையிலிருந்து மனிதன் எனும் நிலையை அடைந்து ஐந்தாவது மாதத்தின் இறுதியில் முழு அளவில் அங்கவளர்ச்சியில் பூரணமடைகின்றது. இந்த படிப்படியான கருவின் வளர்ச்சிக் கட்டங்களைப் பற்றி அல்குர்ஆன் மிக அழகான முறையில் இவ்வாறு தெளிவுபடுத்துகின்றது.
“நிச்சயமாக (முதல்) மனிதனைக் களிமண்ணின் மூலச்சத்திலிருந்து படைத்தோம். பின்னர் (அதற்கென உள்ள) ஒரு பாதுகாப்பான இடத்தில் (கர்ப்பப்பையில்) நாம் அவனை இந்திரியத் துளியாக்கினோம். பின்னர் அந்த இந்திரியத்தை இரத்தக் கட்டியாகப் படைத்தோம். பின்னர் அவ்விரத்தக் கட்டியை மாமிசத் துண்டாகப் படைத்தோம். பின்னர் அம் மாமிசத்துண்டை எழும்புகளாகப் படைத்தோம். பின்னர் அவ்வெழும்புகளுக்கு மாமிசத்தை அணிவித்தோம். பின்னர் நாம் அதனை வேறு படைப்பாக (முழு மனிதனாக) உருவாக்கினோம். ஆகவே படைக்கிறவர்களில் மிக அழகானவனான அல்லாஹ் உயர்வானவன்” (அல்முஃமினூன்:12-14)
அந்தவகையில் ஒருதாய் ஆறு மாதங்களில் தான் சுமக்கும் குழந்தையைப் பிரசவிக்க முடியும் என்பது தெளிவாகின்றது. இதனை நாம் நன்கு புரிந்துகொள்ளவேண்டும்.
source: http://aliaalifali.blogspot.com/2010/03/blog-post_25.html