அழகுபடுத்திக்கொள்ளுங்கள்!
உண்மை முஸ்லிம் ஆடம்பரமோ வீண்விரயமோ இல்லாமல் தனது ஆடைகளுக்கு முக்கியத்துவமளிக்க வேண்டும்; அழகிய வடிவுடன் தூய்மையுடன் தோற்றமளிக்கவேண்டும். அப்போதுதான் அவரைக் காண்பவர்களின் கண்கள் குளிர்ச்சியடையும்; இதயங்கள் அவரை நேசிக்கும்.
மக்களிடையே வரும்போது இழிந்த தோற்றத்தில் இல்லாமல் தன்னை முறையாக அழகுபடுத்திக்கொள்ள வேண்டும். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தங்களின் குடும்பத்திற்காக தங்களை அழகுபடுத்திக் கொள்வதைவிட தோழர்களைச் சந்திக்கச் சென்றால் அதிகமாக அழகுபடுத்திக் கொள்வார்கள்.
”(நபியே!) கூறுங்கள். அல்லாஹ் தன் அடியார்களுக்காக அளித்திருக்கும் (ஆடை) அலங்காரத்தையும் பரிசுத்தமான (மேலான) ஆகாரத்தையும் (ஆகாதவையென்று) தடுப்பவர் யார்?” (அல்குர்ஆன் 7:32)
இமாம் குர்துபி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் இந்த வசனத்திற்கான விரிவுரையில் குறிப்பிடுகிறார்கள்:
அன்னை ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறினார்கள்: “”நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைக் காண சில தோழர்கள் வீட்டு வாசலில் காத்துக் கொண்டிருந்தார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வெளியே வரத்தயாரானபோது வீட்டில் நீர் நிரம்பிய குவளையைக் கண்டார்கள். அந்த தண்ணீரில் முகம்பார்த்துக் கொண்டு தனது தலைமுடியையும் தாடியையும் சீர்செய்தார்கள்.
நான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் “”நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களே! நீங்களா இதைச் செய்கிறீர்கள்?” என்று கேட்டேன். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் “ஆம்! ஒரு மனிதர் தன் சகோதரர்களை சந்திக்கச் சென்றால் தன்னை சீர்படுத்திக் கொள்ளட்டும். நிச்சயமாக அல்லாஹ் அழகானவன், அழகையே நேசிக்கிறான்” என்று கூறினார்கள்.
முஸ்லிம் தன்னை அழகுபடுத்திக்கொள்வதில் நடுநிலையான இஸ்லாமியக் கண்ணோட்டத்தை அடிப்படையாகக் கொள்வார். நடுநிலையான கொள்கை என்பது வரம்புமீறி அதிகப்படுத்தவும் கூடாது; எல்லை மீறி குறைக்கவும் கூடாது.
”அன்றி அவர்கள் செலவு செய்தால், அளவைக் கடந்துவிட மாட்டார்கள், உலோபித்தனமும் செய்ய மாட்டார்கள். இதற்கு மத்திய தரத்தில் இருப்பார்கள்”. (அல்குர்ஆன் 25:67)
இஸ்லாம் தனது உறுப்பினர்கள், குறிப்பாக அழைப்புப்பணி செய்பவர்கள் பிறரால் நேசிக்கப்படும் தோற்றத்தில் திகழவேண்டுமென்றும் வெறுப்படையச் செய்யும் தோற்றத்தைக் கொண்டிருக்கக் கூடாது எனவும் விரும்புகிறது. எவரும் பற்றற்றவன், பணிவுடையவன் என்று கூறிக்கொண்டு தன்னை மிக இழிவான அழகற்ற தோற்றத்தில் காட்டிக்கொள்வதை இஸ்லாம் ஏற்பதில்லை.
ஏனெனில் பற்றற்றவர்கள் மற்றும் பணிவுடையவர்களின் தலைவரான நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அழகிய ஆடைகளை அணிந்தார்கள். தனது தோழர்கள் மற்றும் குடும்பத்தினருக்காக தங்களை அழகுபடுத்திக் கொண்டார்கள். இந்த அழகு, அலங்காரம் அல்லாஹ்வின் அருட் கொடைகளை வெளிப்படுத்தும் செயலெனக் கருதினார்கள்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: “நிச்சயமாக அல்லாஹ் தனது அடியானிடம் தனது அருட்கொடையின் அடையாளம் வெளிப்படுவதை விரும்புகிறான்.” (நூல்: ஸுனனுத் திர்மிதி)
ஜுன்து இப்னு மகீஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள்: “”எதேனும் ஒரு கூட்டத்தினர் தன்னை சந்திக்க வந்தால் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அழகிய ஆடையை அணிந்து, தனது நெருங்கிய தோழர்களையும் அணிந்து கொள்ள ஏவுவார்கள். கின்தா என்ற கூட்டத்தினரை சந்தித்தபோது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை நான் கண்டேன்; அவர்கள் மீது எமன் தேச ஆடை இருந்தது. அதுபோன்ற ஆடையே அபூபக்கர் ஸித்தீக் ரளியல்லாஹு அன்ஹு, உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் மீதும் இருந்தது.” (தபகாத் இப்னு ஸஃது)
உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்: நான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் புதிய ஆடையை வரவழைத்ததைக் கண்டேன். பின்பு அதை அணிந்து கொண்டார்கள். ஆடை தங்களது கழுத்தை அடைந்தபோது கூறினார்கள்: “”எனது மானத்தை மறைத்து, எனது வாழ்வில் என்னை அழகுபடுத்திக் கொள்ளும் ஆடையை அணிவித்த அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்.” (நூல்: அத்தர்ஹீப்)
வரம்பு மீறாத வகையில் அழகு படுத்திக்கொள்ளுமாறு அல்லாஹ் தனது அடியார்களுக்கு கட்டளையிடுகிறான்.
“ஆதமுடைய மக்களே! தொழும் இடத்திலெல்லாம் (ஆடைகளினால்) உங்களை அலங்கரித்துக் கொள்ளுங்கள். (இறைவன் உங்களுக்கு அனுமதித்தவற்றை) நீங்கள் (தாராளமாகப்) புசியுங்கள், பருகுங்கள். எனினும் (அவற்றில்) அளவு கடந்து (வீண்) செலவு செய்யாதீர்கள். எனென்றால் நிச்சயமாக அல்லாஹ் அளவுகடந்து (வீண்) செலவு செய்வோரை நேசிப்பதில்லை.”
(நபியே!) அல்லாஹ் தன் அடியார்களுக்காக அளித்திருக்கும் (ஆடை) அலங்காரத்தையும் பரிசுத்தமான (மேலான) ஆகாரத்தையும் (ஆகாதவை யென்று) தடுப்பவர் யார்? என்று கேட்டு, “”அது இவ்வுலக வாழ்வில் விசுவாசம் கொண்டவர்களுக்கு(ம் ஆகுமானதே எனினும்) மறுமை நாளில் (அவர்களுக்கு மட்டுமே) சொந்தமானது” என்றும் கூறுவீராக! அறியக்கூடிய ஜனங்களுக்கு (நம்முடைய) வசனங்களை இவ்வாறு விவரிக்கின்றோம். (அல்குர்ஆன் 7:32,33)
இப்னு மஸ்வூது ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்: “”எவனது இதயத்தில் அணுவளவு பெருமை இருக்கிறதோ அவன் சுவனம் புகமாட்டான்” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியபோது, ஒரு மனிதர் “”ஒருவர் ஆடை, காலணி அழகாக இருக்கவேண்டும் என்று விரும்புகிறார் (அது பெருமையில் சேருமா?)” என்று கேட்டார். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் “”நிச்சயமாக அல்லாஹ் அழகானவன், அழகாக இருப்பதையே நேசிக்கிறான். பெருமை என்பது சத்தியத்தை மறுத்து, மனிதர்களை இழிவுபடுத்துவதுதான்.” (நூல்: ஸஹீஹ் முஸ்லிம்)
இப்படித்தான் நபித்தோழர்களும் அவர்களை நற்செயல்களால் பின்தொடர்ந்தவர்களும் விளங்கிக் கொண்டிருந்தார்கள். இதனால்தான் இமாம் அபூஹனீஃபா ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் கம்பீரமான தோற்றத்தையும் அழகிய ஆடையையும் நறுமணத்தையும் உடையவர்களாக இருந்தார்கள். ஆடைகள் தூய்மையாக இருப்பதிலும் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார்கள். தோற்றத்தை சீர்செய்து கொள்ளுமாறு பிறரையும் தூண்டினார்கள்.
ஒருமுறை தனது சபையில் ஒருவர் கிழிந்த ஆடையை அணிந்திருப்பதைக் கண்டு அவரை தனியாக அழைத்து அவரது தோற்றத்தை சரி செய்துக்கொள்ள ஆயிரம் திர்ஹத்தைக் கொடுத்தார்கள். வாங்க மறுத்த அம்மனிதர் “”நான் செல்வந்தன் எனக்கு இது தேவையில்லை” என்றார். இமாமவர்கள் அம்மனிதரை கண்டிக்கும் விதமாக “”அல்லாஹ் தனது அடியார்கள் மீது தனது அருட்கொடையின் அடையாளத்தைக் காணவிரும்புகிறான்” என்ற ஹதீஸ் உன்னை எட்டவில்லையா? எனவே, உனது நிலையை மாற்றிக்கொள்ள வேண்டும். அப்போதுதான் உன் நண்பர்கள் உன்னைப்பற்றி கவலையற்றிருப்பார்கள் என்று கூறினார்கள்.
அல்லாஹ்வின்பால் மக்களை அழைக்கும் அழைப்பாளர்கள் இத்தகைய அழகிய தோற்றமும் பரிபூரணத் தூய்மையும் பிறரை ஈர்க்கும் தன்மையும் கொண்டிருப்பது அவசியமாகும். அப்போதுதான் அழைப்புப் பணியின் மூலம் பிறரது உள்ளங்களில் உடுருவ முடியும். அழைப்பாளர் எல்லா நிலையிலும் இத்தகைய தன்மைகளை கைக்கொள்ளவேண்டும். அல்லாஹ்வின்பால் அழைப்பவர் தனது தோற்றப் பொலிவை கவனிக்கவேண்டும். உடல், ஆடை, நகம், தலை மற்றும் தாடிமுடியை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும். இவ்விஷயத்தில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காட்டித்தந்த நேரிய போதனைக்கு செவிசாய்க்க வேண்டும்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: “”ஐந்து விஷயங்கள் இயற்கையான பண்புகளாகும். கத்னா (விருத்த சேதனம்) செய்வது, அபத்தின் முடியை சிரைப்பது, அக்குள் முடியைப் பிடுங்குவது, நகங்களை வெட்டுவது மற்றும் மீசையைக் குறைப்பது.” (நூல்: ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)
மனிதனுக்குரிய இயற்கைப் பண்புகளைப் பேணுவதன் காரணமாகவே இம்மார்க்கம் நேசிக்கப்படுகிறது. சீரான சிந்தனை உடையவர்கள் இப்பண்புகளைப் பேணுவதில் ஆர்வம் கொள்கின்றனர்.
முஸ்லிம் தனது தோற்றத்துக்கு முக்கியத்துவமளிக்க வேண்டிய அதே நேரத்தில் அவர் தன்னை அழகுபடுத்தி, தூய்மைப்படுத்திக் கொள்வதில் இஸ்லாம் அமைத்துள்ள நடுநிலைத் தன்மைக்கு பங்கம் ஏற்படுமளவுக்கு எல்லை மீறிவிடக்கூடாது. பேணுதலான முஸ்லிம், வாழ்வுத்தராசின் ஒரு தட்டு மற்றொரு தட்டைவிடத் தாழ்ந்துவிடாத வகையில் எல்லா நிலைகளிலும் நடுநிலையைக் கொண்டிருக்க வேண்டும்.
அழகுபடுத்தி, தோற்றப் பொலிவுக்கு முக்கியத்துவமளித்து தொழும் இடங்களிலெல்லாம் ஆடைகளால் தங்களை அலங்கரித்துக் கொள்ளுமாறு இஸ்லாம் வலியுறுத்தும் அதே சமயம், அலங்காரத்தில் வரம்புமீறி, சதாவும் உலக அலங்காரங்களில் மூழ்கிவிடுவதை வன்மையாக கண்டிக்கிறது.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: “”தீனார், திர்ஹம் மற்றும் ஆடை, அணிகலன்களின் அடிமை நாசமாகட்டும்! அவன் கிடைத்தால் திருப்தியடைவான்; கிடைக்கவில்லையெனில் ஆத்திரமடைவான்.” (நூல்: ஸஹீஹுல் புகாரி)
இஸ்லாமிய அழைப்பாளர்கள் இஸ்லாம் கூறும் நடுநிலையை உறுதியாகப் பின்பற்றுவதாலும் இம்மார்க்கத்தின் நேரிய கொள்கையை கடைபிடிப்பதாலும் இதுபோன்ற வழிகேடுகளிலிருந்தும் தடுமாற்றங்களி லிருந்தும் தங்களை பாதுகாத்துக்கொள்வார்கள்.