‘‘கருணாநிதி ஆட்சியில் எல்லாம் இலவசம்… இலவசம்… இலவசம்…’ என்று கேலி செய்கிறார்கள். அவர்கள் இலவசத்தை கேலி செய்யவில்லை. இந்த இயக்கத்தை கேலி செய்கிறார்கள்; கிண்டல் செய்கிறார்கள். ஆனால், இந்த இயக்கம் ஏழைகள் உள்ளவரை, அந்த ஏழைகளுக்காக இலவசமாக எதையும் வழங்கும் என்பதைச் சொல்லிக் கொள்கிறேன்…’’
இலவசங்கள் குறித்த விமர்சனங்களுக்கு முதல் வர் கருணாநிதி கொடுத்த விளக்கம்தான் இது. இதை உறுதிப்படுத்தும் விதமாக, இலவச அரிசி, இலவசமாக மிக்ஸி அல் லது கிரைண்டர் என்று தேர்தல் அறிக்கையை இந்தத் தேர்தலுக்கும் வெளியிட்டிருக்கிறது தி.மு.க. ‘அடுத்து, இலவச ஃப்ரிட்ஜ், வாஷிங்மெஷின் கொடுத்தாலும் கொடுப்பார் தலைவர் கருணாநிதி’ என்று அடுத்த தேர்தலைச் சந்திக்க இருக்கும் பரம ஏழைகளுக்கும் ஆசையைத் தூண்டியிருக்கிறார் துணை முதல்வர் ஸ்டாலின்.
‘ஏழைகள் இருப்பதால் இந்த இலவசங்களைத் தருகிறார்களா? இலவசங்கள் தருவதற்காக பலரை ஏழைகளாக வைத்திருக்கிறார்களா…?’ என்ற பட்டிமன்றம் ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்கிறது. அதே சமயம், இப்படி ஏழைகளுக்கு இலவசங்களை வாரி வழங்கும் அரசில், அங்கம் வகித்த அமைச்சர்கள் எப்படி இருக்கிறார்கள்?
வேட்புமனுத் தாக்கல் தொடங்கிய முதல் வாரத்தில் சில அமைச்சர்கள் மட்டுமே மனுத் தாக்கல் செய்திருக்கிறார்கள். அவர்களின் சொத்து மதிப்பைப் பார்த்தால் தலைசுற்றுகிறது.
குறிஞ்சிப்பாடி தொகுதியில் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளார் சுகாதாரத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம். இவரின் மொத்த சொத்து மதிப்பு ரூ.2.01 கோடிதானாம். இதுதவிர, இவரது மகன் பெயரிலும், மகள் பெயரிலும் ஐந்தே ஐந்து பஸ்கள்தான் இருக்கிறதாம். இதுபோக, இரண்டு ட்ராக்டர்கள்… கொஞ்சமாக நாலேகால் கிலோ தங்க நகைகள்தான்.
வேட்புமனுத் தாக்கல் செய்தபோது அமைச்சரே வெளியிட்ட விவரம்தான் இது. இவர் மீது லஞ்ச ஒழிப்புத் துறையினர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்குத் தொடர்ந்திருந்தனர். தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன், அந்த வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார் என்பது எல்லோரும் மறந்து போன செய்தி.
அடுத்ததாக, பல்லாவரம் தொகுதியில் மனுத் தாக்கல் செய்திருக்கும் அமைச்சர் தா.மோ.அன்பரசனும் பரம ஏழைதான்(!). மொத்த சொத்து மதிப்பு வெறும் ரூ.5.07 கோடி ம ட்டுமே. இவரிடம் 320 கிராம் தங்கமும், இவரது மனைவியிடம் மிகக்குறைவாக(!) ஒன்றேகால் கிலோ தங்கம் மட்டுமே இருக்கிறது. திருநாகேஸ்வரம் கிராமம் என்ற இடத் தில் ஐந்தாறு வணிக வளாகங்களும், குன்றத்தூரில் 4 வீடுகளும்தான் இருக்கிறது. எல்லாமே 2005-க்குப் பிறகு வாங்கப்பட்ட சொத்துக்கள் என்பதால், யாரும் சந்தேகமாக கேள்வி கேட்கக்கூடாது.
தேர்தல் விதிமுறைகளை மீறியதற்காக இவர் மீது 2005-ம் ஆண்டு போடப்பட்ட 9 வழக்குகள் நிலுவையில் உள்ளன. 2005-ம் ஆண்டிலிருந்து இன்று வரை அந்த வழக்குகளில் எந்த முன்னேற்றமும் இல்லை.
ஒட்டன்சத்திரம் தொகுதியில் மனுத் தாக்கல் செய்துள்ள அரசு கொறடா சக்கரபாணியும் ஏழைதான். இவரது மொத்த சொத்து மதிப்பு ரூ.4.52 கோடி. இரண்டு லாரிகளும், ஒரு மாருதி ஸ்விப்ட் காரும்தான் வைத்திருக்கிறார். இதுபோக, பல ஏக்கர் விவசாய விளைநிலங்கள் மற்றும் வீடுகள் இருக்கிறது. இவரது குடும்பமே வறுமையில் வாடு வதை(!) பார்த்து, இவரது மனைவிக்கு சமூக சேவகர் என்ற பிரிவின் கீழ், முகப் பேரில் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள வீட்டு மனையை ஒதுக்கியுள்ளது அரசு.
அடுத்து, அரவக்குறிச்சியில் போட்டியிடும் கே.சி.பழனிச்சாமி. இவர்தான் தமிழகத்திலேயே பரம ஏழைகளுக்கு எல்லாம் தலைவர். ஆம்! இவரது மொத்த சொத்து மதிப்பு வெறும் ரூ.67.65 கோடிதான். இவரது மனைவி மிகக் குறைந்த அளவு தங்கமாக, 3.83 கிலோதான் வைத்திருக்கிறார். பல சமயங்களில் உங்கள் வங்கிக் கணக்குகளில் மினிமம் பேலன்ஸ் இல்லாமல், தண்டக் கட்டணம் பிடித்தம் செய்யப்பட்டிருக்கும்.
ஆனால் பழனிச்சாமியும் அவரது மனைவியும் வைத்திருக்கும் 21 வங்கிக் கணக்குகளில் தற்போதைய பேலன்ஸ், 56 லட்சத்து 55 ஆயிரத்து 666 ரூபாய் மட்டுமே. இதுபோக, ஷேர்களாகவும் பாண்டுகளாகவும், ஒரு 28 கோடியை வைத்திருக்கிறார். அப்புறம் ஒரு 3 டாடா சுமோ, ஒரு எய்ச்சர், ஒரு ட்ராக்ஸ், ஒரு டாடா விங்கர் என்ற வண்டிகள். பொள்ளாச்சி, கண்டமங்கலம், செங்கல்பட்டு, புதுப்பாக்கம் போன்ற இடங்களில் நிலங்கள், கரூர், திருச்சியில், சிலபல வணிக வளாகங்கள், அவ்வளவுதான் இவரது சொத்து. ஆனால், இவர் தாக்கல் செய்துள்ள விவரங்களில் இருந்து மக்கள் மகிழ்ச்சி அடைய வேண்டிய ஒரு விஷயம் இருக்கிறது. இவர்தான் இருக்கும் வேட்பாளர்களிலேயே அதிக கல்வித் தகுதி உடையவர். ஆம், காவிலிப்பாளையம் அரசுப் பள்ளியில் ஆறாம் வகுப்பு வரை படித்திருக்கிறார்.
தாம்பரத்தில் மனுத் தாக்கல் செய்துள்ள எஸ்.ஆர்.ராஜா, ரூ.12.43 கோடி சொத்து வைத்துள்ளார். சென்னையிலும், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் 8 இடங்களில் இவ ருக்கு வீடுகள் இருக்கிறது. ஆனால், இவ்வளவு சொத்துக்கள் இருந்தும் இவர் சொந்தமாக ஒரு கார் வாங்கக்கூட வசதியில்லாமல் இருக்கிறார் என்பதை அறிந்து புல் லரிக்கிறது. 1980-ம் ஆண்டு வாங்கிய ஒரே ஒரு ‘புல்லட்’ மட்டுமே வைத்துள்ளார்.
திருவள்ளூர் தொகுதி தி.மு.க. வேட்பாளர் சிவாஜி ஓரளவுக்கு சுமாரான ஏழை. இவருக்கு ரூ.3.67 கோடி மட்டுமே சொத்து இருக்கிறது. வங்கியில் நிரந்தர வைப்பு நிதிகள், டயோட்டா ஃபார்ச்சூனர் மற்றும் ஹோண்டா சிட்டி கார்கள், ஒன்றரை கிலோ தங்கம், ஊத்துக்கோட்டை, ஏனாம்பாக்கம் ஆகிய இடங்களில் விவசாய நிலங்கள், மயிலாப்பூர் மற்றும் அண்ணாநகரில் வீடுகள் மட்டுமே இவரது சொத்து.
ரூ.9.37 கோடி மட்டுமே சொத்து வைத்திருப்பவர் ஒரு ரூபாய்க்கு தமிழக மக்களுக்கு அரிசி கொடுத்த எ.வ.வேலு. திருவண்ணாமலையில் ஒரு வீடு, ஆழ்வார்பேட்டையில் 7,200 சதுர அடியில் ஒரு சிறிய வீடு, அப்புறம் கொஞ்சம் விவசாய நிலங்கள் மட்டுமே இவருக்கு இருக்கிறது. பாவம் இவருக்கும் சொந்த கார் கூட இல்லை. அப்படித் தான் வேட்புமனுத் தாக்கலில் கூறியிருக்கிறார். வேலுவுக்குச் சொந்தமாக கார் இல்லாத தகவல் கண்ணீரை வரவழைக்கிறது(!)
உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடிதான் இருக்கும் அமைச்சர்களிலேயே பரம ஏழையாக இருப்பார். கல்லூரிப் பேராசிரியராக தனது வாழ்க்கையைத் தொடங்கிய அவர், வெறும் ரூ.8.22 கோடி அளவுக்குத்தான் சொத்து வைத்திருக்கிறார். வங்கியில் கைச் செலவுக்காக ஒரு கோடி ரூபாய் தான் இருக்கிறது. மனைவி ஒன்றே முக்கால் கிலோ தங்கம் வைத்திருக்கிறார். விழுப்புரம், திருப்பாதிரிப்புலியூர் ஆகிய இடங்களில் வீட்டு மனைகள், ராஜாஅண்ணாமலைபுரத்தில் சொந்தக் கட்டடம் ஆகியவை மட் டுமே இவர் அமைச்சரான பின் உழைத்து(!) சம்பாதித்த சொத்துக்கள்.
இவர் மீது லஞ்ச ஒழிப்புத் துறையில் இரண்டு வழக்குகள் இருந்தன. தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும், மற்ற வழக்குகளைப் போல, இதுவும் அண்ணா சமாதிக்கு அருகே அடக்கம் செய்யப்பட்டது.
தேர்தல் சமயத்தில் தாக்கல் செய்யப்படும் இந்தப் பிரமாண வாக்குமூலங்கள் அனைத்தும் உண்மை என்று எடுத்துக்கொள்ள முடியாது. குறைத்து மதிப்பிடுவதே அனைவரது வழக்கமாகியிருக்கிறது என்று கூறுகிறார்கள் தேர்தல் அதிகாரிகள். பல கோடி சொத்துக்கள் வைத்திருக்கும் இவர்களுக்கு சொந்தமாக ஒரு கார் கூட இல்லை என்பதுதான் நெஞ்சு பதைபதைக்கும் தகவலாக இருக்கிறது. இவர்கள் எளிமைக்கு இதுவே எடுத்துக்காட்டாக இருக்கிறது என்றும் அவர்கள் கிண்டலாகச் சொல்கிறார்கள்.
தமிழகத்தின் முன்னாள் தலைமைத் தேர்தல் அதிகாரியான நரேஷ் குப்தாவிடம் பேசியபோது, “வேட்புமனுத் தாக்கல் செய்யும் சமயத்தில், ஒரு வேட்பாளர் தவறான தகவல் தந்திருக்கிறார் என்று புகார் வந்தால், அவரது வேட்புமனுவை நிராகரிக்கும் அதிகாரம்கூட அந்தத் தேர்தல் அதிகாரிக்கு இல்லை. மேலும், தாக்கல் செய்யப் பட்டுள்ள உறுதிமொழிப் பத்திரம் உண்மையானது தானா? என்று சரிபார்க்கும் வசதிகூட இல்லை.
ஒரு வேட்பாளர், அவரது சொத்துக்களை கேரளா, அஸ்ஸாமில் வைத்திருக்கலாம். ஏன், வெளிநாட்டில் கூட வைத்திருக்கலாம். இதையெல்லாம், மனுத் தாக்கல் செய்யும்போது சரிபார்க்க முடியாது. இதற்குப் பிறகு அவர்கள் கொடுத்த சொத்து விவரம் குறித்து சந்தேகம் ஏற்பட்டால் விசாரணை நடத்த வாய்ப்பு இருக்கிறது. இது தவிர, தவறான தகவல் கொடுத்ததற்காக கடும் நடவடிக்கை எடுப்பதற்கான வழிவகைகள் சட்டத்தில் இல்லை’’ என்றார்.
அமைச்சர்கள் எல்லோருமே கடந்த 5 ஆண்டுகளில் பல கோடிகளுக்கு அதிபதியாகி இருக்கிறார்கள் என்பது வேட்புமனுத் தாக்கல் செய்தபோது, அவர்களே கொடுத்த தகவலில் இருந்தே தெரிகிறது. இருந்தாலும், சில கோடீஸ்வர அமைச்சர்கள் சொந்தமாக கார் கூட இல்லாமல் கருணாநிதி கூறுவது போல் பரம ஏழையாகத்தான் இ ருக்கிறார்கள்.
இவர்களில் பலரது வருவாய், கடந்த 5 ஆண்டுகளில் இரு மடங்கு உயர்ந்துள்ளது. ஆனால், ஏழைகளாக இருந்த மக்கள் மட்டும் பரம ஏழைகளாக மாறிப்போயி ருக்கிறார்கள். அமைச் சர்களின் சொத்துக்கள் உயர்ந்ததற்கும், ஏழைகள் பரம ஏழைகளானதற்கும் முடிச்சுப் போட்டு நீங்கள் ஏதாவது முடிவு செய்தால் அதற்கு நாங்கள் பொறுப்பல்ல. இப்போது இந்தச் செய்தியின் ஆரம்ப வரிகளைப் படித்தால்… கருணாநிதி சொல்வதில் எத்தனை உண்மை இருக்கிறது என்பது புரியும்!
From: Ahamed Imam