ஃபத்வா (மார்க்கத் தீர்ப்பு) வழங்க தகுதி படைத்தோர் யார்?
mjabir
[ எதற்கெடுத்தாலும் விழுந்தடித்துக் கொண்டு மார்க்கத் தீர்ப்பு வழங்கப்படும் ஒரு படு பயங்கரமான காலத்தில் வாழ்ந்து வருகிறோம். இணையத்திலும் ஏகப்பட்ட தளங்கள் ஃபத்வாக்கள் வழங்கி வருகின்றன. ஏட்டிக்குப் போட்டியான ஃபத்வாக்களுக்கும் குறைவில்லை.
உரத்த குரலில் பிரசங்கம் செய்வோரெல்லாம் மார்க்கத் தீர்ப்பு வழங்க தகுதியுடையோர் என பொது மக்கள் பொதுவாக எண்ணிக்கொண்டுள்ளனர்.
உரக்க ‘பயான்’ செய்வது ஒருவரை முஃப்தியாக்கி விடாது. அது போல முஃப்தி என்பது ஒரு பட்டமும் அல்ல. இஸ்லாத்தின் மூலாதாரங்களிலிருந்து சட்டங்களை ஆய்ந்தெடுக்கும் ஆற்றல் பெற்றவரான முஜ்தஹிதே ஆரம்ப காலத்தில் முஃப்தி என அழைக்கப்பட்டார்.
ஃபத்வா ஒரு சர்வசாதாரணமான, எளிதான எவரும் துணிந்து செய்யக்கூடிய விஷயமன்று, மாறாக பொறுப்பானது, அபாயகரமானது, நிபுணத்துவ திறமை தேவை. இஸ்லாமிய ஷரீஆவின் துறைகளிலும் துணைத் துறைகளிலும் பாண்டித்தியம் பெற்ற ஒருவரால் மட்டுமே இப்பொறுப்பை சரிவர சுமப்பது சாத்தியம்.
தனது சொந்த நலனுக்காக தான் சார்ந்துள்ள, ஆதரிக்கின்ற, கூஜா தூக்குகின்ற ஆள், இயக்கம், கட்சி, நிறுவனம், ஊர், நாட்டின் நலனுக்காக ஃபத்வாக்கள் வழ்குவதிலும் பெறுவதிலும் பலர் ஆர்வத்துடன் ஈடுபட்டுள்ளனர்.
இதனால்மலிந்து காணப்படுகின்றன. இது மிகவும் அபாயகரமானது.]
உலகு பல வகையான தீர்ப்புகளைக் காண்கிறது. இறைவன் தீர்ப்பு, மக்கள் தீர்ப்பு, நீதவான் தீர்ப்பு, நிபுணர் தீர்ப்பு, சான்றோர் தீர்ப்பு என அவற்றை அடுக்கிக் கொண்டு போகலாம். ஒவ்வொரு தீர்ப்புக்கும் அது அதற்கே உரிய அலாதியான பரிமாணங்கள் உள.
முஸ்லிம்களுக்கிடையில் பிரபலமான தீர்ப்பு ஒன்று உள்ளது. அதுதான் மார்க்கத் தீர்ப்பு. வெளிக்கொணரப்பட்ட இஸ்லாமிய ஷரீஆவின் சட்டமொன்றை மார்க்கத் தீர்ப்பு என்பர். இதனை ஷரீஆவின் பரிபாஷையில் ‘ஃபத்வா’ எனப்படும். பொதுவாக தீர்ப்புகள் பாரமானவையாக, பாரதூரமானவையாக இருப்பது போன்று பத்வாவும் பாரமானது. பாரதூரமானது.
அல்-குர்ஆன், அல்-ஸ¤ன்னஹ்வில் தேடி ஆதாரங்களைப் பெற்று அவற்றை நன்கு ஐயந்திரிபற படித்துத் தெளிந்து அவற்றின் வெளிச்சத்தில் இஜ்மாஃ, கியாஸ் முதலியவற்றையும் துணைக் கழைத்துக் கொண்டு அல்லாஹ்வை மாத்திரம் அஞ்சிய நிலையில் காய்தல், உவத்திலின்றி விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால் நின்று ஃபத்வா வழங்கப்பட வேண்டுமென்பது இஸ்லாத்தின் வழிகாட்டலாகும். ஏனெனில் மார்க்கத் தீர்ப்பு அல்லாஹ்வின் சார்பாக வழங்கப்படுகிறது.
இதனால்தான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் மனிதர்கள் பத்வா வேண்டிய போது ‘அல்லாஹ் உங்களுக்கு பத்வா தருகிறான் என (நபியே) நீர் கூறுக!’ என அல்லாஹ் அறிவுறுத்தி, மார்க்கத் தீர்ப்பு நல்குதல் தனது பொறுப்பு என்பதை தெளிவுபடுத்தினான்.
எனவே ஃபத்வா ஒரு சர்வசாதாரணமான, எளிதான எவரும் துணிந்து செய்யக்கூடிய விஷயமன்று, மாறாக பொறுப்பானது, அபாயகரமானது, நிபுணத்துவ திறமை தேவைப்பட்டது. இஸ்லாமிய ஷரீஆவின் துறைகளிலும் துணைத் துறைகளிலும் பாண்டித்தியம் பெற்ற ஒருவரால் மட்டுமே இப்பொறுப்பை சரிவர சுமப்பது சாத்தியம்.
தஃப்மர், உலூம் அல்- குர்ஆன், ஹதீஸ், உலூம் அல்-ஹதீஸ், ஃபிக்ஹ், உசூல் அல்-ஃபிக்ஹ், அகீதஹ், மரஹ், தாரீக் முதலாய இமாலய துறைகளுடன் அரபு மொழியை இலக்கண இலக்கியத்துடன், பண்டைய நடையுடன் கசடறக் கற்றுத் தேர்ந்த பண்டிதர்கள் மட்டுமே பத்வா வெளிப்படுத்தும் பொறுப்புக்கு அனுமதிக்கப்படுவர் என்பது ஷரீஆவின் அடிப்படையாகும். அத்துடன் இறையச்சம், தூய எண்ணம், பேணுதல், உலகப் பற்றின்மை, தூய்மை, நேர்மை, நம்பிக்கை, கம்பீரம், இஸ்லாத்தை ஒட்டிய நடைமுறை வாழ்க்கை, துஆஃ, இஸ்திக்ஃபார், நன்னடத்தை,
நிதானம், சாதுரியம், மனிதர்கள், விடயங்கள் பற்றிய பரந்த விரிந்த, ஆழ்ந்த பார்வை, காலதேசவர்த்தமானத்தைக் கவனத்திற்கொள்ளல், தூரதிருஷ்டி, சமயோசிதம், உறுதி, நிபுணத்துவ ஆலோசனை பெறுதல், புறவயநோக்கு போன்றவற்றையும் மார்க்கத் தீர்ப்பு வழங்குவோர் பெற்றிலங்குவது இன்றியமையாதது. இப்பின்னணி கொண்டவரே ஷரீஆவில் முஃப்தி எனப்படுகிறார். யதார்த்தத்தில் அவர் ரஸ¥ல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பிரதிநிதியாவார்.
மேற்படி பின்னணி இல்லாதோர் பத்வா நல்க துணிவது முற்றாக தடுக்கப்பட்டுள்ளது. மேலும் எவர் அறிவின்றி பத்வா கொடுக்கப்பட்டாரோ அவரின் பாவம் அவருக்கு மார்க்கத் தீர்ப்பு வழங்கியவர் மீதாகும்’ என்பது நபி மொழி (அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரளியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்தத்ரக் அல்-ஹாகிம்).
‘உங்களில் ஃபத்வாவுக்கு அதிகம் துணிபவர் உங்களில் நரகுக்கு அதிகம் துணிபவராவார்’ என்றனர் ஆன்றோர். மார்க்கத் தீர்ப்பு நாடுவோர், தேடுவோர் ஃபத்வா வெளிப்படுத்துவதற்குரிய மேற்காட்டப்பட்ட தகைமைகள் பெற்றவரை நன்கு சரியாக இனங்கண்டு அவரிடம் தான் செல்ல வேண்டும். அவருடன் மிக மரியாதையாக, கண்ணியமாக நடந்துகொள்ள வேண்டும்.
நல்ல எண்ணத்துடன் மார்க்கத் தீர்ப்பு வேண்டி அவரை நாட வேண்டும். அவரின் அறிவுத் தராதரத்தைப் பரிசோதிக்க, அறிவீனமான கேள்விகளைத் தொடுத்து அவரை மட்டம்தட்ட, அநாவசியமான வினாக்களைக் கேட்டு அவரின் பொன்னான நேரத்தை மண்ணாக்க, வேறொரு அறிஞர் உங்களின் கருத்துக்கு நேர்மாறாக இப்படி கூறுகிறாரே எனச் சொல்லி அவரை சிக்கலிலாழ்த்த முனைவது பத்வா கோர விழைபவருக்கு அறவே அனுமதிக்கப்பட வில்லை.
ஒவ்வொரு துறைக்கும் அது அதற்குரிய நிபுணர்கள் இருப்பது போல் மார்க்கத் தீர்ப்பு வழங்குவதற்கும் அதற்குரிய நிபுணர்கள் உளர். எவர் எத்துறையில் நிபுணத்துவம் பெற்றுள்ளார் என்பதை மக்கள் தெரிந்து, தெளிந்து அவரைக்கொண்டு அத்துறை சார்ந்த விஷயங்களிலேயே பயன்பெற வேண்டும். அவ்வாறே அவ்வந்த துறையின் நிபுணர்கள் தத்தமது துறையுடன் மாத்திரம் நின்றுகொள்ள வேண்டும். தனக்கு நிபுணத்துவமில்லாத துறையில் தப்பித்தவறியேனும் சம்பந்தப்பட நேரிட்டால் தான் அதற்குரிய ஆளல்ல எனக் கூறி ஒதுங்கிக்கொள்ள வேண்டும்.
உரத்த குரலில் பிரசங்கம் செய்வோரெல்லாம் மார்க்கத் தீர்ப்பு வழங்க தகுதியுடையோர் என பொது மக்கள் பொதுவாக எண்ணிக்கொண்டுள்ளனர்.
உரக்க உபந்நியாசம் செய்வது ஒருவரை முஃப்தியாக்கி விடாது. அது போல முஃப்தி என்பது ஒரு பட்டமும் அல்ல. இஸ்லாத்தின் மூலாதாரங்களிலிருந்து சட்டங்களை ஆய்ந்தெடுக்கும் ஆற்றல் பெற்றவரான முஜ்தஹிதே ஆரம்ப காலத்தில் முஃப்தி என அழைக்கப்பட்டார்.
சமகால ஃபத்வாக்களின் உண்மை நிலைதான் என்ன? புராதன காலத்து முஃப்திகள் வழங்கிய பத்வாக்களை அப்படியே அல்லது அவற்றைத் தழுவி அல்லது அவற்றை அடியொற்றி நகல் செய்வது. அவ்வளவு தான்,
எனவே இவை எதார்தத்தத்தில் நவ பத்வாக்கள் என்பதற்கில்லை. அல்-ஃபிக்ஹ் அல்-இஸ்லாமி வஅதில்லத்துஹ் எனும் தனது நூலில் கலாநிதி வஹ்பஹ் அல்- ஸ¤ஹைலி இதனைக் கோடிட்டு காட்டுகிறார்.
எதற்கெடுத்தாலும் விழுந்தடித்துக் கொண்டு மார்க்கத் தீர்ப்பு வழங்கப்படும் ஒரு படு பயங்கரமான காலத்தில் வாழ்ந்து வருகிறோம். இணையத்திலும் ஏகப்பட்ட தளங்கள் பத்வாக்கள் வழங்கி வருகின்றன. ஏட்டிக்குப் போட்டியான ஃபத்வாக்களுக்கும் குறைவில்லை.
தனது சொந்த நலனுக்காக தான் சார்ந்துள்ள, ஆதரிக்கின்ற, கூஜா தூக்குகின்ற ஆள், இயக்கம், கட்சி, நிறுவனம், ஊர், நாட்டின் நலனுக்காக ஃபத்வாக்கள் வழ்குவதிலும் பெறுவதிலும் பலர் ஆர்வத்துடன் ஈடுபட்டுள்ளனர்.
அதேவேளை முன்னுக்குப் பின் முரணான ஃபத்வாக்கள் மலிந்து காணப்படுகின்றன. அகவயநோக்கு கொண்ட தற்சாய்வு, பகைக்காய்வு பளிச்சிடும் ஃபத்வாக்கள் பரவிக் கிடக்கின்றன.
இந்நிலை சந்தேகமின்றி வெகு ஆபத்தானது. மக்களின் சமய வாழ்க்கைக்கு வேட்டு வைக்கின்றது. அவர்களை அதலபாதாளத்துக்கு கொண்டு செல்கிறது.
நினைவில் கொள்ள வேண்டிய ஒரு விஷயம்;
ஃபத்வா: மார்க்க அறிவில்லாதோர் மார்க்கம் பற்றிப் பேசுவது தடைசெய்யப்பட்டதாகும், அல்குர்ஆன் பின்வருமாறு கூறுகின்றது:
‘வெட்கக் கேடானவைகளில் வெளிப்படையானவற்றையும், இரகசியமானவற்றையும், பாவத்தையும், நியாயமின்றி வரம்பு மீறுவதையும் எது பற்றி அல்லாஹ் எந்த ஆதாரத்தையும் இறக்கவில்லையோ அதை அல்லாஹ்வுக்கு இணையாகக் கருதுவதையும் நீங்கள் அறியாததை அல்லாஹ்வின் மீது இட்டுக்கட்டிக் கூறுவதையுமே என் இரட்சகன் தடை செய்துள்ளான் என (முஹம்மதே!) கூறுவீராக!’ (அல்குர்ஆன் அல்அஃராப்: 33)
எனவே அறிவில்லாமல் அல்லாஹ்வின் மீது பொய்யாகக் கூறுவதிலிருந்து தவிர்ந்து கொண்டு பேணுதலாக இருப்பது ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கடமையாகும். எனெனில் கருத்துச் சொல்வதற்கு இடம்பாடான உலக விவகாரங்களுடன் தொடர்பான விஷயம் அல்ல இது.
ஆகவே விழித்தெழுவோம்! தெளிவு பெறுவோம்! நிதானமாக சிந்திப் போம்! அசலையும் நகலையும் பிரித்தறிவோம். அல்லாஹ் நல்லருள் புரிவானாக!
source: http://ipcblogger.net/mjabir/