இரண்டாம் ஜமாஅத்: ஓரு விளக்கம்
”நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தொழுகையை நிறைவேற்றிய நிலையில் ஒரு மனிதர் வந்தார். அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், (இவருடன் சேர்ந்து தொழுவதன் மூலம்) இவருக்கு லாபம் அளிக்கக்கூடியவர் யார்? என்று கேட்டார்கள். ஒரு மனிதர் முன்வந்தார். அவருடன் வந்த மனிதர் சேர்ந்து தொழுதார்.” (அறிவிப்பவர்: அபூ ஸயீத் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: திர்மிதி 204, அபூதாவூத் 487)
மேற்கண்ட ஹதீஸில் ஒரு பள்ளியில் முதலில் ஜமாஅத்தாகத் தொழுகை நடத்தி முடிந்த பிறகு, மீண்டும் அதே பள்ளியில் ஜமாஅத் நடத்தலாம் என்பதற்கு மிகத் தெளிவான ஆதாரமாகும்.
இந்தத் தெளிவான ஆதாரத்துக்குக் கட்டுப்படுவதற்குப் பதிலாக சிலர் பயங்கரமான தத்துவங்களைக் கூறி ஹதீஸை அர்த்தமற்றதாக்குகின்றனர். அவர்கள் கூறுவது தவறு என்பதை இனி பார்போம்.
தத்துவம்: 1
1. தூக்கம், மறதி, வாடை வீசும் உணவு ஜமாஅத் தவறுவது அடிக்கடி நடக்கும் நிகழ்வாக இருந்தும் இரண்டாம் ஜமாஅத்தோ அல்லது மூன்றாம் ஜமாஅத்தோ நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காலத்தில் நடந்ததாக எந்த ஹதீஸும் இடம் பெறவில்லை.
என்னே தத்துவம் பாருங்கள்! ஒரு ஹதீஸ் இடம் பெற்றுள்ளதைப் பார்த்துக் கொண்டே எந்த ஹதீஸும் இடம் பெறவில்லை என்று கூறுகிறார். அப்படியானால் இது ஹதீஸ் இல்லையா? அடிக்கடி இரண்டாம் ஜமாஅத்தோ மூன்றாம் ஜமாஅத்தோ நடந்ததாக வந்தால் தான் ஏற்றுக் கொள்வாராம். இவருக்கு ஹதீஸ் கலையும் தெரியவில்லை. ஒரு விஷயத்தை எப்படிப் புரிந்து கொள்ள வேண்டும் என்ற அடிப்படை அறிவும் இல்லை.
அடிக்கடி நிகழும் வணக்க முறைகள் பற்றி ஒரே ஒரு ஹதீஸ் மட்டுமே, ஒரே ஒருவரால் மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளதைப் பரவலாகக் காண்கிறோம். அடிக்கடி நடந்ததாக ஹதீஸில் இல்லை என்று கூறி அவற்றை எல்லாம் மறுப்பாரா?
தத்துவம்: 2
2. குறித்த இந்த ஹதீஸிலும் தாமதமாக வந்தவர் இன்று நடைமுறை உள்ளது போல் மற்றவர்களுக்காகக் காத்திருந்து இரண்டாம் ஜமாஅத் ஆரம்பிக்காமல் தனியாகவே தொழ ஆரம்பிக்கிறார்.
அதைத் தூக்கி அடிக்கும் தத்துவமாக இது உள்ளது. அவர் தனியாகத் தொழ ஆரம்பிக்கிறார் என்ற நபித்தோழரின் செயல் மட்டும் தான் இவரது கண்களுக்குத் தெரிகிறது. நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அதைத் தடுத்து, ஜமாஅத்தாகத் தொழச் சொன்னது இவரது கண்களுக்குத் தெரியவில்லை. இவரும் இவரைச் சேர்ந்தவர்களும் மார்க்கத்துக்கு ஆபத்தானவர்கள் என்றே நாம் கருதுகிறோம்.
தத்துவம்: 3
3. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அனுமதி, ஏற்கனவே முதல் ஜமாஅத்தில் கலந்து கொண்ட ஒருவர் அதைத் தவற விட்ட ஒருவருடன் சேர்ந்து தொழுவதற்கான அனுமதியே தவிர ஜமாஅத்தைத் தவற விட்ட இருவர் அல்லது பலர் சேர்ந்து நடத்தும் ஜமாஅத்தை அல்ல.
குர்ஆனையும் ஹதீஸையும் புரிந்து கொள்ளும் வழிமுறை கூட நவ்பர் என்பாருக்குத் தெரியவில்லை என்பதற்கு இதுவும் ஆதாரமாக உள்ளது.
ஜமாஅத் தொழுகை முடிந்த பின் ஒருவர் தாமதமாக வந்தால் ஏற்கனவே தொழுதவர் மட்டும் அவருடன் சேர்ந்து தொழலாம். ஏற்கனவே தொழாதவர் தொழக் கூடாது என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினால் தான் இவர் கூறுகின்ற கருத்து கிடைக்கும்.
அப்படி நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறவில்லை. பள்ளிவாசலில் தொழுகை முடிந்த பின், தொழுதவர்கள் மட்டுமே இருந்தது தற்செயலானது. இதில் கவனிக்க வேண்டிய விஷயம் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
அதாவது, தனியாக ஒருவர் தொழுதால் அவருக்கு ஒரு நன்மை தான் கிடைக்கும். ஜமாஅத்தாகத் தொழுதால் அவருக்கு 27 நன்மைகள் கிடைக்கும். தாமதமாக வந்த இவர் அந்த நன்மையை இழந்து விட்டார். அவருக்கும் அந்த நன்மை கிடைக்க வேண்டும் என்ற கவலை தான் இதில் தென்படுகிறது.
தாமதமாக வந்த ஒரு முஸ்லிமுக்கு இழப்பு ஏற்படக் கூடாது என்ற நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அக்கறை இவர்களின் கண்களுக்குத் தென்படவில்லை.
தத்துவம்: 4
4. குறித்த ஹதீஸில் முதல் ஜமாஅத்தில் கலந்து கொண்டு நன்மை பெற்றவர் அதில் கலந்து கொள்ளாதவருக்குத் தர்மம் செய்கிறார் என விளங்க முடிகிறது. அனால் இண்றைய முதல் ஜமாஅத்திற்குப் பின் நடத்தப்படும் ஏனைய ஜமாஅத்களில் யார், யாருக்கு தர்மம் செய்கிறார் என்பதைக் கூற முடியுமா? முடியவே முடியாது.
மேற்கண்ட ஹதீஸை மறுப்பதற்குக் கண்டு பிடித்த நான்காவது தத்துவம் இது.
தாமதமாக வந்தவர் கூடுதல் நன்மை பெற வேண்டும் என்பது நபிகள் நாயகத்தின் நோக்கமா? அல்லது ஏற்கனவே தொழுதவரை தர்மம் செய்ய வைப்பது நோக்கமா என்ற அடிப்படையைக் கூட இவரால் புரிந்து கொள்ள முடியவில்லை.
ஒருவர் ஏற்கனவே தொழுதவருடன் சேர்ந்து தொழுதாலும், ஏற்கனவே தொழாதவருடன் சேர்ந்து தொழுதாலும் அவருக்கு 27 மடங்கு நன்மை கிடைத்து விடும். இது தான் இங்கே கவனிக்கப்பட வேண்டும்.
இன்னும் சொல்வதாக இருந்தால், ஏற்கனவே தொழுதவர் மீண்டும் தொழும் எந்த அவசியமும் இல்லை. ஆனால் ஏற்கனவே தொழாதவருக்கு தொழும் அவசியம் இருக்கிறது. ஏற்கனவே தொழுதவராக இருந்தாலும் கூட மற்றொரு சகோதரன் 27 மடங்கு நன்மையை அடைய உதவ வேண்டும் என்றால் எப்படியாவது ஜமாஅத்தாகத் தொழ முயல வேண்டும் என்று தான் அறிவுடையோர் புரிந்து கொள்வார்கள்.
அதாவது, ஜமாஅத் தொழுகை நடத்துவதற்கு வழியில்லாமல் ஒருவர் மட்டுமே இருக்கும் நிலையில், ஏற்கனவே ஜமாஅத்தில் தொழுத ஒருவர் இவருடன் சேர்ந்து ஜமாஅத்தாகத் தொழ வேண்டும் என்று இந்த ஹதீஸ் கூறுகின்றது. அப்படியானால், முதல் ஜமாஅத்தில் சேராத இருவர் அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் இருக்கும் போது, கண்டிப்பாக அவர்களுக்குள் ஜமாஅத்தாகத் தான் தொழ வேண்டும் என்பதையே இந்த ஹதீஸ் வலியுறுத்துகின்றது.
தாமதமாக வந்த நபித்தோழரோடு சேர்ந்து தொழுவதற்கு யாருமில்லாத காரணத்தினால் தான் தொழுத ஒரு ஸஹாபியை மீண்டும் அவரோடு சேர்ந்து தொழுமாறு நபியவர்கள் கட்டளையிடுகிறார்கள். இவ்வாறு சேர்ந்து தொழுகின்ற காரணத்தினால் தனியாகத் தொழுதால் கிடைக்கும் நன்மையை விட அதிகமான நன்மையைத் தாமதமாக வந்தவர் பெறுகின்றார். இதைத் தான் நபியவர்கள் தர்மம் என்று குறிப்பிடுகிறார்கள். தாமதமாகப் பலர் வரும் போது அவர்களே சேர்ந்து தொழுவதன் மூலம் அந்த நன்மையைப் பெற்றுக் கொள்வார்கள். யாரும், யாருக்கும் தர்மம் செய்ய வேண்டியதில்லை.
தர்மம் என்றாலே அதன் பொருள் என்ன? தேவைப்படும் போது கொடுப்பது தான். ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் தாமதமாக வந்தால் இப்போது தர்மம் செய்யும் அவசியம் இல்லாமலே அவர்களுக்கு நன்மை கிடைத்து விடுகிறது.
தொழுத ஒருவரே மீண்டும் தொழ வைத்தாலும் அது மற்றொரு ஜமாஅத் தொழுகை தான். எனவே ஜமாஅத்தாகத் தொழுத பள்ளியில் மீண்டும் ஜமாஅத்தாகத் தொழுவதற்கு மேற்கண்ட ஹதீஸே மிகச் சிறந்த சான்றாக இருக்கும் போது ஜமாஅத்தாகத் தொழுத பள்ளியில் மீண்டும் ஜமாஅத்தாகத் தொழுவதற்கு எந்த ஆதாரமும் இல்லை எனக் கூறுவது தவறானதாகும்.
தத்துவம்: 5
5. எனவே இந்த ஹதீஸ் ஒருவருக்கு (இஸ்லாம் அனுமதித்த காரணங்களுக்காக) ஜமாஅத் தவறும் போது நாம் முன்னர் குறிப்பிட்ட, யார் அழ்கிய முறையில் உளூச் செய்து (பள்ளிக்குச்) சென்று அங்கே மக்கள் தொழுது முடித்துவிட்டிருப்பதைக் காண்கிறாரோ அவருக்கு அல்லாஹ் ஜமாஅத்துடன் தொழுத கூலியை ஏற்கனவே ஜமாஅத்துடன் தொழாதவர்களுக்கும் குறைத்து விடாமல் வழங்குகிறான் என்ற ஹதீஸின் படி தனியாகத் தொழுதாலே அதற்கான கூலியை அடைந்து கொள்வார். அல்லது ஏற்கனவே முதல் ஜமாஅத்தில் கலந்து கொண்ட ஒருவர் விரும்பினால் அவருடன் சேர்ந்து தொழுது தர்மம் செய்யலாம் என்பதற்கான ஆதாரமே தவிர முதல் ஜமாஅத்தைத் தவற விடுபவர்கள் சேர்ந்து இரண்டாம் ஜமாஅத்தும் அதைத் தவற விடுபவர்கள் மூன்றாம் ஜமாஅத்தும் அதைத் தவற விடுபவர்கள் நாலாவது ஜமாஅத்தும் அதைத் தவற.. இதற்கெல்லாம் ஆதாரம் இந்த ஹதீஸில் எங்கே இருக்கிறது!!
முதலில் இவர் சுட்டிக் காட்டும் ஹதீஸ் பலவீனமானதாகும். அது சரியானது என்று வைத்துக் கொண்டாலும் குழப்பம் இல்லை. தாமதமாக வருபவருடன் சேர்ந்து தொழ ஒருவர் கிடைக்கவில்லையானால் அப்போது அவருக்கு ஜமாஅத்தின் நன்மை கிடைக்கும். யாராவது கிடைத்து விட்டால் அவருடன் சேர்ந்து தொழுதாலே அந்த நன்மையை அடைய முடியும் என்பது தான் இரண்டுக்கும் பொதுவான கருத்தாகும்.
தத்துவம்: 6
6. எனவே குறித்த விடயத்தில் சகோதரர் எஸ். எம். அப்பாஸ் அவர்கள் குறிப்பிட்டது போல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது அனுமதி கிடையாது என்பதுடன், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அனுமதித்த, ஆர்வமூட்டிய காரியத்தைத் தடுப்பதற்கு யாருக்கும் அதிகாரம் இல்லை என்பதல்ல இங்கு கவனத்திற் கொள்ளப்படவேண்டியது. மாறாக நபியவர்களின் வரையறைகளுடனான சுருங்கிய அனுமதியை வரையறைகள் அற்ற விரிந்த அனுமதியாக்குவதற்கு யாருக்கும் அனுமதி இல்லை என்பதையே நாம் கருத்திற் கொள்ள வேண்டும்.
இதுவும் அபத்தமான வாதமே! வரையறைகளுடன் சுருங்கிய அனுமதியாக இது இல்லை. வரையறை இல்லாத அனுமதிக்குள் இவர் தான் வரையரையத் தினித்திருக்கிறார். அது தான் இவரது தடுமாற்றத்துக்குக் காரணம். இவர் வரையறை செய்தது தவறானது என்பதை முன்னர் விளக்கி விட்டோம். தாமதமாக வந்த ஒரு முஸ்லிம், ஜமாஅத்தின் நன்மையை இழக்கக் கூடாது என்ற பரந்த நோக்கத்தை நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தெளிவுபடுத்தி இருக்கும் போது குறுகிய நோக்கமாக இவர் சித்தரிக்கிறார்.
தத்துவம்: 7
7. இதற்கு ஒரு நல்ல உதாரணமாக, மறைவான ஜனாஸாத் தொழுகையை குறிப்பிடலாம். எப்படி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பொது வழக்கத்திற்கு மாறான நஜ்ஜாஷி அவர்களுக்கு தொழுவித்த சம்பவத்தை மறைவான ஜனாஸாத் தொழுகை கூடும் என விளங்கிக் கொள்ளாமல் அது அவருக்கு மட்டும் உரிய தனி நபர் சம்பவம் என்றோ அல்லது குறித்த பிரத்யேக நிலை யாருக்கு ஏற்படுகிற்கிறதோ அவருக்கு மட்டும் என்றோ தழிழ்நாடு தௌஹீத் ஜமாஅத்தின் பிரச்சாரகர்கள் புரிந்து கொள்வது போல் குறித்த ஹதீஸையும் குறித்த பிரத்யேக நிலை யாருக்கு ஏற்படுகிறதோ அவருக்கு நபியவர்கள் அனுமதித்த ஏற்கனவே முதல் ஜமாஅத்தில் தொழுத ஒருவர் சேர்ந்து தொழுவது என்ற முறையில் மாத்திரம் என சரியாக விளங்கிக் கொண்டால் இரண்டாம் ஜமாத்திற்கு அனுமதி என்ற கருத்துக்கே இடமில்லை.
நஜ்ஜாஷி மன்னர் விஷயத்தைப் பிரத்தியேகமானது என்று நாங்கள் யாரும் புரிந்து கொள்ளவில்லை. ஒருவருக்கு ஜனாஸா தொழுகை நடக்கவில்லை என்பது நமக்குத் தெரிய வந்தால் நாமும் ஜனாஸா முன்னால் இல்லாமல் தொழலாம் என்று பொதுவாகத் தான் புரிந்து கொள்கிறோம். ஏனெனில் ஒரு அடியார் இறந்து விட்டார். அவருக்கு தொழுகை நடத்தப்படவில்லை என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காரணத்தைச் சொல்லி விட்டதால் அது பொதுவானது தான். அது போல், ஏற்கனவே தொழுதவர் மட்டும் தான் இரண்டாவது ஜமாஅத்திற்கு உதவ வேண்டும் என்ற கருத்தை நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்
– ஏகத்துவம், இதழ்