Zinoofa
ஒருநாள் இரவு. மதீனாவின் வீதிகளில் ரோந்து சென்று கொண்டிருந்தார் உமர் ரளியல்லாஹு அன்ஹு. மைதானம் போன்ற ஓரிடத்தில் புதிதாய்க் கூடாரம் முளைத்திருந்தது. ‘நேற்று இந்தக் கூடாரம் இங்கு இல்லையே’ அது அவரது கவனத்தைக் கவர்ந்தது. அதை நெருங்கினார். அருகே நெருங்க நெருங்க அந்தக் கூடாரத்தின் உள்ளிருந்து ஒரு பெண்ணின் அழுகைச் சப்தம் கேட்டது. விரைந்து நெருங்கினார் உமர்.
கூடாரத்தின் வெளியே ஒரு மனிதன் கவலையுடன் அமர்ந்திருந்தான். அவனை நெருங்கி முகமன் கூறிய உமர், “யார் நீ?” என்று விசாரித்தார்.
“நான் பாலைநிலத்தைச் சேர்ந்தவன். அமீருல் மூஃமினீனைச் சந்தித்து நிவாரண உதவி பெற்றுச் செல்ல வந்திருக்கிறேன்” என்று பதில் வந்தது. அக்காலத்தில் மக்கள் அனைவருக்கும் கலீஃபா அறிமுகமானவராய் இருக்கவில்லை. கலீஃபாவும் ‘ராஜாதி ராஜ, ராஜ மார்த்தாண்ட’ என்று கட்டியக்காரர்கள் புடைசூழ பவனி வருவதில்லை. எளிமையின் இலக்கணம் நபித் தோழர்கள்.
“இதென்ன கூடாரத்திலிருந்து அழுகைக் குரல்?”
“அல்லாஹ்வின் கருணை உம்மீது பொழியட்டும். அதுபற்றி நீர் கவலைப்பட வேண்டாம்”
“பரவாயில்லை, என்னவென்று என்னிடம் சொல்”
“என் மனைவி. பிரசவ வலியில் துடித்துக் கொண்டிருக்கிறாள்”
“அவளுடன் யாரும் துணைக்கு இருக்கிறார்களா?”
“இல்லை”
இரவு. மதீனாவின் வீதிகளில் ரோந்து சென்று கொண்டிருந்தார் உமர் ரளியல்லாஹு அன்ஹு. மைதானம் போன்ற ஓரிடத்தில் புதிதாய்க் கூடாரம் முளைத்திருந்தது. ‘நேற்று இந்தக் கூடாரம் இங்கு இல்லையே’ அது அவரது கவனத்தைக் கவர்ந்தது. அதை நெருங்கினார். அருகே நெருங்க நெருங்க அந்தக் கூடாரத்தின் உள்ளிருந்து ஒரு பெண்ணின் அழுகைச் சப்தம் கேட்டது.
அதற்குமேல் அங்கு நிற்காமல் உடனே கிளம்பி தம் வீட்டிற்கு விரைந்தார் உமர். அலீ ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் மகள் உம்மு குல்சும் உமரின் மனைவியருள் ஒருவர். அவரிடம் வந்த உமர், “அல்லாஹ் உனக்கு எளிதாக்கி வைத்துள்ள வெகுமதியில் சிறிது வேண்டுமா?”mஆவலுடன், “என்ன அது?” என்று விசாரித்தார் உம்மு குல்சும்.
“கணவனும் மனைவியும் வழிப்போக்கர்களாய் மதீனாவிற்கு வந்திருக்கின்றனர். அந்தப் பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. அவளுடன் யாரும் துணைக்கு இல்லை”
“தங்கள் விருப்பப்படியே செய்வோம்” என்றார் உம்மு குல்சும்.
ஊருக்குப் புதிதாய் வந்த வழிப்போக்கருக்கு மருத்துவ உதவி தேவைப்படுகிறது. அதை இரவில் ரோந்து சென்று அறியும் கலீஃபா, வேறு யாரையும் அழைத்து அதற்கு ஏற்பாடு செய்யவில்லை. தம் வீட்டிற்கு விரைந்து சென்று தம் மனைவியை எழுப்பி உதவிக்கு அழைக்கிறார்.
மனைவியும் “இதோ வந்தேன்,” என்று விரைந்து வருகிறார். மறுமையே முதன்மையாய் வாழ்ந்து கொண்டிருந்த சமூகம் அது.”பிரசவம் நிகழ்த்த என்னென்ன தேவையோ அதற்குண்டான அனைத்தும், துணியும், தைலமும் எடுத்துக் கொள். ஒரு பாத்திரமும் தானியமும் பதப்படுத்தப்பட்ட கொழுப்பும் எடுத்து வா”
உம்மு குல்சும் அவர் கேட்டதை எடுத்துக் கொண்டுவர, “வா போகலாம்” என்றார் உமர்.
பாத்திரத்தையும் தானியத்தையும் உமர் எடுத்துக்கொள்ள, உம்மு குல்சும் பின்தொடர விரைந்து அந்தக் கூடாரத்தை அடைந்தார்கள் பரந்துபட்ட நாடுகளின் கலீஃபாவும் அவர் மனைவியும்.
“நீ உள்ளே சென்று உதவு” என்று மனைவியை அனுப்பிவிட்டு அந்த மனிதனுக்குப் பக்கத்தில் சென்று அமர்ந்து கொண்டார் உமர்.”வா, இங்கு வந்து அடுப்பில் நெருப்புப் பற்றவை” என்று அவனை அழைக்க, நடப்பதை ஆச்சரியத்துடன் கவனித்துக் கொண்டிருந்த அந்த மனிதன் நெருப்பைப் பற்ற வைத்தான். அடுப்பில் பாத்திரத்தை வைத்து, சமைக்க ஆரம்பித்து விட்டார் கலீஃபா உமர்.
இதனிடையே உள்ளே பிரசவம் நலமே நிகழ்ந்து முடிந்தது. உமரின் மனைவி கூடாரத்தின் உள்ளிருந்து பேசினார். “ஓ அமீருல் மூஃமினீன்! உங்கள் தோழரிடம் ஆண் குழந்தை பிறந்துள்ள செய்தியைத் தெரிவியுங்கள்.”
அதைக் கேட்ட அந்த மனிதன் “என்னது அமீருல் மூஃமினீனா?” என்று ஆடிவிட்டான். ஓடோடி வந்து சமைத்து உதவி செய்பவர் அமீருல் மூஃமினீனா? பிரசவம் பார்த்து உதவியவர் அவரின் மனைவியா? அதிர்ச்சியடைந்து பின்வாங்க ஆரம்பித்தான் அந்த மனிதன்.
“அங்கேயே நில்” என்றார் உமர்.
சமையல் பாத்திரத்தை எடுத்துக் கூடாரத்தின் வாயிலில் வைத்துவிட்டுத் தம் மனைவியிடம் கூறினார், “அந்தப் பெண்ணை உண்ணச் சொல்”
பாத்திரம் உள்ளே சென்றது. பிரசவித்த பெண் நன்றாகச் சாப்பிட்டு முடித்ததும் மீத உணவும் பாத்திரமும் வெளியே வந்தன. எழுந்து சென்று அதை எடுத்து வந்த உமர் அந்த மனிதனிடம் அதை நீட்டி, “நீயும் இதைச் சாப்பிடு. இரவெல்லாம் தூங்காமல் விழித்திருக்கிறாயே” என்று உபசரித்தார்.
பிறகு உமர் தம் மனைவி உம்மு குல்சுமை அழைத்தார், “வா நாம் போகலாம்”
அந்த மனிதனிடம், “நாளை எம்மை வந்து சந்திக்கவும். உமக்குத் தேவையானதை நாம் அளிப்போம்”மறுநாள் அதைப்போலவே அந்த மனிதன் சென்று உமரைச் சந்தித்தான். கணவன் மனைவிக்கும் புதிதாய்ப் பிறந்த அவர்களின் குழந்தைக்கும் சேர்த்து நிவாரணம் அளிக்கப்பட்டது.நமக்கெல்லாம் விந்தையாகிப்போன இத்தகைய செயல்கள் கலீஃபா உமரின் இஸ்லாமிய ஆட்சியின் காலத்தில் வெகு இயல்பாய் நிகழ்ந்தன.
-நூருத்தீன்
மூலம் : அல்பிதாயா வந்நிஹாயா 7/140
நன்றி : சமரசம் 16-28, பிப்ரவரி 2011