ஃபாத்திமா முஸஃப்ஃபர் ”முஸ்லிம் லீக்”கிலிருந்து தற்காலிகமாக நீக்கம்
திமுகவால் பிடுங்கப்பட்ட ஒரு தொகுதி மீண்டும் ”முஸ்லிம் லீக்”கிற்கு கிடைத்ததற்கு ஒரு பெண்ணின் போர்க்குரலே கராணம் என்றால் மிகையல்ல. அப்படிப்பட்ட ஃபாத்திமா முஸஃப்ஃபர் ‘முஸ்லிம் லீக்”கிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு திமுக வழங்கிய மூன்று சீட்டில் ஒன்றை பிடுங்கிய திமுகவின் அடாவடி அரசியலை கண்டித்து தன்மானக் குரல் எழுப்பியவர் சகோதரி ஃபாத்திமா முஸஃப்ஃபர். அதோடு கருணாநிதியின் இந்த சந்தர்ப்பவாத அரசியலை கண்டும் காணமல் அமைதி காக்கும் முஸ்லிம் லீக்கின் தலைவர் காதர் முஹ்யித்தீன் பதவி விலக வேண்டும் என்றும் துணிந்து பத்திரிக்கையாளர் சந்திப்பில் கர்ஜித்தார் சகோதரி ஃபாத்திமா முஸஃப்ஃபர்.
இயற்கையாக இந்த கர்ஜனை காதர் முஹ்யித்தீனிடமிருந்து வந்திருக்க வேண்டும். என்ன செய்வது! முஸ்லீம் லீக் கட்சியை தி.மு.க.விடம் பல ஆண்டுகளுக்கு முன்னாலேயே அவர் அடகு வைத்துவிட்டதால் தற்போது அவரால் முனகக்கூட முடியாது என்பது ஒருபுறம் இருக்கட்டும்,
காதர் முஹ்யித்தீனால் முடியாத ஒரு காரியத்தை அவர் கட்சியைச்சார்ந்த பெண்சிங்கம் (இந்த இடத்தில் இப்படி அழைப்பதை நிச்சயம் சமுதாயம் பெருமைப்பட வேண்டும்) கர்ஜிப்பது அவருக்குப் பிடிக்காமல் அவர் இந்த முடிவை எடுத்திருப்பார் என்று சொல்வதைவிட கட்சிக்கு அப்பார்பட்ட; ஏற்கனவே அவர் அடிமைப்பட்டுப்போன அவரை ஆட்டிப்படைக்கும் ஒருவரின் விருப்பத்திற்கிணங்கவே இம்முடிவை அக்கட்சித்தலைமை எடுத்துள்ளது என்று சமுதாய மக்கள் எண்ணினால் அதைத்தவறு என்று எவர்தான் சொல்ல முடியும்?!
இது ஒருபுறமிருக்க, வெள்ளிக்கிழமை தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்கிய பாளையங்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள தற்போதைய அமைச்சர் டி.பி.எம். மைதீன்கான், தனது பிரச்சாரத்தை ஒரு விநாயகர் கோயிலில் சிறப்பு பூஜையை முடித்துக் கொண்டு, விநாயகரை வணங்கி கன்னத்தில் போட்டுக் கொண்டு, தேங்காய் விடலையும் போட்டு தனது பிரசாரத்தை தொடங்கினாராம்.
அரசியல்ல இதெல்லாம் சாதரணமப்பா! என்ற காமெடி வரி அனைவருக்கும் பரிச்சயமானதுதான். அரசியல் என்றாலே சில விட்டுக் கொடுத்தல்களை செய்து தான் ஆகவேண்டும் என்பது எழுதாத சட்டமாக உள்ளது. ஆனால் அப்படி விட்டுக் கொடுப்பது இஸ்லாமாக இருப்பதுதான் வேதனையாகும். அரசியல் என்று வந்துவிட்டால் அங்கே இஸ்லாம் இரண்டாம் பட்சம்தான் போலும். வெள்ளிக்கிழமை தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்கிய பாளையங்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள தற்போதைய அமைச்சர் டி.பி.எம். மைதீன்கான், தனது பிரச்சாரத்தை தொடங்கிய இடம்தான் கவனிக்க வேண்டியதாகும். இவர் நெல்லை வண்ணார்பேட்டை சாலைத் தெருவில் உள்ள வெற்றி வேலடி விநாயகர் கோயிலில் சிறப்பு பூஜையை முடித்துக் கொண்டு, விநாயகரை வணங்கி கன்னத்தில் போட்டுக் கொண்டு, தேங்காய் விடலையும் போட்டு தனது பிரசாரத்தை தொடங்கினாராம்.
என்ன இப்படி? என கட்சிக்காரர்களிடம் கேட்டால், மைதீன்கான் இதே தொகுதியில் 2001, 2006 தேர்தல்களில் போட்டி போட்டபோதும் இதே கோயிலில் வணங்கிவிட்டுதான் பிரசாரத்தை தொடங்கினார். இரு தேர்தல்களிலும் அவருக்கு அமோக வெற்றி. அதுமட்டுமல்ல, கடந்த தேர்தல் வெற்றி அவரை அமைச்சராகவும் ஆக்கியது. அந்த “சென்டிமெண்ட்’தான் மைதீன்கானை இந்தத் தேர்தலிலும் இங்கே அழைத்து வந்துள்ளது என்றனராம்.
முஸ்லிமான மைதீன்கான், தனக்கு வெற்றியையும்-தோல்வியையும் தீர்மானிப்பது இறைவன் தான் என்பதை மறந்து, அல்லாஹ்வை விடுத்து வேறு ஒரு தெய்வத்தை பிரார்த்தித்து தனது பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார் என செய்திகள் கூறுகின்றன. மேலும், இந்த கோயிலில் வழிபட்டு சென்றால் வெற்றி உறுதி என்பதும் அவரது செண்டிமெண்ட் என்றும் தெரிகிறது. (-செய்தி உதவி: mugavai abbas)
[ தேர்தலுக்காக நிற்கும் அச்சகோதரருக்கு ஒன்றை சொல்லிக்கொள்வோம்; அகிலத்தையும் படைத்து; அதில் அவரை நிராகரிப்பாளராக படைக்காமல் ஒரு முஸ்லிம் தாய்க்குப் பிறக்கச்செய்தானே அந்த அருளுக்குப்பகரமாக இந்த உலகையே விலையாக கொடுத்தாலும் அதற்கு ஈடாகாதே! கற்றறிந்த சகோதரருக்கு இது விளங்காமல் போனது எப்படி?
”மறுமைக்கு முன்பாக இவ்வுலகம் அற்பமானது” என்று தெள்ளத்தெளிவாக ஏக இறைவன் தனது திருமறையம் அருள்மறை குர் ஆனில் தெளிவாகச் சொன்னதை சகோதரர் விளங்காமல் வாழ்வாரேயானல் கைசேதம் இஸ்லாத்திற்கல்ல, அவருக்குத்தான்.
அவர் ”தவ்பா” செய்யாத பட்சத்தில் அவருக்கு எந்த ஊர் மஹல்லவாசியாவது வரவேற்பு என்கின்ற பெயரில் அவருக்கு கண்ணியப்படுத்தும் காரியத்தை செய்வாரெனில், நிச்சயமாக அல்லாஹ்வுடைய பார்வையில் அவர்களும் தீமையைத்த்தடுக்காத குற்றத்திற்கு ஆளாக நேரிடும் என்பதை மறந்திட வேண்டாம்.
பதவி எனும் மேல் துண்டிற்காக இஸ்லாம் எனும் உயிர்மூச்சை பின்னுக்கு தள்ளுவது ஒரு முஸ்லிமுக்கு அழகல்ல என்பதை சகோதர வாஞ்சையோடு அவருக்கு சொல்லிக் கொண்டு, அவரது இறைநம்பிக்கையின் உறுதிக்காக பிராத்திக்கிறோம். சகோதரர் அவர்களுக்கு அல்லாஹ் நல்ல ஹிதாயத்தைக் கொடுப்பானாக!