[ பெரும்பாலும் நமது நாட்டில் தொழுகைக்குப்பின் கூட்டு துஆ என்பது தொன்றுதொட்டு இருந்து வருகிறது. அதனாலேயே அது நம்மிடம் பழக்கமாகிப்போனது.
இதில் பெரும் வினோதம் என்னவெனில் கூட்டு ”துஆ” என்பது நபி வழி அல்ல என்பது மக்களுக்கு தெளிவாக விளங்கிவிட்ட இக்காலத்தில் ”இல்லையில்லை கூட்டு ”துஆ”விற்கு நபிவழியில் ஆதாரம் இருக்கிறது…” என்று ஆலிம்களில் சிலர் சுற்றிவளைத்து விளக்கம் அளிப்பது அவர்களின் நம்பகத்தன்மையை மக்கள் மத்தியில் கேள்விக்குறியாக்குகிறது என்பதை அவர்கள் எண்ணிப்பார்ப்பதில்லை.
ஐவேளை கடமையாக்கப்பட எந்த ஒரு ஃபர்ளான தொழுகைக்குப்பின்னரும் ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூட்டு துஆ செய்தார்கள் என்பதற்கு தெளிவான ஆதாரம் எதுவும் இல்லை என்று தெளிவாகத்தெறிந்த பின்னரும் இதுகுறித்து சில பெரும் ஆலிம்கள்கூட விளக்கம் எனும் பெயரில் வாதம் புரிவது நிச்சயமாக ஆரோக்கியமான செயலல்ல.
சாதாரண பாமர மக்கள்கூட நபி வழியை பின்பற்றுவதில் காட்டும் ஒரு ஈடுபாடு கற்றறிந்த ஆலிம் பெருமக்களிடம் காணாமல் போய்க்கொண்டிருப்பது உண்மையில் மிகவும் வருந்தத்தக்க விஷயமே.
தான் சொல்லாத ஒரு விஷயத்தை சொன்னதாக எவரேனும் சொன்னால் அவர்களுக்கு மறுமையில் என்ன விளைவு ஏற்படும் என்பதை நபிபெருமானர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எச்சரித்திருக்க எப்படி நபிபெருமானர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் எச்சரிக்கையை அச்சமின்றி அவர்களால் அலட்சியப்படுத்த முடிகிறது என்பதை எண்ணிப்பார்க்க முடியவில்லை.
பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கற்றுக்கொடுக்காத ஒன்றை இருப்பதாக சொல்வது எவ்வளவு பெரிய குற்றம் என்பதை அவர்கள் ஏன் உணரவில்லை? உண்மையை உணர்ந்துகொள்ள முடியாத கல்வியினால் என்ன பயன்?
கூட்டு துஆவென ஒன்றை நாம் ஏற்படுத்தி வைத்திருப்பதனால் சாதாரண மக்கள் தாங்கள் துஆ கேட்டால் அல்லாஹ் எற்றுக்கொள்ளமாட்டான் ஹஜ்ரத்மார்கள் கேட்டால்தான் அல்லாஹ் ஏற்றுக்கொள்வான் என்ற நம்பிக்கையை மனதில் பதிய வைத்துக்கொள்வதன் வாயிலாக அல்லாஹ்வின்மீது அவர்களுக்கு அவநம்பிக்கை (நாம் கேட்பதைவிட ஹஜ்ரத்மார்கள் கேட்டால்தான் அல்லாஹ் ஏற்றுக்கொள்வன் என்று தன்னுடைய பிரார்த்தனையின் மீது அவநம்பிக்கை) ஏற்பட இந்த கூட்டு துஆ காரணமாகவில்லையா?
இன்னொருவிதத்தில் பார்க்கப்போனால் ஒவ்வொரு ஃபர்ளான தொழுகைக்குப்பிறகு தொழுகையாளி ஒவ்வொருவரும் தத்தமது தேவைகளை அல்லாஹ்விடம் நேரடியாக கேட்பதற்கான உரிமையை தட்டிப்பறிக்கும் செயலாகக்கூட தெரியவில்லையா?
முன்னோர்கள் வழியா அல்லது முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழியா? எது சிறந்தது? என்பதை அவர்கள் தத்தமது மனசாட்சியிடம் கேட்டுக்கொள்ளட்டும்!
-adm. nidur.info ]
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் அவர்களின் கலீபாக்களும், மற்றும் சஹாபாக்களும் ஃபர்ளுத் தொழுகைக்குப் பிறகு கூட்டாக ”துஆ” ஓதியதற்கு எவ்வித ஆதாரமுமில்லை. அதாவது இமாம் ”துஆ” ஓத மற்றவர் “ஆமீன் ஆமீன்” என்று கூறும் நிலை (இன்று நமது பகுதிகளில் நடைமுறையில் இருப்பது போல்) அவர்கள் காலத்தில் கிடையாது.
நம்மைவிட ”துஆ” கேட்கும் வகையில் பன்மடங்கு ஆர்வம் கொண்டுள்ள நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும், அவர்களின் உத்தம ஸஹாபாக்களும் (ரளியல்லாஹு அன்ஹூம்) ஒரு நேரத் தொழுகையிலும் கூட இமாம் ”துஆ” ஓத, மற்றவர் ஆமீன் கூறும் அமைப்பில் இருந்ததற்கான எந்த ஒரு ஆதாரமும் ஹதீஸ்களில் கிடையாது. மாறாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும், சஹாபாக்களும் ஜமாஅத் முடிந்தவுடன் தனித்தனியே ”துஆ” ஓதியுள்ளார்கள் என்பதையே ஹதீஸ்களின் வாயிலாக அறிய முடிகிறது.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தொழுகையிலிருந்து திரும்பிவிட்டால் “மும்முறை”
(பின்னர்)
اللَّهُمَّ أَنْتَ السَّلأمُ وَ مِنْكَ السَّلأمُ تَبَارَكْتَ يَا ذَا الْجَلاَلِ وَ الإِكْرَم
“அல்லாஹும்ம அந்த்தஸ்ஸலாம் வமின்கஸ் ஸலாம் தபாரக்த்த யாதல் ஜலாலி வல்இக்ராம்” என்று ஓதுவார்கள். என்று ஸவ்பான் ரளியல்லாஹு அன்ஹு அறிவித்துள்ளார்கள். (நூல்: முஸ்லிம், திர்மிதீ, இப்னுமாஜ்ஜா, அஹ்மத்)
பொருள்: ”யா அல்லாஹ்! நீயே சாந்தியானவன். மேலும் உன்னிடமிருந்தே சாந்தி பிறக்கிறது கண்ணியமும், மகத்துவமும் மிக்கவனாகிய நீயே மிக மேலானவனாகும்.”
மேற்காணும் துஆவை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தாம் தொழ வைத்துவிட்டுத் தனித்த நிலையில் ஓதினார்களே அன்றி அவர்கள் தொழ வைத்தபின் ஓதிய துஆக்களுக்கு எந்த ஸஹாபியும் ஆமீன் கூறினார்கள் என்பதை ஹதீஸ்களில் காணமுடியவில்லை.
ஆகவே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தனித்து ஓதியது போன்றே மற்ற ஸஹாபாக்களும் ஓதியிருப்பார்கள் என்பதை நம்மால் உணர முடிகிறது.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ”உங்களில் ஒருவர் தொழுதுவிட்டால் அவர் அல்லாஹ்வைப் போற்றிப் புகழ ஆரம்பித்து, பின்னர் நபி அவர்கள் மீது ஸலவாத்தோதி, பிறகு அவர் தாம், நாடியவற்றை (அல்லாஹ்விடம் கேட்டுப்) பிரார்த்திப்பாராக!” என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: ஃபுழாலத்து பின் உபைத் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: திர்மிதீ)
நான் ஒரு முறை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் அபூபக்கர் ரளியல்லாஹு அன்ஹு, உமர் ரளியல்லாஹு அன்ஹு ஆகியோர் இருக்கும் போது தொழுது கொண்டிருந்தேன். நான் தொழுதுமுடித்து உட்கார்ந்தவுடன் அல்லாஹ்வை போற்றிப் புகழ ஆரம்பித்து, பின்னர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது ஸலவாத்து கூறிவிட்டுப் பின்னர் எனக்காக துஆ கேட்டுக் கொண்டிருந்தேன், அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ”நீர் கேளும்! தரப்படும்” என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: அப்துல்லாஹ்பின் மஸ்ஊத் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: திர்மிதீ)
அல்லாஹ்வின் தூதரே! (அல்லாஹ்விடம்) மிகவும் ஏற்று கொள்ளப்படுவதற்கு தகுதிவாய்ந்த துஆ(வின் நேரம்) எது? என்று கேட்கப்பட்டது. அதற்கவர்கள், கடைசி இரவின் நடுப்பகுதியும், ஃபர்லான தொழுகைகளுக்குப் பிறகும் என்றார்கள். (அபூ உமாமா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: திர்மிதீ)
மேற்காணும் ஹதீஸ்களின் வாயிலாக ஃபர்லான தொழுகைகளுக்குப் பிறகுள்ள நேரம் துஆ கபூலாகக்கூடிய நேரம் என்பதையும் நமது தேவைகளை நாமே கேட்டுப்பெற முயற்சிக்க வேண்டும் என்றும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தமது ஸஹாபாக்களுக்கு கற்றுக்கொடுத்துள்ளார்கள் என்பதையும் அறிகிறோம்.