கேள்வி 1. ஸஜ்தாவுடைய வசனத்தை ஓதினால் அல்லது கேட்டால்; கேட்ட உடனே ஸஜ்தா செய்ய வேண்டுமா?
2. உடனே செய்யவேண்டுமெனில் எந்த இடமாக இருந்தாலும் செய்ய வேண்டுமா? (உதாரணம் அலுவலகம், கடைதெரு – வேலை பார்த்துக்கொண்டு இருக்கும் போது அல்லது கடை தெருவில் நடந்து சென்றுக்கொண்டு இருக்கும் போது ஓதிக்கொண்டு சென்றால் அப்போது ஸஜ்தவுடைய வசனத்தை ஓதும்படி நேர்ந்தால்).
3. ஸஜ்தா செய்யும் பொது ஒளூ இருக்க வேண்டுமா? ஒளூ இருக்க வேண்டுமெனில், ஸஜ்தா செய்ய நேர்வதால் ஒளூ இருக்க வேண்டும் என்று கூறுகிறீர்களா அல்லது சாதாரணமாகவே குர்ஆன் ஓதும் போது ஒளு இருக்க வேண்டுமா?
பதில்: நாமாக ஓதும் போதும் சரி, பிறர் ஓதுவதை கேட்கும் சந்தர்பங்கள் அமைந்தாலும் சரி ஸஜ்தாவிற்குரிய வசனங்கள் வந்தால் அந்த சந்தர்பத்தில் ஸஜ்தா செய்ய ஆர்வமூட்டப்பட்டுள்ளது. ஆனாலும் முஸ்லிம் அறிஞர்களுக்கு மத்தியில் ஸஜ்தா வசனங்கள் எத்தனை… எவற்றிர்க்கெல்லாம் ஸஜ்தா செய்வது என்பதில் கருத்து வேறுபாடு நிலவுகிறது.
குறிப்பாக மத்ஹப்களின் மத்தியில் இதில் கருத்தொற்றுமை காணப்படவில்லை.
22:77 இது நம்பிக்கையாளர்களே ஸஜ்தா செய்யுங்கள் என்று சொல்லும் வசனம். ஆனால் ஹனஃபி மத்ஹபினர் இந்த வசனத்திற்கு ஸஜ்தா செய்யக் கூடாது என்று கூறுகிறார்கள். ஹனஃபி அறிஞர்கள் வெளியிட்ட (இந்திய அச்சு) குர்ஆனில் இதை காணலாம்.
38:24 வது வசனம் நபி தாவூத் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் ஸஜ்தாவில் வீழ்ந்தார் என்று சொல்லுகிறது. இந்த இடத்தில் ஸஜ்தா செய்ய தேவையில்லை என்று ஷாஃபி மத்ஹவைச் சேர்தவர்கள் கூறுகிறார்கள்.
இந்த கருத்து வேறுபாடு மட்டுமின்றி ஸஜ்தா செய்வது பற்றி சில பலவீனமான ஹதீஸ்களும் இருப்பதால் ஸஜ்தா வனங்கள் குறித்து தெரிந்துக் கொள்ள ஆசைப்படும் சகோதரர்களுக்கு மத்தியில் ஒரு குழப்பமான நிலை நிலவி வருகிறது. அந்த குழப்பங்களை நீக்கும் விதத்தில் இந்த கட்டுரையை அமைத்துள்ளோம்.
ஸஜ்தாவிற்குரிய வசனங்கள் 15 என்று பொதுவாக நம்பப்படுகிறது. இந்த நம்பிக்கையை தான் பிற்காலத்தில் குர்ஆனில் அச்சிட்டுக் கொண்டனர்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் 15 வசனங்களுக்கு ஸஜ்தா செய்தார்கள் என்று எந்த ஒரு ஆதாரப்பூர்வமான ஹதீஸும் இல்லை.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் எனக்கு 15 ஸஜ்தா வசனங்களை ஓதிக் காட்டினார்கள் என்று இப்னு ஆஸ் ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள். ஸஜ்தா வசனங்கள் 15 என்பவர்கள் இதைத்தான் ஆதாரமாகக் கொள்கிறார்கள்.
இதில் இரண்டு விஷயங்களை நாம் கவனிக்க வேண்டும்.
இந்த 15 வசனங்களில் ஸஜ்தா செய்ய வேண்டும் என்ற அடிப்படையில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஓதிக் காட்டினார்களா… அல்லது குர்ஆனில் ஸஜ்தா வசனங்கள் நிறைய இருக்கின்றன என்பதை காட்டுவதற்காக ஓதிக்காட்டினார்களா… இவற்றிர்க்கு ஸஜ்தா செய்ய வேண்டும் என்ற அடிப்படையில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஓதிக்காட்டியதாக அந்த ஹதீஸில் எந்த விபரமும் இல்லை. இது முதலாவது காரணம்.
இப்னு மாஜா – தாரகுத்னி – அபூதாவூத் – ஹாக்கிம் ஆகிய நூல்களில் இந்த ஹதீஸ் பதிவு செய்யப்பட்டிருந்தாலும் இது ஆதாரப்பூர்வமான ஹதீஸ் அல்ல. இதில் இடம் பெறும் ‘ஹாரிஸ் பின் ஸயீத்’ என்பவர் யாரென்று அறியப்படாதவர். இவர் இந்த ஒரு செய்தியை மட்டும் தான் அறிவித்துள்ளார். எனவே இது பலவீனமான செய்தியாகும். இது இரண்டாவது காரணம். எனவே இந்த செய்தியை ஏற்க முடியாது.
15 வசனங்களுக்கு ஸஜ்தா செய்ய வேண்டும் என்று அவர்கள் எடுத்துக் காட்டும் வசனங்களில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சில வசனங்களுக்கு மட்டுமே ஸஜ்தா செய்துள்ளார்கள்.
அந்த 15 வசனங்கள், 7:206 – 13:15 – 16:49 – 17:107 – 19:58 – 22:18 – 22:77 – 25:60 – 27:25 – 32:15 – 38:24 – 41:38 – 53:62 – 84:21 – 96:19.
இவற்றில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஸஜ்தா செய்த – செய்ய சொன்ன வசனங்கள் என்னவென்று பார்ப்போம்.
53:62 வது வசனத்தை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஓதி ஸஜ்தா செய்தார்கள் என்ற விபரம் புகாரி 1067 1070- முஸ்லிம் – திர்மிதியில் வருகிறது.
38:24 வது வசனத்தை ஓதி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஸஜ்தா செய்தார்கள் என்ற செய்தி புகாரி 1069 முஸ்லிம் – திர்மிதி 526ல் வருகிறது.
22:18,22:77 வசனங்களுக்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஸஜ்தா செய்ய சொன்ன விபரம் அஹ்மத் – திர்மதி 527 நஸயி ஆகிய நூட்களில் வருகிறது. திர்மிதியில் இடம் பெறும் ஹதீஸ் பலவீனமாகும். ‘மிஸ்அர் பின் ஹாஆன் என்பவர் இடம் பெறுகிறார் இவர் பலவீனமானவர்.
84:21 – 96:19 ஆகிய வசனங்களை ஓதும் போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஸஜ்தா செய்த விபரம் புகாரி 1074 – திர்மிதி 523 முஸ்லிம் – அஹ்மத் – அபூதாவூத் ஆகிய நூல்களில் வருகிறது.
இந்த ஆறு வசனங்களுக்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஸஜ்தா செய்தார்கள் என்பதற்கு தான் ஆதாரப்பூர்வமான ஹதீஸ் கிடைக்கின்றன. இது தவிர மற்ற வசனங்களுக்கு ஸஜ்தா செய்தார்கள் என்பதற்கு பலமான செய்திகள் ஒன்றும் இல்லை.
எனவே நாம் இரண்டு முடிவுக்கு வர வேண்டும்.
1) ஸஜ்தாவின் வசனங்கள் ஆறு என்று முடிவு செய்ய வேண்டும். அல்லது
2) ஸஜ்தா பற்றி கூறப்படும் அனைத்து வசனங்களுக்கும் ஸஜ்தா செய்ய முடிவு செய்ய வேண்டும்.
இரண்டாவது முடிவுக்கு நாம் வந்தால் ஸஜ்தா வசனங்களின் எண்ணிக்கை ஏராளமாக இருப்பதை அறிந்துக் கொள்ளலாம்.
ஸஜ்தா பற்றி கூறப்படும் 15 வசனங்கள் மட்டுமில்லாமல் 3:113 – 7:120 – 15:98 -16:48 -20:70 – 25:60 – 26:46 -55:6 – 68:43 – 76:26 ஆகிய வசனங்களிலும் ஸஜ்தா பற்றி ஆர்வமூட்டப்பட்டுள்ளது.
இந்த இரண்டு முடிவில் ஒன்றை தேர்ந்தெடுக்கலாமே தவிர இரண்டிற்கும் சம்பந்மதில்லாமல் 15 என்று வரையறுக்க எந்த முகாந்திரமும் இல்லை.
ஓதுபவர் மட்டுமின்றி ஓதுவதை கேட்பவரும் ஸஜ்தா செய்ய வேண்டும்.
குர்ஆனில் ஸஜ்தா என்ற பதம் ஒன்றுக்கு மேற்பட்ட அர்த்தங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளன. அவைகளில் ஒன்று நாம் தொழுகையில் செய்யும் ஸஜ்தா முறையாகும். தொழுகையில் மட்டுமின்றி தொழுகைக்கு வெளியிலும் இந்த ஸஜ்தாவை செய்யும் சந்தர்பங்கள் உண்டு. அவைகளில் ஒன்று குர்ஆனின் சில வசனங்களை ஓதும்போது செய்ய வேண்டியதாகும்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் நஜ்மு அத்தியாயத்தை ஓதி ஸஜ்தா செய்தார்கள். அப்போது அவர்களுடன் இருந்த அனைவரும் ஸஜ்தா செய்தார்கள் என்ற விபரம் புகாரி 1071-ல் இடம் பெற்றுள்ளது.
ஓதுதை கேட்பவரும் ஸஜ்தா செய்துள்ளார்கள் – நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அதை அங்கீகரித்துள்ளார்கள் என்பதிலிருந்து ரேடியோ – தொலைக்காட்சி போன்றவற்றில் ஓதப்படும் வசனங்களுக்கும் (ஸஜ்தா வசனமாக இருந்தால்) ஸஜ்தா செய்யலாம் என்பதை விளங்கிக் கொள்ளலாம்.
ஒருவர் தெருவில் நடந்துக் கொண்டிருக்கிறார் அப்போது ஸஜ்தா வசனத்தை செவியுறுகிறார். அப்போது அவர் ஸஜ்தா செய்ய வேண்டுமா…. இது சிரமமாக இருக்காதா.. என்று சிலருக்கு தோன்றலாம். ஸஜ்தா வசனங்களுக்கு ஸஜ்தா செய்ய வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டதல்ல என்பதை விளங்கிக் கொண்டால் ஐயம் விலகி விடும்.
நான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் நஜ்மு அத்தியாயத்தை ஓதிக் காட்னேன். அதற்கு அவர்கள் ஸஜ்தா செய்ய வில்லை என்று இப்னு ஸாபித்(ரலி) அறிவிக்கிறார்கள் (புகாரி 1073 – திர்மிதி 525)
உமர் ரளியல்லாஹு அன்ஹு ஜும்ஆவில் மேடையில் நின்று 16 வது அத்தியாயத்தின் ஸஜ்தா வசனத்தை ஓதி இறங்கி ஸஜ்தா செய்தார்கள். மக்களும் உடன் ஸஜ்தா செய்தனர். அடுத்த ஜூம்ஆவிலும் அதே வசனத்தை ஓதி ‘மக்களே! ஸஜ்தா செய்ய நான் தூண்டவில்லை. ஆனாலும் யார் ஸஜ்தா செய்கிறாரோ அவருக்கு கூலியுண்டு. ஸஜ்தா செய்யதவர் மீது குற்றமில்லை என்றார்கள். (புகாரி 1077 திர்மிதி 525)
நாமாக ஓதும்போதாகட்டும், பிறர் ஓதுவதை – டிவி – ரேடியோவில் ஓதுவதை கேட்கும்போதாகட்டும் ஸஜ்தா செய்யக் கூடிய சூழ்நிலை இருந்தால் – விரும்பினால் – ஸஜ்தா செய்யலாம்.
ஸஜ்தா செய்யும் போது தக்பீர் சொல்லி ஸஜ்தா செய்ய வேண்டும் என்று ஒரு செய்தி அபூதாவூதில் வருகிறது. இதில் இப்னு உமர் என்று ஒருவர் வருகிறார் இவர் பலவீனமானவர் என்பதால் இந்த செய்தியை ஆதாரமாக எடுக்க முடியாது. எனவே தக்பீர் சொல்ல வேண்டும் என்பது சுன்னத்தல்ல.
ஒரு ஸஜ்தா செய்தால் போதும் – ஸஜ்தா செய்தார்கள் என்று தான் எல்லா அறிவிப்புகளிலும் வருகிறது. இதற்கு இரண்டு ஸஜ்தா செய்தார்கள் என்று பொருள் எடுக்க முடியாது.
ஸஜ்தா செய்து விட்டு எழுந்து ஸலாம் கொடுப்பதற்கும் எந்த வித ஆதாரமும் கிடைக்கவில்லை.
ஸஜ்தா செய்யும் போது ஒளுவுடன் இருக்க வேண்டும் என்பதும் கட்டாயமல்ல. ஏனெனில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஸஜ்தா வசனத்தை ஓதி ஸஜ்தா செய்தபோது உடனிருந்த அனைவரும் ஒளுவுடன் தான் இருந்தார்கள் என்று கூற முடியாது. ஆனால் அனைவரும் ஸஜ்தா செய்துள்ளார்கள். ஒளு அவசியம் என்றால் இப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறி இருப்பார்கள். ஒளு அவசியம் என்று அவர்கள் கூறாததிலிருந்து ஒளு கடமையில்ல என்பதை விளங்கலாம்.
ஸஜ்தா வசனங்களில் ஓதும் துஆ.
ஸஜத வஜ்ஹிய லில்லதி க்கலகஹூ வஷக்க ஸம்அஹூ வபஸரஹூ பி ஹவ்லிஹி வகுவ்வதிஹி என்ற பிரார்த்தனையை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் செய்துள்ளார்கள்.(ஆய்ஷா ரளியல்லாஹு அன்ஹா, திர்மிதி 529)
(பொருள் : எனது முகத்தை படைத்து தனது வல்லமையாலும் ஆற்றலாலும் அதில் செவிப்புலனையும் – பார்வைப் புலனையும் ஏற்படுத்திய இறைவனுக்காக என்முகம் பணிகிறது)
ஸஜ்தா வசனங்கள் பற்றிய விபரங்கள் இதுதான்.
இதில் குறையையோ – மாற்று கருத்தையோ அறிஞர்கள் கண்டால் இறைவனுக்காக சுட்டிக்காட்டவும்.
-ஜி.நிஜாமுத்தீன் (ஜி என்)
source: http://tamilmuslimgroup.blogspot.com