ஆறாவது சொற்பொழிவு
ஹிஜ்ரி ஒன்றில் மதீனாவிலுள்ள மஸ்ஜிதில் நபிபெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்து அவனுக்கு நன்றி தெரிவித்துவிட்டு நிகழ்த்திய சொற்பொழிவு இது:
மக்களே! முன்னதாகவே உங்கள் (வருங்காலத்) தேவைகளை சேமித்து வைத்துக் கொள்ளுங்கள். யாரும் தத்தம் ஆட்டு மந்தையை, மேய்ப்பாளன் இன்றி விட்டுச்செல்ல நேரும் என்பதை அல்லாஹ்வின்மீது ஆணையாக நீங்கள் ஒவ்வொருவரும் அறிய வேண்டியது அவசியம்.
அப்போது – ஒதுங்க குடிசையோ, குகையோ இல்லாத நிலையில் உங்கள் இறைவன் கேட்பான்: ‘என் தூதர் உங்களை அணுகி செய்தியை உங்களிடம் தெரிவிக்கவில்லையா? உங்களுக்கு செல்வத்தையும் நலன்களையும் நான் கொடுத்தேன்; உங்களுக்காக – உங்கள் மறுமைக்காக – நீங்கள் என்ன பாதுகாவல் தேடிக்கொண்டுள்ளீர்கள்?’ என்று.
அப்போது நீங்கள் (உங்களுக்கு) உதவக்கூடியது உண்டா என்று வலமும், இடமும் தேடுவீர்கள். ஆனால் (உதவுவது) எதுவும் இருக்காது. பின்னர் முன்னால் பார்வையைச் செலுத்தினால் நரக நெருப்புத்தான் தென்படும்.
ஒரு துண்டு பேரித்தம்பழத்தாலாவது (அதை தர்மம் செய்வதன் மூலம்) அந்த நெருப்பிலிருந்து தமது முகத்தைக் காப்பாற்றிக் கொள்ள முயற்சிப்பவர்கள் நிச்சயம் அதை செய்துதான் தீரவேண்டும். அதையும் செய்ய சக்தியற்றவர்கள் ஒரு நல்ல வார்த்தையின் மூலமாவது இவ்விதம் (நரகத்திலிருந்து) தற்காப்புச் செய்து கொள்ள முயலவேண்டும். நற்செயலுக்கு (அதே போன்று) பத்து முதல் எழுநூறு மடங்கு நன்மைகள் வழங்கப்படுகின்றன. உங்கள் மீதும் ரஸூலுல்லாஹ்வின் மீதும் ஸலாமத்து (அமைதியு)ம், அல்லாஹ்வின் கருணையும், பாக்கியங்களும் உண்டாவதாக! (இப்னு ஹிஷாம்)
ஏழாவது சொற்பொழிவு
ஹிஜ்ரி இரண்டில் ரமளான் மாதம் பிறை 17-ல் பத்ரு யுத்த களத்தில் ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நிகழ்த்திய சொற்பொழிவு இது:
அல்லாஹ்வைப் போற்றிவிட்டு, நன்றி தெரிவித்துவிட்டு சொன்னார்கள்;
அல்லாஹ் வற்புறுத்தியுள்ளதன்படி ஒழுகுங்கள். அவன் விலக்கியுள்ளவற்றிலிருந்து விலகிக்கொள்ளுங்கள் என்று வற்புறுத்திக் கூறுகிறேன். ஏனெனில், மிகப்பெரியவனும், உன்னதமானவனும், ‘ஷானுஹ’வானவனுமான அவன் சரியானதைச் செய்யமாறு கட்டளையிடுகிறான். சத்தியத்தை நேசிக்கிறான். நல்லவர்களுக்கு அவர்களுடைய நற்செயல்களுக்குச் சன்மானமாகத் தனக்கு அருகிலுள்ள உன்னதப் பதவிகளை அளித்தருளுகிறான். தங்கள் நற்செயல்களால் அவர்கள் நினைவு கூறப்படுகின்றனர். அதனால் அவர்கள் (தங்களுக்குள்) ஒருவரையொருவர் மிகைத்தவர்களாய் இருக்கின்றனர்.
நிச்சயமாக, நீங்கள் சத்தியத்தின் பல்வேறு படித்தரங்களில் உள்ளீர்கள். இவ்வித நிலையில் அல்லாஹ்வின் நல்லருளை வேண்டினாலன்றி அல்லாஹ் உங்கள் யாரிடமிருந்தும் எதையும் ஏற்பதில்லை. போர்க்களத்தில் பொறுமைக் காட்டுவது உன்னதமான நற்பண்புகளில் ஒன்றாகும். அதன் மூலம் அல்லாஹுத்தஆலா துன்பத்தை அகற்றித் துயரத்திலிருந்து விடுதலையளிக்கிறான். அந்தப் பொறுமையால் மறுமையில் நீங்கள் ஈடேற்றமடைவீர்கள்.
அல்லாஹ்வின் திருத்தூதர் உங்கள் மத்தியிலே இருக்கிறார். அவர் உங்களை எச்சரித்து உங்களுக்கு உதவி தருகிறார். எனவே, உங்களிடம் அல்லாஹுத்தஆலா விரும்பாதது, வெறுக்கத்தக்கது ஏதேனும் இருந்திருந்தால் அதற்காக இன்று (அந்தரங்கச் சுத்தியாக) வெட்கப்படுங்கள். ஏனெனில், ‘அல்லாஹ்வை விரும்பாமல் வெறுப்பது நீங்கள் உங்களுக்குள் ஒருவரையொருவர் வெறுப்பதைவிட மோசமானதாகும்’ என்று அல்லாஹ்வுத்தஆலா அருளியுள்ளான்.
தன் திருமறையில் அவன் உங்களுக்கு என்ன உத்தரவிட்டுள்ளான் என்பதைப் பாருங்கள்! தன் அடையாளங்களில் உங்களுக்குக் காட்டியவற்றையும், நீங்கள் அவமானமடைந்தபின் உங்களுக்கு அவன் கண்ணியமுண்டாக்கியதையும் கவனித்துப் பாருங்கள். எனவே, அவன் திருமறையைப் பற்றிப் பிடித்துக்கொள்ளுங்கள்: அல்லாஹ் உங்கள் விஷயத்தில் திருப்தி கொண்டவனாவான். அவன் உங்களுக்கு வாக்களித்துள்ளவற்றை (அவன் கருணையையும், மன்னிப்பையும்) நீங்கள் பெறத்தக்க அளவுக்கு இந்தப் போர்க்களத்திலே உங்கள் இறைவனிடம் கேளுங்கள்.
நிச்சயமாக, அவன் வாக்குறுதி சத்தியமானது, அவன் தண்டனை கடுமையானது. நானும் நீங்களும் நித்திய ஜீவனுள்ளவனும் எதன் உதவியும் இன்றித் தானாகவே ஜீவித்திருப்பவனுமான அல்லாஹ்வுடன் தான் இருக்கிறோம்; அவனிடமே நாம் பாதுகாவல் தேடுகிறோம்; அவன் உதவியால் நம்மை நாம் காப்பாற்றிக் கொள்கிறோம்; அவன்மீதே நாம் நம்பிக்கை வைத்துள்ளோம்; இறுதியில் நாம் அவனிடமே திரும்பிச் செல்லுவோம். நம்மையும் மற்ற முஸ்லிம்கள் யாவரையும் அல்லாஹ் மன்னித்தருள்வானாக! (ஸீரத்துல் ஹலபிய்யா)
எட்டாவது சொற்பொழிவு
ஹிஜ்ரி ஏழு, முஹர்ரம் மாதத்தில் கைபர் சண்டை வெற்றிக்குப் பின்னர், கைபர்வாசிகளை முஸ்லிம்கள் கொடுமைப்படுத்தியதாகச் சிலர் நபிபெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் முறையிட்டபோது, நபிபெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எழுந்து நின்றுகொண்டு கூறியதாவது:
‘தங்கள் இருக்கைகளில் சாய்ந்து கொண்டிருக்கும் உங்களில் யாராவது, ஈமான் கொண்டிருக்கும் நிலையில், திருக்குர்ஆனிலுள்ள ஏவல் விலக்கல்களையன்றி, மற்றவைகளைப்பற்றி அக்கறைப்பட வேண்டியதே இல்லை என்று நினைக்கிறீர்களா? பாருங்கள், நான் உங்களை எச்சரித்திருந்தேன்; பல காரியங்களைச் செய்யக்கூடாது என்று தடுத்திருந்தேன். (என் எச்சரிக்கைகளும், கட்டளைகளும், உத்தரவுகளுமான) இவை திருக்குர்ஆனில் உள்ளவற்றுக்குச் சமமானவை; ஏன், அவற்றைவிட (இச்சந்தர்ப்பத்தில்) முக்கியமானவை.
‘அஹ்லுல் கிதாப்’ ஆகிய வேதங்களை உடையவர்கள் தாங்கள் தரவேண்டிய பாக்கியைத் தந்துவிட்டால், அவர்கள் வீட்டில் அவர்கள் அனுமதியின்றி நீங்கள் நுழைவதோ, அவர்கள் பெண்களை அடிப்பதோ, அவர்களின் உணவை பறித்து உண்பதோ சட்டவிரோதம் என்று அல்லாஹுத்தஆலா உறுதியாக அறிவித்துள்ளான். (அபூதாவூது, மிஷ்காத்)
– அறிஞர், ஆர்.பி.எம் கனி ரஹ்மதுல்லாஹி அலைஹி
தொடர்ச்சிக்கு கீழுள்ள “Next” ஐ “கிளிக்” செய்யவும்.