குடிகார குடும்பத்தலைவனை திருத்துவது எப்படி?
உலகில் மதுவால் அழிந்துள்ள மனிதர்கள் குடும்பங்களின் எண்ணிக்கை கணக்கில் அடங்காது. நன்றாக வாழ வேண்டும் மதிப்பு மிக்கவர்களாக வாழ வேண்டும் என்ற எண்ணமுடையவர்கள் கண்டிப்பாக மதுவைத் தொடக் கூடாது.
உடலினுள்ளே தப்பித் தவறி ஊடுருவும் நோய்க் கிருமிகளை அழிக்கும் சக்தி நமது உடலுக்கு இயல்பாகவே உண்டு. நோயை எதிர்க்கும் இந்த ஆற்றலை மது அழித்து விடுகிறது.
இதனால் மது அருந்துபவர் எளிதில் எந்நோய்க்கும் இரையாவார். மது அருந்துபவரின் மனம் அம்மனிதனை எளிதில் ஒரு மிருகமாக்கி விடும். மனிதத் தன்மை அழிந்து மிருக சக்தி ஏற்படுவதால் அவர்களுக்கு நல்லது கெட்டது எதுவும் புரியாது.
இதற்கு முக்கிய காரணமாக விளங்குவது T.V. யும் சினிமாவும் தான். அவைகள்தான் பிஞ்சு உள்ளங்களில் நஞ்சை வளர்க்கும் கொடூரமான எதிரிகள் என்று சொல்லலாம். ”குடி குடியைக்கெடுக்கும்” என்று ஒப்புக்கு விளம்பரம் ஒரு புறம்; இன்னொறு புறம் படத்தில் வரும் கதா பாத்திரங்கள் – முன்பு வில்லனை மட்டுமே குடிகாரனாக காண்பிக்கும் கலாச்சாரம் போய் இப்பொழுதெல்லாம் கதாநாயகன், ஜோக்கர் என்று பரிணாமம் பெற்று வில்லி மட்டுமின்றி கதாநாயகியும் குடிப்பது போல் காட்சி அமைக்கிறார்கள்.
நாட்டுமக்கள் கெட்டுக் குட்டிச்சுவராகப்போனால் எங்களுக்கென்ன எங்களுடைய ”’பை” நிரம்பினால் போதும் என்று அக்கறையற்ற அரசுகள். இவற்றுக்கிடையில் குடிகாரக்கணவனை திருத்துவது எப்படி என்று விழித்துக்கொண்டிருக்கும் தாய்மார்களுக்கு இனி இன்னொறு பேரிடியும் காத்திருக்கிறது. ஆம்! அவர்களுடைய குழந்தைகளும் இனி தகப்பன் வழியே செல்ல எல்லா தீய வாசல்களும் திறந்து கிடக்கிறதே! எது எப்படி இருந்தாலும் இந்த சமூக சீர்கேட்டை ஒழித்துக்கட்டுவது ஒவ்வொருவர் மீதும் பொருப்பாகும்.
குடிகார கணவனைத் திருத்துவது எப்படி?
ஒரு கணவன் குடிக்கத் தொடங்கும் போதே அவரிடம், இது உடம்புக்கு நல்லதல்ல. இதற்கு பதிலாக சத்தான உணவு வகைகளை சாப்பிட வலியுறுத்தலாம். மது அருந்தி விட்டு வரும் கணவருடன் சண்டை போடுவதை விட்டு, விட்டு எதற்காக குடிக்கிறார் என்பதை அறிய வேண்டும்.
சில கணவர்கள் அலுவலகம், தொழில் சம்பந்தப்பட்ட பிரச்சினை காரணமாகவும் மது அருந்துவதுண்டு. அப்போது நீங்கள் அவர் பிரச்சினை என்ன என்பதை கேட்டறிந்து ஆறுதல் கூறலாம்.
இதை விட்டு விட்டு அந்த நேரத்தில் உங்கள் பிரச்சினைகளை மட்டும் கூறிக்கொண்டிருந்தால் மோதல்தான் வெடிக்கும். பெரும்பாலும் நண்பர்களால்தான் கணவர் மதுப்பழக்கத்துக்கு அடிமை ஆகிறார்.
அதனால் அவரது நட்பு வட்டத்தை கண்காணிப்பது அவசியம். நல்லவர் -கெட்டவர் யார் என்பதை அறிந்து கெட்டவர்களுடன் நட்பு வைத்திருப்பதை தவிர்க்க வலியுறுத்த வேண்டும்.
உங்கள் கணவருடன் திறந்த மனதுடன் பழகுங்கள். அவர் திருந்துவதற்கு போதுமான கால அவகாசம் கொடுங்கள் பொறுமை மற்றும் சகிப்புத்தன்மையுடன் அணுகுங்கள்.
நீங்கள் எவ்வளவுதான் சொல்லிப் பார்த்தும் மனுஷன் மதுப்பழக்கத்தை கைவிடவில்லையா, மருத்துவர்களிடம், அழைத்துச் செல்லுங்கள். உங்கள் கணவரின் போதைப் பழக்கத்துக்கான காரணம் அறிந்து, அதை மறப்பதற்கு மனரீதியான பயிற்சி அளிப்பார்கள். இந்த பயிற்சி பெற்றால் எப்பேர்ட்ட குடிகாரரும் திருந்தி விடுவதை காண முடிகிறது.
சிலர், போதை ஊசி, போதை பாக்கு, போதை மாத்திரை, கஞ்சாஸ போன்றவற்றை பயன்படுத்துகிறார்கள்.
இவர்கள் பெரும்பாலும் மன நோயாளிகளாகவே மாறி விடுகிறார்கள். இவர்களை மனரீதியான பயிற்சியாலும், முறையான மருத்துவ சிகிச்சை மூலமும் குணப்படுத்த முடியும்.
சமீபத்தில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி உலகம் முழுவதிலும் போதைக்கு அடிமையாகி வரும் ஆண்களின் எண்ணிக்கை பெருகி இருக்கிறது. இதற்கு காரணம் திருமணம், பிறந்தநாள், விழா, பண்டிகை கொண்டாட்டம்… என்று பல்வேறு விசேஷ நிகழ்ச்சிகளிலும் மதுபானம் அருந்துவது ஒரு ஃபேஷனாக மாறி இருப்பதுதான். இந்த நிலை மாறினால் குடிகாரர்கள் பெருகுவது குறைய வாயப்புள்ளது.